காட்சி இணைய தளத்தில் வெளியான கவிதை
எப்போதும் தண்ணீர் சிந்திக்கிடக்கும் முற்றம்,
அவ்வப்போது தலையை சாய்த்து
அடுக்களைக்குள் ஏதேனும் உள்ளதா
என நோட்டம் விடும் காக்கை
அமரும் உடைந்த நாட்டு ஓடு,
அந்த ஓடுகளைச்சரி செய்கிறேன்
பேர்வழி என்று அவற்றில்
பதுங்கியிருந்த தேளிடம் வாங்கிய கடி,
அடுக்களைப் பரணியில் கிடக்கும் உளுத்துப்போன
விறகுகளிலிருந்து உதிரும் மஞ்சள் பொடி,
முற்றத்தில் காரை பெயர்ந்த
தொட்டியின் நீரில் யாருமில்லா
சமயத்து குளித்து கும்மாளமிடும் குருவிகள்,
அருகில் உள்ள வேப்ப மரத்தின் பூக்கள்
காற்றில் பறந்து வந்து விழுந்து கிடக்கும்
சுற்றுக்கட்டு தாழ்வாரங்கள்,
சுற்றி வந்து ஓடிப்பிடித்து விளையாடிய
தாழ்வாரத்தின் தூண்கள்,
தாழ்வார மூலையில் சற்று வீசி ஆட்டினால்
முனகும் ஊஞ்சல்,
எப்போதும் இருட்டியே கிடக்கும் அறைகள்,
அவ்வப்போது கையை கதவு நிலைக்கும்
தலைக்கும் இடையே வைத்து
உயரத்தை அளந்து பார்த்துக்கொண்ட நிலைகள்,
ஓயாம நிலைலயே நிக்காதே என
பாட்டியிடம் வாங்கிய வசவுகள்,
மார்க் ஷீட்டைக் காட்டப்பயந்து
ஒளிந்து கொண்ட பீரோ மூலை,
- என அந்தக்கூட்டிலும்
கொஞ்ச நாள் இந்த உயிர்
நிலை கொண்டிருந்தது.
.
No comments:
Post a Comment