Monday, July 10, 2017

'தலை விடுதலை'


'தலை விடுதலை' பெர்ஃபெக்ட் ராக் தம்பி அநிருத்திடமிருந்து. mettalicaவை hard rock cafe’யில் கேட்டது போல அத்தனை ஒரிஜினல். வெள்ளமெனப் பாயும் அற்புத ராக். என்ன ஆச்சரியம் இந்த முறை ராப்'போ ஹிப் ஹாப்'போ கலக்கவில்லை. சிக்கரி கலக்காத அதி உத்தம காப்பி. குளம்பி. தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இப்படிப்பட்ட அதி தூய ராக் இசை அத்தனை பரிச்சயமில்லை. கேட்பதில்லை. இதே பிரச்னையில் விஐபி' யில் அந்தப்பாட்டு ராக்'கில் ஆரம்பித்த போதும் பின்னர் ராப் கலந்து பிளாக் காப்பியில் கொஞ்சம் பாலைக்கலந்து காப்பியாக கொடுத்தார். ‘வேலையில்லாப்பட்டதாரீஈஈஈ' அந்தப்பாடல். தமிழ் ரசிகர்கள் கேட்பார்களோ இல்லையோ என்ற சிறிய ஐயத்தில் எப்போதுமான பாணியில் அந்தக்கலவை நிகழ்ந்தது. அதே பாணியைத்தான் சந்தோஷ் நாராயணனும் செய்திருந்தார் 'நெருப்புடா'வில்.

ராக்'கிற்கு நம்முலகில் இன்னமும் ரசிகர்கள் உருவாகவில்லை என்பதே வருத்தம். இங்கு அதன் இலக்கணம் கிஞ்சித்தும் பிறழாமல் அடிதடியான ட்ரம்ஸ் பெர்குஷன்ஸ் மற்றும் மிக அதிர்வெண் அலைகள் கொண்ட எலெக்ட்ரிக் கிட்டார்கள் பொழிந்து நனைக்கவில்லை. தரைமட்டமாக ஆக்குகிறது. கரைந்து ஓடியே ஆகவேண்டும். மனதளவில் இன்னமும் தயாராகத தமிழ் கூறும் நல்லுலகம் இதை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்று இன்னமும் விளங்கவில்லை.

அலறும் குரல்கள், இன்னதான் சொல்கிறாரென்று சொற்களைக் கேட்கவிடாத கிட்டாரின் அரற்றல்கள், பின்னில் அதி உயர் டெசிபல்களைக்கொண்டு செவிப்பறை கிழியவைக்கும் இசை. இவையெல்லாம் இலக்கணம். அதே தான்! ராக்! இருப்பினும் ராக் இசைக்கலைஞர்களை மிஞ்சும் கிட்டார் கார்டுகள் எடுக்க இன்னமும் யாரும் பிறக்கவில்லை.

Never Ever Give up என்ற ஒவ்வொர் சொல்லுக்கும் இடையில் ஒலிக்கும் அந்த இசை,சுதி ஏற்றி அடுத்த என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ,அட்ரினலை பம்ப் செய்து வெடிக்க வைக்கும். ஒவ்வொரு சொல்லாக பின்னில் கிட்டாரும் அதையே பாடுகிறது. அலை கிளம்பி சிதறி அடித்து சுனாமி முடிவுற்றது போல உணர்வு. முன்னில் வெளிவந்த எந்தப் பாடலையும் நினைவுறுத்தாத பாடல் இது. அத்தனையும் ஒரிஜினல். அடித்துப்பெய்த மழை சட்டென ஓய்ந்து விட்டாற்போல ஒரு உணர்வு. இத்தனை ஒரிஜினல் ராக்' இசையை நம்ம சனம் ஏற்றுக்கொள்ளுமா ?! ஹ்ம்… 0241 லிருந்து 0253 வரை சொர்க்கம். இதுதான் பேஸ்லைன் பாடலுக்கு. இடையிடையே ஒலிக்கும் அந்த 'ஹா' ஆஹா!!

ஷரிஷ் ஸ்வாமிநாதன் இடையியே பாடினாலும் அநிருத்தின் குரலே அத்தனை இரைச்சல்களையும் கடந்து ஒலிக்கிறது. இங்கும் அருண்ராஜ் (நெருப்புடா) தவிர்க்கப்பட்டு இருப்பது நினைவு கூறத்தக்கது.
 
மென்மையான பாடல்கள் எப்போதும் வெல்லும். இந்து மாதிரியான தமிழ் நெஞ்சங்களின் மொழியில் சொல்லுவதென்றால் இரைச்சல்கள் எப்போதாவது வெல்லும். இப்போது வெல்லும் இந்தப்பாடல்.

இம்முறை யூட்யூபில் வெளியாகாது சாவனில் வெளியாகி இருக்கிறது இந்த டீசர்! 


.

No comments:

Post a Comment