Saturday, March 12, 2011

உணர்கொம்புகள்


உயிரோசை இணைய இதழில் எனது சிறுகதை

வினைல் தரையில் 18டிகிரிக்கும் குறைவான தட்பவெப்பத்தில் ,காற்றும் சமச்சீராக்கப்பட்ட அறையின் மூலையில் அடிபட்டு மல்லாக்க விழுந்து கிடந்தேன்..வாழ்க்கையில் யாருக்கும் இந்த அளவு அடி விழுந்திருக்கக்கூடாது.மரண அடி என்று நினைத்துக்கொண்டேன்..அடித்துப் போட்டவர்கள் நேரே போட்டிருந்தாலும் பரவாயில்லை.மல்லாக்கப் போட்டதுதான் பிரச்சினை ஆகிவிட்டது..நகரக்கூட முடியவில்லை..ம்...நான் முனகுவதையும் உடம்பிலிருந்து வரும் குருதியையும் பார்ப்பதற்கு யாரேனும் உண்டா ?....ம்ஹூம்...யாருடைய கவனத்தையும் கவரவில்லை..அடி விழுந்தது எதைக்கொண்டு என்பதை ஊகிக்க முடியவில்லை..ஆனால் கனத்த அடிப்பாகம் கொண்ட பொருளால் என்பது மட்டும் தெளிவாக இருந்தது,உணர்கொம்புகளை இடது புறமும் வலது புறமும் ஆட்டி ஆட்டி ஊன்றி எழ முயற்சித்தேன்..அவை முறிந்து விடும் போலிருந்தது....ம்..அப்படியும் முடியவில்லை.அறையில் வேறு யரும் இல்லாததால் , அறையின் குளிர் அதிகமாகிக்கொண்டிருந்தது.

வெளி வந்த குருதி சிறு ஓடையாகித் தேங்கிக்கொண்டியோருந்தது..இதை உருவாக்க நான்பட்ட பாடுகளை நினைத்துப் பார்த்தேன்.கூட்டுக்கண்களிலிருந்து நீர் கசிவது போலிருந்தது,.அடிவிழுந்ததில் இடது புறக் கூட்டுக்கண் சிறிது கலங்கித்தான் விட்டது.

எவ்வளவு சுதந்திரமாக ஆடிப்பாடி அலைந்து கொண்டிருந்தேன்..குளிர்பதன அறையில் எவ்வளவு பத்திரமான இடத்தில் .வெளியே வந்தேன் எல்லாம் தொலைந்தது,...இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்யமே..இப்போது நினைத்துப் புண்ணியமில்லை.தனக்கென கொடுக்கப்பட்ட அறையில்,அமைத்துக்கொண்ட இடத்தைவிட்டு ஏன் வெளியே வர வேண்டும்..பிறகு ஏன் இப்படி மரண அடி வாங்க வேண்டும் ?கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் தேவலை என்று மனம் இளைத்தது...

பெருகி ஓடும் குருதியைக்கட்டுப்படுத்த ஒரு காலைக் கொண்டு வெளி வரும் பாதையை அடைத்துப் பார்த்தேன்....ம்..முடியவில்லை...ஏற்கனவே குருதி பெருகி வெளிவந்ததில் அந்த இடமே நைந்து போயிருந்ததால் வைத்த காலும் அதனுடன் ஒட்டிக்கொள்ள..ஓ...கடவுளே...வைத்த காலை எடுக்க முயற்சிக்கும் போது..அதில் இருந்த சிறிய செதில்களில் ஒன்று குத்திவிட .தீப்பட்ட இடத்தில் வேல் பாய்ந்தது.....ஐயோ..கவனிப்பார் யாருமில்லையா..?

இவ்வளவு மரண வேதனையிலும் ,மகிழ்ச்சி சிறிதாக இழையோடியது..இவ்வாறு அடிபட்டுக்கிடந்த நண்பர்களைத் தாக்கவந்த எதிரிகளை நினைத்துப் பார்த்தேன்.அப்படி யாரும் வரவில்லை..எனக்கு என்பதுதான் அந்த மகிழ்சிக்கோட்டின் காரணம்.இல்லாவிடில் ஒவ்வொருவனும் அளவில் சிறியவனாக இருப்பினும் பளு இழுப்பதில் மன்னர்கள்.உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் கூரான் பற்களால் கொத்தி தன் உடம்பின் பாரத்தைப் போல் பல மடங்கை இழுத்து
ச் செல்வர்.ஆராட்டி பாராட்டி வளர்த்த உடல் பிய்த்துக்கொண்டு போகப்படுவதை தன் கண்களாலேயே காணும் அந்த காணச்சகிக்காத காட்சி எனக்கு நிகழவில்லை இன்னமும்.இருகண்களையும் நிலைனிறுத்த முயற்சி செய்து தோற்றுபின் வலப்புறக்கண்ணை மட்டும் நிலை நிறுத்தி அறையை சுற்றி நோட்டமிட்டேன்.அலங்கமலங்கலாகத் தெரிந்தது..ம்...நன்கு பராமரிக்கப்பட்ட அறை..அதனால்தான்.

அறையின் குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது.உடலின் சூடு சரியான அளவை விட்டு சிறிது இறங்கி விட்டது..போலிருந்தது.பயம் பிடித்துக்கொண்டது.உடம்பில் பட்ட அடிகளால் மரணிப்பதை விட ..மனத்தில் உள்ள பயத்தால் மரணிப்பது...கொடுமை.நிகழ்ந்து கொண்டிருந்தது..

மீண்டும் ஒட்டிக் கொண்ட காலை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.அதைப்பகீரதப் பிரத்னம் செய்து வெளியே எடுத்துவிட்டேன்..எனது மரண ஓலம் அறையின் சுவர்களில் எதிரொலித்தது...ஆனால் அதைக் கேட்பதற்குத்தான் யாருமில்லை.காலை அதி வேகத்துடன் எடுத்ததால் , குருதி வெளியேறி பலகீனமான உடம்பு பலமுறை துள்ளியது...அடிபட்ட இடம் மீண்டும் மீண்டும் தரையில் மோதி ...மோதி...இதற்கு மேல் என்னால் நினைக்க இயலாமல் நினைவிழந்தேன்.எவ்வளவு நேரம் இப்படியே கிடந்தேன் என்று தெரியவில்லை.

அறைக்குள் யாரோ வரும் சத்தம் கேட்டது..கலக்கத்துடன் விழிப்புத்தட்டியது.இரண்டில் ஒன்று எப்படியும் நடந்துவிடும் என நினைத்துக்கொண்டேன்..ஷூ ஒலிகள்....சரக்..சரக்...என அருகில் வந்து தேய்ந்து நின்றன..." டேய் ...எவண்டா இங்க கரப்பான்பூச்சிய அடிச்சுபோட்டது....ச்ச..வர வர இந்த ஆஃபிஸில சுத்தங்கறதே இல்லாமப்போச்சு..." என்று ஷூவால் எத்தப்பட்டதில் அந்த அறைக்குள் இருந்தே வீடுபேறு அடைந்தேன்...! .

No comments:

Post a Comment