ஏகத்துக்கு விமர்சனம் எழுதி ஓய்ந்து போனபிறகு இப்போது நான்
எழுதுகிறேன். இந்தப்படத்தப்பத்தி. முன்னால தமிழ்ல வந்த எந்த Ego
Clash படங்களையும் மனசில வெச்சிக்கிட்டு, குஷி,சிவா மனசில சக்தி,
கண்டநாள் முதல்,போன்ற படங்கள ஞாபகம் வெச்சிக்கிட்டு இந்தப்படத்தப் பார்க்கதே.இது
வேற மாதிரியான Genre ல வந்த படம் என்று ஏறக்குறைய அனைத்து
நண்பர்களும் சொல்லி, அதோட இந்தப்படத்துக்கு நீ விமர்சனமே எழுதாதேன்னு கையப்
பிடிச்சவங்களும் உண்டு.
கௌதம் எப்பவும் இப்ப இருக்கிற இயக்குநர்களுடனிருந்து கொஞ்சம்
வேற மாதிரிதான் எடுக்கிற வழக்கம். அந்த Upper Middle Class ரசிகர்கள, இப்ப IT ல புகுந்து ஏகத்துக்கு ,
எதுக்குன்னு தெரியாமலேயே சம்பாதிக்கிறவங்கள Audience ஆ மனசில
வெச்சிக்கிட்டு எடுக்கிறவர் தான். வெறுமனே கலைப்படம் மட்டுந்தான், Commercial
சமாச்சாரங்களே இல்லன்னும் எடுக்கிறவர் இல்ல, ஏகத்துக்கு கீழ இறங்கி
, திருப்பாச்சி ஸ்டைல்ல எடுக்கிறவரும் இல்ல.
படத்தோட கதையில எந்த பிழையும் இல்லை, காதலும் அதற்கேயுண்டான
எப்போதுமான புரிதலின்மையும், பெண்ணுக்கே உரித்தான Possessiveness ஐ புரிந்துகொள்ளாமையாலும் ஏற்படும் சிக்கல்களை காண்பிக்க முயன்றிருக்கிறார்
கௌதம்.இதையே விதாவ’விலும், வாஆ’விலும்
காட்டிச்சலித்துப்போனது தான் இது. புதிதாக என்ன இருக்கிறது கௌதம் , இல்லை கொஞ்சம்
ரசம் கலந்த , இன்னபிற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கண்டநாள் முதல், சிவா மனசில
சக்தி , இதையெல்லாம் விட எந்த வகையில் வேறுபட்டு நிற்கிறது படம்.. இந்த வினாவிற்கு
விடை காணுதல் சிரமம்.
சின்னச்சின்ன சண்டைகள், பிறகு ஊடல்,பிறகு கூடல் இதைத்தானே
காதல் என்று அனைவரும் காண்பித்துக்கொண்டே இருக்கிறார்கள்.?! எதையும்
மிகைப்படுத்திக்காட்றது தான் எந்தக்கலையுமே , அது கவிதையாகட்டும்,
நாடகங்களாகட்டும், அதன் வழி வந்த சினிமாவா ஆகட்டும், எல்லாமே மிகைப்படுத்தல் தான்.
கதாநாயகி காலைல எழுந்தா, குளிச்சா, பிறகு புடவை உடுத்திக்கொண்டு வெளியே
கிளம்பினாள்னு யதார்த்தத்தில் காட்டணும்னா அதுக்கே ஒண்ணரை மணிநேரம் ஆகிவிடும் ;) ,
அதெல்லாம் நடைமுறைச்சாத்தியம் இல்லை. எல்லாத்தையும் யதார்த்தமாக் காட்றேன்னா
யாருக்கும் அத தொடர்ந்து பார்க்க சலித்துத்தான் போகும்.
உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் வருணுக்கும்,
நித்யாவுக்கும் சண்டை வருகுது, பிறகு பிரிந்து விடுகிறார்கள். ஒரு இடத்தை மட்டுமே
என்னால Genuine Reason ஆக நம்பமுடியுது, அந்த இன்னொரு ஸ்கூல் லீடர்கிட்ட நித்யா
சிரிச்சுப்பேசறதப்பார்க்கிற வருணுக்கு வரும் கோபம், அதைத்தொடர்ந்து
வரும் சண்டை பிரிதல் ரொம்பவே நியாயம். பெண்களுக்கு மட்டுமில்ல
,ஆண்களுக்குத்தான் அதிக அளவில Possessiveness உண்டுன்னு
காட்டின இடம். இந்தப்பிரிவை கண்டிப்பா Justify பண்ணமுடியும் கௌதமால. இன்னபிற பிரிதல்களுக்கான காரணங்களாகக்
காட்டப்படுபவை Sorry Goutham ரசிக்க முடியல, நம்ப முடியல, அதான்
நிஜம்.
கேரளாவிற்கு படிக்கப்போகும் போது , வருண் நித்யாவை மேல படி,
இல்ல எதாவது வேலை செய், என்னையே சுத்திக்கிட்டு வெட்டியா இருக்காதேன்னு சொல்றான்,
இதே காரணத்த ஒரு பொண்ணு பையனப்பாத்து சொல்லீருந்தா அது ரொம்ப நியாயமாப்படும்.ஏன்னா
இது வரை நம்மல்லாம் பையனுங்க பட்டுந்தான் அப்டி இருப்பாங்கன்னு
நினைச்சிக்கிட்டு இருக்கோம். அப்டி ஒரு பேச்சைக்கேட்கும் பையன் , காதலி தன்னை
உயரச்சொல்கிறாள் என்று தமக்குப் பிடித்தவள்னு சொல்ற அறிவுரையா
ஏத்துக்கிட்டு, பின்னிப்பெடலெடுப்பார் பின்னால, ஏகத்துப்பாத்தாச்சு இந்த மாதிரி. இங்க
அப்டி இல்ல, ஆனா நித்யாவோ வருண் சும்மா ஏதோ காரணம் காட்டி தன்னை ஒதுக்குறான்னு
நினைத்துப் பிரிகிறாள். என்ன லாஜிக் இது ? கௌதம் எனக்குப் புரியல! இதுமாதிரி
ஏகத்துக்கு சறுக்குது பல இடங்கள்ல, அதனால படம் பார்க்கும்போது ஒரு சீரியஸ்னெஸ்
இல்லாமலேயே போகுது, ஒட்டவே முடியல.
பள்ளிக்கூட வயசில , நித்யா வீடு மாறிப்போனதால ,
அவளத்தொடர்ந்தும் பார்க்க முடியலன்னு சொல்லி , அதுக்காக வர்ற கோபத்தை வேணா
சகிச்சுக்கலாம், அது சும்மா Puppy Love, ஆனா வளர்ந்த
பிறகும் அதே மாதிரி இருக்கிறாள்னு காட்றதுதான் நம்பமுடியல. படம்
பாக்றவங்க யாருமே இதுவரை காதலிக்காத மாதிரியும் , பொண்ணுங்கன்னா
எப்டி இருப்பாங்கன்னு தெரியாத மாதிரியும் நினைத்துக்கொண்டு கௌதம் நமக்குக்காட்டும்
இந்த நித்யாவை நம்பவே முடியல
இது மாதிரி நிஜ வாழ்க்கையில நடக்காத பல விஷயங்களையே காரணமாக்காட்டி
, அதுவே யதார்த்தம்னு சொல்றதத்தான் தாங்கமுடியல :)
இப்படியெல்லாம் காட்சிகளை எடுத்துக்கொண்டு போயி இளையராஜாவிடம்
கொடுத்தால் அவரும் பாவம் என்னதான் செய்வார் ? பின்னணி
இசைக்கெனவே பிரபலமான அவர் இதில் முழுக்க மௌனமே சாதித்துவிட்டார். எந்த இடத்தில் இசைக்காமல் இருப்பது என்பது தான் இசையமைப்பாளனின் திறமை என்று
கூறுபவர், அதை நிரூபித்துக்காட்டி விட்டார். எந்த இடத்திலும் ராஜாவைப் பார்க்கவே/கேட்கவே முடியவில்லை
பாடல்களை எங்கே எப்படிப்போடுவது என்று முடிவெடுத்தது ராஜாவா
இல்லை கௌதமா ? ஐயோ பாவம்.எங்கும் பொருந்தவில்லை
பாடல்கள். Sound of Music ,Gone with the Wind, படங்களின் Range
க்கான பாடல்கள் அனைத்தும் , ஏற்கனவே லண்டனிலிருந்து
ஆர்க்கெஸ்ட்ராவை அழைத்து வந்து ,பிரம்மாண்டப்படுத்தி வெளியிட்ட
இசையும் பாடல்களும் சற்றும் பொருந்தாத இடங்களில். இனியும் ராஜா
கௌதமோடு சேர்ந்து பணிபுரிவார் என்பது சாத்தியமேயில்லை.
தனக்குப்பிடித்தவளை பார்க்கப்போகிறோம் என்று எந்தக்காதலனும்
செல்லும் மனநிலையில் , ஏகக்குஷியோடு, கிடைத்த வாகனங்களிலெல்லாம் பயணிக்கும் வருண்
,பாடிக்கொண்டே செல்கிறார் “காற்றைக்கொஞ்சம் நிற்கச்சொன்னேன்” என்று ,நித்யாவைப் பார்த்தவுடன்
“ முதன் முறை பார்த்த ஞாபகம்” என்று படாரென மாறுகிறது. எப்படி ஒத்துக்கொண்டார்
ராஜா ?
பின்னணி இசைக்கோர்ப்பில் உங்களை இருக்கவே விடவில்லையா
கௌதம்? இப்படி ஒரு Mediocre Touch படம் முழுக்க. எதோ இத்தனை நாட்கள் சரியான படங்களும், பிரபல இயக்குநர்களும் தம்மிடம்
பாடல் கேட்டு வரவில்லையே என்ற ஆதங்கத்தில் மணிமணியென பாடல்கள் அமைத்துக் கொடுத்தமைக்கு
கௌதம் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இயலாமல் தவித்து அதை முழுக்க வீணடித்திருக்கிறார்.
“------- பெற்ற தெங்கம்பழம்”
நான் கேரளாவிற்கு படிக்கப்போகிறேன் என்று உப்புச்சப்பில்லாத
காரணத்திற்கு , அவள் பிரிகிறாள் , அங்கு ஒலிக்கிறது “ முதன் முறை பார்த்த ஞாபகம்”
முழு சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராவுடன் , Double Bass ம் மனதை உள்ளிருந்து அறுக்கும் வயலின்களும் இழைகின்றன. எந்த இடத்திற்காக எந்தப்பாடல் ? கௌதம் உங்க மனதைத்தொட்டு
சொல்லுங்க, இதைப்போல Amateur சூழல்களைச்
சொல்லித்தான் இப்படி வைரங்களை வாங்கினீர்களா ? அதை எங்கு போடவேண்டும்
என்ற அடிப்படைப்புரிதலாவது உங்களுக்கு இருக்கிறதா..?! பின்னர்
ஒரு Perfect Rock சந்தானத்திற்கு பட ஆரம்பத்தில் , கொடுத்து வைத்தவனடா நீ !. மணிரத்னம், பாலா போன்ற இயக்குநர்கள் ஏன் சிவாஜியிடம் செல்லவில்லை என்பது இப்போது தான்
புரிகிறது. ஆடவே தெரியாத ராதா , காலத்தால்
அழியாத இசை கொடுத்த “காதல் ஓவியத்தை” ஓடவிடாமற்செய்தார்.
இங்கே இப்ப கௌதம்.!!
பாடல்களை வெளியே கேட்டுக்கொள்வது மட்டுமே உசிதம்.
படத்தில் அதற்கான காட்சிகளோ, இல்லை அதை மீண்டும்
கேட்கத்தூண்டும் வகை அழுத்தமான சம்பவங்களோ இல்லை என்பதே எனது ஆழ்ந்த வருத்தம்.
இதே எட்டுப்பாடல்களையும் வைத்துக்கொண்டு இன்னுமொரு படம் , அவற்றை முழுக்க ரசிக்கவைக்கும்படியான காட்சிகளைக்கொண்ட அதற்கான முழு அங்கீகாரம்
கொடுக்கக்கூடிய ஒரு படம் எடுக்கப்படுமேயானால் ,,ஹ்ம்,பார்க்கலாம். :) வேண்டுமானால் பாடல் வரும் காட்சிகளில் கண்களை மூடிக்கொண்டு அரங்கில் அமர்ந்து
கேட்டுக்கொள்ளலாம்.
சமந்தா ரொம்பவே பொருந்திப்போகிறார் எல்லாக் காலங்களுக்குமான
உடையிலும், நடையிலும் கூடவே நடிப்பிலும். ஜீவா பள்ளிக்கூடப் பையன் என்பதை நம்புவது கொஞ்சம் சிரமந்தான்.,இருந்தாலும் இப்ப ஸ்கூல்ல படிக்கிற பையன்கள்லாம் Fast Food , Pizza
என்று அப்டியே சாப்பிட்டு பழகிட்டதால ஓரளவு ஒத்துக்கலாம். ஆனாலும் இதுக்கு முன்னர் அவர் செய்த ஹீரோயிஸப்படங்கள் அவரை ஸ்கூல் பையனா பார்க்கத்
தயங்கத்தான் வைக்குது,! இதெல்லாம் அந்த ‘முரளி’ ஆரம்பிச்சு வெச்சது , 40 வயசிலும் கைல சின்னபுக்கை தூக்கிக் கிட்டு காலேஜ் போவார் , நாமும் அதை பார்த்து ரசிப்போம் :)
படத்தைப்பற்றி வேறொன்றும் பெரிதாகச்சொல்ல ஏதுமில்லை.
.
No comments:
Post a Comment