Sunday, March 25, 2018

பஹாய்-த்-தாமரை




இன்று விடுமுறை. அதனால் பஹாய் கோவில், மற்றும் கால்காஜி கோவில் பயணம். எம்மதமும் சம்மதம் அதான் பஹாய். அரே பாய். .. :)  அந்தக்கோவிலுக்குள்ள செருப்பு போட்டு போகக்கூடாதுன்னு ஒரு பிளாஸ்டிக் பை குடுத்து அனுப்பினார்கள். சரி அப்புறமா எங்கயாவது வைத்துவிட்டு டோக்கன் போடலாமென்று பாத்தால் அப்படி ஒரு வசதியும் இல்லை. எல்லோர் கையிலும் செருப்புப்பை. அதோடயே உள்ளே நுழைந்தாயிற்று கோவிலுக்குள். இதுக்கு பேசாம கால்லயே போட்ருக்கலாம்ல ..ஹிஹி.. செருப்பை கையில் வைத்துக்கொண்டால் பாவமில்லை போலருக்கு. !

உள்ளே நுழைந்தவுடன் மயான அமைதி. அதைப் பார்த்தாலே ஒரு மதமும் வேணாம்டான்னு ஆயிரும் போலருக்கு. நுறடிக்கும் மேலாக தாமரைக் கோபுரம் (இங்கயும் தாமரைதானா ?!) முழுக்க கண்ணாடிச் சுவர்கள். காற்று பறம் பறமென்று அடிக்குது உள்ளே. மாதா கோவில் போல வசதியாக உட்கார்ந்து கொள்ள மொஸைக்கல்லிலாலான இருக்கைகள். எந்தவித சிலையும், உருவமும், படமும், கற்சிலைகளும் இல்லை கோவிலின் உள்ளே.எங்கும் அமைதி.

உள்ளிருக்கும் பஹாய்ப்பெண்மணிகள்  ஆட்காட்டி விரலை உதடுகளுக்கு குறுக்கே வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பேசக்கூடாதாம். குழந்தைகளையும் அங்கனமே இருக்கச்சொல்கிறார்கள். எல்லார் கழுத்திலும் தொங்கும் அறிவிப்பு பட்டையில் பஹாய்த்தாமரை மலர்ந்திருக்கிறது படத்தில். சரியாக 12 மணி. மூன்று பேர் அதில் ஒருவர் பெண். மேடை போன்ற இடத்தில் வந்து பெரிய புத்தகங்களை எடுத்து வந்து மைக்கை தம் உயரத்துக்கேற்ப சரி செய்துகொண்டு பேசத் தொடங்கினர்.  



முதலில் வந்தவர் பஹாய் மதத்தின் வசனங்களை ஓதினார். ஏழு முறை எதிரொலிக்கிறது அது பக்கச்சுவர்களில் பட்டு. எண்ணிக்கொண்டிருந்தேன். எதிரொலி கட்டுப்பாடில்லாத தியான மண்டபம் போல. அவரின் குரல் மட்டுமே நூறடி உயர தாமரையில் பட்டு எதிரொலித்து என் காதுகளை வந்தடைந்தது. பின்னர் வந்தவர் புத்தமதத்தின் வசனங்களை கச்சாமி கச்சாமி என தெரியவருமாறு ஓதி அமர்ந்தார். பின்னர் வந்த ஒற்றைப் பெண்மணி பகவத் கீதையிலிருந்து சுலோகம் ஓதினார். அவர் குரலும் பக்கச்சுவர்களிலும் தாமரையிலும் பட்டுத்தெறித்தது.

கூட்டத்தை அடைகாக்க வந்த பஹாய்ப்பெண்மணிகள் இன்னமும் ஆட்காட்டி விரலை உதட்டிலிருந்து எடுத்ததாக தெரியவில்லை. எல்லா நாட்டவரையும் சரளமாக பார்க்க முடிந்தது. ஆங்கில அறிவிப்பை ஒரு வெள்ளைக்காரரே செய்தார். கோவிலுக்கு உள்ளே போய் என்ன செய்வது என்று இதுவரை எனக்குப் பிடிபடவேயில்லை. இந்தக்குழப்பத்திலேயே இம்மதம் இன்னமும் வளரவேயில்லை போலிருக்கிறது.



பின்னர் அருகிலேயே கால்காஜி என்ற நம்மூர் காளி கோவில் போல ஒன்று இருக்கிறது. கோழி ஆடு பலி கொடுக்க வேணுமானால் எங்களை அணுகவும்னு ஒரு தேவஸ்வம் போர்டு ஒன்றைப்பார்த்தேன். அதிலிருந்து தான் தெரிந்தது அது காளி கோவிலென. தரையோடு அமர்ந்த உருவம். தரையிலிருந்து அப்படியே புற்று போல எழும்பி நிற்கிறாள் காளி. யாதுமாகி நின்றாய் காளி. உள்ளே போகவே முடியவில்லை. திரும்பி வருவதற்கும் எந்த வழியும் தெரியவில்லை. அப்படிக் கூட்டம் படு கூட்டம். நெருக்குகிறது ஆளை. எம்மதமும் சம்மதம்னு சொல்ற பஹாய் கோவிலில் ஆட்களே இல்லை. இங்கு இவ்வளவு அடிதடி. இங்கும் செருப்புகளைக் கழற்றாது தான் போனேன். எங்கு கழற்றி வைப்பதென தெரியவேயில்லை. கோவிலைச்சுற்றி தெரு. தெரு முழுக்க கூட்ட நெரிசல். பக்கத்திலேயே போக முடியவில்லை. கூட்டத்தை சரிசெய்யும் பேர்வழியிடம் கேட்டேன். "ஸ்வாமி புறம் செல்ல வழியெதுவோவென". "வந்த வழியே திரும்பிச்செல்" என்றார். என்னவோ புரிந்தது போலிருந்தது எனக்கு. திரும்புவதற்கு வழியில்லாது போனால் எவ்வளவு நல்லது. ஹ்ம்...!




சரி டெல்லியில பஞ்சாபி லஸ்ஸீ பிரமாதமாக இருக்குமே என ஒன்றை வாங்கிக் குடித்தேன், 'பினா பரஃப் கி லகானா' என்று கோரிக்கை விடுத்தேன் (ஐஸ் இல்லாம போடுப்பா) ரொம்ப யோசித்துவிட்டு உனக்கு மட்டும் என்ன சிறப்பா என முகத்தை வைத்துக்கொண்டு போட்டுக்கொடுத்தார். ஆஹா. இருப்பினும் அவ்வளவு பிரமாதமில்லை.  குடித்து முடித்து வெய்யிலில் நடந்து மெட்ரோ ஸ்டேஷ்ன் வரை வந்தால் எக்கச்சக்க லைன். வயலட் லைன் மெஜன்ட்டா லைன், ப்ளூ லைன் ஹிஹி.. ரயில் போகும் வழித்தடங்களாம் அவை. தட்டுத்தடுமாறி சீட்டுக்கொடுப்பவரிடம் கேட்டுத்தெரிந்து கொண்டு வந்து சேர்ந்தேன் புக்ககத்திற்கு.
#டெல்லிடயரீஸ்

No comments:

Post a Comment