இன்னிக்கு சனிக்கிழமை லீவூ :) அதனால ஹஸ்ரத் நிஜாமுத்தீன் போய்ட்டு வந்தேன்.அங்க இரண்டு அவுலியாக்களின்
( தேவதைகள்னு தமிழ்ல சொல்லலாம் ஏஞ்சல்ஸ்) சமாதி இருக்கிறது. டெல்லியில் இந்த இரு சூஃபி ஞானிகள் சமாதிகள் ஒன்றுக்கொன்று அருகிலேயே இருக்கின்றது. ஒரே காம்பவுண்டு. தர்காக்களுக்கு நம்மால் போக முடியும் அனுமதி உண்டு.( கீழக்கரை காலேஜில படிச்சவன்ப்பா :) ) இத்தனை பெரிய புகழ்பெற்ற ஞானிகளின் உறைவிடம் ஒரு சந்துக்குள் இருக்கிறது. நம்பவே முடியவில்லை. கொஞ்சம் தேடிப்பார்த்துவிட்டு பின்னர் விசாரித்து உள்ளே சென்றேன். பூ, போர்த்துவதற்கு ஒரு துண்டு,பின்னர் அவர்களுக்கேயுரித்தான அத்தர்,வாசனைப்பொருட்கள் மற்றும் ஊதுபத்தி எல்லாம் அர்ச்சனைத்தட்டு போல வாங்கிக்கொண்டு (இரண்டு) உள்ளே நுழைந்து நுழைந்து செல்லச்செல்ல இன்னமும் புறாக்கூண்டுகள் போல உள்ளே சென்று கொண்டேயிருக்கிறது. சட்டென நிறுத்தினார் ஒருவர். என்னவென்றேன் , தலையில் ஸ்கார்ப் இல்லையே முதலில் தலை முடியை மறைத்துக் கொள்ளுங்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்ளுங்க என்றார்.
உள்ளே சென்றதும் எனக்கு ஒரு தயக்கம். எதில் முதலில் செல்வது என. அங்கு ஒரு இஸ்லாமியப் பெரியவர் முதலில் அமீர் குஸ்ரோ'வின் சமாதி பின்னர் நிஸாமுத்தீனின் சமாதிக்கு செல்லவேணும் எனப்பணித்தார். முதலில் சீடர் பின்னர் குரு. நான் தயங்கி நின்றதைப்பார்த்ததும் 'வாங்க நானே உங்களை அழைச்சிட்டுப்போறேன்' என சொன்னார். மும்பையில் இருந்தபோது ஹாஜி அலி, மிகப்பிரசித்தம் அங்கும் இதே போல அவர்களுக்குரிய மரியாதையுடனே தரிசிக்கலாம். பெண்களுக்கு உள்ளே அனுமதியில்லை. இங்கு ஒருவர் சிறிய பெண் குழந்தையை வெளியில் விட மனதின்றி உள்ளே அழைத்துவந்துவிட்டார். அவ்வளவு பெரிய கூட்டமெல்லாம் இல்லை. என்னை அழைத்து வந்தவர் முதலில் அந்த பெண் குழந்தையை வெளியில் அழைத்துச்செல்லுங்கள் , இங்கு பெண்கள் வர அனுமதியில்லை எனத்தெரியுமல்லவா என்றார். வெளியே போர்டில் ஹிந்தி, உர்தூ மற்றும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கின்றனர், பெண்களுக்கு அனுமதியில்லையென. வெய்யில் பிளக்கிறது வழக்கம்போல. நேற்றுப்பெய்த மழையின் சுவடு போலும் இல்லை. வெளியில் மார்பிளில் அமர்ந்திருப்பவர்கள் சூடு தணிக்க விசிறி கொண்டு விசிறிக்கொண்டே இருக்கின்றனர். அவரைப்பார்த்தால் நம்ம ஊரில சாம்பிராணி போடுபவர் போல இருந்தது :)
கூட அழைத்து வந்த இஸ்லாமிய பெரியவர் எங்கருந்து வர்றீங்க என்ன பெயர் என்றெல்லாம் விசாரித்தார். அந்த ஞானிகளின் உறைவிடத்தில் பொறுப்புகளில் இருப்பவர் போல தெரிந்தது அவரின் உடல்மொழி. விபரங்கள் சொன்னேன். இங்கு வருபவர் தொண்ணூறு விழுக்காடு பிற மதத்தை சேர்ந்தவர்கள் தான் பாய் என்றார். தயங்காதீங்க, கொண்டு வந்த பொருட்களை சார்த்துங்க என்றார். எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. முன்னப்பின்ன இது போன்ற இடங்களுக்கு சென்றதில்லை. பின்னரும் பிறர் செய்வதைப் பார்த்து பார்த்து ஒன்றன்பின் ஒன்றாக செய்தேன். சிறிய கயிறு ஒன்று நாமெல்லாம் கைகளில் கட்டிக் கொள்வோமல்லவா , அது போல ஒன்று, அதை உறைவிடம் சுற்றியுள்ள மார்பிள் ஜாலிகளில் கட்டி வைத்திருக்கின்றனர். என்னையும் அதில் கட்டிவையுங்க என்றார். நீங்க என்ன நினைத்து கட்டுகிறீர்களோ அது உடனே நடக்கும். அவுலியாக்களின் ஆசி கிடைக்கும் என்றார். எனக்கோ இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. எனக்கு என் மேலேயே நம்பிக்கை கிடையாது :) சரி அவர் சொல்கிறாரே எனக்கட்டி வைத்தேன்.
துஆ (பிரார்த்தனை) முடிந்ததும் பின்னர் வெளியே வாருங்கள் எனக்கூறிவிட்டு அவர் வெளியே சென்று விட்டார். உள்ளேயே நின்று கொண்டிருந்தேன். பெண்கள் எல்லாம் வெளியில் அமர்ந்து எதோ ஓதிக்கொண்டிருந்தனர். அந்தச்சூழலே எனக்கு அன்னியமாயிருந்தது. இருப்பினும் எதோ ஒன்று எனை அங்கே நிறுத்தி வைத்திருந்தது.
அமீர் குஸ்ரோ ஒரு பெரிய சூஃபி கவி, அவரின் வாழ்க்கை வரலாறு நான் சிறுவனாக இருந்தபோது தூர்தர்ஷனில் இரவு ஒன்பது மணிக்கு ஒரு பெரிய மெகா சீரியலாகவே வந்தது.( நானும் ஒரு கவிஞன்தான்ப்பா :) ) பாரசீக மன்னன் நாதிர் ஷாவின் படையெடுப்பிலும் தாங்கி நிற்கிறது. இசையால் இறைவனை அடைவது 'கவ்வாலி' பாடல்கள் மூலம் என்பது இஸ்லாத்திற்கு ஒவ்வாத ஒன்று. நம்ம நாயன்மார்கள், ஆழ்வார்கள் போல பெற்றதைப்பாடி இறைவனடி சேர்ந்தவர்கள் இவர்கள். இந்த நிஜாமுத்தீன் சூஃபி ஞானியின் பிரதம சீடர்களில் ஒருவர் அமீர் குஸ்ரோ. மாபெரும் கவிஞர். ஷரியத் சட்டம் சம்மதிக்குமானால் எந்தன் சமாதியில் குஸ்ரோவின் உடலும் அடக்கம் செய்யப்படலாம் எனக்கூறுமளவுக்கு குஸ்ரோவின் கவிதைகளின் பால் அன்பு வைத்திருந்தார் நிஜாமுத்தீன் அவுலியா. சமாதியின் உள்ளில் படமெடுக்க அனுமதியில்லை. வெளியில் வந்தபிறகு நிறைய எடுத்தேன். #டெல்லிடயரீஸ்
.
No comments:
Post a Comment