Tuesday, December 4, 2012

ஆழ்ந்தபுரிதல்



வழியோரக்காட்சிகள்

வெளிக்கிளம்பும் எனக்கு
எவையெல்லாம் காணக்கிடைக்கிறது ?

காலுடைந்த எப்போதும்
அதே தெருவைச் சுற்றிக்கொண்டிருக்கும் நாய்,
வழியில் தென்பட்டும் கண்டுகொள்ளாமல்
சென்று விடும் நண்பன்,
உண்டியல் குலுக்கிக்கொண்டு வரும் திடீர் பக்தன்,
ஆறு மாதமாகியும் கட்டாத குடிநீர்க்குழாய்ச்
சந்தாவை ஒரேயடியாக வசூலித்துக்கொள்ள
நினைக்கும் முனிசிபாலிட்டி ஓவர்சீயர்,
சந்திக்கவே கூடாதென
தவிர்த்துக்கொண்டிருந்த நபர்,
இதுவரை அவனுக்காகவே
காத்துக்கிடந்தும் வராத வண்ணான்,
எத்தனை முறை மணியடித்தாலும்
நகரவே நகராத எருமைகள்,

அதுவும் சரிதான்.
நம்மையெல்லாம் எதிர்ப்பட வேறு யார்
வந்துவிடப்போகின்றனர் ?



ஆழ்ந்தபுரிதல்

வெளிவரும் இதழ்களில்
கவிதை என்ற தலைப்பின் கீழ்
இடப்படுவதால்
வரிகள் மடிக்கப்பட்ட
என் உரைநடைகள்
அனைத்தும் கவிதை என
தவறாகப்புரிந்து கொள்ளப்படுகின்றன.

மேற்கண்ட சொற்கள்
மடங்கிய உரைநடையை
அனுப்பிவைத்திருக்கிறேன்
இதழ்களுக்கு
உங்களோடு சேர்ந்து
எனக்கும்
ஆவலாயிருக்கிறது
எந்தத்தலைப்பின் கீழ்
இது வெளியாகுமென..


.

7 comments:

  1. இலக்கணப்படி மிகச் சரியாக
    அடுக்கபட்ட வார்த்தைகளை
    கவிதை எனச் சொல்வதைவிட
    கவித்துவமான உரை நடையை
    கவிதை எனக் கொள்ளல்தானே சரி

    ReplyDelete
  2. @ ரமணி சார்: அப்படியும் சொல்லலாம். இருப்பினும் இன்னும் உரைநடைக்கும் கவிதைக்கும் வேறுபாடு அறியாது உலவும் சின்னப்பயல் தான் நான் :)

    ReplyDelete
  3. சித்திரவீதிக்காரன் on 8:33 பிப இல் நவம்பர் 7, 2012 said:

    மழைக்கவிதை, ஆழ்ந்தபுரிதல், தபால்பெட்டி கவிதைகள் அருமை.

    ReplyDelete
  4. ஆழ்ந்த புரிதல் அருமை சின்னப்பயல் கவிதையோ உரைநடையோ உள் உணர்வுகளை வெளிபடுத்தும் ஒரு பாத்திரம் தான்

    ReplyDelete
  5. என்னதான் எதிர்ப்படப்போகிறது...வாழ்வு இதுதானோ....இல்லயென்றாலும் வாழ்வு ‘சப்’தானே !

    பாரங்கள் சுமக்கின்றன என் எழுத்துக்கள் கவிதையென்கிற பெயரில் சுமைதாங்கியாய் !

    ReplyDelete
  6. @ ஹேமா : கவிதை என்ற சுமைதாங்கி..ஹ்ம்...கவிதாயினி ஹேமா,,!

    ReplyDelete