Tuesday, September 4, 2012

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!



இசை என்பது எங்கோ பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப்பிரபஞ்ச வெளியில் , அதைக் கண்டுபிடிக்க நமது உணர்கொம்புகளை நீட்டி வரவேற்கும் பொருட்டு காத்திருந்து அதன் அலைவரிசையில் நம்மைத் திருத்தி வைத்துக்கொண்டால் அந்த இசை நம்முள் புகுந்து செல்களின் சுவர்கள் வரை சென்றடைந்து நம்மை உள்ளிருந்து சிலிர்க்கச்செய்யும். இப்படிப்பட்ட உணர்கொம்புகள் அத்தனை எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில உயிர்கள் அந்த அதீத உணர்கொம்புகளை தன்னகத்தே கொண்டு இசையை அதன் பிரபஞ்சத்தில் இருந்து உறிஞ்சி எடுத்து தாமும் உட்கொண்டு அதைப் பிறருக்கும் ஊட்டிவிட எத்தனிப்பவை. அப்பேர்ப்பட்ட உயிரிலொன்று நமக்கேயுரித்தான, நம் வாழ்வினூடே என்றென்றும் பயணிக்கும் ராஜா. 

ஓய்வெடுக்கச்சென்ற குயில் , தம்மை இன்று மரக்கிளைகளினூடே மறைத்துக் கொள்ளாமல் மீண்டும் கூவத் தொடங்கியிருக்கிறது.வசந்தம் வந்து விட்டது. ”கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே” என்று கௌதம் வலிய அழைத்து வந்திருக்கிறார் ராஜாவை மீண்டும் சாதாரணத் திரை இசைக்கென. இனிவரும் முப்பது ஆண்டுகளுக்கு இந்த “ நீதானே என் பொன்வசந்தம் “ திரை இசை இலக்கணமாகத் திகழும்.


இனி Synth Music , Loops, மற்றும் வசதியாக எங்கிருந்தேனும் அது அரபி, Spanish Country Music, HipHop , Techno , Digitized அல்லது Columbian மற்றும் Jamaican Beats களை வைத்து ஒப்பேற்ற நினைப்போர் மூட்டை கட்டிக்கொண்டு வந்த வழி பார்த்துச்செல்லுதல் நலம். Orchestration என்பதே அறியாத ஒரு Generation. Instrumental Music என்றால் என்னவென்றே தெரியாத கும்பல்களுக்கு இதுதான் இசை இப்படித்தான் இசைக்கவேண்டும் என்று அறிவுரை தரத்தக்க இசை இது.

“நினைத்தால் என்னால் பாப் இசையை ஒரு கை சொடக்கில் கொண்டுவர முடியும் . அந்த சங்கீதம் ரசனைக்கு ஏற்ப இறங்கி வருவது. இந்த சங்கீதம் படியேற்றம்” என்று ராஜாவே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதை இப்போது யார் வேண்டு மென்றாலும் உருவாக்கலாம். ஒரு நல்ல Configuration உள்ள PC-யில் நிறுவத்தக்க மென்பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. அதை நிறுவி விட்டு 3 நிமிடத்திற்கான பாடல் என முடிவு செய்துகொண்டு , இந்த Beats இத்தனை நேரம் இசைக்க, பின் இசைக்கருவிகளை நம் தேவைக்கேற்ப Select செய்து கொண்டு (அதுவே பல Suggestions கொடுக்கும்) தொடர்ந்து இசைத்தால் பாடல் தயார்.


இவையனைத்தையும் பார்த்து கேட்டுச்சலித்துப் போய்க்கிடந்த நமக்கு புதிதாய் வரும் தென்றல் போல, மனதைக் கொள்ளை கொள்ளும் இசை. முற்றிலும் மாறுபட்ட, அவருக்கே இந்த பாணியிலான இசை புதியது என்று கருதுமளவுக்கு வெளிவந்திருக்கும் இசைப்பேழை இந்தப் “பொன் வசந்தம்”. எட்டுப்பாடல்கள் , ஒவ்வொன்றும் அதனதன் பாணியில் , ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வேறுவேறாக தமது பழைய பாடல்களின் ஒன்றின் சாயல் போலும் காணக்கிடைக்காது இசை அமைத்திருக்கிறார் ராஜா.

இந்த ஆல்பம் முழுக்க முழுக்க Late 80-களின் பின்னணியில் , அந்தக்காலத்திய இசைப்பாங்கில் அமைக்கப்பட்டவை.இங்கு ஒலிப்பவை அனைத்தும் Mostly Jazz மற்றும் அளவான Rock மட்டுமே.வேறு எதுவும் கொடுக்கப்படவேயில்லை நமக்கு. இந்த ஆல்பம் கேட்குமுன்னர் இன்றைய HipHop/Techno வகையறாக்களை ஒதுக்கிவிட்டுக் கொஞ்சம் Bryan Adams –ன் Waking up the Neighbors , 18 Till I die மற்றும் MLTR- ன் Played on Pepper , Paint My Love போன்ற ஆல்பங்களை/பாடல்களைக் கொஞ்சம் கேட்டு உங்கள் Mood ஐ பின்னோக்கி இழுத்துச்சென்று வைத்துக் கொள்ளுங்கள்.( Linkin Park பக்கம் போயிடாதீங்க :-) ஏனெனில் ராஜாவே இப்படி ஒரு Mild Rock With Jazz இது வரை பண்ணதேயில்லை.

தீர்மானம் செய்து கொண்டு நம்மை 30 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச்செல்லும் முயற்சியில் இம்முறை ராஜாவிற்கு எப்போதும் போல வெற்றிதான். முதலில் அத்தனை பாடல்களும் நம் பிடிக்குள் வரவில்லையாயினும் , கேட்கக்கேட்க இந்த வசந்தம் மனதினுள் புகுந்து இம்சை செய்தே தீரும் என்பது உறுதி, :-) பாடல்களிலிருந்து பாடகர்களின் குரலை நீக்கிவிட்டு வெறும் இசையாகக்கேட்டாலும் போதுமென்றே தோணுகிறது எனக்கு :-)

இப்போது ஒவ்வொரு வசந்தமாக நுழைந்து வரலாம். :-)


காற்றைக்கொஞ்சம் நிற்கச்சொன்னேன்

அருமையான மெலடி இது , இரண்டு நாட்களுக்கு முன்னரே வந்து என் தூக்கத்தைக் கெடுத்த மெலடி :-) இந்தப்பாட்டுக்குள்ள நுழைவதற்கு முன்னால் கொஞ்சம் Jazz மற்றும் Waltz Music பத்தி சொல்லி விடுகிறேன். 1940களில் பிரபலமாக இருந்த Jazz music உடன் Waltz இணைந்து Jazz Waltz ஆக உருவெடுத்திருக்கிறது. Waltz தகுந்த இடைவெளி விட்டு இசைக்கப்படுவது 1-2-3 , Jazz Waltz தாளகதியின் வேகத்தைக்கூட்டி இரண்டாவது மூன்றாவது அட்சரங்களை ஒரு சிறு அசைவைச்சேர்க்கையில் அது Jazz Waltz ஆக உருவெடுக்கிறது. “நெஞ்சத்தைக்கிள்ளாதே” திரைப்படத்தில் வரும் “ கேள் தென்றலே” என்ற பாடல் முழுக்க Jazz Waltz ல் அமைக்கப்பட்ட பாடல். அதை மீண்டும் திரும்ப நமது செவிக்கு கொணர்ந்திருக்கிறார் ராஜா. இந்தக் “கொஞ்சக்காற்றின்” மூலம். :-)

முதலில் ஹார்மனியுடன் சேர்ந்து ஒலிக்கும் வயலின் பிட் நம்மை உள்ளே நுழையவிடுகிறது. கார்த்திக் வரிகளைப்பாடத்தொடங்கும் போது , நம்மை அதிரவைக்காத Drums -ன் சீரான தாளகதி , Repeating Rhythm , பாடலுக்கு வலுச்சேர்க்கிறது. கொஞ்சம் “மன்றம் வந்த தென்றலையும்”,” “மீனம்மா மீனம்மாவையும்“ கேட்டு விட்டு இந்தப் பாடலைக் கேளுங்கள். அவை போலவே உருக்கொண்டு நம்மை தொல்லை செய்கிறது. கூடவே பாடும் Trumpet அச்சசல் “மன்றம் வந்த தென்றலை” மீண்டும் நம்முள் உணர்வைக் கிளப்பிவிடுகிறது. அத்தனை Interludes-ம் சுகமான ராகத்துக்கு உரம் சேர்த்து கூடவே பாடும் Trumpet போல நம்மையும் பாட வைக்கிறது :-) கல்யாண மேடைகளிலும் , மெல்லிசைக் கச்சேரிகளிலும் பாடத்தகுந்த பாடல் :-)



சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது

“சாய்ந்து சாய்ந்து” என்று அமைதியாக யுவன் தொடங்குகிறார். பின்னர் அதே நோட்ஸில் கிட்டாரும் இசைக்கிறது. ஒரு வேளை அப்பாவிடம் முதன் முறையாகப் பாடுகிறோமே என்ற பயத்தினால் அமைதியாகத்தொடங்குகிறாரா ? :-) பின்னர் இணைந்து கொள்ளும் கிட்டார் தொடர்ந்தும் பயணிக்கிறது. ரம்யா கூடச்சேர்ந்து பாடுகிறார் ( இவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி ) முழுக்க மேற்கத்தியப்பாணி தாளகதியில் அமைந்த மெலடி. எங்குமே அதிர்ந்து எந்த இசைக் கருவியும் ஒலிக்கவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் அமைதியாக , நிலவின் மடியில் அமர்ந்து கொண்டு இந்தப்பாடலைக் கேளுங்கள். அதற்கெனவே அமைந்த பாடல் இது.

ரம்யா’வின் பாடும் முறை ஆன்டிரியாவை நினைவு படுத்துகிறது எனக்கு. :-). 5:57ல் யுவன் ‘அடடா’ என்று பாடும்போது அவரின் வழக்கமான Convent அடடா , அந்த “ட”வை இங்கிலிஷ் “Da”வாக பாடுகிறார் :-) அப்பா ஒன்றும் அதைக் கண்டு கொள்ளவில்லையா?! :-)



வானம் மெல்லக்கீழிறங்கி

இந்தப்பாடல் முழுதும் உங்கள் தலையை பக்கவாட்டில் தொடர்ந்து அசைத்துக் கொண்டும் , மேலும் உங்களின் வலது கால் பாதத்தை தரையில் தட்டிக்கொண்டே தான் கேட்டாகவேண்டும். அத்தனை Foot Tapping Notes முழுக்க இரைந்து கிடக்கிறது பாடல் முழுக்க. :). திருவாசக இசையமைப்பை போன்ற ஒரு இசைக்கோவை இது. ஒரு Symphony க்கான ஊது குழல்களும் , அதிரவைக்காத தாளகதியும் நம்மை பாடலுடன் ஒன்றச்செய்து கூடவே பாடவும் வைக்கிறது. திருவாசகத்தில் “பூவார் சென்னிமன்னனை” நினைவுபடுத்தும் பாடல் இது. அதே போன்ற இசைக்கோவை இங்கும். அலைகள் ஓய்வதில்லை “காதல் ஓவியம்” மற்றும் கரகாட்டக்காரன் “ இந்த மான் எந்தன் சொந்தமான்" போன்ற பாடல்களைப் போல சாகாவரம் பெறும் இந்தப்பாடல்.

Amadeus திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் Mozart ஒரு Opera-க்கென ஒரு இசைக்கோவையை அமைத்திருப்பார்.அதில் அங்கு ஆண்டுகொண்டிருக்கும் அரசனை எதிர்த்துப்பேசுவது போல ஒரு இடம் வரும்.அதை அந்த மந்திரி கத்தரித்துவிடுவார். அந்த இடங்களில் அதுவரை பாடி ஆடிக்கொண்டிருந்த அனைவரும் வெறுமனே நடை பழகுவர். அந்த இடங்களில் “கைச்சொடுக்கு” போல இசைத்திருப்பார் Mozart. அது போல இந்தப் பாடலில் முதலிலும் இடையிலும் பல முறை வந்து செல்கிறது அந்த சொடுக்கு இசை..!.இங்கு எந்த மந்திரி தடை செய்தார் இந்த ராஜா’வின் இசையை..?! :-) ஹ்ம்…!!

மேலும் இதை ராஜா பாடியிருக்க வேண்டாம் என்று சிலர் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.இது அவரின் குரல் Rangeக்கு பொருத்தமான பாட்டு தான்.! இருப்பினும் முதுமை குரலில் தெரியாதவரை தொடர்ந்தும் பாடலாம் அவர்..!


முதல் முறை

“நானே நானா யாரோதானா” (அழகே உன்னை ஆராதிக்கிறேன்) பாடலில் ஒலிக்கும் அருமையான Drums ஐ மீளக்கொண்டு வந்த பாடல் இது. (அடியில் அந்தப்பாடலை மனதினுள் கொண்டுவரத்தான் செய்கிறது இந்தப்பாடல் !) சுனீதி சௌஹானின் தமிழ் உச்சரிப்பு நன்றாகவே உள்ளது. ஒவ்வொரு வரிக்கும் இடையே விலகிச்செல்லும் Violin நம்மையும் கூடவே கூட்டிச்சென்று பின் சுனீதி தொடர்ந்து பாடும்போது மீண்டும் பாட்டுக்குள் வரவழைக்கிறது. இப்படி ஒரு குரல் தமிழில் அதிகம் ஏன் பாடவில்லை? எனக்கென்னவோ இவருக்கு “அருணா சாய்ராம் “ போல ஆர்ப்பாட்டமாக அதிரடியான பாடல்களை இனியும் கொடுத்து பாடவைக்கலாம் என்றே தோணுகிறது ! :-) அருணா சாய்ராமின் “விஷமக்காரக் கண்ணனைப்” போன்ற பாடல்கள் இவருக்கு ரொம்பவே Suit ஆகும் :-)


 புடிக்கலே மாமு

முதலில் ஆரம்பிக்கும் Percussion Drums ம் அதைத்தொடர்ந்து ஒலிக்கும் Electric Guitar ன் இழுவைகளும் 41 செகண்டுகள் வரை இசைக்கிறது, அப்படியே அது முடிந்தவுடன் பாட்டை தொடர்ந்து பாட Bryan Adams -ஐப் பணித்தால் 18 Till I Die என்று தொடங்கிவிடுவார். அப்படி ஒரு அருமையான Mild Rock இது. ராஜாவிற்கு Rock இசை பெரும்பாலும் பிடிப்பதில்லை.இருப்பினும் அருமையாக ஆதார Rock-ன் சுதி குறையாமல் அதே நேரம் அதிரடியாக அடித்துக்கிளப்பும் Heavy Drum Beats ஏதுமின்றி நம் தமிழுக்கேற்றவாறு கொடுத்திருக்கிறார். அந்த முதல் 41 செகண்ட்களையும் மொபைல் ரிங் டோனாக வைத்துக்கொள்ளலாம். (சுப்ரமணியபுரம் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் பென்னி தயாளை வைத்துக்கொண்டு “ தேநீரில் ஸ்நேகிதம்” என்று ஒரு Mild Rock பாடலைக்கொடுத்திருந்தார். இருப்பினும் அதில் என்னால் HipHop Beats களைப்பார்க்க முடிந்தது.ராஜா சார் எப்பவும் Pure ஆகக்கொடுக்கவேண்டும் என்றே நினைப்பார்.! யுவன் கூட இப்போது வந்த “வில்லாதி வில்லன்கள் எல்லோருமே” என்று Rock With Mild Jazz ஐத்தொட்டுப்பார்த்தார். )

3:18 –ல் ஆரம்பிக்கும் பாட்டு தடம் மாறி நம்ம குத்து ஸ்டைலில் ஆரம்பிக்குது :-) கொஞ்சம் பின்னாடி போயி “ உதயம்” படத்துல வந்த “பாட்டனி பாடமுண்டு மேட்டனி ஆட்டமுண்டு” என்ற தெலுங்கு வாடையடிக்கும் பாட்டை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்..! அப்படியே பாடுகிறார் கார்த்திக் இந்த தடம் மாறிய பின்வரும் மொத்தப்பாடலையும் :-)



சற்று முன்பு பார்த்த மேகம்

ரம்யா தன் நடுங்கும் குரலில் ஆரம்பிக்கிறார். இந்தப்பாடல் Pathos ல் ஒலிக்கிறது. சாத்தான்களிடம் மாட்டிக்கொண்ட காதலனை மீட்க மீக நீண்ட வெள்ளை கவுன் அணிந்து கொண்டு அதைக்கையில் பிடித்துத் தூக்கிக்கொண்டு ,மயானம் வழிச் செல்லும் காதலியின் இழப்பும், பயம் கலந்த குரலுமாக ஒலிக்கிறது இந்தப்பாடல்.

மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட பாடல், ரம்யாவின் குரலில் ஒலிக்கும் வரிகளை , பியானோவும்,ஊது குழல்களும் வயலினுமாகச் சேர்ந்து எந்த நேரத்திலும் கவர்ந்து தின்று விடுவது போல பின்னாலேயே சற்று அடங்கித் தொடர்ந்தும் வருகின்றன. என்னைக்கேட்டால் இந்தப்பாடல் தான் இந்த ஆல்பத்திற்கு Magnum Opus..! 3:17- ல் ஒலிக்கும் “போக”வில் ரம்யா எத்தனை ஏற்ற இறக்கங்களைக் காண்பிக்கிறார்..!! சிலிர்த்துப்போகிறது எனக்கு. இது போன்ற பாடல்களை ஆன்டிரியா பாடியே கேட்டுப் பழகிப்போன எனக்கு இவரின் கை தேர்ந்த குரலும் பிடித்துத்தான் போய்விட்டது !

Whitney Houston ன் I will Always Love You என்ற பாடலையொத்த Genre-ல் ஒலிக்கிறது இந்தப்பாடல். ஐயா அது போன்ற Genre ல் அமைந்த பாடல் என்று தான் சொன்னேன். அந்த அளவிலான Yodeling கிற்கு இந்தப்பாடலில் வாய்ப்பு இல்லையெனினும் கிடைத்த இடங்களில் வெகு சிறப்பாகவே செய்திருக்கிறார் ரம்யா.,.!

அதிகமாக Drum Set ன் Cymbal கொண்டே இசைக்கப்படுகிறது தாளம்.1:22-ல் ஒலிக்கும் பியானோ, மாதா கோவில் மணி நல்லூழ் கிடைக்க வேண்டுவது போல இருக்கிறது. பின்னரும் சரணங்களில் ரம்யாவின் குரலை சிறிதும் சிதைக்காது பின்னணியில் ஒலித்துக்கொண்டே வருகிறது. Church Organ , Piano, Ricola, மற்றும் அத்தனை ஊது குழல் இசைக்கருவிகளும் பாடலுக்கு உரமேற்றி மனதை அறுக்க முயல்கிறது. ஹார்மனி தொடர்ந்தும் ஒலித்து பாடலை முடிவுக்குக்கொண்டு வருகிறது.சிறிதும் பிசகாமல் Program செய்யப்பட்டது போல கட்டுக்குள் அடங்கி ஒலிக்கும் இந்தப்பாடலே எனது Favorite :-)


பெண்கள் என்றால் பொய்யா

இந்தப்பாடல் ஒரு Hard Rock என்று சொன்னால் நீங்க நம்புவீங்களா..?! அதான் உண்மை. யுவனின் High Pitch குரலுக்கேற்ப அவரின் அப்பா அவருக்கெனவே போட்டுக்கொடுத்த பாடல். “என் காதல் சொல்ல நேரமில்லை“ போல இழந்ததை பாட்டால் உணர்த்தும் , சற்றேறக்குறைய அதே தொனியில் பாடியுமிருக்கிறார் யுவன். இருப்பினும் ராஜாவின் அதிரவைக்காத பின்னணி இசை நம்மைக் கட்டிப்போடுகிறது. Bryan Adams ன் Here I Am போல இதுவும் ஒரு Compelling Rock Song தான்.

அழும் குரலுடன் தொடர்ந்து பாடுகிறார் யுவன். “என்ன சொல்லி என்ன பெண்ணே” என்று பாடும்போது நமக்கே பாவமாகத்தானிருக்கிறது. Rock பாடல் எங்கனம் முடியுமோ அதே போல இலக்கணச் சுத்தமாக அதிர வைக்கும் Electric Guitar Piece உடன் ஆர்ப்பாட்டமாக முடிகிறது. ஆனாலும் பாட்டு ஆரம்பிக்கும் போது “ வானத்தில வெள்ளி ரதம்” (எங்க ஊரு மாப்பிள்ளை) பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. (அதன் பின்னர் அந்தப்பாடலின் கிஞ்சித்தும் வாசனை இல்லாமலேயே தொடர்ந்து கடைசியில் முடியவும் செய்கிறது.) வேண்ணா அந்தப்பாடலை Rock Styleல போட்டதா வெச்சுக்கலாம் :-) எப்படியாவது அவரின் பழைய பாடலை சொல்லிவிடவேண்டும் என்று நினைத்ததால் குறிப்பிட்டேன் , மற்றபடி இதற்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை முதல் வரியைத்தவிர :-) :-)


என்னோடு வா வா

குட்டி யானையின் சின்னப் பிளிறலோடு துவங்குகிறது பாடல். 40 ஸெகண்ட் மட்டும் கொடுத்து நம்மை வெகு காலம் அலைக்கழித்த பாடல் இது. அந்த எதிர்பார்ப்பைக் கிஞ்சித்தும் பொய்யாக்காமல் Perfect ஆன Melody யாக வந்திருக்கிறது. இதை கார்த்திக்கே பாடியிருப்பது இன்னும் சிறப்பு. இது மாதிரி மென்மையான பாடலுக்கு கார்த்திக்கே பொருத்தம். ராஜா’வின் எப்போதுமான ஸ்டைலிலேயே பாடல் அமைந்திருக்கிறது. கேட்டவுடனே இது ராஜாவின் பாட்டு என்று சொல்லிவிடும் படியான பாட்டு இது. Repeating Rhythm பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை வருகிறது. Interludes are Awesome. முதல் Interlude-க்கென வயலினைத் துணைக்கழைத்த ராஜா  இரண்டாவது Interludeக்கென 2:38-ல் இசைத்திருப்பதை இதுவரை எங்குமே கேட்டதேயில்லை :-) Many Thanks Raja..! :-) Interludes அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைவிலேயே முடிந்து விடுகின்றன.

ஹ்ம்...என்ன ஒரு பாடல் :-)

“என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்”

இந்தப் பாடலைப் பற்றி அதன் இசையைப்பற்றி எழுதிப்புரிய வைக்க என்னால் இயலாது. நீங்களே கேட்டு அனுபவியுங்க :-)


ராஜாவின் திருவாசகம் வெளியான போது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் சுஜாதா. “மேற்கத்திய ஒத்திசைவையும் (ஹார்மனி) கிழக்கத்திய மெட்டையும் (மெலடி) சமனப்படுத்தும்போது, எந்த இடத்திலும் அவர் நம் ஆதார ராக அமைப்பைத் துறக்காமல், அவர்கள் பாணிக்காக சமரசம் செய்யாமல், நம் ராகங்களிலேயே மேற்கத்திய சிம்பொனி அமைப்பைக் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார். விளைவு, ஒரு மிகப் புதிய சங்கீதானுபவம்..!“ இதையே முத்தாய்ப்பாகச் சொல்லிவைக்கலாம் இந்த வசந்தத்திற்கும் !

.

16 comments:

  1. மிக அருமையான விமர்சனம்,
    அருமை.

    ReplyDelete
  2. எவ்வளவு விரிவாக ரசித்து எழுதி உள்ளீர்கள்... ரசிக்க வைத்தது...

    இளையராஜா எப்போதும் இசைராஜா தான்..

    ReplyDelete
  3. மிக்க நன்றி @ நண்டு.,.!

    ReplyDelete
  4. இசையை ரசிப்பது ஒன்று, என்றாலும் இளையராஜா வர்களின் இசையை ரசிப்பது ஒரு தனிச்சுகம்.ஆர்வம் தரும் விமர்சனம் பையா !

    ReplyDelete
  5. @ ஹேமா: ஹ்ம்..இசைக்கு இன்னொரு பெயர் ராசைய்யா..

    ReplyDelete
  6. ரொம்பவும் கூர்ந்து கவனித்து கேட்டு எழுதி இருப்பதுபோல இருக்கிறது. நல்ல விமர்சனம். அரேபிய, ஸ்பானிஷ், சூபி, ஹிப்ஹாப், என்று இன்றைய இசையை விமர்சிக்கும் நீங்கள் இளையராஜாவின் மகனும் அதையே செய்வதால் அவரையும் இந்த லிஸ்ட்லில் சேர்த்துக்கொள்வீர்களா?எல்லா பாடல்களும் அருமை என்று ஒரேடியாக புகழாரம் சூடுவது ஏனோ?வானம் மெல்ல கீழிறங்கி என்ற பாடல் அவதாரம் படத்தில் வரும் ஒரு பாடல் போல இருப்பதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?இதுதான் ராஜா பாசமா?ராக் ஜாஸ் போன்ற இசை கோர்ப்புகள் இந்த பாடல்களில் சிறிது தென்படுவது உண்மையே. அழகாக ஆரம்பித்துவிட்டு பிறகு புடிக்கல மாமு என்று கொச்சையான வார்த்தையை கொண்டு பாடல் இசைக்கும் திறன் இளையராஜாவுக்கே உண்டு.ஆனால் எல்லா பாடலாகும் ஒரே மாதிரியான தாளத்தில் (mild drums) இருப்பது சிறிது நேரத்திற்கு பிறகு சலிப்பை தருகிறது. interlude மற்ற இளையராஜா பாடல்கள் போல அமையவில்லை.மீண்டும் மீண்டும் கேட்டால் ஒருவேளை எல்லா பாடல்களும் பிடிக்கலாம்.(இப்படித்தான் ரகுமான் இசையை பற்றி சிலர் விமர்சிப்பதுண்டு)கடைசியில் ராஜாவும் ரகுமான் இடத்திற்கு வந்துவிட்டாரோ? கடைசியாக பிரைன் ஆடம்ஸ் (கொஞ்சம் பரவாயில்லை)எம் எல் டி ஆர் போன்ற இசை அமைப்பாளர்கள் ராக் என்று யார் உங்களுக்கு சொன்னது?எதோ இரண்டு மூன்று ஆங்கில இசைஞர்களின் பெயர்களை தெரிந்து கொண்டு அவர்களோடு இளையராஜாவின் இசையை ஒப்பீடு செய்வது ரொம்ப செயற்கையாக இருக்கிறது. என்ன செய்வது உங்கள் பெயர் படிதான் நீங்கள் எழுத முடியும்,?

    ReplyDelete
  7. @ காரிகன் : உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இப்படி ஒரு ஆல்பம் முழுமையாக ஜாஸ் மற்றும் மைல்ட் ராக் பின்னணியில் ராஜா இதுவரை செய்ததேயில்லை.அவர் காலத்தின் அனைத்துப் பாடல்களையும் எனக்குள்ளே ஓடவிட்டுப்பார்த்தே எழுதியிருக்கிறேன். அவரின் இசையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன் நான்.

    //ஏதோ ரெண்டு மூன்று ஆங்கில இசைஞர்களின் பெயர்களை தெரிந்து கொண்டு // அப்படி ராஜாவைக்குறை சொல்வது என் விருப்பமில்லை. உங்களுக்கு இந்த ஆல்பத்தை ரசிப்பதற்கான Mood Create செய்வதற்கென சொல்லியிருக்கிறேன்.

    //எல்லா பாடல்களும் அருமை என்று ஒரேடியாக புகழாரம் சூடுவது ஏனோ?// இல்லையே எல்லாப்பாடல்களையும் விமர்சித்திருக்கிறேன். ஒரு பாடலை எனது Favorite என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.

    //இளையராஜாவின் இசையை ஒப்பீடு செய்வது ரொம்ப செயற்கையாக இருக்கிறது. // இதற்கு இது பதில் \\ ராஜாவே இப்படி ஒரு Mild Rock With Jazz இது வரை பண்ணதேயில்லை.\\

    ReplyDelete
  8. @ காரிகன்: தமிழ் கூறும் நல்லுலகுக்கு Rock என்பது பிடித்தமான விஷயமே இல்லை. அதன் சுவை குன்றாது அதே சமயம் நமக்குப்பிடித்துப்போவது போல இசையமைத்திருக்கிறார் ராஜா. அதை முன்னிறுத்துவதே என் நோக்கம். மேலும் அது நமக்கான நமது பாரம்பரிய இசையும் இல்லை.

    ReplyDelete
  9. ///மீண்டும் மீண்டும் கேட்டால் ஒருவேளை எல்லா பாடல்களும் பிடிக்கலாம்.(இப்படித்தான் ரகுமான் இசையை பற்றி சிலர் விமர்சிப்பதுண்டு)கடைசியில் ராஜாவும் ரகுமான் இடத்திற்கு வந்துவிட்டாரோ?///

    மீண்டும் மீண்டும் கேட்கச்சொன்னது இந்த இசையமைப்பு முறை இதுவரை நமக்குப் பரிச்சயமானது இல்லை. அதை நம் பிடிக்குள் கொண்டுவர இன்னும் ஓரிரு முறை கேட்பதில் தவறில்லை.

    ReplyDelete
  10. இளையராஜாவை பற்றி நெகடிவாக எழுதிவிட்டால் உடனே பாய்ந்து வரும் சிலரை போலன்றி தெளிவாக எழுதி நீங்கள் சின்னப்பயல் இல்லை என்று நிரூபித்துவிட்டீர்கள்.நல்லது. சில இசை அமைப்புமுறையில் அந்த பாடல்களை கேட்ட மாத்திரத்திலேயே பிடித்துவிடும். சில சமயங்களில் கேட்க கேட்க பிடிக்கும். இது ஒருவித பாணி.அவ்வளவே.இதை வைத்துக்கொண்டு எ ஆர் ரகுமானை கிழி கிழி என்று கிழிக்கும் சில இளையராஜா விசில்கள் உங்களின் இந்த விமர்சனதைக்கண்டு கொதிப்படையலாம்.எனவேதான் அப்படி சொன்னேன்.இளையராஜா பீதோவன் பாக் மொசார்ட் என்று பெரிய பெரிய பெயர்களை சொல்லி நம்மை அதிர வைப்பார். பாப் டிலன், பாப் மார்லி போன்ற இசைஞர்களை அவர் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. குப்பை என்று சொல்லியவர்.இந்த பாடல்களில் அவர் தன இசை அமைக்கும் விதத்தை வெகுவாக மாற்றிக்கொண்டு விட்டார் என்பதை கேட்ட உடனே சொல்லிவிடலாம்.ஆனால் இது இன்றைய இளைஞர்களை கவரும் இசை என உறுதியாக சொல்ல முடியாது.யுவன் போன்று தரமில்லாத குரலில் பாடுவதையும் குடிகார கானங்களையும் ரசிக்கும் ஒரு கூட்டம் இளையராஜாவை ரசிக்கும் என்று தோன்றவில்லை.அப்படி நடந்தாலுமே இளையராஜா மீண்டும் இன்னொரு ராஜாங்கம் நடத்தப்போவது கிடையாது.(1975 முதல் 1992 வரை அவர் ஆடிய ஆட்டமே போதும்) அது ஏன் இளையராஜா என்று வந்து விட்டாலே அவரை ஒரு இசை அமைப்பாளராக பார்க்காமல் எதோ நமகெல்லாம் பாட்டு பிச்சை போடும் ஒரு சங்கீத புண்ணியவான் மாதிரி எல்லோருமே அவர் புகழ் பாடுகிறீர்கள்?அவரும் காசுக்காகத்தானே தன பிழைப்பை செய்து கொண்டிருக்கிறார்? ப்ரைன் ஆடம்ஸ் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெகுவாக அடிபட்ட ஒரு பெயர். அவரை விட சிறந்த ராக் இசைஞர்கள் உண்டு. மற்றபடி எம் எல் டி ஆர் குரூப்பை நான் ராக் என்றே சொல்ல மாட்டேன்.நீங்கள் சொன்னபடி ராக் தமிழ் நாட்டுக்கு அந்நியமானதுதான். அதை அப்படி நம்மிடையே அன்னியமாக்கியதும் இதே இளையராஜாவேதான்.ஆனால் ஹிப்ஹாப் மட்டும் நம் இசையில் எப்படியோ கலந்து விட்டது. என்னென்றால் இளையராஜா இப்பொழுது முழுவீச்சில் இங்கு இல்லை.

    ReplyDelete
  11. //ப்ரைன் ஆடம்ஸ் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெகுவாக அடிபட்ட ஒரு பெயர். அவரை விட சிறந்த ராக் இசைஞர்கள் உண்டு. மற்றபடி எம் எல் டி ஆர் குரூப்பை நான் ராக் என்றே சொல்ல மாட்டேன்.// Pure Rock with Jazz Mixed இந்த இருவரின் இசையமைப்புகள். கொஞ்சம் Pop கலந்த இசையமைப்பு MLTR உடையது. ஓரளவு இந்த பொன்சவசந்தம் ஆல்பத்திற்கு பொருந்திப் போகக்கூடியது. அதனாலேயே குறிப்பிட்டேன்.

    ஒரு விஷயத்தை விமர்சிப்பது என்று வந்து விட்ட பிறகு Positive/Negative களை தெளிவாக முன்வைப்பதே என் பாணி.அது யாரைப்பற்றியதாக இருப்பினும்.

    இளையராஜா மட்டுமல்ல, அவரின் சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்றிருந்த அனைவரும் தமது தனித்த,இனங்கண்டுகொள்ளக்கூடிய இசையினால் புகழ் பெற்றிருந்தனர் என்பதே உண்மை. :-)

    ReplyDelete
  12. ஒரு விஷயத்தை விமர்சிப்பது என்று வந்து விட்ட பிறகு Positive/Negative களை தெளிவாக முன்வைப்பதே என் பாணி.அது யாரைப்பற்றியதாக இருப்பினும்.

    இளையராஜா மட்டுமல்ல, அவரின் சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்றிருந்த அனைவரும் தமது தனித்த,இனங்கண்டுகொள்ளக்கூடிய இசையினால் புகழ் பெற்றிருந்தனர் என்பதே உண்மை. :-)

    திரு சின்னப்பயல் அவர்களுக்கு உங்களின் இந்த கருத்தோடு நான் மிகவும் ஒத்துப்போகிறேன். இந்த முதிர்ச்சி பல இளையராஜா அபிமானிகளிடம் நான் காணாத ஒரு தன்மை. உங்களை பாராட்டுவதை தவிர வேறு வழி இல்லை. மீண்டும் சந்திக்கலாம். நன்றி.

    ReplyDelete
  13. @ காரிகன்: கையில் கிட்டார் பிடிக்கத்தெரிந்து பாடல்களை கொஞ்சம் பிறர் கண்டுகொள்ளும்படியாக வாசிக்கவும் தெரிந்தவன் தான் நான்.. :-) ஆதலால் நானும் ஒரு இசையமைப்பாளனே..என்னைப்பற்றிய என் இசையைப்பற்றிய விமர்சனங்களையும் நாள் தோறும் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கடவுள் கூட இல்லை :-) மிக்க நன்றி காரிகன்.

    ReplyDelete
  14. கலைவாணி துரைவேல்September 25, 2012 at 4:25 PM

    நல்ல விமர்சனம் என்பதை விட நல்ல விமர்சகர் பொருந்தும். பல புதிய தகவல்கள் அறிந்தேன் . positive and negative too. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கலைவாணி..:-)

    ReplyDelete