Monday, September 5, 2016

ராசைய்யா


இப்படி ஒரு பதிவை எழுதியே ஆகணும். ராசைய்யாவால் பின்னணி இசையை வைத்துக்கொண்டு ஏன் உலகத்தரத்திற்கு இசைக்கமுடியவில்லை , ஏன் அத்தனை தூரம் எட்டவில்லை , ஏன் இன்னமும் வெளிநாட்டு இயக்குநர்கள் இன்னமும் அணுகவேயில்லை? ஏன் இன்னமும் ஹாலிவுட் படங்களுக்கோ இல்லை பன்னாட்டு இசை நிகழ்ச்சியை நடத்தவோ இல்லை ? ஏன் இன்னமும் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறார் ?.. இப்படி பல கேள்விகள்.

ராசைய்யாவின் பாணி என்பது எந்த மண்ணின் இசையானாலும் அதை தமது பாணியில் தமிழுக்கேற்றவாறு மாற்றியும் அதன் நேர்த்தி கெடாமலும் கொடுப்பது.எத்தனையோ brahms,lizt, beethoven மற்றும் அவரின் ஆத்மார்த்த ஆசானான bach-ன் இசையையும் அங்கனமே கொடுத்திருக்கிறார். பட்டியலிடமுடியும். சரி எதற்காக மேல் நாட்டு இசையை நமது/தமது பாணியில் கொடுக்கவேணும் ? என்ற கேள்வி எழலாம்.

நான் ஒரு ஐ.ட்டி. எஞ்சினியர், ஐயா என் பொழப்பு அமெரிக்க/இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு கார்ப்பொரேட்டுகளுக்கு கை கட்டி கூலி சேவகம் செய்வது. நிறுவனத்தில் சேர்ந்ததுமே 'அவர்களிடம்' எப்படி பேசவேண்டும். ஏனெனில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு என்பது மிகவும் சொற்பம். ஆதலால் தொலைபேசியில் எங்கனம் பேசவேணும், அதற்கான நெறிமுறைகள் என்னென்ன என்பதெல்லாம் அத்துப்படி ஆனபிறகே தினத்திற்கான பணியை செய்யவியலும். ஏனெனில் எனது மார்க்கெட் அங்கிருக்கிறது. அவர்களின் பண்பாடு,மொழி, பேசும் முறை, அவர்களின் சூழல் என அத்தனையும் மண்டைக்குள் திணிக்கப்படும். கிட்டத்தட்ட அவர்களைப்போலவே நான் மாறித்தான் ஆகவேணும். எத்தனையோ இங்கிலீஷ் பாடல்கள் கேட்கிறோம், ஜீன்ஸ் பேண்ட் அணியத்துவங்கியாயிற்று, bring the check’ என்று பில்லைக் கொண்டுவா என கட்டளை பிறப்பிக்கவும் பழகியாயிற்று. இப்படி 'அவர்களின்' மனம் கோணாமல் அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களின் எதிர்பார்ப்புக்கென வேலை செய்யத்துவங்கியாயிற்று, நாட்கள் போய்க்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படி அவர்களுக்குப்பிடித்தமேனிக்கு இசைப்பவரை மட்டுமே அவர்கள் பணியமர்த்திக் கொள்வார். மேற்கத்திய இசை பொதுவில் தனிமனித , தன்னூக்கமுள்ள , குடும்பச்சூழல் சாராத , தனிப்பயனருக்கென உருவாக்கப்பட்ட இசை. அதை உருவகம் செய்துகொண்டு அதற்கேற்றாற் போல இசைப்பவரே அவர்களுக்குப்பிடித்தமானவர். ( மேற்கத்திய செவ்வியல் இசை பற்றி பேசவில்ல நான்). குடும்பச்சூழலும், இன்னமும் HUF :) அம்மா/அப்பாவை வைத்து பேணிக்காக்கும் நமது முறை அவர்களுக்கு ஒத்துவருவதில்லை. இதையெல்லாம் சமரசம் செய்துகொண்டு யார் இசைப்பாரோ அவரே அங்கே ஏற்றுக்கொள்ளப்படுவர். ‘பத்தாம் பசலி' போல ஏன் பேசுகிறாய் என்று கேட்கலாம். ஐயா நமது இசை இன்னமும் இப்படியான பாங்கினைக்கொண்டே இசைக்கப்படுவது. அடிப்பொடிகள், சிஷ்யக்குஞ்சுகள், வாரிசுகள் என புழங்கி வருவது நமது இசை. இன்னமும் தீர்க்கமான இசைக்குறிப்புகளை உள்ளடக்கிய பதிவுகளோ இல்லை தரவுகளோ இல்லை. எல்லாம் வழிவழி வந்தவை தான். ஏட்டுக்குறிப்புகள் என்பது அத்தனை இல்லை, தேடினாலும் கிடைக்கப்பெறா.

லிபரலைசேஷனுக்குப்பிறகு வந்த வினை இதெல்லாம். க்ளோபல் வில்லேஜ் கான்செப்ட். உனக்கென ஒன்றுமே , தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகள் இருக்கலாகாது, உனக்கென பண்பாடோ,நாகரீகமோ, இசையோ எதுவும் தேவையில்லை. ஒன்றாகக்கலந்துவிட்டால் விற்பது எளிது.அத்தனை தான். இதில் போய் எனது நாட்டார் இசை, எனது பாணி என கூவிக்கொண்டு இருப்பவனை கோமாளியினும் கேவலமாகவே பார்ப்பர்.

நான் பாம்பேயில் வசித்தபோது அங்குள்ள உள்ளுர்/மற்றும் வடநாட்டவர்கள் ,இன்னபிற இசையமைப்பாளர்களின் பாடல்களை உவந்து ஏற்றுக்கொண்டு கேட்பது போல ராசைய்யாவின் இசையை ஏற்றுக்கொள்வதில்லை. எனது பழைய பாஸ் ஒரு பெங்காலி நல்ல இசைக்கலைஞர். ட்ரெம்பெட்/பாண்டு இசைக்குழுவில் இசைத்தவர். அவரே சொல்லி பலமுறை கேட்டிருக்கிறேன். இல்லை ராம்நாத், எனக்கு அவரின்(ராசைய்யாவின்) இசை புரிபடவில்லை. ஏகத்துக்கு குழப்பமாகவும் விரைவாகவும் வாசிக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை என்பார். இது முற்றிலும் அவர் கூறியது. என் கலப்புச்சொற்கள் என ஏதும் இல்லை.

எத்தனையோ ராசைய்யாவின் பாடல்களை , அவற்றின் சுவரங்களை உள்வாங்கிக்கொண்டு 'வட நாட்டவர்க்கு' பிடித்தமான முறையில் மெதுவாக்கி இசைத்து / லிஃப்ட் பண்ணி ஹிட்டாக்கிய பாடல்களைப் பட்டியலிடலாம். பால்கி பெருமுயற்சி எடுத்து அவரின் எண்பதுகளின் பாடல்களை இப்போது ஹிந்தி பொதுஜனத்திற்கு கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அவற்றின் ஆதார சுதி கெடாமல். எத்தனை வெற்றி என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்தியத்துணைக்கண்டம் முழுக்க செல்லக்கூடிய வகையில் கொஞ்சம் சமரசம் செய்துகொண்டு இசைத்து தாருங்கள் என்று கேட்டுக்கொண்ட இயக்குநர்களை ஒதுக்கியே வைத்துவிட்டார். மெதுவாக இசைக்கவேணும் , மூன்று நிமிடப்பாடலை ஐந்து நிமிடங்களாக இசைக்கவேணும் சலிப்பு மேலிடுமடா ங்கொய்யால. பாடப்படும் இரண்டு சொற்களுக்கிடையே போதிய இடைவெளி விட்டு பாடினால் , அதே ராகத்தை துணைக்கண்டம் முழுக்க கேட்கச்செய்யலாம். கலைஞனுக்குத்தெரியாதா இது ? Compromise செய்து கொள்வதில்லை ஐயா ராசைய்யா. ஏன் புரிந்து கொள்ள மாட்டேங்கறீங்க ? ஏண்டா இவன் இப்படி வாசிச்சு விட்றான்னு என் அம்மா எப்பவும் சொல்லும், இப்ப வர்ற பாடல்களைக்கேட்டுவிட்டு.


ஒரு நொடியில் பாப் இசைப்பாடல்கள் ஆயிரம் உருவாக்கவியலும் என்று ஒரு முறை கூறியிருக்கிறார். அதான் சொல்றேன், நம்மிசையை நமது பாணியை மாற்றாது, most traditional way-ல் இசைக்கக்கூடியவரை கொஞ்சம் மாத்திக்குங்க என்று சொன்னால் சொன்னவரைத்தான் மாற்றுவார். ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' அவர் பாணியே இல்லை. சூழல் வங்காளம் , யோசிங்கண்ணா.

இன்னுங்கொஞ்சம் சொல்றேன்.ப்ராக்/செக் குடியரசில் சில நாட்கள் பணியிலிருந்திருக்கிறேன். பொத்தாம் பொதுவாக மேற்கத்திய இசையே அவர்களின் இசை என கூறிவிடவும் இயலாது. ‘துவாரக்' அந்த செக் நாட்டின் இசைக்கலைஞர்தான். நிறைய சிம்ஃபொனிக்கோவைகளை உருவாக்கியவர் தான். இப்படி பலரை அடையாளம் காட்டலாம். அவர்களின் நாட்டார் இசை அடங்கிய ஒலிப்பேழையை வாங்கி கேட்க முயற்சித்தேன். ஆமாம் முயற்சி தான் செய்தேன். அத்தனை அயற்சி, சொய்வு இன்னும் எத்தனை சொற்களை வேணுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். எல்லாம் இசைதானே கேட்கலாம் தானே என்று சொல்லலாம். ஐயா ஒன்றுமே விளங்கவில்லை. அந்தப்பேழை அங்கு அதிகம் விற்கும் இசைப்பேழை . ஐயோ சாமி… என்னாலேயே கேட்கவியலவில்லை. இத ஏன் சொல்றேன்னா சில அடிப்படையான , செறிவுமிக்க மண் சார்ந்த இசையை அணுகக்கூட இயலாது நம்மால். எத்தனை முயற்சித்தாலும். அசூயையும், வெறுப்புமே மண்டிடும் . நிறுத்தினால் போதும் என்ற நிலையில் கொண்டு போய் விட்டுவிடும். ஏன் என்பதற்கான காரணங்களை ஆராய முற்பட்டேன். இன்னமும் விடை கிடைக்கவில்லை. ஒரு வேளை அந்த மண் சார்ந்து அங்கேயே வசிப்பவனாக இல்லாததாலோ என்னவோ என்னால் ரசிக்கவே இயலவில்லை. அந்த இசை என் குருதியில் ஊறியதில்லை. என் அன்னை எனக்கு அதை ஊட்டவில்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தான்.

நமக்கென ஒரு பாணி உண்டு. தாளக்கட்டுகள் உண்டு. மேளகர்த்தாக்கள் உண்டு. இவையாவும் தமிழ்ப்பண்ணிசையில் உண்டு. அதை உள்வாங்கிக்கொண்டு தியாகைய்யரும், ஷாமாவும் கொடுத்த கொடை என நமக்கான இசை உண்டு. இதைத்தான் ராசைய்யா எப்போதும் நமக்கு கொடுப்பார். அவரை நாடி வாரும் யாரைக்கும் இந்தப் பாணியிலான இசையையே கொடுப்பார். அதை யாருக்குப்பிடிக்கிறதோ அவர்களிடம் மட்டுமே பணி செய்வார். அவர் எந்நாட்டவராயினும் சரி.

ராசைய்யா இசைத்த கோவைகள், சிம்ஃபொனிக்கள் , இன்னபிற திரை சாராத இசைப் பேழைகள் எல்லாவற்றிலும் , நமது பாணியே பின்பற்றப்பட்டிருக்கும். how to name it-ல் chamber welcomes thiyagaraaja, I met bach in my house என்ற தலைப்புகளில் தான் இசைக்கோவைகள் இசைக்கப்பட்டிருக்கும். பாக்'கை என் வீட்டில் சந்தித்தேன், என் இசையை என் நாட்டார் பாணி/நமது இசையை அறிமுகப்படுத்தினேன். சேம்பர் தியாகய்யரை வரவேற்கிறது, தலைப்புகளையே பார்க்கலாம். கலைச்செல்வங்களை அறிமுகப்படுத்த செய்த முயற்சி வெளிநாட்டவர்க்கு நமது பாணியில். அவர்களை இங்கு கொண்டு வரவில்லை. இங்கிருப்பதை அங்கு அறிமுகப்படுத்தும் முயற்சிகள் கண்ணு. நம்மிடம் கொட்டிக்கிடக்குது , அதைப்போற்றலாம்.

ராசைய்யா என்னைப்போல வெள்ளைக்காரனுக்கு/ கார்ப்பொரேட்டுகளுக்கு கை கட்டி , சொல்லுங்க எசமான்னு சேவகம் புரியும் ஐ.ட்டி இஞ்சினியர் இல்லை. இசைக்கலைஞன். நம்மாளு.


1 comment: