இதுவரை
குறிலாக இருந்த காதல்
இப்போதெல்லாம்
நெடிலாக மாறியிருக்கிறது
வேற்றுமை உருபுகள்
உட்புகுந்திருக்கின்றன.
இன்னிசை அளபெடைகளுக்கு
இனியும் இடம் கிடைக்குமா ?
***
அண்டமே எனதானாலும்
சிறுகை திருடித்தின்னும்
வெண்ணையில் தான்
சுகம்
***
என் கடைசி விருப்பு
பிறர் வருந்தா
இறப்பு.
***
காத்திருக்கும்
நொடிகளில்
இடம் மாறும்
முட்கள்
*****
எத்தனை நாட்கள் தான்
உயிரைப்போல் ஒளிந்திருப்பது
உடலுக்குள் ?
காதல் சொல்!
****
உன்னருகில் ஒரு
பழைய கவிதை
யாரது ?
*****
அற்ற குளத்துத்தவளை
ஒன்று
பாஷோவை அழைக்கிறது
*****
எனது கற்பனைகள் கூட
யாரோ ஒருவர்க்கு
நிகழ்ந்ததுதான்
*****
புதினம் தேய்ந்து
ஹைக்கூவானது
பிறை
*****
நினைத்ததெல்லாம்
சொல்லமுடிந்தால்
கவிதை
முடியாவிட்டால்
காதல்
*****
கண்ணருகில் பறந்த
பட்டாம்பூச்சி
முழு வானத்தையும்
மறைத்துவிட்டது
******
விரும்பிச்சுவைத்த
தேநீர் முடிந்துவிட்டதே
என வருந்தும் போது
நீ பேசத்துவங்கினாய்
******
எல்லாம் கடந்து போகும்போது
நானும் கடந்து போயிருப்பேன்….
****
உலகில் மிகச்சிறந்த
கவிதைகளைப்படைத்தவன்
எனக்கர்வம் கொண்டேன் அவளிடம்
வீனஸிலிருந்து வந்தேன்
என்றாள் மெதுவாக
*****
வீனஸ் தேவதையின் அழகு
ReplyDeleteஎன் மதி முழுவதையும் மறைத்து விட்டது smile emoticon
நன்றி :)
ReplyDeleteஅருமை
ReplyDelete