Saturday, April 16, 2011

முகவெளி

முகவெளி

என் பேச்சாலும் எழுத்தாலும்
பலருக்கும் பரிச்சயமான
என் முகம் எப்போதும்
என்னுடையதாய்
இருப்பதில்லை.
என்னுடையதாய் இருக்கும்
என் இயல்பின் முகம்
பிறருக்கு ஏற்புடையதாயும்
இருப்பதில்லை
மேலும்
முகங்களேயற்ற வெளி
எனக்குப் பரிச்சயமுமில்லை.



முகம்

புகழ்பெற்றவரின் முகச்சாயல்
என்னில் கிஞ்சித்தேனும்
இருப்பதாக உணர்ந்தால்
அவரைப்போலவே
உடையணிகிறேன்

நடை உடை பாவனைகளை
அவர் செய்வது போல்
மாற்றிக்கொள்கிறேன்

அவரைப்பற்றி
பேசுவதிலும்,அவர்
சம்பந்தமான விடயங்களை
தேடிக் கையிருப்பு
வைத்துக்கொள்வதிலும்
தனி அக்கறை
காட்டுகிறேன்

செய்யும் ஒவ்வொரு
செயலிலும் அவரின்
சாயல் தென்படுவதை
உணர்ந்து
அகமகிழ்கிறேன்

அவ்வாறில்லையெனில்
அப்படித் தென்படுமாறு
மாற்றி வைத்துக்கொள்கிறேன்.

என்னில் அவர்
தென்படுவதை
உணர்ந்தவர்கள்
என்னைத்தவிர்க்க
முயல்வதை எண்ணி
வெறுப்பில் குமைவேன்.

எனக்கென ஒரு சுயம்
இருப்பதை
மறந்தே போகிறேன்


.

No comments:

Post a Comment