Monday, March 23, 2020

கொரோனாடைரீஸ்

பெங்களூரில் லேடீஸ் பிஜி பாய்ஸ் பிஜிக்களை மூடச்சொல்லி உத்தரவு வந்து இரண்டு வாரங்களாகி விட்டது. அவர்களை சொந்த ஊருக்கு செல்லும்படி கேட்டுக்கொண்டு சுற்றறிக்கை எல்லா பிஜிக்களுக்கும் கையளிக்கப்பட்டது. இருப்பினும் பல பிஜிக்களில் இன்னமும் பெண்கள் உலவிக்கொண்டு தானிருக்கின்றனர். வீதிகளில் கூட்டம் இல்லை. இருப்பினும் பீஜிக்கள் இன்னமும் நிறைந்து தானிருக்கின்றன. அவற்றின் சுத்தம் சுகாதாரம் பற்றி கேட்கவே வேணாம். டூ ஷேரிங், த்ரீ ஷேரிங் என்ன 4 ஷேரிங் உள்ள பீஜிக்களின் நிலைமை சில சமயங்களில் நான் கண்டதுண்டு. துணி துவைக்க மொத்தமே நாலு வாஷிங் மெஷின்கள் மட்டுமே. அதற்கு மாபெரும் க்யூ. போதும்டா சாமி என கைகளால் துவைக்கும் அம்மணிகளின் கதைகளை நான் கேட்டதுண்டு. கொரோனா மட்டுமல்ல, டெங்கு பரவலும் மிக அதிகமாகக் காணப்பட்டது இம்மாதிரி பீஜிக்களால் தான். 

மேலும் ஆன் சைட் போய்விட்டு திரும்பும் மக்கள் அதிகம் பெங்களூரில். வந்தாலும் அறிவிக்காது தெரிவிக்காமல் கமுக்கமாக இருந்து விடும் பார்ட்டிகளும் உண்டு. பெங்களூர் ஏர்போர்ட் மூடியாயிற்று என்று வதந்தி பரவிவிட்டது, பெரும்பாடு பட்டு அதை இல்லை எனக்கூறிட ட்வீட்டுக்கு மேல் ட்வீட் போட்டு விளக்கியது ஏர்போர்ட் நிர்வாகம். இண்டிகோ பதிவு செய்த டிக்கெட்டுகளை இன்னொரு நாளுக்கு இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என ஒப்பாரி வைக்காத குறையாய் மெயில் மேல் மெயில் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலை இன்னமும் தொடர்ந்தால் உள்ளூர் விமான நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படல் உறுதி. ஏற்கனவே பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

வெளிநாடு போய்விட்டு பெங்களூர் திரும்பி வந்த தம்மகனை டெஸ்ட்டுகளிலிருந்து மறைத்ததாக ரயில்வேயில் வேலை பார்க்கும் அன்னை கைது, மேலும் வெளிநாடு சென்று வந்த இன்னொரு நபர் யாருக்கும் சொல்லாமல் மெஜ்ஸ்டிக்கில் பேருந்து ஏறி குடகு வரை பயணித்திருக்கிறார். அவருடன் முன்பதிவு செய்யாத 40 பேரும் பயணித்திருக்கின்றனர். உள்ளூர் போலீஸ் ட்வீட் போட்டு பஸ் நம்பரை சொல்லி இதில் இன்னதேதியில் பயணித்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனை செல்லவும் எனக்கெஞ்சுகிறது.

அத்தனை தகவல் தொழில் நுட்ப ப்ராஜக்ட்களும் தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போடப்படுகின்றன. இந்தியா பெரும்பாலும் அவுட்சோர்ஸிங் என்ற அடிப்படையில் மட்டுமே தகவல் தொழில் நுட்ப துறையில் சம்பாதிக்கிறது. அத்தனை வேலைகளையும் செய்ய அலுவலகம் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் கீழ் நிலையில் பணிபுரியும் டெக் சப்போர்ட் மற்றும் கால் செண்டர் ஊழியர்களுக்கான கேப்/வேன் வசதிகள் குறுக்கப்படுகின்றன. மூன்று ஷிஃப்டுகள் செய்தே ஆகவேண்டிய ஊழியர்களுக்கு அப்/டவுன் வசதிகள் ஒரு முறை மட்டுமே என்று ஆக்கப் பட்டிருக்கிறது. விளைவு கூடுதல் நேரம் பணியிடத்தில் அமர்ந்தாக வேண்டும். அலுவலகங்களில் சானிட்டைஸர்/மாஸ்க் தட்டுப்பாடு மேலும் பகல்/இரவு என நாள் முழுதும் ஏசியில் அமர்ந்து பணிபுரிய வேண்டிய கட்டாயம். கொஞ்சம் சீனியர் ஊழியர்களுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதி. அதிலும் நெட் கனெக்‌ஷன் செலவுக்கு பெரும்பாலும் பணம் கிடைப்பதில்லை. டெலி ப்ரசென்ஸ் வசதிகளுக்கு அலுவலகம் சென்றே ஆக வேண்டிய கட்டாயம்.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரின் மனத்திலும் ஒரு தேக்க நிலை வந்து விட்டதை கண்கூடாகக் காண முடிகிறது. மனிதப்பண்பு என்பது கிஞ்சித்தும் காணக்கிடைக்காத துறை த.தொ.துறை. இன்னமும் மனிதர்களை அந்நியப்படுத்தித்தான் வைக்கிறது இன்றைய நிலைமை. இத்தனை காலம் கட்டமைத்த அத்தனையையும் நிர்மூலமாக்கி விட்டுத்தான் செல்லும் போலிருக்கிறது இந்தக் கொரோனா . எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க....... .#கொரோனாடைரீஸ்

No comments:

Post a Comment