Saturday, February 27, 2016

மனதில் ஆர்ப்பரிக்கும் கடலலை..
டெய்லர் ஸ்விஃப்ட்டின் 'ஸ்டைல்'கடலும் அலைகளும் பறவைகளும் கூடவே உடைந்த கண்ணாடித் துண்டுகளுமாக பாடல் இதயத்தின் ஆழம் வரை சென்று தங்கியே விடும். வரிகளெல்லாம் காதலனுக்காக ஏங்கும் காதலியின் பாடல் தான். தமிழில் இந்த ஜானரில் பாடல்கள் குறைவு. யுவனின் இசையில் வெளிவந்த 'மன்மதனில்' வந்த அந்த 'மன்மதனே நீ கலைஞன்தான்' தவிர பெண்ணின் பார்வையில் ஆணை/காதலனைக்குறித்த அழுத்தமான பாடல்கள் ஏதும் இல்லை. இந்தப்பாடலின் பாதி வரிகளை டெய்லர் ஸ்விஃட்டும் எழுதியிருக்கிறார். தாமரை'யின் வரிகளில் நிறைய அந்த உணர்வுகளைக்காண முடிகிறது. ஹ்ம்.. இந்தப்பாட்டுக்கு வரலாம்.


மொழியும் , அது சார்ந்த நிலம் மற்றும் கலாச்சாரங்களும் ஒரு பெண்ணைப் பாடவைக்கிறது.(கட்டுப்படுத்தியும்) வெளிநாட்டில் இதற்கான வாய்ப்புகள் விரவிக்கிடக்கும். இங்கு எழுதினால் கம்பு சுற்ற ஏகப்பட்ட பேர். அதை விட்டு விடலாம்.

பாடல் முழுக்க ஒரே தாளம். ரிப்பீட்டிங் ரிதம், இந்த வகையிலான பாடல்கள் மனதை கவர்ந்துவிடும், ராசைய்யாவின் பெரும்பாலான சோகப்பாடல்கள் இந்த வகையில் அமைந்திருக்கும். 'நான் பாடும் மெளன ராகம்,நிலாவே வா ' ரகப்பாடல்களெல்லம் ரிப்பீட்டிங் ரிதம்'மில் அமைந்து எப்போதும் மனதில் தங்கி விட்டவை. இந்த ஸ்டைல் பாடல் அது போல ரிதமில் அமைந்திருப்பது சுகம்.

உடல் என்னவோ 'அனொரெக்ஸிக்' தான் இவருக்கு, :) இருப்பினும் இதுதான் அழகு என மனதில் உருவேற்றிவிட்ட படியால் அப்படியே தோன்றவேணும் என்ற கட்டாயம் அவருக்கு. முதுகு காட்டி அமர்ந்திருக்கும் காட்சியில் ஐயோ பாவம் இந்தப்பிள்ளைக்கு யாரும் சாப்பாடு போடலியோன்னு தோணும் :)  We never go out of style  :)

இங்கு பாடல் வரிகளுக்கும் மேலே காட்சிப்படுத்தல் இருக்கிறது. இந்த வகையில் ராசைய்யா எப்போதும் அன் லக்கி. இதுவரை யாரும் அவரின் இசைக்கு நிகரான காட்சிப்படுத்தல் செய்ததில்லை எனவே கொள்ளலாம். பாலு மகேந்திராவும் அவ்வப்போது மணி ரத்னமும் தவிர யாரும் அத்தனை Justify செய்ததில்லை.

உடைந்த கண்ணாடிச்சில்லுகள் , கூராகக்குத்திக்கிழிக்கும் உணர்வுகள் , பறந்து செல்லும் அந்த ஒற்றைப்பறவை, பின்னில் அவனைத்தொடரும் முழு அலைகள் , பாதி வரை நனைந்து கிடக்கும் அவனது உடை ,உடல் வழி கடக்கும் சாலைகள்என எங்கு பார்த்தாலும் குறியீடுகள் பாடல் முழுக்க.

இவள் நினைப்பதை அவன் பாடுகிறான் அது போல இவன் நினைப்பதை அவளென அந்த உடைந்த கண்ணாடிக்கூரான துண்டுகளை தம் வாய்க்கு குறுக்கே கொண்டு செல்லுதல். கண்களின் குறுக்கே எடுத்துச்செல்லுதல் என அத்தனை அழகான விவரிப்பு. மின்னல் மழை இது போல ஆங்கிலத்தில் நிறையப்பாடல்கள் வந்திருப்பினும் இது சிறப்பு அதன் காட்சிகளால், நல்லதொரு எடிட்டிங்கினால்.திடும் திடும் என அதிரும் அந்த பாஸ் ட்ரம் (bass drum) சோகப்பாடலில் முதலில் பயன்படுத்தியவர் ரஹ்மான் 'காதல் ரோஜாவுக்காக. அப்போது ஏகப்பட்ட கண்டனங்கள், எந்தப்பாடலுக்கு எந்த மாதிரியான தாளம் என, அங்கு தான் கட்டுடைத்தல் நிகழ்ந்தது. மனதின் வலியை உடல் முழுக்க அதிர வைக்க அதைத்தவிர வேறொரு வாத்தியமும் அத்தனை செய்துவிட இயலாது. அதே தான் இங்கும் பாடல் முழுக்க அதிர்ந்து ஒலிக்கும் அந்த பாஸ் ட்ரம்.

Sea Gull கடற்பறவையின் ஒலி அலைகளுக்கூடான சன்னமாக ஒலிப்பதில் தொடங்கும் பாடல். அவளது மனக்குகையில் முழுதுமாக அவன் நிற்கிறான். அவன் மனதில் ஆர்ப்பரிக்கும் கடலலை...ஆஹா ஆயிரம் வரிகளில் சொல்வதை ஒரு காட்சியில் சொல்லிவிடலாம். ஹ்ம்...காதலைச்சொல்லும் வழி காட்சிப்படுத்தல் ....மொழி உதவாது :) அவள் பார்த்துத்திரும்பும்போது ஒற்றைப்பறவையாகஇருக்கும் அது பல பறவைகளாக அவன் பின்னில் அலைகளினூடே பயணிக்கிறது. இது தான் பறவை விடும் தூது போலிருக்கிறது. இப்பல்லாம் ட்விட்டர் விடு தூது தான் நடக்கிறது . ட்விட்டரும் ஒரு பறவை தானே :)

நெஞ்சிலிருந்து பரவும் அந்தப்புகை முழு மனதையும் ஆக்ரமிக்கிறது , மூளை வரை பரவி. ரொம்ப நாளாக எழுத நினைத்த என்னில் போல முழுதுமாக விரவிக்கிடக்கிறது. புகை பரவி மூச்சை அடைக்கிறது. இனியும் பிழைக்க வேணுமெனில் நீ வேண்டும். தமிழெனில் நெற்றிப்பொட்டில் வந்து நிற்பதாக காண்பிப்பர். இங்கு அது உடல் முழுதுமாகப் பரவிக்கிடக்கிறது. கைகளை வைத்து முகத்தை முழுக்க மூடியபோதும் கைகளின் வெளிப்புறத்தில் அவன் முகம்..உள்ளுக்குள் அவளுக்குத்தெரியும் முகம் வெளியில் தெரிகிறது. பனிப்புகையினூடே சூரிய ஒளி பரவுதல் போல அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவுகிறாள்.

பாடலில் இடையிசையே இல்லை..அத்தனையும் வரிகள்..அவள் பேசி/பாடிக்கொண்டேயிருக்கிறாள்.புதிய முயற்சி. வெர்ஸ் அன்டு கோரஸ் (verse and chorus ) என்ற எப்பொழுதுமான அவர்களின் வெஸ்டனில் இடையே பிரிட்ஜும் (bridge) சேர்ந்து இடையிசை எங்கும் இல்லாத பாடலாக உருப்பெற்றிருக்கிறது .நல்ல கிட்டாரின் பின்னில் ஒலி என அத்தனையுமாகச் சேர்ந்து திரும்பத்திரும்ப கேட்க வைக்கும் பாடல். chorus வரிகளை வாய்ப்பாடு போல ஒவ்வொரு சொல்லாக சொல்லிச்சொல்லி மயக்குகிறாள் ஸ்விஃப்ட் :)  James Dean 50-60 களில் ஒரு ஸ்டைலாக இருந்ததை இங்கு உருவகப்படுத்தி பாடலை எழுதியிருக்கிறார். அழுத்தமான அவளது முன் தோல் உரித்தெத்த சிவப்பு நிற உதட்டுச்சாயம் , அவனது உடைகள் என அத்தனையும் அந்த James Dean ஸ்டைல்.

Just take me on எனும்போது கைகளைப்பறவை போல விரிக்கின்றனர் தலைவனும் தலைவியும் , கவர்ந்து பிடிக்கவில்லையெனில் பறந்து விடுவர் போலிருக்கிறது 15 காட்சிகள் 03:37லிருந்து 03:47 வரை ..அத்தனை அற்புதமான எடிட்டிங்..ஒன்றுக்கொன்று அத்தனையும் தொடர்புடையன. துண்டுதுண்டுகளாக வெட்டி ஒட்டப்பட்டிருப்பினும் ..ஆஹா அனுபவிக்கலாம் அத்தனை துண்டுகளையும்...இந்த இசைக்கான விமர்சனத்தை எழுதும்போது ஒரு நானூறு தடவை ஒட விட்டிருப்பேன் இந்தப்பாடலை.. ஹ்ம்...கொஞ்சமும் அலுக்கவில்லையே :)

No comments:

Post a Comment