Saturday, March 14, 2020

கரோனா

பகலிலும் ஜகஜ்ஜோதியாக எரிந்து கொண்டே யிருக்கும் பெங்களூர் கேஎலெம் மால் அடைத்துக் கிடக்கிறது. ஒரு நாள் போலும் அடைக்காதவரே அடைத்துவிட்டனர். பிரிட்ஜ் ஏரியாவே வெறிச்சோடிக் கிடக்கிறது. வழக்கமாக சாலையைக் கடந்து அந்தப்பக்கம் செல்ல கிட்டத்தட்ட ஐந்து நிமிடத்துக்கும் கூடுதலாக காத்துக்கிடக்க வேணும். இன்றோ ரெண்டு செகன்டுகள் போலும் ஆகவில்லை. காவிரிக் கலவரம் ஏற்பட்ட நாளன்று தான் கடைசியாக இங்கனம் பிரிட்ஜ் ஏரியா முழுக்க பாலை போல வெறிச்சோடிக்கிடந்தது. பேருந்துகள் வழக்கம் போல இயங்கத்தான் செய்கின்றன. ஆனால் அதிலேற ஆட்கள் தான் இல்லை. மல்லு ஒருவரின் சிறிய அங்காடி ஒன்று நடுத்தரமானது, அவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. எங்களையும் மூடச் சொல்லீருவாங்களோ என்று. ‘ஜனம் கூடுன்ன ஸ்தலங்களெயெல்லாம் மூடணுன்னாணு பறஞ்சது, ஙங்களையும் அடச்சுபூட்டான் பறயுவோ?’ என்கிறார் முகமூடியை சரிப்படுத்திக் கொண்டே. பிள்ளைகளுக்கு லீவு விட்ட கு‌ஷியில் வீட்டின் கீழ் தளத்து கார் பார்க்கிங் முழுதும் ரணகளமாக ஆகிக் கொண்டிருக்கிறது. இன்னமும் ஒரு வாரம் இருக்கிறது அவர்களுக்கு விடுப்பு முடிவதற்கு. அதற்கு மேலும் திறக்கப்படும் என்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. ஓட்டல்களில் ஆட்களே இல்லை. ஈயாடுகிறது.

இருப்பினும் முனிசிபாலிட்டி வேலையாட்கள் வழக்கம் போல சாலைகளை கூட்டிப்பெருக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். வேலை பெரும்பாலும் வீட்டிலிருந்த படியே நடந்து கொண்டிருக்கிறது தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு. மாஸ்க் , மற்றும் சனிட்டைஸர்களுக்கு பக்கத்து மருந்துக்கடையில் சொல்லி வைத்திருக்கிறேன், ஸ்டாக் வந்தால் தெரிவிக்கிறேன் என்றார். ஃப்ளிப்கார்ட், அமேசானில் ஆணை கொடுக்கலாமென்றால் , நண்பர் ஒருவர் வாங்கி விட்டு இரண்டு நாட்கள் கூட தங்கவில்லை ஓட்டை விழுந்து விட்டது என்றார். அதிலும் டூப்ளிகேட். ஒரு சின்ன கண்ணுக்கு போலும் தெரியாத நுண்விசக்கிருமியால் ஒட்டு மொத்த மனித இனத்தையே மாதக்கணக்கில் முடக்கிப்போட முடியுமெனில் இத்தனை காலம் அறிவியல் சாதித்ததென்ன? #கரோனா

No comments:

Post a Comment