Friday, August 24, 2018

மசாலா ஜெட்டு

டெல்லியிலிருந்து திரும்பி வருவதற்கு ஸ்பைஸ்ஜெட்டில் பதிவு செய்திருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து அத்தனை அழைப்பு, குறுஞ்செய்திகள் என உட்பெட்டி நிறைந்து விடும். மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும். உங்கள் பறப்பு இத்தனை இத்தனை மணிக்கு என ஆனால் ஒரு நாள் கூட சொன்ன நேரத்துக்கு புறப்பட்டதுமில்லை, வந்தடைந்ததும் இல்லை தாமதம் அரைமணி நேரமெல்லாம் சர்வ சாதாரணம். இப்போது பறப்பு அத்தனை பெரிய விஷயமில்லை என்றாகி விட்டது. டெல்லி ஏர்போர்ட்டில் பெங்களூர் மெஜஸ்டிக் டவுன்பஸ் ஸ்டாண்டு தோற்றுவிடுமளவுக்கு கூட்டம் செம்மும். நகர முடியாத கூட்டம்.

வழக்கம்போல இந்த முறையும் வண்டி தாமதம். அரைமணிநேரம். சரி போனால் போகிறது என கொஞ்சம் சுற்றலாமெனக்கிளம்பினேன். தீபிகா படுகோன் அத்தனை பைகளையும் உடுப்புகளையும் அணிந்து நொடிக்கொருமுறை மாற்றிக் கொண்டேயிருந்தார் எதிரே இருக்கும் தொகா’வில். ஒரு 2000 இஞ்ச் டீவி இருக்குமென நினைக்கிறேன். விமானப்புறப்பாடு குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. ஒரு வழியாக போர்டிங் பாஸ் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். ’டெக்னிகல் ஸ்நாக்’ தொழில்நுட்ப குறைபாடு. அது சரி. உள்ளே ஏறி அமர்ந்த பிறகும் சரி செய்யப்படவில்லை. ஏற்கனெவே 40 நிமிடம் தாமதம். உள்ளே இருந்த விமான ஓட்டி பெங்காலி கலந்த ஆங்கிலத்தில் இன்னமும் பத்து நிமிடத்தில் சரி செய்து விடுவோம் கவலை கொள்ள வேண்டாம் என்றார். சரி என்ன செய்வது இவாளையெல்லாம் நம்பித்தானே நாம புறப்பட்டிருக்கம் என்று சமாதானம்.

உள்ளிருக்கும் விளக்குகளெல்லாம் ஒளி குறைக்கப்படும் என்று கொஞ்சினாள் மிட்டாய் கொடுப்பவள். என்ன நடக்குதுன்னு தெரியலை. இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிவிடும் என்றாள். அளவுக்கதிகமாக அதிர்ந்தது விமானம். கொண்டு போய் சேர்ப்பாரா இல்லை ஒருதிரியாக கொண்டு போய் சேர்த்துவிடுவாரா என நினைத்துக் கொண்டேன். வலப்பக்கம் 32 இடப்பக்கம் 32 ஒவ்வொரு வரிசையிலும் 3 இருக்கைகள். மொத்தம் 192 பயணிகள். மிட்டாய் கொடுக்கும் பெண்மணிகள் நால்வர், இரண்டு விமான ஓட்டிகள். எல்லாரும் கோவிந்தாதான்.

இன்னமும் ஓடு தளம் கிடைக்கவில்லை கொஞ்சநேரம் பொறுக்க வேணும் என்று மீண்டும் அந்த பெங்காலி. வயது முப்பதுக்குள் தான் இருக்கவேணும். இளமையான குரல். ஒருவழியாக அதிர்ந்தது கிளம்பியது. பெல்ட் அணியவும் அணியவும் என மெக்கானிக் குரல். கரும்மடா. ஒரு பெல்ட்தான் இருக்கு அதத்தான் அணியமுடியும். மொதல்ல வண்டியக் கிளப்புங்கடா ! போகும் வழியெல்லாம் வானம் பதற்றமாக இருக்கிறது என்று ஒரு அறிவிப்பு வேறு (turbulence) இந்தப்பயணம் தான் கடைசி போல என நினைக்க வைக்கும் சூழல். கண்ணைக்கட்டிக்கொண்டு உறங்க நினைத்தேன். வெளியில் எதையும் பார்க்க முடியவில்லை. அத்தனை கும்மிருட்டு. அவ்வப்போது மின்னல் வெட்டுகிறது. ஹாலிவுட் படங்களில் மின்னல் வெளிச்சத்தில் ட்ராகுலா கைகளில் பிணங்களை ஏந்திச்செல்லும் அது போல. ஜன்னல் பக்கமே பார்க்காது கண்ணை இறுக மூடிக்கொண்டேன்.

ஒரு வழியாக பெங்களூர் வந்து விட்டது இன்னமும் பத்து நிமிடங்களில் இறங்கி விடலாம் என்றார் பெங்காலி. எப்படியோ பிழைத்தால் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது தடாலென ஒரு சப்தம். எமெர்ஜன்ஸி எக்ஸிட் பக்கமிருந்து எதோ சப்தம் வந்தது. அத்தனை இரைச்சல் களுக்கிடையில் அதைக்கேட்க முடிந்தது ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை என்றார் விமானப்பெண்மணி. சொல்ல மறந்துவிட்டேன் அவர் பார்க்க தமன்னா போலவே இருந்தார். ஒரு வேளை தங்கச்சியாகக்கூட இருக்கலாம் யார் கண்டது ? ரணகளத்திலயும் ஒரு…ஹிஹி.

கொஞ்சம் குனிந்து பார்த்தேன். பளப்பளவென மின்விளக்குகள் தரையில் தெரிந்தன. இறங்கப்போகிறோம் என்ற ஆவலில் இருக்கும் போது பின்பக்க டயர்கள் சரேலென தரையில் பதிந்தன. அத்தனை வேகத்துடன், எதோ எங்கோ போய் மோதுவது போல.தரையை கிழித்துக்கொண்டு மோதியது விமான பின் சக்கரங்கள். அத்தனை வேகமாக வரும்போது கொஞ்சம் உராய்வு சாத்தியந்தான். இருப்பினும் இது எதோ சரியில்லை எனத்தோணியது. உட்கார்ந்திருந்த அனைவரும் முன்பக்க இருக்கையில் மோதிக்கொள்ளாத குறை. விழுந்த பின் சக்கரங்களை முந்திக்கொண்டு முன் சக்கரமும் மோதியது போன்ற ஒரு உணர்வு. சடாரென வேகம் குறைக்கப்பட்டு ப்ரேக் வலிமையாக அழுத்தியிருப்பார் போலும். ஓடு தளத்தில் இறங்கிய வேகத்துக்கு விமானம் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது ஓடவேணும், ஒரு நிமிடம் கூட ஓடவில்லை.. சடாரெனெ நிறுத்தி விட்டது போல உணர்வு. இது என்ன நடக்குது என்று கொஞ்ச நேரத்துக்கு மரண பயத்தைக்காட்டீட்டாய்ங்க பரமா!

எப்போதும் டிக்கட் பதிவு செய்யும்போது இன்ஷ்யூரன்ஸை தவிர்ப்பது வழக்கம். என்ன பெரிசா விபத்து வந்திரப்போகுது என்ற அலட்சியம் இனி வரும் அத்தனை பயணங்களுக்கும் அதற்கும் சேர்த்தே பணம் செலுத்திவிடுவது நல்லது என்ற இரண்டு மணிநேரத்தில் காட்டிவிட்டார் அந்தப்பெங்காலி.

இத்தனை மணிநேர பறத்தல் செய்த முன்னனுபவம் இருக்கவேணும் என்றெல்லாம் கட்டுப்பாடுகளெல்லாம் இந்த உள்ளுர் விமான ஓட்டிகளுக்கு கிடையாதா ?! எனது இந்தப்பறப்பு முழுதுமே எதோ ஒரு அமெச்சூர் விமானியிடம் விமானம் சிக்கிக் கொண்டதைப் போலவே உணர நேர்ந்தது.

பெங்களூர் விமான நிலையத்திலிருந்து வீடு வந்து சேர (கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் கூடுதலாகும்) உள்ளூர் பிஎம்டீசி வஜ்ராவில் ஏறி அமர்ந்தேன். வீடு வரும் வரை ஒரு குலுக்கலில்லை ஒரு சறுக்கலில்லை!
 

.

Friday, August 10, 2018

”சமானுலேவரூ ப்ரபோ”







நித்யஸ்ரீ கிறித்துவப்பாடல்களை கர்நாட்டிக்கல பாடீட்டாராம். எல்லாரும் கூச்சல் போட்றாள். பி,சசிரேகா பிறப்பால் ஒரு இந்து, அவர் பாடாத கிறித்துவப்பாடல்களா? இல்லை எல் ஆர் ஈஸ்வரி, ஒரு கிறித்தவர் அவர் பாடிய பாடல்களுடன் தான் ஆடி மாத கூழே ஊற்றுவர் என் ஊரில் ஏன் எல்லா ஊரிலும்! இசைக்கு ஏதய்யா மதம்? இசையே மதம் தான். ராசைய்யா’வின் ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’ பாடல் ஒன்று போதும்.

ரெவெரெண்ட் ஜெகத் கஸ்பரோட ஆசியில் தான் ராசைய்யாவின் திருவாசகமே வந்தது !

 டீஎம் கிருஷ்ணா அவர் பங்குக்கு கர்நாட்டிக்கை குப்பத்துக்கு கொண்டு போனார். இந்த மதச்சம்பந்தமான குழப்பங்களெல்லாம் மேற்கத்திய இசைக்கு ஒரு நாளும் இல்லை. அவாள்லாம் இசையை இறைவனோடு சேர்த்து வெச்சு ஒருபோதும் கொழப்பிக்கிறதெல்லாம் இல்லை.! தியாகைய்யர் ராமன் மேலே பாடீட்டார் அதுக்காக அத்தனை கீர்த்தனைகளும் ஒரு மதத்துக்கான பாடல் மட்டும் என்றாகிவிடுமா ?! 


எத்தனையோ இழை பிரித்தெடுத்தார் ராசைய்யா தியாகைய்யரின் கீர்த்தனைகளிலிருந்து மேற்கத்திய செவ்வியல் இசையை. ஒன்றுக்கொன்று அடிப்படைத் தொடர்புடையது தான் இசையும். இசையில் ஏது பாகுபாடு ?! எனக்கெல்லாம் முதன்முதலாக கிட்டார் கற்றுக்கொள்ள செல்லும்போது ஆர்ச்சி ஹட்டன் மாஷே பள்ளிப்பாட்டுகள் (மலயாள சர்ச் கீதங்கள்) தான் சொல்லிக் கொடுப்பார். அதையெல்லாம் வாசித்து தான் இசை கற்றுக்கொண்டேன். இப்போதும் எனது சன்னி மாஷே சில பாடல்களில் நுணுக்கமானவற்றை பள்ளிப்பாடல் களினூடேயே சொல்லிக்கொடுப்பார். Hymns உண்டு தான் இங்கிலீஷிலும் அதுக்காக அது குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமானது என்றெல்லாம் அர்த்தமில்லை.

இப்படி மதம் பிரித்து இசை கேட்பவரெல்லாம் ரசிகா’வே இல்லை என்பேன் நான். காஞ்சிப்பெரியவர் (மூத்தவர்) ஒரு முறை சொல்லிக் கேட்டிருக்கிறேன்,கிறைஸ்ட் தான் கிருஷ்ணா, ஜீஸஸ் தான் சிவா என்று.நீங்களே சொல்லிப் பாருங்கள். சொற்கள் ஒன்றுபோல் ஒலிக்கும். #கூச்சல்




Monday, July 23, 2018

செருப்பக்காரனும் இளம்பெண்ணின் ஆவியும்



பெங்களூர் வாசகசாலை தொடங்குவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் நானும்,ஸ்ரீனி, செந்தில் மற்றும் தயா,மகேஷ் உடன் விவாதித்து பின்னர் அந்தக்கூட்டங்கள் நடக்கும் போது சென்று கலந்து கொள்ளவியலாமல் போய்விட்டது அத்தனை வேலை தலைக்கு மேல்.ஒவ்வொருமுறை புகைப்படங்களும் ,கட்டுரைகளும் பகிரப்படும் போது ஆஹா இங்க இல்லாமற்போய்விட்டோமே என உணர்வு மேலோங்கும், நேற்று கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு சென்றே விட்டேன். பெங்களூர் தமிழ்ச்சங்கத்திற்கு. மூன்று மணிக்கே போய் அமர நினைத்தேன். நூலகம் திறக்கப்படவில்லை. எதிரே உள்ள அல்சூர் ஏரிக்கரையில் அமர்ந்து ‘உன்னதம் சிறப்பிதழை’ வாசித்துக்கொண்டிருந்தேன். இப்போது தான் நேரம் கிடைத்தது.

மணி நான்கானதும் மெல்ல ஏரிக்கரையிலிருந்து வெளிவந்து தமிழ்ச்சங்கத்துள் நுழைந்தேன். மேலே மூன்றாம் மாடியின் நூலகம் திறக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன, இரண்டொருவர் ஏற்கனவே வந்து விட்டிருந்தனர். பின்னர் செந்திலும் ஸ்ரீனியும் வந்து சேர்ந்தனர், ஒருங்கிணைப்பாளர் தாமு அனைவரையும் வரவேற்று பின் சுஜாதா நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தார். அறிமுகம் முடிந்த பின்னர் கதை பற்றிய விவாதம் தொடங்கியது. நேற்றைய தலைப்பில் மூன்று சிறுகதைகள் வாமணிகண்டனின் ஒன்று, பின்னர் லைலாவின் ஒரு கதை, பின்னர் அபிலாஷ் சந்திரனின் ஒரு கதை.விவாதித்த அனைவரும் அவைக்கூச்சமின்றி பேசினர், எனக்கு மகிழ்ச்சி. முன் பின் அறியதோர் முன்னில் இத்தனை விவாதப்பொருளை எடுத்துக்கொண்டு பேசுவது என்பது என்னைப்பொருத்தவரை கொஞ்சம் கடினமான விஷயந்தான். புது மாப்பிள்ளை ஹிந்து விநோதும்,மற்றும் நணபர் திருஞானம் திரு’வும் என் பின்னில் அமர்ந்து அமைதியாக விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். 



கதை எழுதிய ஆசிரியர் என்ன சொல்லவருகிறார் எதைக்குறிப்பிட்டு அதன் உள்நோக்கம் என்ன, அக்கதை வாசிப்பவனின் மனதை எங்கனம் பாதிக்கும் என்றெல்லாம் பல வித கோணங்களில் ஒன்றினை அலசுவது என்பது மிகச்சிக்கலான விஷயம். பேசுவோர் கதையை ஒன்றுக்குப்பலமுறை வாசித்து பொருளுணர்ந்து விட்டே மேடையேறினர் என்பது கண்கூடு. அலுவலகத்தில் கூட்டங்களில் பேசுவது என்பது எளிது ஏனெனில் அனைவரும் திரட்டப்பட்ட ஆட்களல்ல, ஒரே தொழில் நுட்பத்தில் தம்மை பிணைத்துக்கொண்டு சற்றேறக்குறைய ஒரே விதமான புரிதலோடு, சமவிகிதத்திலான அறிவோடும் அமர்ந்திருப்பர். (Targeted Audience)  இங்கோ அங்கனமில்லை. பலதரப்பட்ட பார்வையாளர்கள், என்னைப்போன்ற கொஞ்சமேனும் எழுதுபவர்கள், பிரபல எழுத்தாளர்கள் தீவிர வாசகர்கள் என பலவகை, அனைவரையும் ஒருங்கே அமரவைத்து ஒரு கதைப் பொருளை விவாதிப்பதென்பது கடினமான விடயம் தான்.மேடையிலிருந்து விவாதித்த மூன்று பேருமே தாம் உணர்ந்த விஷயங்களை வெகுவாகவே பேசி கைதட்டல் வாங்கினர். 

சிறிது நேரங்கழித்தே அபிலாஷ் சந்திரன் வருகை புரிந்தார். அவரை நான் நேரில் பார்ப்பது இதுவே முதன்முறை. அவரின் திருட்டுச்சாவி என் வலைப்பூ வாசிப்புப் பட்டியலில் ஆண்டுக்கணக்கில் பூக்களை கொண்டு வந்து கொண்டேயிருக்கும் அதன் வாயிலாக அவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். தமது சிறுகதையை விவாதப் பொருளாக்கியதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. அக்கதை உருவான விதம் பற்றி பேசினார். ’வைக்கம் முகம்மது பஷீரின்’ ஒரு சிறுகதையை வாசித்ததாகவும் அதன் தாக்கத்தில் இந்த மர்மக்கதையை எழுதியதாகவும் கூறினார். பேய் வசிக்கும் வீட்டில் குடியேறும் ஒரு எழுத்தாள செருப்பக்காரனின் (இளைஞனின்) கதை. கிணற்றில் தன் கணவனாலேயே தள்ளிக் கொல்லப்பட்ட ஒரு இளம்பெண் பேயாக உலவுவதாக கதையின் போக்கு. இதை உணர்ந்து தம்மை ஒப்புக்கொடுத்து அதை விரட்ட எந்த முயற்சியும் எடுக்காது கூடவே வசிக்கவைக்கும் இளைஞனை அதற்கு பிடித்துப் போய்விடுகிறது. இப்படிப்பட்ட பேயுலவும் வீடு என்பதால் சல்லிசாக வாடகைக்கு கொடுக்கப்பட்டது என்பதை அறிந்து மலைக்கிறான் செருப்பக்காரன்.



ஒரு நாள் மழை அடித்துப்பெய்கிறது.வழக்கம்போல வீடு இருளில் மூழ்குகிறது. ஒரு சிறு மெழுகு திரியை ஏற்றிவைத்துவிட்டு ஏதேனும் உண்ண வாங்கி வர வெளியேறுகிறான் இளைஞன். அந்த நேரம் அவனின் அறைக்குள் புகும் அந்த இளம்பெண்ணின் பேய் அவன் எழுதி வைத்திருக்கும் கதைகளை வாசிக்கும் வண்ணம் அறை முழுக்க பரப்பி வைக்கிறது. திரும்பி வந்து பார்ப்பவனுக்கு அதிர்ச்சி. மெழுகு திரி இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. 

இந்தக்கதையை மையமாக வைத்து அவர் எழுதிய சிறுகதையை ஒரு இளம்பெண் கைகளை ஆட்டியும்,முகத்தில் பெரும் மகிழ்ச்சிப் பெருக்கோடும் விவாதித்தார் அபிலாஷ் அமைதியுடன் அமர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தார்.காத்துக்கிடந்த வயிற்றுக்கும் சிறிது தேநீர் வழங்கப்பட்டது கூடவே சில பிஸ்கோத்துகளும். கூட்டத்திலிருந்தும் பல கேள்விகள் கிளம்பின.

லைலாவின் சிறுகதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, உண்மையைச் சொல்லவேணுமென்றால் நான் விவாதத்திற்கென எடுத்துக்கொள்ளப்பட்ட  ஒரு சிறுகதையைக்கூட வாசிக்கவில்லை கூட்டத்திற்கு சென்று வெறுமனே அமர்ந்து கொண்டிருந்தேன். அக்கதை பாலியல் வன்புணர்வைப்பற்றின ஒரு பெண்ணின் பார்வையில் அமைந்த சிறுகதை. ஒவ்வொருவரும் தமக்கு முன்னாளில் நேர்ந்த வன்கொடுமையை பற்றி விவாதித்தனர். கீர்த்திகா என்னிடம் அவரின் மொபைலைக்கொடுத்து இப்ப வாசிங்க, வாசிச்சிட்டு போய் பேசுங்க என்றார், என்ன இது விளையாட்டு இப்ப இயலாது என்று மழுப்பி வைத்தேன். பெண்ணை போகப்பொருளாகவே பார்த்துப்பழகிய ஆண் வர்க்கத்தின் மன விகாரங்களை எடுத்துச்சொல்லி அதை அறவே களைய முற்படும் விவாதமாக அரங்கேறியது. பேருந்தில் பயணிக்க வேணுமெனில் ஒரு சிறிய ஊசியைக்கூடவே கொண்டு போகும் சிறுபெண்களின் உணர்வைப்பற்றி கீர்த்திகா பேசினார். முழுக்க நேரலை விவாதமாகவே கதை கதைக்கப்பட்டது.

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தம் கதை தம் முன்னால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு  காரசாரமாக விவாதிக்கப்படும் போது உண்டாகும் மகிழ்ச்சி ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயின் மனநிலை.

முடிவில் தாமு கூட்டங்களை நடத்த/ஒருங்கிணைக்க தன்னார்வப் பணியாளர்கள் வேணுமென வேண்டுகோள் விடுத்தார். கூட்டம் கலைந்தது.அடுத்த வாரத்திற்கென கதைத்தெரிவுகள் பற்றிய பேச்சோடு.



கலைய முற்பட்ட கூட்டத்தில் அபிலாஷிடன் பேசினேன். அவர் பெங்களூருக்கு வந்தது, பின்னர் அதன் குளுமையில் எழுதவியலாமற் போனது பற்றி பேசினேன். ‘வெம்மை’யில்லாததால் எழுத இயலவில்லை எனக்குறைப்பட்டுக்கொண்டிருந்தார் தமது முகநூற்பதிவில் முன்னாளில். இப்போது எப்படி எனக்கேட்டேன், இல்லை இந்தக்குளுமை இன்னமும் நேரங்கழித்தும் எழுத உதவுகிறது சென்னையில் எப்போதும் வியர்த்து களைத்துப்போகும் இங்கு அங்கனமில்லை. என்று மகிழ்வுடன் பேசினார். அப்ப இங்கேயே இருந்து விடுங்கள் என்றேன். சிரித்துக்கொண்டார். பின்னர் எனது செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டார்.அவரின் கதையை கைகளை ஆட்டி ஆட்டி பேசிய இளம்பெண் , உங்க கல்லூரியில் கரெஸ்பாண்டென்ஸில் இந்தக்கோர்ஸ் இருக்குமா என்றவாறே அப்வரைப்பின்தொடர்ந்துகொண்டேயிருந்தார்.


இருப்பினும் கதைத்தெரிவுகள் இன்னமும் நேர்த்தியானதாக எடுத்துக்கொள்ளப்பட வேணும் என்பது எனது உணர்வாக இருந்தது. ஆழமான உட்பொருளுள்ள கதைகளை எடுத்து விவாதித்தால் இன்னமும் சிறக்கும் என்பது என் உணர்வு. பார்க்கலாம் இனி வரும் கூட்டங்களில் அது நிகழும் என்ற எதிர்பார்ப்புடன்….


Saturday, July 21, 2018

தூரமாய் - பேரன்பு





விஜய் ஏசுதாஸ் மற்றும் யுவன். தெளிந்த நீரோடை. சலசலத்து செல்லும் கூழாங்கற்கள் போல கிட்டாரின் இழைப்பு வரை வெளித்தெரிகிறது. பல்லவிக்கும் சரணத்துக்கும் ராக வேறுபாடு இல்லை அதுதான் நீரோடை. எங்கும் மாறாது தானாக வழி கொண்டோடும் அது. சரணங்களில் அங்கங்கு எதிரொலி கொடுத்து அழகு கூட்டியிருக்கிறார் யுவன். விஜய் ஏசுதாஸின் குரலில் தந்தையின் குழைவு அங்கனமே தொடர்கிறது. திசைகளை நீ மறந்துவிடு, பயணங்களை தொடர்ந்து விடு. மிகுந்த வியர்வையில் எங்கிருந்தோ வந்த குளிர் தென்றல் வீசுவது போன்ற இசையமைப்பு. யுவன் அவர் இடத்தில் எப்போதும் இருந்து கொண்டுதானிருக்கிறார்.

எத்தனை தான் கிழஞ்சிங்கம் வைரமுத்து எழுதியிருந்த போதும், ராம் மற்றும் யுவனின் நாடித்துடிப்பு கண்டு வரிகளை அள்ளிக்கொடுக்கும் நாமுஇல்லாதது பெரும் குறை. தேற்றும் பாடல் போல,எல்லாம் முடிந்தது என வீழ்ந்து கிடக்கையில், இன்னமும் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமா என கேட்பது போல அமைந்திருக்கிறது பாடல்.

தண்ணீரில் வாழும் மீனுக்கு ஏது குளிர் காலமே”, “சலவை செய்த பூங்காற்று”, “குழலோடு போன சிறுகாற்று இசையாக மாறி வெளியேறும்அத்தனையும் வைரமுத்துவின் அடித்து ஓய்ந்துபோன துருப்பிடித்த பட்டறையின் வரிகள். ஐயா இப்படியெல்லாமா இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறீர்? அத்தனை பாடல்களிலும் உயிர் வரிகள் இல்லாது இட்டு நிரப்பியவற்றவையே காணக்கிடைக்கிறது.
 
பாடலின் தொடக்கம் ஏகாந்த உணர்வைத்தர அதையே தொடர்ந்தும் இழைத்து பாடல் முடிவு வரை அதே உணர்வில் வைத்திருக்கிறது யுவனின் இசை. பச்சைப்பசேலென எழுந்து நிற்கும் ராமின் கற்பனையும் அதில் மழை பொழியும் யுவனின் இசையும், வைரமுத்துவின் வரிகள் மட்டுமே காய்ந்து நிற்கிறது. இதையே நாள்பூராவும் ஓடவிட்டுக்கொண்டிருக்கலாம் இசை மட்டுமே போதும் என உணர்வு மேலோங்குகிறது. மொழியற்ற பூமிக்கு எதற்கு வரிகள் ?! இசை மட்டுமே போதுமே?!

.