Saturday, May 21, 2011

சுயபரிசோதனை

திண்ணையில் எனது கவிதை


உன்னை அதிகம்
துன்புறுத்தியிருக்கிறேனா ?
அது என் சுயத்திற்கு
மகிழ்வைத்தந்திருக்கிறது

உன்னை அதிகம்
காயப்படுத்தியிருக்கிறேனா ?
அது என் சுயத்திற்கு
மருந்து போடுவதற்கு
பயன்பட்டிருக்கிறது.

உன்னை அதிகம்
உதாசீனப்படுத்தியிருக்கிறேனா ?
அது என் சுயத்திற்கு
செருக்கைத்தந்திருக்கிறது.

உன்னை ஒரு புழுப்
போல் நடத்தியிருக்கிறேனா ?
அது எனக்குள் இருந்த
மிருகத்திற்கு உணவாகியிருக்கிறது.

என்னிலும் பார்க்க
உன்னை மேலெழும்ப விடாமல்
அமிழ்த்தியிருக்கிறேனா ?
அது எனது சுயத்தைக்
கூறுபோடுவதிலிருந்து
தப்பிக்க வைத்திருக்கிறது.

எனக்கென உன்னை
உருக வைத்துப்பார்ப்பதில்
என் சுயம் இன்னமும்
தனது இடத்தை,இருப்பை
வலுவாகவே தக்கவைத்துக்கொள்கிறது.

ம்...
பிறர் அடக்கி ஒடுக்கப்படுவதிலும்
ஒரு இன்பம் இருக்கத்தான்
செய்கிறது என்பதை
என் சுயம் உணர்ந்துகொள்வதில்
மீள் பரிசோதனையின்றி
அது தன் வேலையைத் தொடர்ந்து
நடத்திக்கொண்டுதானிருக்கிறது.



.

2 comments:

  1. நன்றி ரத்னவேல் சார்.உங்களின் வருகைக்கு நன்றி.!

    ReplyDelete