Saturday, August 4, 2012

இசை என்ற இன்ப வெள்ளம்



எண்பதுகளில் இருந்த தமிழ்த்திரை இசை பற்றி அந்தக்கால யுவன்/யுவதிகள் சிலாகித்துப் பேசுவது போல, 1990களிலிருந்து இப்போதைய 2010 வரையிலான இசை பற்றி இக்கால இளைஞர்கள் பேசுகிறார்களா..? இந்தக் காலகட்டத்திய இசை அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கிறதா,,? எண்பதுகளில் கோலோச்சிய இளையராஜாவையும் , கூடவே பயணித்த சக இசைக்கலைஞர்களின் இசையையும் வாழ்வோடு இணைத்துப்பார்த்த பார்வை இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கிறதா..? கேள்விக்கான விடையை கடைசியில் பார்க்கலாம்,..ஹ்ஹ...இல்ல கேட்கலாம்.

எனக்குத் தெரிந்து ரஹ்மானையும், யுவனையும் சிலாகித்து வெகு சிலரே இடுகைகள் இடுவதையும், அவர்கள் கூட சில நாட்களுக்குப்பிறகு இளையராஜாவைப் பற்றியும் அந்தக்கால கட்டத்தில் வாழ்ந்த, இசைத்தவர்களைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுவதைப் பார்க்கிறேன்..அப்ப அவங்க ஆழ்மனதில Originality ய தேடிப்போறதுங்கறது இருக்கத்தான் செய்யுது , ஆனா இப்ப இருக்கிற இசையமைப்பாளர்கள் அதைக் கவனிக்கத்தவறி அவர்களின் ஆவலைப்பூர்த்தி செய்வதில்லை.அன்றைய ரசிகர்கள் பாடலின் இடைஇசையைக்கூட(Interlude) நினைவில் வைத்திருந்து ரசித்தனர்.இப்போது அது போன்ற ஈடுபாடுகள் காணக்கிடைக்கவில்லை.

இசை தவிர எந்த alternative மனதிற்கு இதம் ?. இந்தக்கால இசை பற்றி யாரும் சிலாகித்துப் பேசுவதில்லை, அதிக கட்டுரைகளோ, பெருவாரியான கருத்துகளோ வருவதே இல்லை , இப்போது இருப்பவர்களைப் பற்றி. இன்னும் சொல்லவேண்டுமென்றால் இளைஞர்களுக்கு இசை தவிர பிற விஷயங்களில் அவர்களின் நாட்டம் இருக்கிறது.“அறிவொளி இயக்கம்“ ச.தமிழ்ச்செல்வன் சமீபத்துல பெங்களூர் வந்திருந்தப்ப சொன்ன ஒரு விஷயம். இந்தக்காலக்கட்டத்தில தான் இலக்கியமும், இசையும் மிகவும் வேண்டியதாக இருக்கிறது , மேலும் அதனோட அவசியமும் அதிகம் என்று.

இசை பற்றி தமிழ் வலைப்பூக்கள்ல பல பேர் எழுதுறதப் பாத்துருக்கேன், ..இருந்தாலும் பெரு வாரியான வெள்ளம் போல இளையராஜா மற்றும் எண்பதின் இசையைப்பற்றி எழுதுவது/ விவாதிப்பது போல இப்போதைய இசைபற்றிக் கருத்துகளோ இல்லை விவாதங்களோ காணக்கிடைப்பது இல்லை


மேலும் இப்போது இசை மலிந்து விட்டது , Uniqueness இல்ல, Originality இல்ல இப்ப இருக்கறவங்ககிட்ட, எப்பவுமே இந்தக்கால எந்த இசை ஆல்பம் கேட்டாலும் , இது இங்க இருந்து காப்பி அடிக்கப்பட்டது , இது இங்கருந்து Lift ங்கற மாதிரிதான் இருக்கு,?! Casio, Roland மாதிரியான Keyboards ரொம்ப சுலபமாகவே எல்லாரும் வாங்கக்கூடிய விலையிலேயே விற்பதும் ஒரு பெரிய காரணம். அதில எல்லாமே இருக்கு, எந்த Beats வேணும் , எவ்வளவு நேரம் அதை இசைக்கலாம் , இடையில் எந்த வாத்யக்கருவிகளை எந்த அளவில் ஒலிக்கச் செய்யலாம் , எத்தனை கருவிகள் தேவை என்றெல்லாம் Program பண்ணி வெச்சிட்டா அதுவாவே இசைக்க ஆரம்பித்து விடுகிறது. அதனால வீட்டுக்கு வீடு இப்ப ஒரு Composer உருவாகிவிட்டனர்.

எந்தவித இசை பற்றிய ஞானமும் இல்லாமல், அடிப்படைப்புரிதல்கள் இல்லாமல், Program பண்ணா வாசிக்கிதுங்கற நிலைல எந்த Music Soul Touching ஆக இருக்க முடியும்?!

இசை பாடல்களில் மட்டுமல்ல, நம்ம கைபேசிகளிலும், வாயில் மணிகளும், ஏன் கார் ஹார்ன்ஸ்களிலும் கூட இசை ததும்புகிறது, ஃபோனில் கால் வெய்ட்டிங்கிற்கு கூட இசை தான். இசை”பட” வாழ்கிறோம்.மேலும் அந்தக்காலத்திய இசை என்பது கேட்பதற்காக மட்டுமே இருந்தது. இப்போது இசையை காட்சிகளுடன் சேர்ந்து ரசிப்பது என்ற மனோநிலை. எதைச்செய்தாவது கவர்ந்துவிட வேண்டும் என்று காட்சி ஊடகங்களில் இசையைக்கொண்டு செல்வதற்கென உள்ள மெனக்கெடல்கள் இசையைக் கொல்கின்றன.


முக்கியமா பேசறதா இருந்தா அவங்களுக்கு இசை பற்றின ஆழ்ந்த அறிவோ இல்ல அத எப்படி ரசிக்கிறதுங்கற புரிதல்களோ இல்லைங்கறது தான் நிஜம். இன்றைய இசையை நான் ரசிக்கிறேன்னு சொல்றவங்கெல்லாம் Ipod, Iphone , MP3 Playersலயும் இசையை நிரப்பிக்கிட்டு தொடர்ந்தும் கேட்டு சலித்துத்தான் போகுது அவங்களுக்கு. மேலும் இன்னிக்கு ஒரு சொடுக்கில எங்கருந்து இந்த இசை உருவப்பட்டது, எந்த இசைக்கோவை இந்த இசையை கொண்டுவந்ததுங்கறத தெரிஞ்சுக்க முடியுது இந்த Internet Generations ல , அதுவே கூட பெரிய சலிப்பை உண்டாக்கி அவங்கள இந்தக்கால இசை பற்றி சிலாகித்துப்பேச ஒண்ணுமே இல்லங்கற நிலைக்குக் கொண்டு போய்விடுகிறது.

இப்ப இருக்கிற இசையமைப்பாளர்களுக்கு IT Engineer போல Oniste Offer கிடைக்காதாங்கற ஆசைலதான் இருக்காங்க. ஒரு படத்துக்கு இசையமைச்சாச்சுன்னா உடனே அத YouTube-லயும் , இன்னபிற சமூக வலைத்தளங்கள்லயும் உடனே பகிர்ந்துகொண்டு International Audience- ஐக்கவர்ந்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்கோடயே இருக்காங்க என்பது தெளிவு. இந்த மாதிரியான சிக்கல்கள்ல மாடிக்கிட்டு , அவங்க Target International Audience தான்னு ஆனப்புறம் , அவங்களுக்கு பிடித்த மாதிரியான இசையைக் கொடுத்தே ஆகவேண்டுமென்ற உந்துதல், அழுத்தங்கள் அவங்களயறியாமலேயே அவங்களுக்குள்ளேயே வந்துவிடுகிறது . அதனால தனித்துவம், மனதை மயக்கும் இசைங்கறதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. அதனாலேயே உள்ளூர்ல இருக்கிறவங்களுக்கும் இது போன்ற இசையை பெரிதாக கருத்திலெடுத்துக் கொள்ளாமல் போறபோக்கில ரசித்துவிட்டுச் செல்லும் மனப்பாங்கும் தொடர்கிறது.


மேலும் எண்பதுகளின் இசையைப்பற்றி அப்போதிருந்தவங்ககிட்ட கேட்டால் , இது இன்னார் தான் இசையமைத்ததுன்னு தெளிவா எந்த சந்தேகமும் இல்லாம சொல்ல முடிந்திருக்கிறது . இப்ப எல்லாம் அந்த Uniqueness , அல்லது Originality ங்கற பேச்சுக்கே இடமில்லாமப்போச்சு. எல்லோரின் இசையும் ஒன்றாகவே ஒலிக்கிறது. வேறுபடுத்திப் பார்ப்பதற்கு தனிக்காதுகள் அவசியப்படுகிறது. இன்றைய பத்திரிக்கைகள் , மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் சின்னங்களை/பெயர்களை மட்டும் நீக்கிவிட்டால் எல்லாம் ஒன்று போலத்தான் தெரியும் அதுபோலவே இன்றைய போஸ்ட்டர்களில் இருந்து இசையமைப்பாளனின் பெயர் மட்டும் நீக்கப்படுமானால் யார் இசையமைத்தது என்று தெரியாமலேயே போய்விடும். சொல்லப்போனா யாருக்கும் தனக்கான ஸ்டைல் என்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் மனம் போன போக்கில் இசையமைக்கின்றனர். அளவுக்கதிகமான மேற்கத்திய இன்றைய இசையின் தாக்கமும், அரேபியன் இசையின் தாக்கமும் அவர்களுக்குள் வந்துவிட்டதால் அவர்களின் இசை ஒன்று போலவே தெரிகிறது. எது விற்கிறதோ அதைக் கொடுக்கிறேன் என்பதால் வர்ற பிரச்னை இது.

அவசர வாழ்க்கையில் இசையை அணு அணுவாக ரசித்துக் கேட்க யாருக்கும் நேரம் இல்லை. அப்படிக் கேட்க நினைத்தாலும் ஒரு தமிழ் பாடல், ஒரு ஹிந்திப் பாடல், மலையாளப் பாடல், ஆங்கிலப் பாடல் ஸ்பானிஷ் பாடல் எனப் போய்க் கொண்டே இருக்கிறது. தொழில் நுட்பம் மட்டும் மாறவில்லை. மக்களின் ரசனையும் மாறி அறிவும் இப்போது கூடி விட்டதால் எந்த ஒரு பாடலும் அவர்களின் மனதிலும் வாழ்விலும் நிலைத்து நிற்பதில்லை. பாடல்களின் வரிகளை தம் அன்றாடம் உழலும் வாழ்வில் இணைத்துப் பார்ப்பதற்கு யாருக்கும் தோன்றுவதில்லை. எது மனதிற்கு நிம்மதியைக் கொடுக்கிறது ? எதைத் தேடிச் செல்கிறான் என்பது ஒரு புதிர். என் கூட பணிபுரிபவர்கள் எல்லாம் Frustrated ஆனா என்ன பண்ணுவ மச்சி’ன்னு கேட்டா என்னா கொஞ்சம் சரக்கடிச்சிட்டு கவுந்து படுத்துக்கலாம் ,இல்ல எதாவது “மால்”ல போயி Figure வெட்டலாம்னு தான் சொல்வார்கள். இல்லாட்டி Weekend ல எதாவது பக்கத்தில இருக்கிற மலைப்பாங்கான இடத்துக்குப்போயி ஜாலியா கும்மாளம் போடலாம்ங்கற நினைப்பிலதான் பலபேர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். கவிதை வாசிக்கலாம், மனதிற்கினிய இசை கேட்கலாம் என்று பொதுவாக யாரும் விரும்புவதில்லை.


ஆத்மார்த்த இசைங்கற விஷயத்தப்பத்தி யாருமே கண்டுக்கிர்றதேயில்ல. கும்மாளம் போடவும், Fast Beatsல தன் சந்தோஷத்த வெளிப்படுத்தவும் மட்டுமே இசை தேவையாயிருக்கு. Weekend Parties எல்லாம் ரொம்பவே பிரபலம் IT Filed ல. அங்கெல்லாம் இந்தக்கூத்து தான் நடக்குது..எப்படியும் வெளிநாட்டவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் தான் அவை. [ ஏன் எங்க ஆஃபீஸுலயும் இதே கூத்து தான் ]. இலக்கியம் இசை, கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பது என்பன போன்ற கலை மீதான விருப்பங்கள் குறைந்து கொண்டே வருவதும் ஒரு காரணம். 

நம் மண்ணுக்கான இசை , நமது மண்ணின் மொழி , நமது இசைங்கறதெல்லாம் எப்பவோ இல்லாமப் போயாச்சு. எல்லாம் உலகமயம், தாராளமயமாக்கல் , இந்த விஷயங்கள்லாம் நம்ம கலைகளிலும் , இசையிலும் ஊடுருவி நிற்பது ஒரு வலுவான காரணம்.

எண்பதுகளின் இசை பற்றி , முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் இப்படி ஒரு விவாதம் வந்திருக்கு , அதே போல 2020ல, 1990லிருந்து 2010 வரையிலான இசை பற்றிப் பேசுவாங்களோ..?! இருந்தாலும் ஒப்பிட்டுப் பாக்கறதுக்கு அக்காலத்திய நிகழ்கால இசை பயன்படுத்தப்படும்னு நினைக்கிறேன். :-)

எவ்வளவுதான் சொன்னாலும் , அவங்கவங்க இளைமைல கேட்ட , பாத்த , பழகின விஷயங்கள் தான் அவங்களோட பிற்கால வாழ்க்கை முழுக்க நிறைந்திருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.! அப்போது , இப்ப இருக்குறவங்க எந்த விஷயங்களப்பத்தி யாருடைய இசை, மற்றும் எழுத்துகள் பற்றி சிலாகித்துப் பேசுவாங்க..?!


.


13 comments:

  1. Rasigan Vetri

    மேலே படித்த ராமின் கட்டுரை நிறையவே யோசிக்க வைத்து விட்டது, சொல்லபோனால் இது எனது தலைமுறையின் மீது வைக்க பட்டிருக்கும் குற்றச்சாட்டு அல்லது இந்த கேள்விகளை மறுத்து பேச நிறையவே பேச வேண்டியுள்ளது, எப்படியும் இதை நான் அவ்வளவு எளிதாக எற்றுகொல்வதாக இல்லை, 80களில் இருந்த பல விஷயங்கள் இப்போது மாறிவிட்டது இசையும் கூடத்தான் ஆனால் வெறுமனே இசை மட்டும்தான் மாறி இருக்கிறதா, நாம் இசை கேட்கும் முறைகள், இசை என்பதை நாம் எவ்வாறு அணுகுகிறோம், என எல்லா விஷயங்களுமே மாறிவிட்டதுதான். வெல் மாறியிருக்கும் எந்த ஒரு விஷயத்தையுமே இது நல்லது, இது கெட்டது என்று அடையாள படுத்த முடியாது, நீங்கள் ஏற்று கொண்டாலும் இல்லாவிட்டாலும் அது மாறி விட்டது.

    இருந்தாலும் அதில் சில விஷயங்களை பற்றி பேசுவது ஒரு நல்ல உரையாடலுக்கு வழி வகுக்க கூடும். அப்படி சில விஷயங்கள்தான். முதல் விஷயம் கருவிகள், இசை மட்டும் இல்ல உலகத்துல எந்த விஷயத்த எடுத்துகிட்டாலும் டெக்னாலஜிதான் நெறைய பாதிப்புகள ஏற்படுத்தி இருக்கு, இசை கருவிகள்ள கூடத்தான், நாம இசை கேட்கும் கருவிகள் அந்த இசை உருவாக்கப்படும் கருவிகள் அப்டின்னு ரெண்டுலையுமே. மொதல்ல நம்ம கேட்கற கருவிகள், 80களில பெரும்பாலும் ரேடியோ, சில பேர் வீட்ல கிராமபோன், திருவிழாக்கல்ல ஸ்பீக்கர் செட் அவ்ளோதான் எனக்கு தெரிஞ்சு, ஒருத்தர் தனியா ஒக்காந்து ரொம்ப பிரைவசியோட இசை கேட்பதற்கான வாய்புகள் எவ்ளோ இருந்துச்சுன்னு தெரியல

    அது இன்னிக்கு எவ்ளோ மாரிட்டுன்னு சொல்ல வேண்டாம். கொஞ்ச நாளைக்கு முன்ன ஷாஜி தன்னோட ஒரு கட்டுரைல தான் சேகரிச்சு வெச்சிருக்க கிராமபோன் தட்டுகள் பத்தி அதோட இசை துல்லியம் பத்தி எழுதி இருந்தாரு, ஆனா அதுலாம் சும்மா நாச்டால்ஜியா என்றுதான் நெனச்சேன், ஆனா கொஞ்ச நாளிலேயே மீப் படம் பிலிம் ரோலில் பாக்க நேர்ந்துச்சு, விஷுவல்ஸ் கேவலமா இருந்தாலும் சவுண்ட் அற்புதமா இருந்துச்சு, அதே எடத்தில ஃஊபே டிஜிட்டல்ல நெறைய படம் பாத்திருக்கேன் ஆனா நிச்சயம் ஒரு நல்ல வித்யாசம் தெரிஞ்சது. அப்போ டெக்னாலஜி வளர்ச்சில தரமான இசைய மிஸ் பண்றமா ???.

    ReplyDelete
  2. Rasigan Vetri

    சரி சினிமாவ விடுங்க தினசரி வாழ்கைய பார்த்தா, மொதல்ல சென்னை தவிர தமிழ்நாட்ல எங்கயும் நல்ல மற்றும் நெறைய ஃப்ம் நிலையங்கள் இருக்கிறதா தெரியல, இருந்தா எவ்ளோ பேர் கேட்பாங்க அப்டின்றத பின்ன பார்க்கலாம். சரி நம்ம தினம் எதுல இசை கேட்கிறோம் தொலைக்காட்சி எத்தனை பேர் வீட்ல ஹோம் தியேட்டர் இல்ல குறைஞ்சது எக்ஸ்ட்ரா ஒலிபெருக்கிகள் இருக்கு விலை அதிகம் உள்ள தொலைகாட்சிகள்ள கூட அதோட உள்ள ஒலிபெருக்கிகள்ள அவ்ளோ துல்லியம் எதிர்பார்க்க முடியாது, சரி ரெண்டாவது மொபைல் இல்ல இபொட் போன்ற மியூசிக் பிளேயர்கள், அந்த பொருள்கள பெருசா குறை சொல்ல முடியாது பல நல்ல டிவைசெஸ் நிச்சயம் இருக்கு ஆனா ஒரு விஷயம் மறந்துட்றோம், சீனா மொபைல்கள் வெச்சுக்கிட்டு பயனங்கள்ள தங்களுக்கு பிடிச்ச பாட்ட எல்லோர் மேலயும் திணிக்கிற சிலர் தவிர எல்லோருமே ஹெட்போன்ஸ் உபயோகிக்கிறோம்

    ஆனா அது என்ன பிராண்ட் இல்ல அதோட தரம் பத்தி யோசிக்றோமா, நெறைய பேர் செய்றதில்ல, என்ன காரணம்னு கேட்டா நல்ல ப்ராண்ட்ஸ் அவ்ளோ இல்லைனும் சொல்லலாம் 1 வருஷம் முன்ன வரைக்கும் செந்ஹெஇச்செர் விட்டா சிர்ச்லெ அப்டி சில சின்ன கம்பெனிகள் தவிர இசை கேட்கும் கருவிகளுக்குனு தனியான நிறுவனங்கள் ஏதும் கிட்டத்தட்ட இல்ல. இப்போதான் ட்ர்.ட்ரெ பெஅட்ச் அறிமுகபடுத்தி இருக்காரு நிச்சயம் ஒரு நல்ல படைப்பு. அதோட கவர்ல ட்ரே எழுதி இருந்த ஒரு விஷயம் ஒரு பாட்ட உருவாக்க ஸ்டுடியோல நிறைய கஷ்டபடுறோம் நிறைய செலவு செய்றோம் ஆனா நாங்க இங்க எப்படி கேட்கிறோமோ அதே போல நீங்க கேட்பதில்ல அத மாத்தனும் என்பதற்காகத்தான் பீட்ஸ் என்று, ஆனா இங்க அதோட விலை மற்றும் எவ்ளோ பரவலா கிடைக்குதுன்னு பாத்தா ஹ்ம்ம். ????

    இப்போ நாங்க இன்டெர்லுடெச் எல்லாம் ஞாபகம் வெச்சு பேசறதில்ல என்று சொல்லுமுன்ன கொஞ்சம் யோசிக்கலாம் இல்லியா. சரி இந்த டெக்னாலஜியால இது மட்டும்தான் பாதிப்பா, ஆடியோ கேசட்டுகள் காலத்துல எப்படி பாட்டுகள் வாங்கிகிட்டு இருந்தோம்னு யோசிச்சு பாருங்க, அட காசு கொடுத்து வாங்கிருகோம்ங்க ஒரு பபுது படம் வந்தா அதோட கேசட்டு வாங்கி கேக்கறது எல்லோருக்கும் பழக்கமாவே இருந்திருக்கு, அதுலயும் காபி [போட்டு டூப்ளிகேட் வித்தாங்க நம்ம ஆளுங்கனாலும் பெரும்பாலும் ரெண்டும் ஒரே விலைதான், அதுனால ஸ்டுடியோஸ்க்கு நல்ல வருமானம் ஓரளவு இருந்தான் சொல்றாங்க, ஆனா இப்போ ஹ்ம்ம் இது வரைக்கும் 1 ட்ப் மியூசிக் கேட்டிருப்பேன்னு நெனைக்றேன் அதுல ஒரு 90% சுட்டதுதான் பிரடெட், நானாவது பரவால்ல பலருக்கு அது சுட்டதுன்ர விஷயமே பத்தி யோசிக்கிறது இல்ல.

    சரி இத பத்தி பேசுனா பேசிகிட்டே இருக்கலாம், ஆனா கம்மி விலையில கிடைக்கும் டிவைசெஸ், ப்ரீயா கிடைக்கும் ம்யூசிக் இது ரெண்டும் இல்லைனா இன்னிக்கு இவ்ளோ உலகம் முழுசா உள்ள இசைய நம்மால என் என்னால கேட்ருக்க முடியுமான்னு கேட்டா நிச்சயம் இல்ல. // to be continued

    ReplyDelete
  3. chinnappayal

    @ ரசிகன் : Microsoft Word கவிதை/கதை எழுதாது , நாமதான் எழுதணும். அதே போலத்தான் இப்ப இருக்குற Synthesizers எல்லாமே..

    ReplyDelete
  4. அருமை ..........இசை இல்லை என்றால் மனிதனின் ஆயுள் காலம் இன்னும் குறைந்துவிடும் .........
    நானும் இசை பற்றி கவிதை எழுதியிருக்கிறேன் பார்க்க
    http://kovaimusaraladevi.blogspot.in/2012/06/blog-post_14.html

    ReplyDelete
  5. ஹ்ம்...இசையால் வசமாகா இதயமெது... நன்றி கோவை மு சரளா..!

    ReplyDelete
  6. அந்தக்கால இசையையும், இந்தக்கால இசையையும் பற்றி நல்லதொரு அலசல்...

    எந்த ஒரு இசையானாலும் மனிதனின் மனதை சந்தோசப்படுத்துகிறதோ, உற்சாகப்படுத்துகிறதோ. ஆறுதல்பட வைக்கிறதோ,.... (இப்படி நிறைய சொல்லலாம்...) அவை யாவும் காலத்தால் அழியாதவை...

    பகிர்வுக்கு நன்றி...

    (த.ம. 4)

    ReplyDelete
  7. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  8. In fact it all started after Rahman's entry

    ReplyDelete
  9. ரொம்ப நேரம் மினக்கெட்டு கருத்திடுகிறேன்.படங்களைப் பார்த்தால் இசையைப் பற்றை எழுதியிருக்கிறீர்கள் போல.வாசிக்கவே முடியவில்லை.உங்கள் பக்கம் ஒரே துள்ளுது.ஏன் ?

    ReplyDelete
  10. @ Anonymous: cant say like that !..but he also one among the reason for it !.. :-)

    ReplyDelete
  11. @ ஹேமா : இசை என்றாலே துள்ளல் தானே?.. சிரமம் கொடுத்துக்கொண்டிருந்த கேட்ஜெட்களை நீக்கிவிட்டேன்..இனி அமைதியாயிருக்கும் வலைப்பூ..:-) கருத்துக்கு நன்றி..

    ReplyDelete