Friday, March 23, 2018

கார்ப்பரேட் பறவைகள்


விசாலமான கண்ணாடிக்கதவுகள், மூன்று ஆள் உயரத்துக்கும் மேலான அலங்காரக் கண்ணாடிச் சுவர்கள் என சூரிய ஒளியைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் டெல்லி அலுவலகக் கட்டிடம். எப்போதும் காலையில் வரும்போது அதன் மேல் விளிம்புகளைப்பார்ப்பது வழக்கம். நான்கைந்து புறாக்கள் முன்னும் பின்னுமாக அமர்ந்து கொண்டிருக்கும். இன்றைக்கு சாயங்காலம் வேலை முடிந்து திரும்பும்போது , அலுவலக வாயிலில் இரண்டடி நடந்திருப்பேன். கட்டிடம் கண்ணாடிகள் எல்லாம் முடிந்து விசாலமான நடைபாதை. பொத்தென என் முன்னால் ஓரடிக்கும் குறைவான இடைவெளியில் விழுந்தது ஒரு புறா. கால்கள் சுருங்கி உள்ளுக்கு இழுத்துக்கொண்டன. கண் பார்வை மங்குகிறது. மயக்கமுற்று விழுவது போல உடல் தரையில் மெதுவாகச்சாய்ந்தது. எதேனும் சண்டையிட்டு அதில் காயமுற்று விழுந்திருக்கக் கூடும் என நினைத்து மேலே பார்த்தால் அப்படி ஒன்றும் நடந்தமாதிரி தெரியவில்லை.

இருப்பினும் பறக்க ஒரு முயற்சியும் எடுக்கவில்லை அது. நான் மெதுவாக அதனருகே சென்று பார்த்தேன். யாரும் நெருங்கும் அரவம் கேட்டும் படபடக்க வில்லை. மயங்கி விட்டது. ஒன்றும் பிடிபடவில்லை. வெள்ளி மாலையாதலால் எல்லோரும் விரைவில் வேலை விட்டு சென்று விட்டனர். எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. கையிலெடுக்கலாமா , எடுத்தால் கொத்துமா என ஒரு ஐயம். தூரத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் அதனருகே வந்தார். எனக்கு தைரியம் கூடியது . லாப்டாப் பை இரு தோளிலும் மாட்டியிருந்ததால் இரு உள்ளங் கைகளையும் குவித்து அள்ளி அடுத்தேன். அனங்கக் கூட இல்லை. 

அருகில் ஒரு நீரூற்று. யாரும் எப்போதும் பார்ப்பதே யில்லை. எதற்கு அது ? போன தண்ணீரே திரும்ப வந்துகொண்டிருக்கிறது. திரும்பத்திரும்ப. புறாவைக் கையிலெடுத்தவன் நீரூற்று அருகில் சென்று , கொஞ்சம் நீரையள்ளி வாயில் ஊட்டினேன். அதற்கு கிஞ்சித்தும் விருப்பமில்லை போல. தண்ணீர் முழுதும் வழிந்தோடியது. இறக்கைகளை பிரித்துப் பார்த்தேன், வலது இறக்கை தோளில் உட்புறம் குருதி பெருகிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு நினைவும் இல்லை. படபடக்கவே யில்லை. கையில் சூடு பரவியது. மெதுவாக புல் தரையில் அதை வைத்து விட்டேன்.

முன்புறம் அலகு சரிந்தது. இறக்கைகள் இதுகாறும் விரிந்து கிடந்தவை மடங்கி உடலோடு ஒட்ட முற்பட்டது.கால்களைக்காணவே முடியவில்லை. கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக செருகிக்கொண்டது. ஒன்றும் செய்ய இயலவில்லை. எதேனும் கால்நடை மருத்துவர் அருகிலிருந்தால் கொண்டு போய்க்காண்பிக்கலாம் என நினைத்துக் கொண்டேயிருந்த போது கண்கள் முழுதுமாக மூடிவிட்டது. வானத்தையே தன் இறகுகளால் அளக்கும் புறா இறக்கிறது என் கண்ணிமைக்கருகில். என்ன செய்வது ?


பிறகும் என்ன காரணம் இருக்கும் என நிமிர்ந்து பார்த்தேன். மூன்றாளுயரக்கண்ணாடியில் முட்டி மோதி இருக்கிறது வேகமாகப்பறக்க எண்ணி. கார்ப்பரேட்கள் ஒழிக.

.

No comments:

Post a Comment