Saturday, May 7, 2011

புதிய ஏற்பாடு


திண்ணையில் வெளியான எனது கவிதை

எனது எண்ணங்கள்
என்னால் வடிவமைக்கப்படுவதில்லை.

எனது கருத்தாக்கங்கள்
யாராலோ கூறப்பட்டு எனக்குள்
ஊறிக்கிடக்கின்றன.

எனது சித்தாந்தங்கள்
எங்கிருந்தோ எனக்குள் புகுத்தப்பட்டவை.

எனது சிந்தனைகள்
திட்டமிட்டு,வெகுவாகவே
முன் ஒத்திகையுடன் சரிபார்க்கப்பட்டு
பிறரால் என்னுள் செலுத்தப்பட்டவை.

எனது செயல்கள் பிறரால்
என்னைக்கொண்டு செய்விக்கப்படுபவை.
எனது முயற்சிகளின் முடிவுகள்
பிறரின் முந்தைய முடிவுகளையொத்தே
அமைகின்றன , அது
வெற்றியாயிருப்பினும் அல்லது
தோல்வியாயிருப்பினும்.

சுயசிந்தனையில் முடிவெடுத்து
புதிதாக ஒரு விஷயத்தைச்
செய்ய முற்படுகையில்
அது வெகுவாகப்பிறரால் அல்லது சிலரால்
ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது
மறுக்கப்பட்டவையாகவே இருக்கிறது.

நான் தான் முதலில் பிறந்தவன்
என்று கூறிச்செல்கையில்
ஏற்கனவே அவ்வாறே
கூறிக்கொண்டு சென்ற கூட்டம்
ஒன்று எனைப்பார்த்து தனக்குள்
நகைத்துக்கொண்டிருந்தது.

என இவையனைத்தையும்
உணர்ந்த பின்னும் அதையே
தொடர மனவிருப்பின்றி
அயற்சியுருகையில்
அவ்வாறே ஏற்கனவே
அயற்சியுற்ற ஒரு கூட்டம்
என்னையும்
தன்னுடன் சேர்த்துக்கொண்டது.


.

3 comments:

  1. எனது எண்ணங்கள்
    என்னால் வடிவமைக்கப்படுவதில்லை.
    உண்மைதான். கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ///சுயசிந்தனையில் முடிவெடுத்து
    புதிதாக ஒரு விஷயத்தைச்
    செய்ய முற்படுகையில்
    அது வெகுவாகப்பிறரால் அல்லது சிலரால்
    ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது
    மறுக்கப்பட்டவையாகவே இருக்கிறது.

    /////////

    பலரின் உணர்வுகள் இந்தக் கவிதையுடன் ஒன்ரிப்போகும் என்பதும் மட்டும் திண்ணம் . அருமையானப் படைப்பு ஆழமான உண்மைகள்

    ReplyDelete
  3. நன்றி இராஜராஜேஸ்வரி.

    ம்..பனித்துளியின் வருகை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தப்பயல்...:-) நன்றி..!

    ReplyDelete