Sunday, July 2, 2017

என்னுடன் இரு !

Stay !

இப்பல்லாம் ஹம்மிங் , ஹார்மனியில் ஆரம்பிக்கும் பாடல்களே இல்லாது போயிற்று, ராசையாவின் காலத்தோட போயிற்று அந்த அற்புதங்களெல்லாம். கிட்டதட்ட ஏகாந்தங்களிலெல்லாம் இந்த ஹம்மிங் வந்து கொல்லும். எகாவாக 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' பாடலைச்சொல்லலாம் முள்ளும் மலருமிலிருந்து. ஆஹா..

இந்தப்பாடலும் ஹம்மிங்கிலேயே ஆரம்பிக்கிறது.இங்கு 'தங்கு என்னுடன்' என்கிறாள். அதே தொடராதா என்ற கேவல் நம்முள் எழும். முதல் 29 செகண்ட்களுக்கு வேறொரு ராகம். பின்னர் மெலியதான பாப்' இசையில் தொடங்கி பாடல் முழுக்க பயணிக்கிறது. தாளம் கணிக்க முடியாது வேறேங்கெங்கோ பயணித்தபோதும் ஒன்றிப்போக முடிகிறது. பிறகு புதிதாக ஆங்கிலம் பேசுபவர்களிடம் பேசுவது போல ஒவ்வொரு சொல்லாக ராப்'பில் (ஹிப் ஹாப் ஸ்டைல் கூட இது தான்) பாடுகிறார். கிட்டத்தட்ட சிம்ஃபொனி. ஒத்திசைவான இசையமைப்புகளில்லாத போதும் இருத்திவைத்து கேட்கவைக்கும் இசைக்கோவைகள்.

இது போல இந்த ராசைய்யாவின் பாடலில் எனக்கு இன்றளவும் சம்மதேமேயில்லாத சரணம் என்றால் 'நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று' என்ற பாடல், பல்லவி ஒரு ராகம் , சரணங்கள் இன்னொரு ராகம். இரண்டுக்கும் சம்பந்தமேயில்லாத தத்தமது தாளங்களில் பயணிப்பவை. இரண்டையும் இடையிசை கொண்டு இணைத்து இன்றளவும் கேட்க வைத்திருப்பார். ஒரே ராகத்தை வைத்துக்கொண்டு அதையே சோகத்துக்கும் ,மகிழ்வுக்குமாக இசைப்பது போல. தாளத்தை துரிதப்படுத்தினால் மகிழ்ச்சி, கீழிறக்கி மெதுவாக , பாடலில் குழையவிட்டால் சோகம் என கேட்பவரை மயக்கவைக்கும் அற்புதங்கள் நிகழும். கடவுள் தான் அற்புதங்கள் நிகழ்த்தவேணும் என்பதில்லை. இத்தகைய தருணங்களிலும் அது நிகழும். இது இடமாறு தோற்றப்பிழை அல்ல. தோற்ற மயக்கங்கள்.

ரஹ்மானும் இதுபோல பல செய்வார். மன்னிப்பாயா பாடலில் மிகத்தெளிவாக தெரியக்கூடியது அந்த பல ஏற்ற இறக்கங்கள் ஒரு வரி கொண்டு , பல ராகங்களில் ஒரு சொல்லை பாடவைப்பார். ஐந்து விதமான மன்னிப்பாயா, அடப்பாவி , இப்டீல்லாம் கேட்டா எந்தப்பய தான் மன்னிக்க மாட்டான். அப்டியும் அவன் மன்னிக்கலைன்னா அது மனுஷப்பிறவியே இல்லை.! ‘ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன்; என்ற வரிகளை முதலில் கொஞ்சம் குழைவாகவும் , பின்னர் ஒரு நாள் சிரித்தேன் ஒரு நாள் வெறுத்தேன் , சரியா நான் இவ்வளவு கேக்றேன்ல, ஏன் மன்னிக்கமாட்டாய் என்ற கோபத்தில் கொஞ்சம் வேகம் எடுத்து பாடுவார் ஷ்ரேயா. இதே டெக்னிக்கில் தான் அத்தனை பாடல் போட்டிகளிலும் பாடச்சொல்லி பரீட்சை செய்வர் புதுப்பாடகர்களை.

இங்கே ஸ்டே'யில் அதையே பயன்படுத்தியிருக்கிறார் குளித்துவிட்டு சரியாக தலை துவட்டாமல் அப்படியே வந்து பாடும் அலஸ்ஸீயா ! இங்கு பாடலில் Clock is Ticking’ எனும்போதெல்லாம் பின்னில் கடிகார ஒலி.ராசைய்யா இப்போது 'நீ தானே பொன்வசந்தம்'ல் சற்றுமுன்பு பார்த்த' பாடலில் அத்தனையும் காலத்தின் அடிப்படையில் அமர்ந்திருப்பதால் பாடல் முழுக்கவே பின்னில் தாளம் கடிகார டிக் ஒலி தான். கூர்ந்து கவனிக்கலாம். காலத்தை கணிக்க கடிகாரம் தவிர மேறு மானி ஏதும் கிடையாதா ?! ஹ்ம்..

Make it on my own, but I don't wanna grow up
We can stay forever young

எப்போதும் இளமையில் இருக்கலாம் , இருந்துவிட இயலுமா, மனதிற்கு மட்டும் கடிகாரங்கள் இல்லை எப்போதும். அதே காலத்தில் உறைந்து போய்விடுகிறது. All you have to do is stay a minute , ஒண்ணும் வேணாம் எங்கூட இருந்தா போதும். ஆயிரம் காரணங்கள் சொல்லமுடியும் என்னுடன் நீ இருக்கவேணும் என்பதற்கு. என்ன செய்வது அதான் வாய்ப்பதில்லை.!

01:05ல் தொட்டவுடன் நொறுங்கும் கண்ணாடி மனது இப்படித்தான் சில கணங்களுக்காக வாழ்நாள் பூராவும் காத்துக்கிடக்கும் ஜீவன்கள். 02:53ல் காற்றலையில் கரையும் குரல் பாடலை ஏகாந்தத்தில் அனுபவிக்க விடும். அருகில் இருந்து கேட்கும் பாடலைவிட காற்றில் கலந்து பயணித்து தாமாக வருவது அதிகம் அலைக்கழிக்கும். எதிர்பாராமல் வந்து விழுகிறதல்லவா!

பல தருணங்கள் இப்படி ஒரு முழு வாழ்வையும் மூன்று நிமிடத்தில் முடித்துவிடுகிறார். இப்படி ஒரு மூன்று நிமிடத்தில் அத்தனையும் அனுபவித்து முடித்துவிடும் வாழ்வு கிடைக்குமா?! கூட்டிக்கழித்துப்பார்த்தால் வாழும் அறுபதாண்டுகளில் மிஞ்சக்கூடியது இப்படியான மூன்று நான்கு நிமிடங்கள் மட்டுமே.

உணவு மேசையில் இருக்கும் உப்பை/சர்க்கரையைக்கொட்டி அதில் பேரெழுதி விளையாடுவது பின்னர் மேசையில் நீர்க்கோலம் இடுவது என்பதெல்லாம் வேறு எதையோ யோசித்துக் கொண்டு செய்யும் செயல்கள். இதெற்கெல்லாமாக என்னுடன் இரு Stay….!! 

.
 

No comments:

Post a Comment