Tuesday, June 21, 2011

விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும்

ஆர்ப்பாட்டமான இசையுடன்  தொடங்குகிறது திரைப்படம்.'எவளாவது இந்த மீசை விஷயத்த வெளிய சொன்னீங்க அப்பறம் இருக்கு சேதி' என்று ஜமீன் கூறுவதுடன்.ஒட்டு மீசையை மறைப்பது போல் அவருக்குள்
மறைந்து கிடக்கும் பல விஷயங்களுடன் நகர்கிறது அவன்-இவன் திரைப்படம்.

விஷால் வாழ்ந்திருக்கிறார் படத்தில் ஜி.எம்.குமாருடன்.விளையாட்டு பையனாக, முறுக்கேறி சண்டை பிடிக்கும் இளம் வாலிபனாகப்பார்த்த விஷால் இந்த படத்தில் ஒரு விஷுவல் ட்ரீட்.கொஞ்சம் பெண் தன்மை தன்னிடத்தில் கூடியவராக அபினயித்திருக்கிறார்.ஒவ்வொரு அசைவிலும் அந்த பாத்திரத்தை செதுக்கி அதை வெளிக்கொணரச்செய்திருப்பவர் பாலா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கண்களை ஒன்றறையாக மாற்றிக்கொண்டு, முறுக்கேறிய கை கால்களை , நளினமாக்கி , அடக்கி வாசிப்பது ரொம்பவே கடினம்.சொல்லப்போனால் அவர் தனக்கென உருவாக்கிக்கொண்ட இமேஜிலிருந்து தன்னை மாற்றிக்கொண்டு அன்டர் ஆக்டிங் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.குத்த வைப்பதும், கை விரல்களை இசைக்கேற்ப அரிந்து கொள்வது போல செய்து காட்டுவதும்,நடை பாவனைகளை பெண்களைப் போல் செய்வதுமாக,ரொம்பவே மெனக்கட்டிருக்கிறார்.

சூர்யாவிற்கு முன் நடித்துக்காட்டும் காட்சிகள் , நாட்டியம் தெரிந்த அனைவரும் செய்வது தான்.அதில் வியப்பொன்றும் இல்லை.அதைக்குறித்து ஆர்யா விவரிக்கும் இடந்தான் அந்தக்காட்சிகளை  நமக்குள் மீள ஓடச்செய்து நினைத்துப்பார்க்க வைத்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆர்யாவிற்கு சொல்லிக்கொள்ளத்தக்க இடங்கள் என எதுவும் இல்லை,விஷாலோடு ஒப்பிடும்போது குடித்து விட்டு தன் தம்பி பற்றி பேசும் இடத்தை , பின் விஷால் சூர்யாவிற்கு முன் நடித்துக்காட்டும்போது தன்னையுமறியாமல் எழுந்து நிற்பது போன்ற காட்சிகளை குறிப்பிட்டு  சொல்லலாம். 


வெறுப்பைக்காட்டுவது, தான் செய்ய இயலாத செயலை பிறர் வெகு இலகுவாக,விமர்சையாக செய்யும்போது ஏற்படும் ஆதங்கத்தை வெகு அழகாக செய்து காட்டியிருக்கும் காட்சி, அது அவரின்  'நான் கடவுளில்' இருந்து வேறுபட்ட ஒரு நீட்சியாகத்தெரிகிறது.

விளிம்பு நிலை சமூகம் இன்னமும் எப்படி இருக்கிறது என்று காட்டும் முயற்சிக்கு வசனங்களும் கை கொடுத்திருக்கிறது.பாலா'வின் ஒப்புதலின்றி ஒரு அணுவும் அசையாது என்பதற்கு வசனங்களே சாட்சி.
எஸ்.ரா கதைக்கும் , அந்த கதாபாத்திரங்களுக்கும் என எழுதியிருப்பது அவர் தனது இலக்கிய முகத்தை சமரசம் செய்து கொண்டதாக தோணவில்லை.தன்னால் ஊகிக்க இயலாத , அல்லது , பிறர் ஏற்படுத்திக்கொடுக்கும் களங்களை தன் சொற்களால் செம்மைப்படுத்தித்தான் இருக்கிறது அவர் எழுத்து.

வாயிலிருந்து நீரை அவர் மேல் பீச்சியடிப்பது,அவர் கையிலிருந்து தெறித்த சோற்றுப்பருக்கையை தன் கன்னத்திலிருந்து எடுத்து உண்பது போன்ற காட்சிகள்,ஹைனஸின் மேல் இருவருக்கும் உள்ள நெருக்கத்தைக்காட்டும் காட்சிகள் தான்.அருவருப்பாகத்தெரிகிறது என்று சொல்வதில்  உடன்பாடில்லை.

விடலைப்பையனாக நடித்திருப்பவன் அந்தச்சமூகத்தில் தமக்கென ஒரு இடத்தை எப்போதும் பிடித்து வைத்திருக்கும் ஒருவன் தான்.'இங்க நாங்க மட்டும் அனாதை இல்ல,  நீயுந்தான்' என்று  ஹைனஸிடமே
பேசுவது,ஆர்யாவைத்தேடி வரும் போலீஸிடம் தொணத்தொணவெனக் கேள்விகள் கேட்பது,சூர்யா'வின் மறுமொழியை ஆர்யா'விற்கு எனச்சுட்டிக்காட்டும் இடங்கள் , என பல இடங்களில் அந்த விடலைப்பையன் மூலமாக பாலா தெரிகிறார்.

ஸிந்தஸைசரும் , எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ருமெண்ட்ஸுமாக வலம் வந்த யுவனுக்கு நமது பாரம்பரிய இசைக்கருவிகள், மற்றும் இசை வடிவம் சற்று புதிதாக இருந்த போதிலும் சளைக்காமல் , இது வரை கேட்டிராத இசையைக்கொடுத்து உயிரூட்டி இருக்கிறார்.விஷாலின் முதல்
நடனத்துக்கு அவர் அமைத்திருக்கும் இசை காலம் காலமாய் அவரை நினைவில் நிறுத்த வைக்கும். பரீட்சார்த்த முறையில் பெரும்பாலும் நமது பண்டைய இசைக்கருவிகளைக்கொண்டே முழு இசையையும் அளித்திருப்பது படத்தோடு நம்மை ஒன்றச்செய்கிறது. இதே யுவன் தான் இப்போது வந்திருக்கும் ஆரண்ய காண்டத்திற்கும் இசை அமைத்திருக்கிறார் என்று நம்புவது கொஞ்சம் கடினம்தான்.ஹான்ஸ் ஸிம்மரின் இசைக்கோவையும் , நாட்டார் இசையும் வெகுவாக ஒன்றோடொன்று இணைந்து செல்வது , எங்கும் பிறழாமல்,,,ஹாட்ஸ் ஆஃப் யுவன்.

ஆர்கே'யின் சட்டவிரோத மாட்டுக்கறி விற்பனை, அதைக்கண்டுபிடித்து ஹைனஸ் மீடியாவிற்கு எடுத்து சொல்லுதல் என்பன காட்சித்திணிப்பாகத்தான் தோன்றுகிறது.பின்னர் ஹைனஸ் அவர் கையாலேயே நிர்வாணமாக்கிக்கொல்லப்படுதல் ,பின் இருவரின் பழி வாங்கும் படலம் எல்லாம் மலிந்த கடைச்சரக்கு.


பாலா தனது திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது இதிலும் நிரூபணமாகியிருக்கிறது

எனக்கு இவங்களைப்பத்தி தான் பேசப்பிடிக்கும், அவங்களும் நம்மளோட தான் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க என்று சற்றும் தனது பாதையிலிருந்து விலகாமல் இன்னொரு படத்தை , முழுத்தன்னம்பிக்கையுடன் கொடுத்திருக்கும் பாலா'வுக்கு நன்றி.
.

7 comments:

  1. //பாலா தனது திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது இதிலும் நிரூபணமாகியிருக்கிறது//
    காரணம் அனைத்து தமிழ் சினிமாவும் கவர்ச்சிக்கு தான் நடிகைகளை இதுவரை பயன்படுத்தி வந்தது ..அதை மாற்றியது பாலா :-)

    ReplyDelete
  2. //ஸிந்தஸைசரும் , எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ருமெண்ட்ஸுமாக வலம் வந்த யுவனுக்கு// //சளைக்காமல் , இது வரை கேட்டிராத இசையைக்கொடுத்து உயிரூட்டி இருக்கிறார்.//

    என்ன தான் இருந்தாலும் மரபணு :-))

    ReplyDelete
  3. நன்றி சுதர்ஷன்.பாலா யுவன் கூட்டணி இப்பவும் சோடை போகல.

    ReplyDelete
  4. படித்ததிலேயே யாரையும் காயபடுத்தாமல் ஒரு நல்ல விமர்சனம்

    நன்றி

    ReplyDelete
  5. நன்றி கவி.! பாலா எப்பவுமே தனக்கான பாணிய தொடர்ந்து செய்யறதாலயும்,எதற்காகவும் சமரசம் பண்ணிக்கிறாததாலயும் அவரது படைப்புகள் எப்போதும் வெல்லும்.எவ்வளவு விமர்சனங்கள் வந்தபோதும்..! :-)

    ReplyDelete
  6. படத்தின் கதை,நடிப்பு,இசை பற்றி விரிவாக சொல்லியிருக்கிறீர்கள்.படத்தின் ஹைலைட் விஷாலின் நடிப்பு மட்டுமே.

    ReplyDelete
  7. நன்றி ராஜ நடராஜன்..!

    ReplyDelete