Thursday, October 18, 2012

பாடுபொருள்



என் கவிதை தனக்குள் வந்து உலவ

மழையை, அதனோடு கூடிய தேநீரை
காற்றை, பூக்களை
மயங்கும் புறத்தோற்றத்தின் அழகுடன் கூடிய
எந்தப்பெண்ணையும் அனுமதிக்கவில்லை


என் கவிதை தனக்குள் வந்து உலவ

வறுமையை, செழுமையை

கடவுளை சாத்தானை,கண்ணாடிகளை, அதன் பிம்பங்களை,நிழல்களையும் அவற்றின் நிஜங்களை
மயக்கும் மதுவையும்
இன்னபிற லாஹிரி வஸ்த்துக்களையும்
அனுமதிக்கவில்லை


என் கவிதை தனக்குள் வந்து உலவ

குழந்தைகளை, முதியோரை
சித்ரவதைகளை, காதலை,

நிராகரிப்பை,அறிவுரைகளை, பிதற்றல்களையும்
அனுமதிக்கவில்லை

என் கவிதை தனக்குள் வந்து உலவ


போரை, அமைதியை,அசடனை, அறிவாளனை
பறவையை, ஏன் அதன் ஒற்றைச்சிறகைக்கூட
அனுமதிக்கவில்லை


என் கவிதை தனக்குள் வந்து உலவ

மாயையை, காட்சிப்பொருளை
சொர்க்கத்தை, நரகத்தை
பொதுவுடைமையை, முதலாளித்துவத்தை
சோஸலிஸத்தை அனுமதிக்கவில்லை


என் கவிதை தனக்குள் வந்து உலவ

ரசிகனை, உருவாக்குபவனை
வழிப்போக்கனை, தேசாந்திரியை
பக்கிரியை அனுமதிக்கவில்லை

கடைசியாக ஒரு உண்மையைக்கூறுகிறேன்
உங்களிடம் மட்டும்,

இந்தக்கவிதை தனக்குள் நுழைந்து உலவ
என்னையே அனுமதிக்கவில்லை.




.

1 comment:

  1. எந்த கேட்ட... கெட்ட... பழக்கமும் வரவில்லையே...

    அது போதும்...

    tm2

    ReplyDelete