Wednesday, July 27, 2016

மகிழ்ச்சிஇந்தப்படத்துக்கு ஒரு விமர்சனமாவது எழுதலைன்னா விலக்கி வெச்சிருவாங்க போலருக்கு.அந்நிய நிலம்.களம் புதிது. அவ்வப்போது வெளிப்புற காட்சிகளுக்கென சிங்கப்பூர் மலேயா என சென்ற திரைப்படங்களில் அங்குள்ள வணிக மயமான புறத்தோற்றத்தை மட்டுமே அப்படங்கள் பிரதிபலித்தன. தோட்டத் தொழிலாளர்களென அழைத்துச்செல்லப்பட்ட தமிழர்கள் அங்கேயே குறைந்த அடிமாட்டுக்கூலிக்கு அமர்த்தப்பட்டு உழன்றவைகளும், இன்னமும் அந்த அவலங்கள் தொடர்வதும் என இப்படியான செய்திகளைத்தாங்கி எந்தப்படமும் இது வரை வந்ததில்லை. இதுவே முதல்.

பரமக்குடியில் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டவை மலேயா சம்பாத்தியத்தில் தான். வீட்டுக்கொருவர் என மலேயாவில் இருப்பதும் அங்கு தொழில் செய்வதும் வழக்கம். ( என்ன தொழில் செய்கிறார் என்பது அவர்களுக்கே வெளிச்சம் ) அவர்களின் பிள்ளைகள் சென்ட் வாசனைமிக்க எரேஸர்களைக் கொண்டுவந்து எங்களிடம் பீற்றிக்கொள்வர்.இந்தப்படத்தில் பேசும் சில வார்த்தைகளை அப்போதே அவர்கள் பேசிக்கேட்டிருக்கிறேன்.

எண்பதுகளின் ரஜினியின் தோற்றம் , ஜானி கெட்டப் தான். அத்தனை அழகு! அதுவும் அந்த முடிவெட்டும் கலைஞராக இருப்பவரின் கெட்டப்.அதே முடி கலைத்தல், கூலிங் க்ளாஸ் என. ராதிகா'வைப்பார்த்து சென்யோரீட்டா , ஐ லவ் யூ... :) என்றே பாடுவார் என நினைத்து எதிர்பார்த்து ஏமாந்தேன். தொழிலாளர்களுக்காக அந்த வெள்ளைக்காரனிடம் ஆங்கிலத்தில் குரலுயர்த்திப் பேசும்போது மார்பைத்தட்டி கையை உயர்த்தி எங்கே ஒரு பாட்டும் பாடிவிடுவாரோ என நினைத்து பயந்தும் கொண்டிருந்தேன். நல்லவேளை அப்படி ஒன்றும் நிகழவில்லை. இப்படி ஒரு ரஜினியைப்பார்த்து எத்தனை நாளாயிற்று ?..ஹ்ம்.. ஆங்ரி யங் மேன். 'தீ' காளி' வரிசையில் ஒரு கேரக்டர். இருப்பினும் அந்த கிழ ரஜினியின் கெட்டப் , அப்படியே கே.பாலச்சந்தரின் கெட்டப்தான். இன்னும் கூர்ந்து கவனிங்க கண்டிப்பாக தெரியும். உடல்மொழியும் அதே. தொப்பியும் கண்ணாடியுமாக கெழ போல்ட் பாலச்சந்தர் தான் :)

இங்கும் வணிக சமரசங்கள் இருக்கத்தான் செய்கிறது அத்தனை ஒன்றும் ப்யூராக இல்லை. விரலுயர்த்தும் போது காற்றைக்கிழிக்கும் ஓசை, பின்னணியில் அதிரும் எலக்ட்ரிக் கிட்டார் என. ரஞ்சித்தும் பயன்படுத்தித்தான் இருக்கிறார் என்ன ஒன்று வெளியே அதை அத்தனை தெரியாமல் காட்டியதில் தான் வெற்றி.இதே போல ஏழை பாழைகளுக்காக போராடுவது, கூலி கொடுக்கச்சொல்லி எதிரிகளைப்புரட்டி எடுப்பது எல்லாம் ராஜாதிராஜா, மன்னன் படங்களில் பார்த்தது தான். ஒன்றும் புதிதில்லை. ஆனாலும் பல இடங்களில் அடக்கியே வாசித்திருக்கிறார். எப்பவும் இப்படி இருப்பதில்லையே ரஜினி என்று பல இடங்களில் யோசிக்க வைத்ததே படத்தின் வெற்றி. எப்போதும் வெற்றி பெறுவது , ஒரு காயமுமின்றி தப்பிப்பது, ஒரு குண்டு கூட ரஜினியின்மேல் படாதிருப்பது , சிறு கீறலுமின்றி அத்தனை பேரையும் புரட்டி எடுப்பது ..இப்படி பல "து"க்கள் படத்தில் இல்லை. மேலும் லிப்ஸ்டிக் போடாத ரஜினி :) வழக்கமாக நாயகப்புகழ் பாடுவது ' என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அவுட்-அன்-அவுட் கேங்ஸ்ட்டர் படம்தான். ஒரு க்ளப் ஸாங் கூட இல்லை.இருப்பினும் பார்ப்பவனை அதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாதிருக்கச்செய்வதில் ரஞ்சித்தை மெச்சலாம். 'நானும் ரெளடி தான் என்று வடிவேல் கூறிக்கொள்வது போல' என்ற ஒரு வசனம் வருகிறது, 25 ஆண்டுகளாக சிறை வாசமிருந்தவருக்கு எங்கனம் நவீன சினிமா பற்றிய புரிதல் இருந்திருக்கக்கூடும்? ஹ்ம்,,புரியவில்லை. சிறையிலிருந்து வெளிவந்ததும் 'வானத்தைப்பார்த்தேன் பூமியப்பார்த்தேன்' என பாடக்கிளம்பிவிடுவரோ என நினைத்து ஏமாந்தேன். இப்படி பல ஏமாற்றங்கள். நம்மை எல்லோரையும் அப்டி ஆக்கி வெச்சிருக்காங்ய மக்கா. ..ஹிஹி :)

மூன்று சண்டைக்காட்சிகள், சொல்லி அடிக்கின்றன. சிறையிலிருந்து வெளிவந்ததும் கபாலிடா என முடிக்கும் காட்சி, பின்னர் பாண்டிச்சேரியில் அத்தனை பேரையும் புரட்டி எடுக்கும் காட்சி, பின்னர் கடைசி உச்சக்கட்ட சண்டைக்காட்சி என அசத்துகிறார் ரஜினி. எல்லாவற்றையும் அவரே செய்திருப்பார் என்றே நம்புகிறேன் :)

போதை மருந்து பற்றிய பல காட்சிகள் 'உட்தா பஞ்சாபை' ஞாபகப்படுத்துகின்றன. அவை பஞ்சாபிற்கு மட்டுமானதல்ல, உலக முழுமைக்கான பிரச்னை. ரித்விகா ஒரு சிறிய இஞ்செக்ஷனுக்காக மன்றாடுவது, அத்தனை எளிதில் மனம் கலங்கிவிடுவது என அந்தக்காட்சிகள் எல்லாம்.

ராமாயணத்தில் ராமன் சீதையைத்தேடி லங்கா சென்றது போல , ரஜினியும் தம் மனைவியைத்தேடி கடல் தாண்டி பாண்டிச்சேரி வருகிறார். என்ன அசோகவனத்தில் இல்லை ராதிகா அது ஒன்றுதான் வேறுபாடு.தங்கியிருக்கும் அறையைத்தட்டி , கண்டேன் சீதையை என்று சொல்வது போல 'உங்க மனைவி'யைப்பார்த்தேன் என சொல்கிறது ஒரு அனுமான் :) இருப்பினும் கணையாழி ஒன்றும் கொண்டு வந்து கொடுக்கவில்லை அது :) தன்ஷிகா அந்த அனுமனை எப்போதும் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருக்க ரஜினி , அவன் நல்ல பையனாத்தாம்மா தெரியிறானெனக் கூறுவது , அதான்டா எக்ஸ்பீரியன்ஸு :) ஹிஹி.. தொடரும் காட்சிகளில் 'பயமா எனக்கா' எனக்கூறிக்கொண்டே தன்ஷிகா காப்பிக்கோப்பைகளை வைக்கும் போது திடுக்கென ஒலிக்கும் அந்த அழைப்புமணிக்கு 'ஜெர்க்'ஆகும் காட்சியில் சிரிக்கிறார் ரஜினி. நாமும் தான். ' என்னப்பா எதாவது சீடி கீடி எடுத்து நெட்ல விட்டியா' என்ற கேள்விக்கு இல்ல மக்களுக்கு நல்லது பண்ணேன் என்று சிவாஜி சொல்லும் போது' அப்ப உன்னய புடிச்சு உள்ள போட வேண்டியது தான்' என்ற காட்சியில் சிரிப்பது போல அத்தனை இயல்பான சிரிப்புக்காட்சி இங்கும்.

மகிழ்ச்சி' என்ற சொல்லை அந்த டான் லீ சீனன் சொல்லவிழைவது, தகடு தகடு என சத்யராஜ் சொன்னது தான் ஞாபகம் வந்தது எனக்கு. இருப்பினும் அந்த வெளிநாட்டவர்களின் உடல்மொழி நாம் நிறையப்பார்த்துச்சலித்த ஜாக்கி சானின் வில்லன்களின் உடல்மொழிதான்.

ஜெயமோகனைப்போல , அவ்வப்போது தமது ஆற்றாமையை கேரக்டர்களைக்கொண்டு பேசவிட்டு திர்த்துக்கொள்கிறார் ரஞ்சித். இருப்பினும் அவரைப்போல 'நான் சொல்வதைக்கேள்' என்ற பிரச்சார நெடியின்றி இருப்பது இன்னமும் சிறப்பு. இருப்பினும் சாரு'வைப்போல அந்த தமிழரசன் கேரக்டர் எனக்குப்பேரே வரலையே , என்னையக்கண்டுக்கவே மாட்றாங்யளே என்று பொறுமுவது இருக்கத்தான் செய்கிறது. :) கேங்ஸ்ட்டர் கதைகளுக்கேயுரித்தான டபுள் கேம்ஸ், போட்டுக்கொடுத்தல், காட்டிக்கொடுத்தல் எல்லாம் படத்தில் இருக்கத்தான் செய்கிறது.எல்லாவற்றையும் கதையோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முறியடிக்கிறார் நாயகன்.

இந்த மூணு பேர்ல ஒருத்தி தான் உன் மகள் என ஒரு மம்மூட்டியின் படத்தில் சொல்லிவிட்டு இறந்துவிடும் ஒரு கேரக்டர். மம்மூட்டிக்கு அத்தனை அலைபாயும் யாரெனக்கண்டுபிடிப்பதில். இங்கயும் அப்படி ஒரு காட்சி இருக்கிறது ...ஆஹா.. செம சென்ட்டிமென்ட்டா போட்டுத்தாக்கப்போறாரேன்னு எனக்குள்ள உதறல்..ஆனால் அப்படி எல்லாம் இங்கு ஒன்றுமில்லை. நேரேயே சொல்லிவிடுகிறார் ரஞ்சித்.

பாடல்களுக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை படத்தில். இருப்பினும் முன்னர் வெளிவந்த கேங்ஸ்ட்டர் படங்கள் எல்லாவற்றிலும் பாடல்கள் பெரும்பங்கு வகித்தன என்பது உண்மை. நெருப்புடா ' உண்மையிலேயே நெருப்புதான்டா. மற்ற பாடல்கள் பின்னில் ஒலிக்கின்றன. சந்தோஷ் நாராயணனுக்கு முதன்முறையாக ஒரு வணிகப்படத்துக்கான வாய்ப்பு. பல இடங்களில் உள்ளேன் ஐயா என வருகைப்பதிவு செய்யத் தவறவில்லை அவர். எண்பதுகளின் இசை , பெர்குஷன்ஸ் வைத்துக்கொண்டு இசைப்பது ஆஹா அப்படியே பிரதிபலிக்கிறது இங்கு, கொஞ்சம் மெட்டாலிக்கா ஸ்டைலில் , அதுவே அவரது பாணியும் கூட. ஹ்ம்..கடைசி அந்த பிறந்தநாள் கொண்டாட்ட காட்சியில் சீன இசை , கேட்க அருமை. ராசைய்யாவின் பாடல்கள் ஒலிக்காத ரஞ்சித் படங்களே இருக்காது போலிருக்கிறது. க்ளப்பில் ராசைய்யாவின் பாடலை ஒரு பாடகி பாடுகிறார். இந்த ரஞ்சித் ஏன் ராசைய்யா கூட சேர்ந்து ஒரு படம் செய்யக்கூடாது ? , ஒரு வேளை கெளதம் மேனனைப்போல அதற்கான தகுதி வரட்டும் எனக்காத்திருக்கிறாரோ என்னவோ ?!. ஹ்ம் :)

இயக்குநர் மிஷ்கின் கேலி செய்வதைப்போல , உச்சக்கட்ட காட்சியில் மலையுச்சியில் நாயகனின் மனைவி மக்களைக்கட்டிப்போட்டு வசனம் பேசும் வில்லன்கள் நல்லவேளை இங்கு இல்லை. :) இருப்பினும் உடுப்பு பற்றிய கேலிக்குப்பதிலடி ரஞ்சித்தினது, அருமை. படத்தில் வன்முறை அதிகம் தான். கேங்ஸ்ட்டர் படங்களில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ? இருப்பினும் பில்லா2 வைப்போல வகைதொகையின்றி அத்தனை குரூரமில்லை.

கொலவெறி'க்குப்பின்னர் மகிழ்ச்சி என்ற சொல்லை பிற மொழிக்காரர்கள் அத்தனை சுலபமாக பேசவைத்ததில் மகிழ்ச்சி ! மேலும் இது வழக்கமான ' ரஜினி' வந்தால் போதும் என எண்ணவைக்கும் படமும் இல்லை என்பது இன்னமும் மகிழ்ச்சி!

 .

1 comment:

  1. மகிழ்ச்சி, உங்கள் விமர்சன கருத்துகளால்..

    ReplyDelete