Saturday, November 14, 2020

பறவை புட்டிகள்

 



இந்த ஆண்டு தீபாவளிக்கு துணிமணி எதுவும் எடுக்கவில்லை. எடுத்தாலும் எங்க போட்றது? இருக்கிற ரெண்டு வேட்டிய மாத்தி மாத்தி கட்டிக்கிட்டு வீட்டுக்குள்ளயே உட்கார்ந்து வேலை பாத்துக்கிட்டு இரூக்கிறேன். வாங்கின ஜீன்ஸ்/டீ ஷர்ட்டெல்லாம் ஹேங்கர்ல அழகாத்தொங்குது.. அதான் இந்தாண்டு இந்த ரெண்டு ”பறவை புட்டிகள்” வாங்கினேன். அமெஸான்ல. இதெல்லாம் வெளிநாட்டில் மட்டுந்தான் கிடைக்குமாயிருக்கும்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.

சும்மா தேடிப்பார்க்கலாமென நினைத்த போது கிடைத்து ஆணை கொடுத்தேன் மிகச்சரியாக இந்த தீபாவளியன்று இன்று கைக்கு கிடைத்தது. வீட்டில் மூன்று உப்பரிகைகள் சிறிதும் பெரிதுமாக. இருப்பினும் அத்தனையும் க்ரில் வைத்து மூடி இருக்கிறது, காககையும் உள்ளுக்குள் வர் அஞ்சும்...மேலும் உள்ளே கூட வர வழியில்லை. செடி கொடி படர மட்டுமே பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. நானும் எத்தனையோ செய்து பார்த்தேன். காகிதத்தட்டுகளை வைத்து, பின்னர் பிரியாணி வாங்கி வந்த பிளாஸ்டிக் பெட்டிகளை க்ரில் மேல் வைத்து பறவைகளுக்கு உணவளிக்கலாமென. எல்லாம் ஒரு காற்றில் அடித்துக் கொண்டு போய் விடும். அத்தனையும் மரங்களடர்ந்த சோலை எல்லாம் வீட்டின் முற்றத்தில் இருக்கும் நந்தினி பால்கழகத்தின் கிருபை.

இதில் இரண்டு பறவை புட்டிகளுக்கும் கொக்கி கொடுத்திருக்கிறான். அதனால் க்ரில்லில் தொங்க விட முடியும். மேல் மூடியைக்கழற்றி தானியத்தை நிறைத்து பின்னர் மூடி தொங்க விடவேண்டியது தான், இருப்பினும் பயம் எங்கு காற்றில் விழுந்து விடுமோவென. இந்த இரண்டு புட்டிகளிலும் தானியம் மட்டுமே இடவியலும். நீரளிக்க ப்ளாஸ்டிக் பெட்டிகளை வைத்துக்கொள்ளலாமென்று இருக்கிறேன்.

பறவைகளுக்கு என்னென்ன உணவளிக்கலாமென இணையம் முழுக்க தேடி எடுத்திருக்கிறேன். நானுண்ணும் அதே சிறு தானியங்களை கொடுக்கலாமென போட்டிருக்கிறார்கள். ஆதலால் பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்பலாம். செல்லம்மா அன்றைய பகல் பொழுது உணவிற்கென அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி வைத்திருந்த அரிசியை குருவிகளுக்கு இரைப்பான் பாரதி. இங்கே இவை எதோ என்னாலியன்றது.


 பறவைகளைக் கூண்டில் அடைத்து அவை கிறீச்சிடுவதையும் , உணவுக்கு ஏங்குவதையும் காண ஏனோ மனம் ஒப்பவில்லை. அருகிலேயே கூண்டு விற்கும் கடை இருந்தது. அந்த வழி போகும் போதெல்லாம் பார்ப்பேன். திறந்து விட்டு விடலாமெனத்தோன்றும். கொரோனா காலத்தில் அதுவும் அடைபட்டு விட்டது.

வீட்டைச் சுற்றி மைனாக்கள் இஷ்டம்போலுண்டு. புறாக்கள் எப்போதும் வீட்டின் முட்டுச் சந்துகளில் குலவித்திரியும். கழுகுகளுக்கு பஞ்சமில்லை. எப்போதும் கதவைத்திறந்தால் கருடபகவானின் தரிசனம் தான் தினமும். காக்கைகள் மதிய வேளையில் கிளைகளிலமர்ந்து கரைந்து கொண்டேயிருக்கும்.

காடெங்கும் சுற்றித்திரிந்து விட்டு வரும் பறவைகள் விருப்பிருப்பின் நானளிக்கும் உணவையும் உண்ணட்டும். அத்தனை பெரிய ஆகாயம் விரிந்து கிடக்கிறது. ஊரெங்கும் கிடைக்கும் உணவு. காடெங்கும் கிட்டும் கனிகள்,. அவற்றோடு இந்தச்சின்னப்பயலின் சிறுதானியமும் உணவாகக் கூடும் என்ற ஆசை தான், வேறென்ன?

நீங்களளிக்கும் உணவை உண்ண பறவைகள் வருவதற்கு ஒரு வாரம் கூட ஆகலாமென போட்டிருக்கின்றனர். இங்கு கிடைக்கிறது என அறிய அவை நேரம் எடுத்துக்கொள்ளுமாம். ஹ்ம்... காத்திருப்பது மட்டும்தான் இப்போதைக்கு என்னாலியலும்.

#பறவைபுட்டிகள்

 




No comments:

Post a Comment