Monday, April 25, 2016

காகிதக்கப்பல்







நீ யாரிடமும்  
இதுவரை பாடாத பாடலை  
கேட்கக்காத்திருக்கிறேன்
 
****
மேகங்கள் பிரிக்கும்  
வானத்தை  
பறவைகள்  
பிணைக்கின்றன
****
காகிதக்கப்பல் செய்து  
வைத்துக்காத்திருந்தேன்
கனவில் தான் மழை வந்தது  
அந்தக்கப்பலை கனவினுள்  
எடுத்துச்சொல்லும் ரகசியத்தை  
தேடிக்கொண்டிருக்கிறேன்
****
முதன்முதலாய் சயனைடு  
சுவைத்த நாள் இன்று  
இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறேன்  
கொஞ்சம் முன்னரே  
சுவைத்திருக்கலாம்
உன் உதடுகளை
****
காதலில்  
காத்திருக்க வைத்தாள்  
இப்போது
காதலுக்காகவும்
****
காய்ந்த மரத்தின்  
கொப்புகள்  
அற்றகுளத்து மீனின்  
முள்ளெலும்புகள்
****
எத்தனை துடைத்தும்
கண்ணாடியில் பனித்திரை  
விலகவேயில்லை
இத்தனை நாளும்  
வெளியேயே  
துடைத்துக்கொண்டிருந்திருக்கிறேன்
****
சொற்களற்ற மொழியில்  
இத்தனை நாளும்  
பேசித்தானிருக்கிறாய்  
எனக்குத்தான்  
விளங்கவில்லை
****
நினைத்த எதுவும்  
இதுவரை கிட்டாத 
கவிஞனைப்போல்  
இருக்கிறேன்
****
கூட்டில் விட்டுச்சென்ற  
தாய்ப்பறவையின்  
நம்பிக்கை உன் மேல்





.

மலைகள் இதழில் வெளியானவை
http://malaigal.com/?p=8136

No comments:

Post a Comment