Friday, March 9, 2018

மலைப்புலி



இவர் ஜோதிராஜ். ராக் க்ளைம்பர்... ஆஹா. க்ளிஃப் ஹேங்கர் போல. ஆனால் எந்த கருவிகளும் இல்லாது வெறுங்கைகளால் மலையின் மேல் ஏறுகிறார். சித்ரதுர்கா கோட்டை சுற்றிப்பார்க்க நுழையும் போது , உடலில் பல வெயிட் குண்டுகளை உடலில் சட்டை போல ஏற்றிக் கொண்டு தரையில் சுற்றிக்கொண்டிருந்தார், அறிமுகப் படுத்தினார் கைடு திப்பேசாமி. 'சார் இவர் நேஷ்னல் சாம்பியன் சார்' , எதுல.. மலை ஏறுவதில. " கொஞ்சம் உடல் வெயிட் போட்டதால ஏறும் போது சிரமம் தெரியாம இருக்க உடலில் வெயிட் குண்டுகளை ஏற்றி சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்றார்.  சரி நாம மலைகளை கோட்டையை சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம் . வெய்யில் ஏறிவிட்டால் அலைவது கஷ்டம் என்றார் கைடு. அவருக்கு கன்னடம் தவிர மற்ற பாஷைகள் சுட்டுப்போட்டாலும் வராது போலருக்கு. என்னா கைடோ என்னவோ. பின்னரும் கோட்டை முழுக்க சுற்றி சுற்றி கால் கை வலித்தது தான் மிச்சம். திரும்பி வரும்போது ஜோதிராஜ் படிகளில்  அமர்ந்து ஏதோ உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"உங்களைப்போல கோட்டை சுற்றிப்பார்க்க வருபவர் ஒருவர், இந்த உணவை என்னைப்பார்த்ததும் கீழேயிறங்கிப்போய் எடுத்துக்கொண்டு கொடுத்தார், அதான்"  என்று சிரித்தார். எனக்கோ கால் கை வலி பொறுக்க இயலவில்லை. அவருடன் அப்படியே  மலைப்படிகளில் அமர்ந்து கொண்டேன். எப்போதிருந்து இப்படி மலையேற்றம் ? "சின்ன வயசில தமிழ்நாடு தேனியில காணாமற்போன என்னை ஒரு குடும்பம் எடுத்து சிவமோகா ( கர்நாடகா) வரை கொண்டு வந்து வளர்த்தாங்க. அதிலருந்து இங்கயே நான் தங்கிட்டேன்.  எனக்கென்னவோ இங்கயேதான் இருக்கணும்னு தோணுது. சரியோ தவறோ தெரியல. இந்த கர்நாடக மக்களோடவே இருந்துறலாம்னு தான் நினைக்கிறேன்."

"முகஸ்டாலினை ஒரு முறை சந்திக்க நேர்ந்தது சென்னையில. இப்படி சாதனை பண்றவங்கல்லாம் தமிழ்நாட்ல தான் இருக்கணும். இங்க வந்துருங்க, உங்களுக்கு உதவியா, பயிற்சி மையம் ஆரம்பிக்க தங்க எல்லா வசதிகளும் நான் ஏற்பாடு செய்கிறேன், அதோட நான்கு கோடி ரூபா கொடுக்கிறேன். எல்லாவற்றையும் இங்க இருக்கிற மலைகள்ல பயிற்சி எடுக்கப்பயன்படுத்துங்க என்றார். எனக்கென்னவோ அது சரியாப்படலை. திரும்ப ஷிமோகாவுக்கே வந்துட்டேன். இந்த மக்களோட அன்பு என்னை இங்கயே தங்க வைத்துவிட்டது" என்றார்.




எனக்கு 27 குழந்தைகள் ( அவர்தம் மாணவர்கள்) , இப்ப எல்லொரும் இந்த ஸ்போர்ட்ஸ்ல பங்கெடுத்து நெஷ்னல் சாம்பியன்ஸ் வரை வந்திருக்காங்க என்றார். "சரி அதெல்லாம் இருக்கட்டும். நீங்க என்ன சாதனை பண்ணிருக்கீங்க ? "உலக பத்து இடங்கள்ல எனக்கு மூன்றாவது இடம் , ஒரு முறை 100 அடி உயரத்தை 9 செகன்ட்களில் ஏறி சாதனை, ( அதை யாரும் இதுவரை முறியடிக்கவில்லை), அதோட ஒவ்வொரு ஆன்டும் ஃப்ரான்ஸில் நடக்கும் மலையேறும் போட்டியில் கலந்து கொண்டு பல பரிசுகள் வாங்கியிருக்கேன். இதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து 2020 ஒலிம்பிக்ஸில் சேர்த்துருக்காங்க , அதற்காக பயிற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆஹா.. தங்கப்பதக்கம் வாங்கித் தருவது தான் என்னளவில் இப்போதுள்ள ஒரே குறிக்கோள்" என்றார். சுற்றியிருந்த நண்பர்கள் அனைவரும் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். கொஞ்ச நாள் முன்னால ஜோக் அருவியில் விழுந்துவிட்ட ஒரு மாணவரை நீரின் அடிவரை சென்று ஒரு நாள் முழுதுமாக போராடி மீட்டுக்கொண்டு வந்ததையும் ஆவலாக சொன்னார்.

தமிழும்,கன்னடமும் சரளமாக பொழிகிறது அவரிடமிருந்து.  ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா என்றேன். ஃபோனை என்னிடமிருந்து வாங்கி அவரே எடுத்தார் :) சித்ரதுர்கா கோட்டைக்கு வரும்போகும் அனைவருக்கும் அவரைத் தெரிந்திருக்கிறது. எதோ ஒரு விதத்தில் ஹாய் ஹல்லோ சொல்லிச்செல்கின்றனர். கரிய உருவம். தமிழ் மண்ணிற்கான கட்டுடல். ஏறும் போது கவனம் சிதறாமல் இருக்க காதில் இயர்ஃபோன்கள் செருகிக்கொள்கிறார். கையில் வெள்ளையாக எதோ பொடியைப்பரப்பி உள்ளங்கைகள் முழுக்க பூசிக்கொள்கிறார். (மெக்னீசியம் கார்பனேட் என்றார்). உள்ளங்கைகளில் வியர்க்காதிருக்க இது அவசியம் என்றார்.




எதாவது டயட்ல இருப்பீங்களா என பொதுவாக கேட்டேன். "ஹ்ம்.. இந்த ஸ்போர்ட்ஸுக்கு டயட்லாம் இருந்தா சரியா வராது. உடம்புல 17-18 ஆப்பரேஷன்கள், நான்கு இரும்பு/அலுமினியம் ராடுகள், ஏகப்பட்ட சிராய்ப்புகள், தையல்கள்லாம் போட்டுக்கிட்டு இந்த விளையாட்டை விளையாடுறேன்" என்றார்.

ஜாக்கி ஷான் போல இதே தொழில் இதே வேலை. ஏறுவதும் இறங்குவதும். ஆஹா என வியப்புடன் பார்த்தேன். "இதுக்கே இப்படி ஆச்சரியமா? உங்கள இங்க கூட்டிட்டு வந்தாரே திப்பேசாமி கைடு. அவரும் ஒரு நேஷ்னல் சேம்பியன், ஃபோட்டோக்ராபில. அவர் எடுத்த படங்கள் தான் என்னை உலகெங்கும் அறிய வைத்தது. இப்ப கேட்டராக்ட் வந்ததால படங்கள்லாம் எடுக்கிறதுல்ல. அதோட அவர் 'நாய் வளர்ப்பவர்' எந்த வகை வேணாலும் கேளுங்க கொண்டு வந்து கொடுப்பார்" என்றார். அந்த கன்னடா ஒன்லி துபாஷியா இவ்வளவும் பண்ணுது என நினைத்துக் கொண்டேன்.

என் கண்களில் இருந்த ஆர்வத்தை பார்த்து , "மேலேயேறிக் காண்பிக்கவா" என்றார். ஹ்ம். செய்ங்க என்றேன். "எத்தனை செகன்ட்ல ஏறணும்" என்றார். அந்த மதில் நூறடிபோலும் இருக்காது. கைகளில் வெறுமனே வெள்ளைப்பொடி. உடலில் வேறேந்த கருவிகள் (ஹூக், சங்கிலிம் கயிறு கீழே விழாதிருக்க ) என எதுவும் இல்லாமல் ஏறுவேன் என்றார். எனக்குள் அட்ரினலின் பொங்கியது. நண்பர்கள் ஆசையாய்க்கொடுத்த உணவை கொஞ்சம் சாப்பிட்டு முடித்து விட்டு ஏறிக்காண்பிக்கிறேன். ஐந்து நிமிடம் பொறுங்க என்றவரை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

பின்னர் தயாரானார்.குறுக்கும் மறுக்கும் நடந்தார் பின்னர் புலி பதுங்குவதைப்போல சிறிது தூரம் வரை மெதுவாக நடந்து சென்றார். வேகமெடுக்கும் விமானம் போல அப்படி விரைவில் ஓடிவந்து சுவரில் பற்றிக்கொண்டு ஏறினார், இமைக்கும் நொடிகளில் கீழே விழுந்து விட்டார். சுதாரித்துக்கொண்டு மீண்டும் கொஞ்சம் பின்வாங்கி , கைகளில் பொடியை பரவவிட்டுக்கொண்டு , வேகமெடுத்து தாவி ஏறினார். மீண்டும் தோல்வி எனினும் கீழே விழவில்லை. பாலன்ஸ் செய்துகொண்டு நின்றுகொண்டார்.



நாயக்கர்கள் 16 ஆம் நூற்றாண்டில் கட்டிய/செதுக்கிய மதில் சுவர், முழுக்க முழுக்க பாறைக்கற்கள். அளவோடு செதுக்கி அடுக்கி வைக்கப்பட்டது போன்ற மதில். பல்லி/உடும்பு போலும் ஏற முடியாத இண்டு இடுக்குகளே இல்லாத மதிற்சுவர். (மராட்டிய மன்னர் சிவாஜி காலத்தில் அவர் கட்டிய ஒரு மலைக்கோட்டையின் பாதுகாப்பை சரிபார்க்க இப்படியான ஆட்களை கொணர்ந்து ஏறச்சொல்லி பார்ப்பது வழக்கம். ஒரு மராட்டி சினிமா கூட வந்தது இந்த மையக் கருத்தைக் கொண்டு.) இதில் எப்படி ஏறுவது. அதுவும் பற்றிக்கொள்ள எந்த வித கருவிகளும் இல்லாது ? ஹ்ம். வியப்போடு அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

மூன்றாம் முறை புலி வேகமெடுத்து மதிற்சுவரில் ஒட்டிக்கொள்ளாமல் விரல்,மற்றும் காலில் சாதாரண பூட்சுடன் பற்றிக்கொண்டு ஏறியேவிட்டது. மொத்தம் மூன்று செகன்டுகள் கூட இல்லை. மதிலின் மேல் இறுமாப்பு கொண்டு உலவியது, அனைவரும் கை தட்டினோம். மீண்டும் எதிர்பார்க்காத தருணத்தில் அதே வேகத்தில் பரபரவென கீழிறங்கியது. மீண்டும் உற்சாகம். ஆஹா. செல்ஃபோனில் படம் பிடித்தோம். மொத்தமே 6-7 செகன்ட்கள் தான் ஏறவும் இறங்கவும்! தங்கப்பதக்கம் ஒலிம்பிக்ஸில் நிச்சயம் ! :)  கண்டிப்பா இந்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்குவீங்க சார் என்றேன், "சார்லாம் சொல்லாதீங்க பிரதர்னு சொல்லுங்க" என்று சிரித்தார்.

எப்போது சென்றாலும் இந்த மலைப்புலி அங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கும். சந்திக்க தவறாதீர்கள். இவருக்கான ஒரு விக்கிப்பீடியா தளம் கூட இருக்கிறது, எனினும் அதில் செய்திகள் அதிகம் இல்லை.
https://en.wikipedia.org/wiki/Jyothi_Raj





.

No comments:

Post a Comment