அழிந்து வரும் கலைகளில் ஒன்றான தோற்பாவைக்கூத்து
நடந்தேறியது நேற்று 18-11-2012 பெங்களூர் ஜெய்பீம் பவனில் , கலைஆர்வலர் மற்றும் “களரி
தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்” என்ற ட்ரஸ்ட்டை நடத்தி வரும் திரு
மு.ஹரிகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைத்து வழங்கினார்.
தொடரும் பொருளாதார நெருக்கடியிலும் அழிந்து வரும் கலைகளைத் தம்மால் இயன்றவரை இந்த்தலைமுறைக்கு எடுத்துச்செல்ல முயல்பவர். கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தும், அந்தக்கலைகள் அழிந்து விடாது , ஒரு கலைக்கூடம் – கூத்துப்பள்ளி –நிரந்தரமாகக் கட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அது குறித்த நிதி திரட்டும் வகையிலும், பெங்களூரில் இருக்கும் கலை ஆர்வலர்களின் கண்களுக்கு விருந்தாக்கவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது “பெங்களூர் ஜெய் பீம் பவனில் (டவுன் ஹால் அருகில்).
தோற்பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம்,கூத்து
முதலிய தொல்கலைகள் தமிழர்தம் நுகர்வுக்கலாச்சாரத்தால் நசிந்து வருகின்றன. இவ்வரிய
கலைகளை மீட்டெடுப்பதும் , ஆவணப்படுத்துவதும் மட்டுமல்ல, ஆதார வடிவம் மாறாது அவற்றை
வளர் தலைமுறைக்கு கைமாற்றித்தருவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும்.
நிகழ்த்துக் கலைஞர்களைப்பற்றிய ஒரு சிறிய
அறிமுகம்
அம்மாப்பேட்டை கணேசன் -அய்யா கணேசன் அவர்கள்
தோற்பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம்,கூத்து முதலான கலைகளில் சிறந்து விளங்குபவரும்
, தமிழகத்தில் தற்போது காணக்கிடக்கும் பத்தே பத்து கலைஞர்களில் ஒருவர்.வாழ்வை
முழுமையாக கலைக்கெனவே அர்ப்பணித்தவர். “அரிச்சந்திரா” தோற்பாவைக்கூத்தை
நிகழ்த்தியவர்.
அம்மாப்பேட்டை செல்லப்பன் -இவர் “அய்யா கணேசனின்”
தமையனார்.மிருதங்கமும் ,கூடவே பாடல்களும் பாடக் கூடியவர்.
முகவீணை நாகமரை குமார் – நாயனம் போன்ற சிறிய வாத்தியக்கருவியை
வைத்துக்கொண்டு வர்ணஜாலங்கள் காட்டுகிறார்.
ஹார்மோனியம் சுப்ரமணி – ஆதார சுதி இவரின்
ஆர்மோனியத்திலிருந்துதான் கிளம்புகிறது.
தாளம் ரமேஷ் – கூடி வரும் தாளமும்,ஒருமித்த
குரலுமாக தோற்பாவைக்கூத்தை ஒரு நிகழ்கால நிகழ்வு போல மாற்றிக்கொண்டிருப்பவர்.
என்னுடைய சிறுவயதில் ஊரில் நடந்த கோயில் திருவிழாக்களில்
கரகாட்டம், ஒயிலாட்டம், ராஜா ராணி ஆட்டங்கள் எல்லாம் பார்த்த எனக்கு அவை நினைவில்
எப்போதும் தங்கிப்போனவை. இந்தத் தோற்பாவைக்கூத்து என்பது என்னைப்பொருத்தவரை
ரொம்பவும் புதிதான ஒன்று. பொம்மலாட்டங்கள் கூட ஒரு சில இடங்களில் கண்டது உண்டு.
இந்தத் தோற்பாவைக்கூத்துக்கென , ஆட்டின் தோலைப்பதப்படுத்தி , அதை மெருகேற்றி பிறகு கதாபாத்திரங்களூக்கேற்ப அவற்றை உருவங்களாக நறுக்கி , வர்ணங்கள் பூசி என ஏகத்துக்கு முன்னேற்பாடுகள் செய்யப்படவேண்டிய ஒன்று.
ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உண்டான ஆடை
அணிகலன்கள், வேல் , அம்பு, மற்றும் ஐயர் குடுமிகள் , அவற்றின் பானை வயிறு
என்றெல்லாம் அதை அமர்ந்து கலை நேர்த்தியோடு உருவாக்க வேண்டும். அவற்றின் கண்களில்
வேறுபாடு காண்பிக்கிறார் “அய்யா கணேசன்” . அதே சந்திரமதி நாடாளும் அரிச்சந்திர
மன்னனின் ராணியாக இருக்கும்போது உள்ள உடுப்புகளும் ,முக்கியமாக தீட்சண்யமான அவளின்
கண்களும் , பின்னர் அவள் ஒரு பிராமணனின் வீட்டு வேலைக்காரியாக விற்கப்பட்டவுடன்
காணக்கிடைக்காது போகின்றன.
அந்த வேலைக்காரி உருவத்திற்கென இடுங்கிய
கண்களும், அத்தனை சோபிக்காத உடுப்புகளுமாக , நகைகள் அனைத்துமிழந்து போய் நம்மை
கண்கலங்க வைக்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் , குறைந்தது மூன்று
வேடங்கள் அரிச்சந்திரா நாடகத்தில் வருகிறது. அவற்றுக்குப்பொருத்தமான வேலைப்பாடு
கொண்ட தோற்பாவைகளை உருவாக்கி அவற்றை வேணும்போது கயிறு கொண்டு அசைத்து நம்மை அந்தக்
கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போகச்செய்கிறார். திரை நடிகர்களையும் மிஞ்சும் பாவனைகள்
காட்டுகின்றன பாவைகள்.
இதுபோன்ற நிகழ்வுகளுக்குச் சென்றால் மட்டுமே
இப்படியான கலைகள் இன்னமும் இருந்து வருகின்றன என்பது தெளிவாகிறது. இது சம்பந்தமான
காட்சிகள் ‘அழகி’ மற்றும் ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற திரைப்படங்களிலும் வருகிறது ,அதற்கான
முக்கியத்துவம் அத்தனை கொடுக்கப்படாவிட்டாலும் கூட போகிறபோக்கில் காண்பித்துவிட்டு
போகிறது.. எத்தனை பேர் இவற்றை கவனித்தோம் ?
Pogo ,
Cartoon Network Channels பார்க்கும் நம் குழந்தைகளின் மனதில் மேற்கத்திய நாடுகளின் மிக்கி மௌஸ், டொனால்ட்
டக் போன்ற கதாபாத்திரங்கள் எவ்வித உள்ளுறுத்தலுமின்றி அவர்களால் விதைக்கப்படுகிறது.முழுக்க
வியாபார நோக்கில்.நம்மிடம் இருக்கும் இந்தத் தோற்பாவைக் கூத்துக்கு அந்த மாதிரியான
தொலைக்காட்சி சேனல்களில் இடமேயில்லை. நாமளே முதலில் பார்ப்பதில்லை, பிறகல்லவா நமது
குழந்தைகளுக்கு இவற்றைக்காண்பிக்க ?
சினிமாத்திரையில் முன்னேற்பாடுகள் செய்து,இயக்குநர்,இசை
அமைப்பாளர்,கதை/திரைக்கதை இன்னபிற விஷயங்களும் , அவற்றுக்கான உதவிகளும் ஒருங்கே
கிடைத்து , தமது
“திறமையை” பல டேக்குகள் வாங்கி , பல சமயங்களில்
கதையையே தமக்கென , தம் புகழ் வருமாறு மாற்றிக்கொள்ளவும் செய்யும் செல்லுலாய்ட்
சிற்பங்கள் எல்லாம் இந்த உண்மைக்கலைஞன் முன்னிலையில் தலை குனிந்து நிற்க வேண்டும்.
நிகழ்ச்சிக்கென தகுந்த முன்னேற்பாட்டுடன் வந்தாலும் , கதை சொல்லும் விதம் , அவற்றுக்கான
இசை , இடையே வரும் பாடல்கள் அனைத்தும் எவ்விதத்தடையுமின்றி , தடங்கலின்றி நேரடியாக
நிகழ்த்திக்காண்பிக்கப்படுகிறது. ‘டேக்’குகள் எடுக்க வாய்ப்பேயில்லை. இப்படிப்பட்ட
கலைஞர்கள் கோடியில் சம்பாதிக்கிறார்களா ? தெருக்கோடியில் சீண்டுவாரற்று கிடக்கிறது
இந்தக்கலை.
கோடிகளில் சம்பாதிக்கும் அந்தத்திரைக்கலைஞர்கள் தமது
ஒரு நாள் ஊதியத்தைக் கொடுத்தாலும் போதும் இந்த உண்மை நிகழ்த்துக்கலைஞன் ஒரு ஆண்டு
உண்ணவும் , தமது கலையை வியாபார நோக்கின்றி பலருக்கும் எடுத்துச்செல்லப் போதுமாயிருக்கும்
என்பதே முகத்திலறையும் உண்மை.
எங்கள் ஊரிலும் இப்போது குறைந்து விட்டது... ...ம்... இந்தக் கலை மறையாமல் இருக்க வேண்டும்...
ReplyDeleteநன்றி...
tm2
உங்கள் தளத்தில் முகநூல் கருத்துப்பெட்டி, இவ்வாறு வருவதை தடுக்க இந்த தளத்தைப் பார்க்கவும்....
ReplyDeletehttp://www.bloggernanban.com/2012/11/facebook-debugger-tool.html
நன்றி...