Saturday, November 13, 2010

புள்ளயார்


 


லேசாகத் தூறல் போட்டுக்கிட்டிருந்தது அன்னிக்கு.புள்ளயார் சதுத்திக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.எங்க பாட்டி புள்ளயார் புடிக்கப்போய் கொரங்கா முடிஞ்ச கதய எப்பவும் புள்ளயார் சதுத்தியப்ப சொல்லுவா.எனக்கு என்னவோ பாதி புரிஞ்சும் பாதி புரியாமயும் இருக்கும்.இந்த வருசமும் சொல்லிக்கிட்டிருந்தா.பூராக்கதையும் உம் கொட்டிக் கேட்டப்புறம் , பாட்டி சிரிப்புக்குங்காட்டியும் கத கேட்ட நாயச் செருப்பாலடிம்பா. நான் திருப்பிக்கிட்டு அப்பக் கத சொன்ன நாயம்பேன். கைல புடிச்சு நடக்கிற கம்பெடுத்துக்கிட்டு அடிக்க வருவா, ஓடுவேன்.

வழக்கம் போல அடுத்த நாள் அப்பா பைய எடுத்துக்கிட்டு மார்க்கெட்டுக்குக் கெளம்பினார்.பாட்டி , "எலே பயலே, உங்கப்பனோட போயி புள்ளயார் வாங்கிட்டு வாடா"ன்னு தொண்டையகிழிச்சிக்கிட்டு கத்தினது கூடத்தில வெளயாடிக்கிட்டிருந்த எனக்கு கேட்டுச்சு.எங்க பாட்டிக்கி வெங்கலத் தொண்டை.மணிக்குண்டு அடிச்சாமாதிரி இந்த வயசிலேயும் கொரல்.

என் மோட்டரைக் கெளப்பிக்கிட்டு அடுப்படியில இருந்த அம்மாகிட்ட போயி "அந்த ஆமைப்பலக"ய எடுன்னேன்.அது வடிபலகை.சோறு வடிக்கறதுக்குன்னு நல்ல மரத்துல செஞ்சது.எப்பவும் பரண்லதான் கெடக்கும்.அந்தப் பலகைக்கு ஆம போல ரெண்டுபக்க விளிபம்புலயும் ரெண்டுரெண்டு காலும் ,முன்னாடி ஒரு சின்னத்தலயும்,பின்பக்கம் ஊச்சியா ஒரு வாலும் இருக்கும்.அம்மா ரெண்டு ஸ்டூல் போட்டு ஏறி [பரணி ரொம்ப உசரம், எட்டாது] அந்தப் பலகையை எடுத்து கழுவித்தொடச்சு குடுத்தா.நான் பெரிய இவனாட்டம் "ஏம்மா, இதுல கோலம் போடல? "போய் மொதல்ல புள்ளயார வாங்கிட்டு வா. அவர் அளவப் பாத்துக்கிட்டு அப்புறமா கோலம் போட்டுக்கலாம். போடா" என்றாள்.

ஆமத்தலயப் புடிச்சிக்கிட்டு அப்பாவோட மார்க்கெட்டுக்குப் போனேன்.ஒரே கூட்டம்.போற வழியிலயே சொல்லிட்டேன். "நான் சொல்ற புள்ளயாரத்தான் வாங்கணும்"னு. சிரித்துக்கொண்டே சரின்னுட்டார்.ஒண்ணொண்ணாப் பாத்து ,நல்ல வயிறும் கியிறுமா இருக்கிற புள்ளயாராப்பாத்து அந்தக்கடையிலயே வாங்கணும்"னேன்.

மல மாதிரி குமிச்சு வெச்சிருந்த களிமண்ணுல ரெண்டு கையையும் போட்டு,கொஞ்சம் மண்ண அள்ளி பெரிய சூப்பி மாதிரி உருட்டி,கீழ தயாரா வெச்சிருந்த அச்சில,ஒட்டிக்காம இருக்க கொஞ்சம் எண்ணெ தடவிவிட்டு,உருட்டி வெச்சிருந்த களிமண்ண ஓங்கி அடிச்சான்.பளிச்சென என் கண்ணில தெரிச்சுது எண்ண.அதத் தொடச்சு முடிக்கறதுக்குள்ள ,அலாக்கா திருப்பி,"ம்….ம்அந்த வடிபலகயக் கொண்டா"ன்னு பறிக்காத கொறயா வாங்கிப் படுக்க வெச்சான் புள்ளயார.ஓரமாக் கொஞ்சம் களிமண்ணும் வெச்சிக் குடுத்தான்.புள்ளயார நிமித்தி ஒக்கார வெக்கும்போது தேவப்படும்.நான் முந்திக்கிட்டு "கண்ணு வெக்கக் குண்டுமணீ"ன்னேன்.ரெண்டு குண்டுமணிய பாக்கெட்ல போட்டுவிட்டான்.பலகைக்கி கீழகூடி ரெண்டு கையையும் குடுத்து ரெண்டு ஆமக்காலயும் புடிச்சுக்கிட்டு நடந்து வந்துக்கிட்டிருந்தேன்.வழியில ஒல்லிப் பரமசிவமும் புள்ளயார் வாங்கறதுக்கு வந்துக்கிட்டிருந்தான்.என் கையில இருக்கிற புள்ளயாரப்பாத்துட்டு "அட, உன் புள்ளயார் நல்ல அளஹா இருக்காரேடா"ன்னான்.கொள்ளிக்கண்ணு.

வீட்டுக்குக் கொண்டுவந்ததும்,பாட்டி, "அட இந்த வருசம் புள்ளயார் நம்ம பயல மாதிரியே கொழுகொழுன்னு அழகாத்தான் இருக்காரு"ன்னா.பாட்டிக்கி ரொம்ப சேட்டதான்.நான் புள்ளயார நிறுத்துறதுல ரொம்ப மும்முரமாயிருந்தேன்.தேர நெலக்குக் கொண்டுவர்ற மாதிரி,,ஒரு வழியா இடுப்புப் பக்கத்துல களிமண்ணப்பூசி ,புடிப்பு கெடச்சதும்,ஒக்காந்துகிட்டார் புள்ளயார்.அப்புறம் பாக்கெட்ல வெச்சிருந்த பாதி கருப்பும் , பாதி செகப்புமா இருக்கிற குண்டுமணிய எடுத்து அவர் ரெண்டு கண்ணுலயும் வெச்சு அழுத்திவிட்டேன்.மூக்கு நுனியப் பாத்துக்கிட்டிருக்கற மாதிரி இருந்தார் புள்ளயார்.அப்பா குடுத்த அஞ்சு ரூபா காயின தொந்தில வச்சு அழுத்தினேன்.அம்சமா இருந்தாரு.

அம்மா ஆமப்பலகையில் புள்ளயாரச்சுத்தி மாக்கோலம் போட்டுட்டு அவருக்கு முன்னால ரெண்டு வாழ எலயப் பரப்பி,பொரியும்,பொட்டுக்கடலயுமா கலந்து( நாந்தான் கலக்குனே) வெச்சிருந்தத அதுல போட்டு,கொய்யா,பேரிக்கா எல்லாம் துண்டுதுண்டா நறுக்கி வெச்சு , அம்மா எனக்குன்னேன்…"ச்சீ..புள்ளயார் பாத்துக்கிட்டிருக்கார்.அடிப்பார்."ம்க்கும்நான் தானே கண்ணயே வெச்சேன்,அத எடுத்துவிட்டா எப்டி பாப்பாருன்னு நெனச்சிக்கிட்டேன்.அம்மா ஏதோ ஞாபகம் வந்த மாதிரி,போயி நவ்வாப்பழம் பறிச்சிட்டு வா"ன்னா.ஓடிப்போனேன் கொல்லைக்கு.கொல்லைன்னா அது எங்க வீட்டுக்கு மட்டுமில்ல, எல்லார் வீட்டு பொற வாசக்கதவத் தெறந்தா ஒரே கொல்லதான். எனக்கு முன்னாடியே ஒல்லிப் பரமசிவமும், தங்கராசும் மரத்துல ஏறி உலுப்பிக்கிட்டிருந்தாங்ய.என்னப்பாத்ததும் "எலே கீழ கெடக்கிற பளத்துல கைய வெச்ச , மவனே அடி விளும்"ன்னாங்.அப்பறமா ரெண்டு பேரும் கீழ எறங்கி வந்து எல்லாப்பழத்தயும் பொறுக்கிக்கிட்டு. "பளம் வேணும்னா கண்ண மூடிக்கிட்டு கைய நீட்டு"ன்னாங்ய. உடனே கைய மூடிக்கணும்னு சொல்லி,கனிஞ்சுபோய் கையிலயே எடுக்கமுடியாத அளவுக்கு கொழகொழன்னு இருந்த பழத்தக் கையில போட்டுட்டு ஓடிட்டாங்ய. நானும் வாங்கிக்கிட்டு கையத் தொறந்து பாத்தேன்.கையெல்லாம் கறையா யிருந்துச்சு. அப்புறம் நான் டவுசர்ல தொடச்சிக்கிட்டு மரத்தில ஏறி உலுப்பிக் கொஞ்ச பழத்த எடுத்துக்கொண்டு வந்து குடுத்தேன்.அம்மா அதுக்குள்ள பூசைய ஆரம்பிச்சிருந்தா.
 
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்,கோலம் செய் துங்கக்கரி முகத்துத் தூமணியே, நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா" பாட்டியின் வெங்கலத் தொண்டை.என் கையில் மணி, அடிச்சுக்கிட்டே இருந்தேன். நெனப்பெல்லாம் கொய்யாப்பழத்துலயும், பேரிக்காயிலயும்.


ஆச்சு மூணு நாள்.வேணுமட்டும் தின்னு சலிச்சுப்போச்சு,மோதகமும் பழமும்…"பயலே மறுபடியும் பாட்டிதான். "பூசைய முடிச்சிட்டு புள்ளயாரக் கொண்டுபோய் ஆத்துல போட்டுட்டு வா".அப்ப இருந்தே எனக்கு ஒரு ஒதறல்.ஒல்லிப் பரமசிவமும், தங்கராசும் போன வருசம் கெணத்துக்குள்ளயே தள்ளி விடப்பாத்தாங்ய. கெராதகப் பயலுஹ.இந்தத் தடவை என்ன பண்ணுவாங்களோ..?

எங்க ஊரு வைகை ஆத்துல தண்ணி எப்பவாவதுதான் ஓடும்.பொயலடிச்சு மழ பெஞ்சாக்கூட வாய்க்கா மாதிரி கூட ஓடாது.அதுனால நாங்க ஆத்துக்குள்ள இருக்குற கெணத்துல தான் கொண்டுபோய் புள்ளயாரப் போடுவோம்.கெணத்துல கொஞ்சம் தண்ணி கெடக்கும்.எனக்கு நெஞ்சு மட்டுக்கு.ஆமப்பலகயப் புடிச்சுகிட்டு நடந்துக்கிட்டிருந்தேன் ஆத்துக்குள்ள, இன்னுங்கொஞ்ச தூரந்தான் கெணறு.புள்ளயார இங்கயே மண்ணுல போட்டுட்டு ஓடிரலாமான்னு தோணுச்சு.ஏன்னா கெணத்துத்திண்டுல ஒல்லிப் பரமசிவம் நின்னுக்கிட்டடி ருந்தான்.தூரத்தில வர்ற என்ன அடயாளங் கண்டுக்கிட்டு, "வாடா ஏட்டயா" ன்னான்.எதுக்கு இப்டி ஒரு பட்டப்பேரு வெச்சாங்யன்னே தெரியல.

கெணத்துக்குள்ள இருந்து தங்கராசு கொரல் கேட்டுச்சு."வந்துட்டானாடா" உதறல். "டேய், நீயும் உள்ள வந்து இந்த ஒடஞ்ச ஒறையில கால வெச்சு நின்னுக்க,அப்பதான் நீ விட்டாலும் நான் புடிச்சுக்குவேன்."தங்கராசு. அவங்க உள்ள போட்ற ஒவ்வொரு புள்ளயாரயும் புடிச்சு, தொந்தில இருக்குற காச எடுத்துட்டு,அப்பறமா அவரத்தூக்கி தண்ணிக்குள்ள போடுவாங்க.அதுக்குத்தான் நிக்கிறாங். இந்த வருசம் இந்தப் பயலுகளுக்கு எதுவும் கெடக்கப்படாதுன்னுட்டு, அப்பா வெச்ச அஞ்சு ரூவாய மொதல்லயே எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டேன்.

கெணறு நெருங்கிச்சு.உள்ளயிருந்து ரெண்டு பயலுகளும் எட்டிப்பாத்த என்ன," போடுடா"ன்னாங்ய .போன வருச ஆத்தரத்தயெல்லாம் சேத்து வெச்சு,புள்ளயார ஆமப்பலகயோட நச்சட்டீர்னு ஒல்லிப் பரமசிவம் தலயிலயே போட்டேன்.ஆமப்பலக தலயிலடிச்சு,அவன் புடி தடுமாறி புள்ளயாரோட, கீழ நின்ன தங்கராசு மேல விழுந்தான்.தங்கராசு "டேய் ஏட்டயா"ன்னு கத்திக்கிட்டே ஒல்லிப் பரமசிவத்துக்கீழ தண்ணிக்குள்ள விழுந்தான்.

ரெண்டு பயலுகளும் எந்திரிச்சு வர்றதுக்குள்ள ஓடிறணும்னு ஓடினேன்.பின்னாலயே தொரத்திக்கிட்டு வந்தாங்க, ஓட்டமா ஓடிவந்து நவ்வாப்பழ மர உச்சிக்குப் போய் நின்னுக்கிட்டு ரெண்டு பேருக்கும் பழிப்பு காட்டுனேன். கீழ அப்பா நிக்கிற தைரியத்துல.அப்றந்தான் ஞாபகம் வந்துச்சு, ஆமப்பலக.அம்மாகிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்னு தோணுச்சு.

பாட்டி ஒவ்வொரு வருசமும் சொல்ற புள்ளயார் புடிக்கப்போன கத இப்ப ஏதோ அவனுக்குப் புரியற மாதிரி இருந்திச்சு. .

No comments:

Post a Comment