Saturday, December 8, 2012

பாவைக்கூத்து



புதிதாக வெள்ளையடித்த சுவரில்
நகத்தை வைத்துக் கீறும்போது ஏற்படும்

மனக்குறுகுறுப்பை உள்ளூர ரசிப்பது,

மண்ணெண்ணெய் பாட்டிலைத் திறந்து
அதன் மணத்தை தான் மட்டும் நுகர்வது,


ஆகக்கூடுதல் சிரமத்திற்குப் பின்னர்
கைவிரல்களால் பிடித்த வண்ணத்துப்பூச்சியின்
நிறத்தை உற்றுநோக்குவது.


இப்போது அடிக்கப் போகும் பெரிய அலை
கண்டிப்பாகத் தன் காலை நனைத்தே தீரும்
என நினைக்கையில்
அது அருகில் கூட வராமல் போவதை ரசிப்பது,


தரைமட்டமான கட்டிட இடுபாடுகளிலிருந்து
சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் மீண்டுவருவது,


சிறு கண்ணாடிக்குடுவையின்
உள்ளுக்குள் நீந்தும் மீனை வெளியிலிருந்து
ஏதும் செய்ய இயலாது பார்க்கும்
பூனை மனத்துடன் சில சமயங்களில் இருப்பது,


எனக்கென்னவோ
இவையெல்லாவற்றிற்கும்
காதலுக்கும் தொடர்பிருக்கிறது
என்பது போலத்தான் தோணுகிறது.


 





2 comments:

  1. நல்ல உயிரோட்டமுள்ள கவிதை!படித்தேன் நன்றி!

    ReplyDelete
  2. மிக்க நன்றி புலவர்.

    ReplyDelete