Thursday, January 12, 2017

தலைப்பில்லாத கவிதைகள்


ரயிலின்
கடைசிப்பெட்டி
ஒரு கவிதை.

***
அணுகுண்டுக்கும்
அழியாத
கரப்பான்பூச்சி
காஃப்க்கா

***
கடலுக்கு
அலைகள்
க்ளீஷே

****
எனக்கும் கவிதை வாசிக்கத்தான் விருப்பம்
இந்த முன்னிரவில்
இதுவரை யாரும் எழுதவில்லையே ?!

***
ஜன்னல் கதவைத்திறந்தால்
மேகம் உள்ளே வந்துவிடுமோ
என்ற பயம்
அடைத்தே வைத்திருக்கிறேன்

***
என்னை எரித்துவிட்ட
சுடரில்
சாம்பல் படிந்திருக்கிறது

***
உன் ஆயுதங்களை
மௌனித்திருக்கிறாய்
எனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது
பெரும் சமர்

***
ஆசைப்படாமல் இருக்கிறேன்
கிடைக்கிறதா எனப்பார்க்கலாம்….

****
எனது சிறந்த கவிதை
இன்னும் எழுதப்படவில்லை
ஆனால் உன் தந்தை

****
கடவுளையும்
ஆப்பிள்
உண்ண வைத்தவள்

***** 


என்றும் மின்சாரம் தீராத
மின்மினிப்பூச்சி
அவள்

****
இனி உனை
முத்தமிடக்கூடாது
என்றிருக்கிறார்
மருத்துவர்

****
எனக்குள் நானே
சொல்லிக்கொள்ளாததையா
என் கவிதை
சொல்லிவிடப்போகிறது ?

*****
எப்படியும் இந்தக்கவிதையை
இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்
என்றுதான் சொல்லப்போகிறீர்கள்.

*****
சாத்தானைப்
பிரார்த்தித்துக்கொண்டு
உன்னைக்காதலிக்க
விழைகிறேன்
ஒவ்வொரு முறையும்
கடவுளையே
துணைக்கழைக்கிறாய்

*****
ஒரு சன்னலை
அடைத்தால்
மறு சன்னல் திறக்கும்
என்றுதான் இருக்கவியலும்.

*****
இக்கால இறுவட்டு
போலிருக்கிறாய்
அக்கால ஒலிப்பேழைகள் போல்
மறுபக்கமேயில்லை
உன்னிடம்

*****
உன் அழகைப்போல்
என் ஆன்மாவிற்கும்
வயதாவதில்லை

****
என்றும் நரைக்காத
மயிற்தோகை
உந்தன் குழல்

*****
கடவுள் கொடுத்த
ஆப்பிள் நீ
எனக்கு

*****


யுகங்கள் கடந்தும்
போதி மரம்
ஞானம் பெறவில்லை.

****
உனக்கென விட்டுக்கொடுத்து
விட்டுக்கொடுத்து
நீயானேன்

****
காதலை
எடுத்துச்சென்ற
உறக்கம் அவள்

*****
ஒரு சிறிய
காதல் கிரகத்துள்
அடக்கிவிட இயலாது
உனை

****
நீயே நோய்
நீயே மருந்து
நீயும் ஒரு கார்ப்பொரேட்

****
அகாலத்தினாற்செய்த உதவி
அண்டத்தினும் சால சிறிது

****
நான் ஒன்றுமில்லாததை
கொடுக்கிறேன்
எடுத்துக்கொள்வாயா ?

****
சுஜாதாவுக்கு
ஸ்ரீதேவியின் மூக்கு
லாசராவுக்கு
ஈர உடையுடன்
படியிறங்கும் பெண்
பாலகுமாரனுக்கு
செருப்பில் ஒட்டிய சோறு
நகுலனுக்கு சுசீலா
எனக்கு…
வாசிக்கும் நீங்களே
சொல்லுவீர்கள் இப்போது

*****
மீன் என்ற சொல்
நீர் என்ற சொல்லில் நீந்திக்கொண்டிருக்கிறது
தூண்டில் எனும் சொல்லால்
புழு என்ற சொல்லைக்கொண்டு
பிடிக்க முயன்றேன்
முள் என்ற சொல்லில்
சிக்கிக்கொண்டது

*****
சலனமற்ற
தெளிவான குளமும்
என் முகத்தை
கலக்கியே காண்பிக்கிறது

*****
என்னோடு
நிழலையும் சேர்த்துப்புதையுங்கள்
தனிமையில் வாடாதிருக்கட்டும்

*****
நானெழுதுவதெல்லாம்
கவிதைக்ள் தான்
நீ எழுதும்வரை

****
தரவுகளில்லாத
தவறுகள்
உனது

*****
உடனுள்ளவரெல்லாம்
காகிதக்கப்பல்
செய்துகொண்டிருக்கும்போது
நான் கத்திக்கப்பல்
செய்துகொண்டிருந்தேன்

*****
ஒவ்வொரு குயிலிடமும்
வேறு வேறு
கானங்கள் இல்லை

*****
இத்தனை அழகான
பட்டாம்பூச்சியை
பராமரிப்பது
அத்தனை கடினமான
இருக்கிறது
கம்பளிப்பூச்சியாக மாறிவிடு.http://malaigal.com/?p=9618

No comments:

Post a Comment