Saturday, July 13, 2024

இந்தியன் - 2

 Indian 2 Movie Review and Release Live ...

இங்க பெங்களூரில் ‘நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு சித்ரகலா பரிஷத் வாளாகத்திலிருக்கும் ‘ காந்தி பவன்’ல ‘ராஜினி திரகமன’வின் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது , அவரின் தங்கை ராஜினியாக அபிநயித்திருந்தார் என ஞாபகம்.’மெஸ்ஸைய்யா வருவார், அவர் வந்து எல்லாத்தையும் காப்பாத்துவார்னு காத்துக்கொண்டு இருக்கிறார்கள் ஈழத்தவர்கள் என அந்த ஆவணப்பட முடிவில் பேசிய படத்தின் ஆக்கத்தில் பங்கேற்றிருந்த ஒருவர் இந்தக்கருத்தை தெரிவித்தார். 
 
அது மாதிரி இந்தியன் வருவார் எல்லாக் குற்றங்களையும் களைவார் என இல்லாது வீட்டில் நடக்கும் குற்றங்களைக் கண்டறிந்து தாமாகக் களைந்தாலே நாடு உருப்படும் என உரைக்கும்படி சொல்கிறது படம். இத்தனை ரியாலிட்டியை நம்மால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள இயலாது. பாய்ஸ் படத்துக்கும் இதே போன்றே வரவேற்பு கிடைத்தது.
 
சின்னப்பிள்ளையா இருக்கும்போது தப்பு செய்யாத, நேர்மை தவறக்கூடாது திருடாதேன்னு நீங்க தானே சொல்லிக்குடுத்தீங்க அப்பா ?வளர்ந்தப்புறம் இதெல்லாம் செஞ்சாத்தான் வாழ முடியும்னு சொல்றீங்க?, என்பவர் பின்னர் அம்மாவைப்பார்த்து நீ போட்ருக்கிற தங்கத்துல பாதி வேற ஒருத்தர் உழைப்பில வந்ததுன்னு சொல்லக் கேட்டதும் அந்த அம்மா குலுங்கி அழுகிறார். அவமானம் தாங்காமல் தன்னையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு கூனிக்குறுகிப்போகிறார். பின்னரும் சித்தார்த்தை அன்னையின் பிணத்தைப் பார்க்கக்கூட விடாமல் உறவினர் அனைவரும் பிடித்து தள்ளி , கொள்ளி போலும் வைக்க லாயக்கில்லாதவன் என களேபரம் செய்யவைக்கும் காட்சிகள். எனக்கு இந்த முழு சீரிஸ் காட்சிகளும் ‘நம்மவர்’ படத்தில் நாகேஷின் காட்சிகளை ஒத்திருந்தன. அத்தனையும் நெகிழ வைப்பவை.
 
ரஹ்மான் பாட்டை நான் ஐட்யூன்ஸ்ல டவுன்லோட் பண்ணிக்கிறேன், இப்டி திருடித்தான் என் கல்யாணத்துக்கு கச்சேரி வெக்கணும்னு அவசியமில்லை. உன் மகன் எழுதிக்குடுத்த மருந்த நீ வாங்கி சாப்டுவியா?, இல்ல உன் மகன் உனக்கு ஆப்பரேஷன் பண்றான்னா நீ ஒத்துக்குவியா ? எல்லாம் குத்தும் வசனங்கள் தான். யாரோ சுஜாதா இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டனர். அவரில்லாவிடினும் இன்னும் எழுத ஆட்கள் உண்டு சாரே.
 
தனக்குத்தனக்கு என வரும்போது மட்டும் தான் அத்தனை பேருக்கும் உரைக்கிறது. உன்னால எல்லோரும் என்னைய டெரெரிஸ்ட் ரேஞ்சுக்கு பேசுறாங்க,உன்னால தான் எல்லாம் போச்சுன்னு ஒவ்வொருவரும் கமலைப்பழிக்கும் காட்சிகள் அத்தனையும் ரியல். எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் வாய்க்கும் அதே பிரச்னை தான். எனினும் இங்கு அழுத்தம் அதிகம். எல்லாருக்கும் நல்லவனா யாராலும் இருக்க முடியாது எல்லா சமயத்திலும். அதான். ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன், இன்னும் எத்தனை எத்தனை மேன்கள் வந்த போதிலும் எத்தனை தான் நல்லது செய்த போதிலும் இதே போன்ற இழிப்பேச்சுக்களுக்கு ஆளாகத்தான் வேண்டும்.
 
பல காட்சிகளில் கமல் அற்புதமாக நடிக்கிறார். அள்ளிக்கொடுக்கிறார் உலகநாயகன். ஒரு குறையும் இல்லை. எனினும் முகத்தில் போட்டிருக்கும் அந்த செயற்கையான மேக்கப் எல்லா உணர்ச்சிகளையும் கிஞ்சித்தும் வெளித்தெரியாத படி மறைத்தே விடுகிறது. அடச்ச. சித்தார்த் ’என்னை டெரெரிஸ்ட் ரேஞ்சுக்கு பேசுறாங்க’ எனும் போது, உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் ஆஹா. என்ன சோகம் , வெறும் கண்களாலும், உடல் மொழியாலும் மட்டுமே அந்தக்காட்சிக்கு உயிர் கொடுக்கிறார் கமல். அதே இடத்தில் இயற்கையான முகம் மட்டும் இருந்திருந்தால் ...? மெல் கிப்ஸன் கண்களாலேயே பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார், எ.கா.வுக்கு Signs – Manoj Night Shyamalan படத்தில். இருப்பினும் இயல்பு முகம் இல்லையெனில் கண்கள் எத்தனைதான் காட்டினும் பயனிலை.
 
தேவையற்ற நீளமான சண்டைக்காட்சி எதுவெனில் , அந்த வின்செண்ட் கூல் ட்ரிங்ஸ் தயாரிக்குமிடத்தில் நடப்பதுதான். கிட்டத்தட்ட பாபி சிம்ஹா விரட்டிக் கொண்டு வந்த பரபரப்பான காட்சிகளை, தொடரை அப்படியே நிறுத்திப் போட்டுவிட்டு ஸ்லாவத்தாக எல்லாத்தையும் அடித்து முடித்து மீண்டும் அந்த ஒற்றைச்சக்கர சைக்கிளில் பயணிக்கிறார் கமல். முழு வேகத்தடையான சண்டைக்காட்சி அது. . 
 
தம்பி அநிருத் என்னதான் செஞ்சிருக்கார்னு அவருக்கே தெரியுமான்னு சந்தேகம். இவ்வளவுக்கும் இதே கமலின் ‘விக்ரம்’ படத்தில் பட்டையைக் கிளப்பிய சுனாமி இங்கே சிற்றலை போலும் இல்லை. இத்தனை அழுத்தத்தில் வேலை செய்து தான் ஆகவேணுமா என்ன?. மூன்றாம் பாகத்துக்கும் தம்பி தான் இசை போல. அந்தக்குதிரைப்பாடல் இங்கே கொஞ்சம் ஒலிக்கிறது. ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பாடலோ இல்லை பின்னணி இசையோ ...உஹூம்.
 
இன்னிக்கும் பெரிய பெரிய தலைகளைக்கொண்ட பொம்மைகள் மற்றும் ஒரே மாதிரி ட்டீஷர்ட் போட்டுக் கிட்டு ஒரு பெரும் கும்பலே ஆடுதல், பிரம்மாண்டம் ங்கற பேர்ல செய்யும் அத்தனை ஜோடனைகளும் சலிப்புத்தான் தட்டுகிறது. புதிய உத்திகள் இல்லாதது சொய்வு. ஆர்க்கே லக்‌ஷ்மணின் ’காமன் மேன்’ கேரக்டர் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படியான புதுமை, மற்றதெல்லாம் பழைய புளிச்ச மாவுதான். நெடி தாங்கலை. வழக்கம்போல கதையின் நீரோட்டத்துக்கு ஒத்தே வராத காமெடிக்காட்சிகள் எப்போதும் ஷங்கர் படத்தில் காணலாம். அது இங்கே மிஸ்ஸிங். முழுக்க சீரியஸ் காட்சிகள் மட்டுமே. அந்த நான்கு பார்க்கிங் டாக்ஸ் தமக்குள் கலாய்த்துக் கொள்ளும் காட்சிகளில் கூட சிரிப்பு வரலை.
 
போர் என்றால் தமிழ்நாட்டு காமன்மேனுக்கு என்னா ^யிருன்னே தெரியாது. பாகிஸ்தான் பாகப்பிரிவினை கூட துலக்கமா தெரியாது அதன் பின் நடந்த கலவரங்கள் எல்லாம் வெறும் செய்திகள் மட்டுமே. வீட்டுக் கதவைத்தட்டும் போது மட்டுந்தான் போரின் உண்மை முகம் தெரியும். 
 
I'm literally waiting for Indian3. Indeed. !

No comments:

Post a Comment