விலக்கு நாட்களில்
சிறுநீர் பிரிவு
உந்தன் நினைவு
—–
திருட்டு முத்தத்தின்
சிலிர்ப்பு
இந்த மழை
—-
உடனுள்ளவரெல்லாம்
காகிதக்கப்பல்
செய்துகொண்டிருக்கும்போது
நான் கத்திக்கப்பல்
செய்துகொண்டிருந்தேன்
—-
இங்கு
முளைக்குமுன்
எந்த
மரமாயிருந்தாய் ?
—–
ஒவ்வொரு குயிலிடமும்
வேறு வேறு
கானங்கள் இல்லை
—–
காடு வரைய
எண்ணும்போதெல்லாம்
பச்சை மையும்
தண்ணீரும் தீர்ந்துவிடுகிறது
—–
இளைத்த நிலவுக்கு
உணவு கொடுக்க வந்த
சூரியன் நான்
----
அரிதாக யாரும்
செல்லும் சாலையில்
நடந்து சென்று சேகரித்த
பூக்கள் இவை
—–
செடி
கொப்பில் இட்ட கையெழுத்து
மலர்
—-
சிறுவயதில்
வண்ணத்துப்பூச்சியின்
இறக்கைகளைப்பிய்த்து எறிந்தவன்
இப்போது அவைகளைப்பற்றி
கவிதை எழுதி
மீளப்பொருத்தி வைக்க எண்ணுகிறேன் ..
—–
பறவைகள்
நகர்த்திக்கொணர்ந்த
மேகங்கள் இவை
பொழிந்தே தீரும்
——
இலையுதிர்காலம்
வழியாகச்செல்கிறேன்
இளந்தளிர்காலம்
வந்தடைய …
—–
ஒரு மழைக்கும்
இன்னொரு மழைக்கும்
இடையேயான வானம்
எனது
------
நிலவை அடையாளமாகக்கொண்டு
வந்து கொண்டிருந்தேன்
உன்னைப்போல அவ்வப்போது
மறைந்துகொள்கிறது
மலைகள் இதழில் வெளியானவை
http://malaigal.com/?p=8357
No comments:
Post a Comment