Sunday, April 1, 2018

மும்தாஜுடன் ஒரு காதல்


மும்தாஜுடன் ஒரு காதல். ஆக்ரா டூர்னா ஒடனே கெளம்பிற வேண்டியது காலைல ஆறு மணிக்கெல்லாம் குளிச்சு ரெடியாகி ஆஷ்ரம் செளக் பக்கத்துல பஸ் நிக்கிதுன்னு தகவல் கிடைத்து ஒரு ரிக்ஷா வைத்துக் கொண்டு சென்றேன். இன்னமும் கால்களால் மிதித்து ஆட்களை ஏற்றிச்செல்லும் ரிக்ஷாக்கள் டெல்லியில் இருக்கின்றன. நல்லவேளை நான் பிடித்தது மோட்டர் வைத்த மிதிவண்டி. அங்கு சென்றால் இன்னமும் பஸ் வரவில்லை. வேறு டூர் ஆப்பரேட்டர்கள் களமாடிக்கொண்டிருந்தனர். ஒருவழியாக பஸ் வந்து சேர்ந்தது.

முதலில் சென்றது ஆக்ரா கோட்டைக்கு. அச்சசல் அப்படியே ரெட் ஃபோர்ட் போலவே இருக்கிறது முகப்பு. அதே நிறம். சிவப்பு ஆமா..முஸ்லீம்னாலே நமக்கெல்லாம் பச்சை'யாப்பாத்து தானே பழக்கம். என்னவோ ஒண்ணும் புரியலை. கூட வந்த வழிகாட்டிக்கு சப்தமே வெளியே வரவில்லை. அவரும் பாவம் அத்தனை வெய்யிலில் கத்தி கத்தி ஓய்ந்து விட்டார் போலருக்கு. என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கோ புகைப்படம் எடுப்பதைத்தவிர வேறு வேலையில்லாதது போல லயித்துக்கிடந்தேன். இந்தக்கோட்டையை அந்தந்தக்காலகட்டங்களில் வேறு வேறு அரசர்கள் கையில் வைத்திருந்தனர் போலருக்கு. அவ்வளவு மாற்றங்கள் ஏதும் செய்யாது அப்படியே இருக்கிறது இன்னமும்.

இருப்பினும் தொல்லியல் துறை சில பூச்சு வேலைகளை செய்திருப்பது கண்கூடு. உள்ளே செல்ல நுழைவுச்சீட்டு 40 ரூபா. நம்மூர்ல இருக்கிற கோட்டை கொத்தளம் எல்லாத்துக்கும் 15-20க்கு மேல டிக்கிட்டே கெடயாது. வடநாட்லதான் கொள்ளை. போன வாரம் போன டெல்லி ரெட் ஃபோர்ட்க்கு டிக்கிட் 35 ருபா.வடக்கு வாழ்கிறது தெற்கு தொங்குகிறது. இப்பதான் சித்ரதுர்கா கோட்டைக்கு சென்று வந்தோம் என் நண்பர்கள் அனைவரும். 15ரூவா தான் டிக்கிட்டு. ங்கொய்யால. இங்க மட்டும் என்ன?

வெய்யில் பின்னி எடுக்குது. பரமக்குடி வெய்யிலல்லாம் தூக்கி சாப்ட்ரும்போல. உள்ள செருப்பில்லாம நடந்தால் ராச துரோகத்துக்கு இன்னா தண்டனைன்னு தெரிஞ்சிக்கலாம் நண்பர்களே. அத்தனையும் மொஸைக் கல்லுல இழைச்சிருக்கான் ஷாஜஹான். ஆஹான்..அதான் வெய்யில் பொசுங்குது. மாட மாளிகை கூட கோபுரம் எல்லாம் இருந்தும் ஒரு சிற்பம் கூட இல்லை. அதுக்கெல்லாம் நம்ம தமிழன் நாடுதாண்டா. இங்க சும்மா பூவு புய்ய்ப்பம்னு கதை விட்டுக்கிட்டு இருக்காங்ய. அதிலயும் மார்பிள் ஓவியம் நெம்ப கஸ்டம் போல. ஒண்ணுமே செய்யல. வலைப்பின்னல் பண்ணினது தான் பெரிய ஆர்ட் வொர்க் போல.



ஒரே கல்லில பண்ணின குளியல் தொட்டி , நம்மூர் பெரிய கோவில்ல இருக்கும் எண்ணெய்த்தொட்டி மாதிரி இருக்கு.அதுல ஷாஜஹான் குளிச்சாராம். ஹே ராம். அரண்மனைக்குள்ள ஷீஷ் மஹல் (எல்லாமே இங்க மஹல் தான் ..ஹிஹி)னு ஒண்ணு இருக்கு. அதப்பூட்டி வெச்சிருக்காங்ய. சுவர் முழுக்க கண்ணாடி சில்ல ஒடச்சு ஒடச்சு பதிச்சு வெச்சு, உள்ள மேலெருந்து தண்ணி ஊத்தி விடுவாங்களாம். பகல்ல அப்டி கண் கொள்ளாக்காட்சியாக இருக்குமாம். ஹமாம். (குளியலறை) மனுசன் வெளயாடிருக்காண்டா.

இருப்பினும் வரலாற்றில் படித்த அந்த ஷாஜஹானின் சிறை அறையைக் காணவில்லை. எனக்குத்தான் தெரியவில்லையா இல்லை வழிகாட்டிக்கும் தெரியவில்லையா என குழப்பம். ஒளரங்கசீப் ஆட்சியை பிடித்தபின் தோப்பனாரை சிறையிலடைத்தான், அப்பால சின்னதா ஒரு சன்னல் தொறந்துவிட்டான் தாஜ் மகாலைப்பார்க்க என்ற அந்த சிறைஅறையை காணோம்.

யமுனை நதியின் ஒரு கரையில் அரண்மனை. மறுகரையில் தாஜ் மகால். அரண்மனையின் எந்தச்சாளரத்தை திறந்த போதும் தூரத்தில் தாஜ் மகல் தெரிகிறது. பாரீஸில் எந்த சன்னலைத்திறந்த  போதும் டவர் தெரியும் . அது போல..ஹிஹி.. ரசிச்சு கட்டிருக்கான்ப்பே.

அப்புறம் தாஜ் மஹால். என்னோட மைக்ரோமேக்ஸ்லயும் கூட தாஜ் மஹால் அழகாத்தான் தெரியுது. அவ்வளவு கூட்டம் நெருக்குது உள்ள போறதுக்கு. தொடர் நான்கு நாட்கள் லீவு அதனால எல்லாரும் கெளம்பி வந்துட்டாங்ய. எக்கச்சக்க ஃபோட்டோஸ் எடுத்தேன். என்னதான் ஃபோட்டோல பாத்தாலும் நேர்ல பாத்தா மேரி வராது. ஆகவே மக்களே நேரில் சென்று பார்த்துடுங்கோ. சின்ன மினியேச்சர் மாடல் ஒண்ணு பண்ணி வெச்சிருக்கு யூ.பி அரசாங்கம் அச்சசல் தாஜ் மஹல் போலவே. லைட் எஃபெக்ட்ஸ்லாம் பிரமாதமா இருக்கு. மூன்லைட் சொனாட்டா வாசிக்கலாம் போலருக்கு. அங்கயே சின்ன சின்ன தாஜ் மஹல்லாம் விற்கின்றனர் மீடியம் சைஸ் வாங்கினேன்.

எது ஒரிஜினல் மார்பிள்னு சாம்பிள் காண்பித்தார். ஒளி ஊடுருவுவது ஒரிஜினல் ஊடுருவாவிட்டால் டூப்பு.. மொபைல் டார்ச் அடித்து இன்னபிற அறை விளக்குகளை அணைத்துவிட்டு காண்பித்தார். ஜெகஜ்ஜோதீன்னா இன்னான்னு அப்பத்தான் தெரியுது. அந்த மொஸைக் கல்லில் சில பூ வேலைப்பாடுகள் அதில் ஒளியைப் பாய்ச்சினால்  பூ அதன் நிறத்தில் மிளிரும் காட்சி. காணக்கண் இரண்டு கோடிவேண்டும். அதையே மும்தாஜ் பேகத்தின் கல்லறையைச்சுற்றி வேலைப்பாடுகள் இருக்கும் உட்புற சுற்றுச்சுவர்களிலும் டார்ச் அடித்துக்காண்பிக்கின்றனர். ஹ்ம்... பிரமாதம்.



உள்ளே போவதற்கு முன் செருப்புக்கால்களோடு போகக்கூடாதாம். அதனால பேப்பர் கவர் ஒன்று தருகின்றனர். அதை செருப்புகளுக்கு மேல் (கீழ்) இட்டுக்கொண்டு நடக்கணும். மார்பிள் வீணாவதைத் தடுக்க. அந்த உறை நாலெட்டு வைத்தவுடனேயே கிழிந்து விடுகிறது.அப்புறம் சுத்தம் என்ன சுகாதாரம் என்ன? அதொடு மக்கள் கால்களிலிருந்து கிழிந்து புறப்பட்டு காற்றில் பரவி தாஜ் மகாலின் எல்லா மூலை முடுக்குகளிலும் அந்த காலுறைகள். கருமம். இதான் பாதுகாக்கும் லெட்சணம். காற்று பிய்த்து எறிகிறது தடுப்பணை போல சின்னக்கழிகளை ஊன்றி அதில் தொல்லியல் துறை என எழுதி வைத்து இருக்கும் அத்தனை பதாகைகளையும் பரப்பி அடிக்கிறது மூலைக்கொன்றாக. பரந்து விரிந்த வீதி, சமாதிக்கு செல்லுமுன். அத்தனையும் மார்பிள். பத்து யானைகள் பக்கவாட்டில் ஒன்று கூடி நடக்கலாம் போல அத்தனை பெரிய வீதி. நான்கு மினார்களிலும் மேலே செல்வதற்கு வழி இருக்கிறது எனினும் பூட்டியே வைத்திருக்கின்றனர். கோவில் பிரகாரம் சுற்றுவது போல நான்கு மாட வீதிகளையும் சுற்றி விட்டுத்தான் மும்தாஜின் சமாதியைக்காண முடிகிறது.

உள்ளூர் வெளியூர் , வெளிநாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே வழி. சின்னத்திறப்புகளில் ஸ்பெஷல் தரிசனம்லாம் கிடையாது. என்னவொன்று பூந்தோட்டமெல்லாம் சுற்றி வர வேண்டியதில்லை அவர்களுக்கு. நமக்கோ 4 கிமீ நடந்து சுற்றி வந்தால் அவர்களுடன் தாஜ் மகாலில் ஏறும் வழி ஒன்றாகத்தானிருக்கிறது. 



தாஜ் மகலில் ஏறுவதற்கு இருபது படிகள் அதீத உயரம். எங்கு திரும்பி பார்த்தாலும் யமுனை நதி.  தண்ணி ஓடுகிறது. தூரத்தில் நதியில் மேயும் ஆடுகள். போட் வசதியெல்லாம் இல்லை போலருக்கு. அந்தப்பக்க மறுகரையில் அரண்மனை. திரும்ப வரும் போது டயானா சேரில் அமர்ந்து படம் எடுத்துக்கொண்டேன். தேவையில்லாமல் யார் யாரோ ஃப்ரேமுக்குள். அத்தனை கூட்டம். இரவில் நுழைய அனுமதி மறுப்பு. சாயங்காலம் ஐந்தரைக்குள் வெளியே வந்து விட வேணும் என ஏகப்பட்ட கெடுபிடிகள்.

பின்னர் கிளம்பி மதுரா சென்றோம். அதற்குள் 8 மணியாகிவிட்டது. அந்தக்கோவில் , கிருஷ்ணன் பிறந்த இடமாம்.அதை அத்தனை இஸ்லாமிய அரசர்களும் இடித்துத்தள்ளியதை எழுதி வைத்திருக்கின்றனர். மூன்றடுக்கு பாதுகாப்பு. கையில் ஸ்டென் கன்னுடன் பல காவலர்கள். இப்பொதும் கோவிலின் கோபுரம் மசூதியின் மினார் தான். மூன்று மினார்கள். உள்ளே சென்று பார்த்தபோது உள்ளில் சிலை ஏதும் இல்லை. வெறுமனே படம் வைத்திருக்கின்றனர். கோவிலின் உட்புறம் சிறைச்சுவர்கள் போல சோடனை. சிறையில் பிறந்த கிருஷ்ணக் குழந்தை. பஜனை காதைக்கிழிக்கிறது. க்ருஷ்ண ஜனம் பூமி. வடநாட்டுக் கோவில் போல எல்லா இடங்களிலும் காவி. பிரசாதம் ரவா லட்டு. ஒரு பாக்கெட் வாங்கினேன். பிரித்து அங்கேயே ஒரு விள்ளல் தின்று பார்த்தேன். ஹ்ம்..பரவாயில்லை. எனினும் ரொம்ப நாள் வைத்திருக்க இயலாது போலருக்கு.

பின்னர் அங்கிருந்து கிளம்பி விரிந்தாவன்' சென்றோம். நான் கூட பிருந்தாவன் என்றால் தோட்டம் துறவுகளாலானது என. அப்படி ஒன்றுமேயில்லை. பிருந்தா என்றால் துளசி, வன் என்றால் காடு , துளசிகளாலான காடு என்ற பொருள். பண்டிட் விளக்கிகொண்டிருந்தார் எல்லாருக்கும் அரைத்தூக்கம். களைப்பு. ஒன்றுமே புரிபடவில்லை. அங்கு கிட்டத்தட்ட ஆயிரம் கோவில்கள் இருக்கும் போல. ஒரு பெரிய கோவில் அதை ஏற்கனவே மூடப்பட்டு விட்டது . நடை சாத்தியாயிற்று. பதினோரு மணிக்கு போனா யாரு திறப்பா ?

அந்தக்கோவிலையும் கோபுரங்களை இஸ்லாமிய மன்னர்கள் இடித்துத் தள்ளினார்களாம். பின்னர் அதைக்கட்டவேயில்லை. குறைக்கோபுரமாக இன்னமும் காட்சியளிக்கிறது. தாஜ் மகலோடு என் மைக்ரோமேக்ஸ் தம் வாழ்க்கையை முடித்துக்கொண்டது. பேட்டரி சார்ஜர் போட பஸ்ஸில் ஏதும் வழியில்லை. அதனால கிருஷ்ண ஜன்ம பூமி, பிரிந்தாவன் எல்லாம் படம் எடுக்க முடியவில்லை.

கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம், பின்னர் குளிப்பவர்களின் சேலையை உருவி வைத்துக்கொண்டு என களமாடியவை எல்லாம் இங்கு தான் நடந்ததாம். ஆம். கோபிகைகள் ஒட்டுத்துணியில்லாமல் குளித்ததால் தண்டனை கொடுக்க எண்ணி கிருஷ்ணன் அப்படி செய்தாராம். பண்டிட் சொன்னார்.ஆதலால் மக்களே இனி அங்கனம் செய்யாதீர்.

தூக்கம் சொக்குகிறது. ஒண்டும் பிடிபடவில்லை. எப்படா பஸ்ஸிலமர்ந்து டில்லிக்கு போய்ச்சேருவோம் என ஆகிவிட்டது. மணி பதிணொன்றரை. பஸ் முழுக்க ஏஸி ஆதலால் உட்கார்ந்தவுடன் சட்டென உறக்கம் வந்து விட்டது. கனவில் மும்தாஜ் வந்தாள். கூடவே ஷாஜஹானும் வந்துவிட்டார். அடச்ச..க்ளீனர் பாய், சார் நீங்க எறங்கும் இடம் ஆஷ்ரம் செளக்கில் பஸ் நிக்கிது , சீக்கிரம் இறங்குங்க என்றான். அதுக்குள்ள டில்லி வந்துவிட்டதாவென இறங்கினேன். பின்னர் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். #டில்லிடயரீஸ்




No comments:

Post a Comment