Saturday, January 28, 2017

காஃபி வித் ஏலியன்ஸ் - Arrival(2016)


ஓவியம்,ஒலி அல்லது இசை, பின்னர் மொழி. இதுதான் வரிசை. இந்த மொழியை மட்டும் பிடித்துக்கொண்டு நாம் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.  தமிழ் எழுத்துகளே முதலில் சித்திர எழுத்துகளாகத்தான் தொடங்கியது என்றும் காலப்போக்கில் அது பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு, அந்நிய படையெடுப்புகள், பிறமொழிக் கலப்பு,எழுத்து வடிவங்களில் மாற்றங்கள் என்று சிதைந்து இப்போது உள்ள இந்த வட்டெழுத்துகளில் வந்து நிற்கிறது. ஆயிரம் சொற்கள் கொண்டு ஒரு கானகத்தைப்பற்றி  எழுத அக்கானகத்திலுள்ள பதினாயிரம் மரங்களை வெட்டி காகிதம் உருவாக்கி பின்னர் எழுதுவதைக்காட்டிலும் வண்ணம் கொண்டு தீட்டி விட்டுச்சென்று விடமுடியும். சொற்களை விடவும் ஆழமாகப்பதியும்  ஒரு வயலினைக்கொடு உன் அழகை வாசித்துக் காண்பிக்கிறேன் என்பது யாவரும் அறிந்த ஒன்று. கேட்போர்/பார்ப்போர் மனதில். கலாச்சாரம், பண்பாடு கடந்து நிற்கும் இசையும் ஓவியங்களும். ஓவியமும் இசையும் நல்ல ஊடகங்கள் , இதைத்தான் சொல்கிறேன் கேள் என அதிகாரத்தோரணையின்றி கேட்பவன்/ பார்ப்பவன் மனத்தில் கலைஞனைக்காட்டிலும் இன்னமும் ஊற்றெடுக்க வைக்கும் ஊடகங்கள்.

இன்னமும் சைனாக்காரர்கள் நமது பழைய எழுத்துகளான சித்திர எழுத்துகளையே பயன்படுத்துகின்றனர். அதையே நாமும் தொடர்ந்திருக்கலாம். உணர்வுகளை அடுத்தவனுக்கு தெரிவிக்க வேணும், நாம் நினைப்பதை பிறர் புரிந்து கொள்ள வேணும், என்பது பழைய கால பேச்சுக்களற்ற சார்லி சாப்ளின் படங்களின் மூலம் அத்தனை தெளிவாக புலப்படும் நமக்கு. சைகைகளின் மூலம் விளக்கி சொல்தல் என்பது கூட மனிதர்களுக்கிடையே மட்டுமே செல்லு படியாகக்கூடிய தொடர்பு ஊடகம். பறவைகளுக்கோ இல்லை மிருகங்களுக்கு அங்கனம் புரிய வைக்க இயலாது. சங்கேத மொழிகளும் குழூஊக்குறிகளும் மனிதர்களுக்கிடையேயான இன்னொரு ஊடகமே. இதை வைத்துக்கொண்டும் இன்னபிற விலங்குகள் பறவைகளுடன் உரையாடிவிட இயலாது.

இந்தத்திரைப்படத்திலும் அன்னியர்கள் ( ஏலியன்ஸ்) வேற்றுகிரக வாசிகள் ஓவியத்தையே தமது ஊடகமாக மனிதர்களுடன் தகவல் தெரிவிக்க பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அவற்றை புரிந்து கொள்தல் என்பது எவெரெஸ்ட் ஏறும் முயற்சியாகிறது. இன்னமும் கற்கால மனிதனின் பாறை ஓவியங்களைப்புரிந்து கொள்ள நம்மால் இயலவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு புரிதலுடன் அதை மொழியில் விளக்க முயற்சிக்கின்றனர்.  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்கு வந்துபோய்க் கொண்டிருக்கும் ஏலியன்ஸ் கிட்டத்தட்ட ஐம்பது அறுபது வகைகள் என்பது புலனாகியிருக்கிறது. அத்தனை பேருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லை நம்மால். பெரும்பாலும் பூச்சியினத்திலிருந்து உருவான அதி உயர் மனித இனம் தான் அவை. நாமோ முதல் குரங்கு. டினோஸார்களை அந்த விண்கல் மோதி அழித்திருக்காவிடில் டினோசாரின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் தோன்றியிருப்பான்.



ஒரு எகா. கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஒரு ஏலியன். எட்டுக்கைகளும் மூன்று இதயங்களும் கொண்ட ஒரு உயிரினம். மிகுந்த அறிவுடையவை , அதனால் காற்பந்து போட்டிகளில் இவற்றின் ஆரூடம் உலகப்புகழ் பெற்றது, மிகக்குறுகிய காலமே வாழக்கூடியவை. உலகில்/கடலில் எந்த உயிரினமும் இங்கனம் உடற்கூறு கொண்டதில்லை. ஜெல்லி மீன்களுக்கு இதயமோ/மூளையோ இல்லை. மேலும் ஜெல்லிகளுக்கு இயற்கை இறப்பே இல்லை. இதெல்லாம் மிகவும் ஆச்சரியத்துக்குரிய விஷயங்கள். இவையெல்லாம் பூமியில் இருந்து உருவான உயிரினங்களே இல்லை என அடித்துக்கூறலாம். இந்த திரைப்படத்தில் காண்பிக்கப்படும் ஏலியன்ஸும் கிட்டத்தட்ட ஏழெட்டுக்கால்களை/ கைகளைக் கொண்டுள்ளன. எனினும் வழக்கமாக சுவாரசியத்துக்காக காண்பிக்கப்படும் ஏமாற்று வித்தைகளோ அவற்றை வைத்து மாயாஜாலம் காட்டவோ முயலவில்லை.

நிறைய கேள்விகள் அரசாங்கத்துக்கு எதற்காக அவர்கள் இங்கே வந்திருக்கின்றனர்? அவர்களுக்கு என்ன தேவை ? சுற்றிப்பார்க்க வருவதானால் ஒரு விண்வெளிக்கப்பல் மட்டும் போதுமே , எதற்கு பன்னிரண்டு கப்பல்கள் உலகெங்கும் அத்தனை சிறப்பற்ற இடங்களில் தொங்கிக்கொண்டு இருக்கவேணும் ? ஆம் அவை தரை பாவாது பத்தடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே நிற்கின்றன. நதியில் ஓடாதிருக்கும் பரிசல்கள் கரையில் சார்த்தி வைத்திருப்பதைப்போல அவை அந்தரத்தில் சார்த்தி வைக்கப்பட்டுள்ளன. எவ்வித புகையோ இல்லை , கழிவுப்பொருட்களோ வெளியில் சிந்துவதில்லை. அத்தனை கப்பல்களும் தமக்கிடையே தகவல் பரிமாற்றங்களை அதீத உயர் ஒலிக்குறியீடுகளில் நிகழ்த்திக்கொள்கின்றன. அந்தப்பரிசல் விண்கப்பலினுள்ளே ஈர்ப்பு விசை மிகவும் குறைவு. தேவையான ஆக்ஸிஜன் இருக்கிறது.மூச்சுமுட்டல் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு என அறிய வருகிறது

உள்ளிருக்கும் அந்த ஏலியன்ஸை ஹெப்டா பாட்ஸ் -ஏழு காலிகள் -ஏழு கால்களைக்கொண்டவை (எட்டுக்காலிகள் அல்ல ) என அழைக்கலாம். அவர்களின் கப்பல்கள் உலகில் இடி/மின்னல் அதிகம் நிகழாத இடங்களாகப் பார்த்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பதினெட்டு மணி நேரங்களிலும் அவர்களின் கதவுகள் திறக்கின்றன. மனிதர்களுடன் பேசி அவர்களின் வருகைக்கான காரணங்களை அறியத்தர. அவர்களின் ஓவிய மொழி,ஒலியை அடிப்படையாகக்கொண்டதல்ல நமதைப்போல. சித்திரங்களை, படங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்க முயற்சிப்பவை. ஓராயிரம் சொற்களில்/ஒலிகளில் சொல்லவேண்டியதை ஒரு சிறு படத்தின் மூலம் விளக்க முயற்சிக்கும் ஓவியங்கள். சிக்கலானவை , ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை, ஒன்று போல் ஒன்று இருப்பதில்லை,  உயிர், மெய் என்ற பாகுபாடில்லாதவை. மிகப்பெரிய சவாலாக இருக்கிறது தலைவிக்கு. முன்னும் பின்னும் எழுதப்படும் ஒலிக்குறிப்புகள் அடங்கிய மனித மொழி அல்ல அது. இசைக்குறிப்புகளைப்போல சுருங்கச்சொல்லி விளங்க வைப்பவை. அதனால்தான் இசை பிரபஞ்ச மொழி என அழைக்கப்படுகிறது.




ஒரு வரியை எழுத வேண்டுமானால் எத்தனை சொற்கள், எவ்வளவு இடைவெளிகள், அது பதிலா இல்லை கேள்வியா , இல்லை மெதுவே கடந்து போகக்கூடிய வெறும் சொற்களா ? இத்தனை நமது மனதில் ஓடி பின்னர் எழுதத்தொடங்குகிறோம். அவர்களின் ஓவிய மொழி சப்தங்களை அடிப்படையாகக்கொண்டதல்ல. அர்த்தங்களை/பொருளை அடிப்படையாகக்கொண்டது Non linear Orthography.இதில் மனித மொழி போன்று இடமிருந்து வலமோ , இல்லை வலமிருந்து இடமோ இல்லை. எல்லாம் ஒரு சுழலில் எழுதப்படுகிறது. ஒரு வட்டம் போல , ஆங்காங்கே சின்னஞ்சிறு முடிச்சுகளுடன், முடிச்சுகள் அதே இடத்தில் நிலைப்பதில்லை , வேறுபாடு காண்பிப்பதற்காக சுழலில் வேறு வேறு இடங்களில் முடிச்சு விழுகிறது. முடிச்சு இறுக இறுக அதை விடுவிக்க முயற்சிப்பவர்க்கு இன்னமும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கணிதக் குறியீடுகளைப்போல/புதிர்களைப்போல  அவற்றை விடுவிக்க வேண்டியிருக்கிறது.

தலைவி ஒரு மொழிப்பேராசிரியர் , பல்கலைக்கழகத்தில். உலக மொழிகள் குறித்த தேர்ந்த அறிவு படைத்தவர். ஒரு காட்சியில் அவரை தவிர்த்து விட்டு இன்னொருவரை பணியமர்த்த ராணுவ அதிகாரி முயற்சிக்கும் போது, சமஸ்கிருதத்தில் 'போர்' என்ற சொல்லுக்கு என்னெவென அழைப்பார்கள் என்று அவரிடம் கேளூங்கள் என்பார். அவருக்கு வடமொழியைக்காட்டிலும் பழைமையானது தமிழ் என்றறிருந்திருக்கவில்லையே என வருந்தினேன். Palindrome பற்றியும் பேசுகிறார். திருப்பிப் போட்டாலும் அதே உச்சரிப்பை தரக்கூடிய சொற்கள். எகா' விகடகவி தமிழில் ஆங்கிலத்தில் HannaH. தலைவர் அவரோடு சகபயணி ஒரு theoretical physicist. நிறைய கேள்விகள் அதைக்கேட்டு விடவேணும் என்ற ஆவல் அவருக்கு. ஒளியைக்காட்டிலும் கூடுதல் வேகத்துடன் பயணிக்கும் கப்பல் எங்கனம் உருவாக்க முடிந்தது ? ஈரிலக்க எண்கணிதம் (binary) அறிந்தவர்களா ?

இந்த மொழிச்சிக்கல்களிலிருந்து விடுபட்டு தகவல் தொடர்பை சரியாக கடப்பவனில்லை என்பதால் இன்னமும் சிங்கிள் என்கிறார். எல்லாம் இருந்தாலும் சிங்கிளாக இருப்பவரும் உலகில் உண்டு என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவைக்கிறார் தலைவி. இதைப்போல சின்னச்சின்ன உரையாடல்களே போதும் காட்சியின் சீரியஸ்னெஸ்ஸை வெளிப்படுத்த. இதை முதலில் தமிழில் செய்தவர் பாலு மகேந்திரா, பின்னர் மணிரத்னம் , காட்சிகளை அதிகம் அழுத்தம் கொடுத்து உரையாடல்களை சுருக்கி என.

ஒரு கட்டத்தில் அந்தச்சின்னப்பெண் அம்மாவிடம் கேட்பாள். 'யாரும் வெற்றி தோல்வி என அடையாது போகும் விளையாட்டின் பெயரென்ன ? போட்டியில் பங்கு பெறும் இருவருக்கும் என. உடன்படிக்கை/ Win-Win எனச்சொல்லி முடித்துவிடுவார். அது உண்மையில் Non Zero Sum Game.உறக்கத்தில் ஏலியன்களில் மொழியில் கனவு காண்கிறாயா ? என்ற கேள்வியெல்லாம் படத்தில் வருகிறது. எந்த மொழியில் சிந்திக்கறோமோ அதே மொழியில் கனவுகளும் வரும் என்பதே உண்மை. சீனாவின் ராணுவம் ஏலியன்ஸுடன் உரையாட அவர்களின் விளையாட்டான Mahjong ஐப் பயன்படுத்துகிறது. பேசிப்புரிய வைப்பதைவிட விளையாடி அவர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்துகொள்தல் எளிது என நினைத்து. வெற்றி தோல்வி சமரசம் உடன்படிக்கை வீழ்த்துதல் படிந்து போதல் என்பன விளையாட்டின் மூலம் தெரிந்து கொள்வது/ புரிந்து கொள்வது எளிது.

பின்னர் தலைவனும் தலைவியும் ஆங்கிலத்தில்  தமது பெயர்களை  எழுதிக்காண்பித்து உங்களின் பெயர்களை தெரிவியுங்கள் எனப்பணிக்கின்றனர். அதற்கும் ஏலியன்ஸ் ஒரு வட்டத்தில் பதிலளிக்கின்றனர். தொடர்ந்தும் பலவித சந்திப்புகளில் அவர்களின் மொழியை மொழிபெயர்க்க வாய்க்கிறது. ஒரு அணுக்கம் ஏற்பட்டு பின்னர் அதுவே தொடர்கிறது பின்னரான சந்திப்புகளில். அதுவரை கவச உடையணிந்து சென்று அவர்களைச் சந்தித்தது போய், சாதாரண உடையிலேயே சந்திக்கிறார் தலைவி. நேஷ்னல் ஜியாக்ரஃபி தொகா'வில் கழுகுகளைப்பற்றிய ஆவணப்படம் எடுக்கப்போன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஒரு புகைப்படவியலாளர். முதலில் அத்தனை பெரிய காட்டில் அந்தக்கழுகின் கூட்டுக்கு சற்று தொலைவில் கூடாரம் அடித்து தங்கும்போது, பறவைகளுக்கே உரித்தான தற்காப்பு தாக்குதலில் பல முறை காயப்பட்டதாகவும் , பின்னர் அதுவாகவே உணர்ந்து இவன் நம்மைத்தாக்க, தம் குஞ்சுகளை  அழிக்க வரவில்லை என நன்கு உணர்ந்த பின்னர் தாக்குதலை நிறுத்தி இணக்கத்துடன் இருந்ததை தெரிவித்தார். அதுபோல நான்கு முறை சந்தித்தபின்னரும் அவர்களிடமிருந்து எந்தவிதமான தீங்கும்,கதிர் வீச்சுகளும் தம்மை தாக்கவில்லை என அறிந்து சாதாராணமாக காஃபி ஷாப்பிற்கு நண்பர்களைச்சந்திக்க செல்வது போல செல்கிறார்.



ஏலியன்ஸின் வட்ட ஓவியங்களிலிருந்து ஓரளவு புரிந்துக்கொண்டு அவர்களின் மொழியிலேயே ஒரு கட்டத்தில் இந்த பூமிக்கு வந்ததின் நோக்கமென்ன எனக்கேட்கப்படும் கேள்விக்கு  "offer weapon"என பதிலுரைக்கின்றன ஏலியன்கள். இங்கு தான் தவறான புரிதல் எற்படுகிறது, அவை சொல்ல நினைப்பவை "Use Tools"என்ற பதில். இவர்கள் புரிந்து கொள்தல் "offer weapon" என்று. அங்கிருந்து பிரச்னை ஆரம்பிக்கிறது.   ஏலியன்கள் நம்மைத்தாக்க வந்திருக்கின்றனர் என்ற தவறான புரிதல்களே முட்டலுக்கு சாத்தியப்பாடுகளை எடுத்து உரைக்கிறது.Tools என்பதற்கும் Weapons என்பதற்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிய நாட்கள் பிடிக்கிறது, அதற்குள் சைனா தாக்குதலுக்கு முற்படுகிறது. அதுவரை மற்ற நாடுகள் பெற்ற தகவலை பகிர்ந்து கொள்ளவும் தயங்குகின்றன. Weapons என்ற ஒற்றைச்சொல் போதுமனதாக இருக்கிறது ராணுவத்துக்கு. வேறென்ன வேண்டும் அவர்களூக்கு ? மொழிச்சிக்கல் யாருக்குத்தான் இல்லை. Slip of the Tongue என்று பெரிய தலைவர்களே சொல்லி தமது தவறை மன்னிக்க கோரும் இங்கு இவ்வளவு பெரிய சொல்லை எங்கனம் புரியவைப்பது ?

பின்னரும் அடுத்த சந்திப்பில் ஒரு கையால் ஏலியன் எழுத மறுகையால் தலைவி எழுதுகிறார். புரிந்து கொண்டதன் அடையாளமாக அந்தக்காட்சி கண்ணாடித்திரை முழுக்க ரொம்பவும் சிக்கலான ஓவியங்கள். தலையைப்பிய்த்துக்கொள்ளுமளவுக்கு. அத்தனையும் காலம் குறித்தான சிக்கல்கள் என தெளிவாகிறது. காலங்கள் கடந்த கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எதிர்காலத்தைப் பற்றியதான ஓவியச்சிக்கல்கள் இடியாப்பச் சிக்கல்கள். விடுவிக்க ஆண்டுகள் பிடிக்கும் என்கிறான் பிஸிசிஸ்ட். மனம் பிறழ்ந்த ஓவியனின் அதி தீவிர மனச்சிக்கல்களின் குறியீடாக அந்த கடைசி ஓவியங்கள் அவர்களைக் குழப்புகின்றன. என்ன தான் விடை என்னதான் சொல்ல விழைகின்றனர், என்ன செய்தியைத்தெரிவிக்க இத்தனை குழப்பமான ஓவியங்கள் ?! காலத்தை திறக்கும் சாவி tool-கருவி தலைவியின் கையில் உள்ளது. என்று முடிக்கிறது அந்த ஏலியன். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று - chosen one! ஏலியன்களின் ஓவியமொழியைக் கற்றுக்கொண்டால் காலங்கடந்தும் சிந்திக்கவியலும், எதிர்காலம் பொதிந்து வைத்திருக்கும் பரிசுகளை அறிய வழி வகுக்கும் என்பதை உணர்த்துகிறது.

இந்தத்திரைப்படத்தில் முகப்பிலும் கடைசியிலும் பயன்படுத்தப்பட்ட அந்த சின்ன சிம்ஃபொனி அளப்பரிய உணர்வுகளை நம்முள் கிளர்ந்துவிடுகிறது. மேக்ஸ் ரிக்டரின் On the Nature of Daylight என்ற இசைக்கோவை. எத்தனை முறை திரும்பத்திரும்ப இசைத்தாலும் உள்ளுக்குள் கள் போலிறங்கி ஊறித்திளைக்கிறது. எப்போதும் திரும்பியே வராத காலத்துக்கு திரும்பத்திரும்ப இசைக்க வைக்கும் கோவை. 01:43ல் தொடங்கும் அந்த லீட் வயலின் பிழியும் நமக்குள் சோகத்தை. இங்கு தலைவியின் குடும்பம்,அவளின் குழந்தை பற்றிய முதல் மற்றும் கடைசிக்காட்சிகளில் இந்த இசை எடுத்தாளப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட  நான்கைந்து வயலின் கற்றைகள்/இழைகள் பின்னில் ஒலிக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தாளலயம். நேரப்பரிமாணங்கள். இருப்பினும் லீட் வயலினுடன் இசைந்து இணைந்து ஒலிக்கும் இசைக்கோவை. Sustaining Notes கொண்ட வயலினில் இசைப்பது என்பது பேரின்பம். இழைத்து முடித்தபின்னரும் தொடரும் ஒலி. வாழ்ந்து முடித்த பின்னரும் மனதில் தொடரும் காலம் போல. மேக்ஸ் ரிக்டர் எந்த உளநிலையை பிரதிபலிக்க இசைத்தாரோ அதை சரியாக இனங்கண்டுகொண்டு இங்கு திரையில் பொருந்திப் போகும் காட்சிகளுக்கு ஒலிக்கவிட்டிருப்பது சாலப் பொருத்தம். சிக்கலான இசைக்கோவை இல்லை, இருப்பினும் உளச்சிக்கலை இன்னமும் பிரிக்கமுடியாதபடி இறுக்கிக்கட்டி படுமுடிச்சுப்போடும் இசைக்கோவை. திரையில் ஏலியன்களின் மொழிச்சிக்கல் இங்கு மிக எளிதான இசைக்கோவை, முரண்களாலானது உலகம். 






No comments:

Post a Comment