Saturday, January 7, 2017

முன்பே வா என் அன்பே வா ...




ரஹ்மானின் முதல் பத்தாண்டுகள் என்றும் மறக்கவியலாது எனினும் பின்னில் அவரின் இனிமை குறைந்து பல வித உலக இசைக்கோவைகளை முயற்சி செய்யத்தொடங்கிய போது தமிழுக்கு அந்நியப்பட்டுப்போனார். இனியும் மீண்டு வருவார் என்ற எண்ணமே இல்லாது போனது எனக்கு. இருப்பினும் 2006-ல் அவரின் பிந்தைய பத்தாண்டில் வந்த இந்தப்பாடலை சொல்லலாம்.அவரின் இசை இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்று தமிழ்கூறும் நல்லுலகுக்கென இசைத்தது என்றே கூறுவேன். இந்த ராகம் ஒரு சோக இசைக்கென (Pathos) உண்டானது.அதை கதையையொட்டி பின்னில் வரப்போகும் பிரிவைச்சொல்லக்கூடியதாக இருக்கட்டும் என எண்ணி இசைத்திருக்கிறார் என்றே கூறுவேன். அத்தனை மகிழ்வெனில் பின்னில் துயரம்தான் என்ற மறுக்கவியலாத கூற்றை பறைசாற்றும் இந்தப்பாடல். நிறைய வடநாட்டு ஜோன்புரி, நம்ம ஊரு 'நடபைரவி'. கோபாலகிருஷ்ணபாரதியின் 'எப்ப வருவாரோ' கூட நடபைரவி தான் :) தெரிகிறது பல இடங்களில். 'ஆசை முகம் மறந்து போச்சே'ன்னு பாரதி கூட பாடீருக்கான் :)  சுசீலா பாடின 'சொல் சொல் என் உயிரே' இப்டீ பல எகா'க்களை சொல்லலாம் ஜோன்புரிக்கு.

இது தந்திக்கருவி கொண்டு இசைக்கும் அந்த முன்னிசை/முகப்பு இசை(Prelude)க்கெனவே தொடர்ந்தும் கேட்பதுண்டு.  00:35 வரை அந்த தந்தி கொண்டு இசைக்கும் முன்னிசை மனதைக்கரைக்கும். சந்த்தூர் என்ற இசைக்கருவியாகத்தானிருக்க வேணும். முன்பக்கம் வளைந்த இரண்டு இரும்புக்குச்சிகளை வைத்துக்கொண்டு ( ஆங்கில L போல இருக்குமவை) இரு கைகளிலும் பிடித்து மடியில் கிடத்தியிருக்கும் அந்தக்கருவியில் உள்ள கிடைமட்டமாக இறுக்கி இருபுறமும் கட்டப்பட்டிருக்கும் தந்திகளில் அடித்து ஒலியெழுப்ப வேணும். கொஞ்சம் இம்மி பிசகினும் நாரசமே ஒலிக்கும். முகப்பு ஒலி மட்டுமல்ல பாடல் முழுதும் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் இசைத்திருப்பார்.பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா என்ற கலைஞர் இக்கருவியை இசைப்பதற்கெனவே பிறந்தவர் போல கேட்பவர் அனைவரையும் பைத்தியமாக்கி விடுவார் நம்மை. காஷ்மீரத்தை சார்ந்த இசைக்கருவி இது. மிகவும் அரிதாகவே தமிழிசையில் இடம் பெறும் இது. இந்தக்கருவியை வாசிக்கப்பயில்தல் ஆகக் கொடுமையான பயிற்சியாகவே இருக்கும். பெரும்பாலும் String Instruments வாசிக்கக் கற்றுக்கொள்வதே கடினமான செயல் :)

இந்தப்பாடலுக்கு மெட்டமைத்ததற்குப்பின்னரே வரிகள் வாலி எழுதியிருப்பார் என நம்புகிறேன். சரளி கொண்டு நிரப்ப வேண்டிய இடங்களிலும் சொற்கள் கொண்டே நிரப்பியிருப்பார். முகப்பில் வரும் அந்த ரோஜாத் தோட்டம், கைகளை விரித்துக்கொண்டு பாடும் பூமிகா ஆஹா.. எல்லாம் சுகம்டா. ஊட்டி போயிருந்தப்போ ரோஸ் கார்டன்'ன்னு டிக்கெட்லாம் வாங்கிக்கிட்டு உள்ள விட்டார்கள். நான் இந்த ஞாபகத்துலயே போனா அங்க ஒரு செடீல ரெண்டு பூ மட்டுமே இருந்தது. ஹ்ம்.. சரி அதை விட்டுவிடலாம். 03:07ல் ஆரம்பிக்கும் அதே சந்த்தூர் ஆஹா. ரஹ்மான் எப்பவும் இசைக்கலைஞர்களை இன்ன ராகத்தில் இசையுங்கள் எனக்கூறிவிட்டு அவர் தம் போக்கில் இசைக்கவிட்டு (இப்ப ஒரு ராகம் முழுக்க வாசிக்க வேணுமெனில்  ஆலாபனை, சரளி, மெயின் கோர்ஸ், பக்கவாத்தியம் எல்லாம் வாசித்து அடங்க குறைந்தது 20-25 நிமிடங்கள் பிடிக்கும். அதை அப்படியே வாசிக்கவைத்து விட்டு ) பின்னர் தமக்கு தேவையான பாகங்களை மட்டுமே நறுக்கி எடுத்து தமது பாட்டில் செருகி வைப்பார் என்று அறிவேன். 'டூயட்' படத்தில் கதிரி கோபால்நாத்'தின் சாக்ஸஃபோன் இசையையும் அப்படியே செய்திருந்தார். அது போல இங்கும்.

ஷ்ரேயா கோஷல் , மற்றும் நரேஷ் பாடிய பாடல். நரெஷின் முதல் பாடல் என்றறிகிறேன்.பொருந்தும் குரல் இருவருக்கும். இதே ஜோடியை ராசைய்யாவும் பாடவைத்தார் பிறகு ( பிரகாஷ்ராஜின் ஒரு கிரிக்கெட் படத்தில் ஒரு பாடல் வரும் ). ஹார்மனியில் ராசைய்யாவை மிஞ்ச ஆளே கிடையாதுதான். பாரதிராஜாவின் வெள்ளுடை உடுத்திய தேவதைகள் சூழ்ந்து கலங்கடிப்பது ஹார்மனிக்குத்தான் :)  இருப்பினும் சிஷ்யர் இந்தப்பாட்டில் கத்துக்கொண்ட வித்தையை மொத்தமாக இறக்கித்தான் வைத்திருப்பார். :) 

நரேஷ் 'நீநீநீ மழையில் வாட' என்னும்போது பின்னில் ஒலிக்கும் அந்த தந்திக்கருவியின் இசை சிறு மழைத்துளிகளால் நம்மை நனைக்கும். 02:59 மற்றும் 04:22 ல் ஷ்ரேயாவின் அந்த  கரப்பான்பூச்சி சங்கதி கவனித்தேதீரணும் அனைவரும். இந்த கரப்பான் பூச்சி சங்கதி என்ற பதம் அனுராதா ஸ்ரீராம் தான் அடிக்கடி பயன்படுத்துவார். ரொம்ப கஷ்டம் அதோட , கரப்பான் பூச்சி நம்மையறியாமல் காலில் ஊறிச்செல்லும்போது படக்கென தட்டிவிடத்   தோன்றுமல்லவா..  அதான் கரப்பான்பூச்சி சங்கதி. இங்க ஷ்ரேயா அப்டியே வெண்ணையில் புதுக்கத்தி நழுவுவதுபோல நழுவிச்சென்றிருப்பார். கேளுங்களேன் :) இப்டீ நிறைய சிலாகித்துக்கொண்டே செல்லலாம். 'நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டில் குடி வைக்கலாமா ?' #முன்பேவாஎன்அன்பேவா

No comments:

Post a Comment