Wednesday, October 24, 2012

மழையும் தேநீரும்



தலை நிமிர்த்திக்கொண்டு
பார்த்துக்கொண்டே
நடந்துகொண்டிருந்த எனக்கு
இருட்டிக்கொண்டு வந்த வானம்
பொழியக்காத்திருந்தது


இன்னும் கொஞ்சம் தான் தூரம்
எட்டி நடந்தால் சென்றடைந்து விடலாம்
அருகிலுள்ள தேநீர்க்கடையை


ஏற்கனவே கடைக்கு முன் சிலர் நின்றிருந்து
வழியை அடைத்துக்கொண்டிருந்தனர்
நாயரின் குரல் மட்டும் உள்ளிருந்து கேட்டது


ஆணை கொடுத்து காத்திருந்தபோது
முதலில் விழுந்த துளி
அருகில் புகைத்துக்கொண்டிருப்பவனின்
பீடி நுனியை நனைத்தது.
சட்டென உதறியவனின் கங்கு
என் கையின் பின்புறத்தில் விழுந்து
சிறு சூட்டை உணரச்செய்தது


தொடர்ந்தும் பெய்த மழை
மேற்கூரைத் தகரங்களில் ஒலியெழுப்பிக்கொண்டு
தாரை தாரையாக விழுந்து கொண்டிருந்தது


தெறித்த மழைநீருடன் கரையை ஒட்டியிருந்த
சேறும் சகதியும் வேட்டியைத் தூக்கிப்பிடித்த
என் கால்களில் அப்பிக்கொண்டது


நனைந்து கொண்டிருந்த குருவிகள்
தம் அலகால் தெப்பலாக நனைந்த
இறகுகளைக் கோதி விட்டுக்கொண்டிருந்தன


பொழிந்து முடித்த வானம்
வெளிர் நீலமாக சுத்தமாகக்கிடந்தது.
ஆங்காங்கே சிறு குட்டைகளில்
தேங்கிக்கிடந்த மழை நீரில்
தலை கவிழ்த்து
என் முகம் பார்த்துச்சென்று
கொண்டிருக்கிறேன்.


இன்னொரு மழைக்கும்
இன்னொரு தேநீருக்கும்
எத்தனை காலம் காத்திருக்கவேண்டிவரும்
என மனதிற்குள் எண்ணியபடி.




குறை ஒன்றும் இல்லை  

தேநீரில்
சர்க்கரை அளவு குறைவு
போலத்தென்பட்டது.
சற்று ஜன்னலின் வெளியே
கோப்பையை நீட்டினேன்
விழுந்தன சில துளிகள்
குறை ஒன்றும் இல்லை
இப்போது ..



.


4 comments:

  1. மிகவும் அருமை...

    குறை ஒன்றும் இல்லை - சூப்பர்ப்...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மழையை மேன் மேலும் அழகாக்கி காட்ட முயல்வது கையில் தேநீர் கொப்பைகளுடனான தருணங்கள் தான்..

    மழையும் அழகாகும்
    தேநீரும் சுவை கூடும் ..

    ReplyDelete
  3. மிக்க நன்றி தனபாலன் :)

    ReplyDelete
  4. மிக்க நன்றி வெறும்பய , வெகு நாள் கழித்த வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்,, :)

    ReplyDelete