Tuesday, May 20, 2014

குறும்பாக்கள்




அந்த ஹைக்கூவில்
நடப்பட்ட மூங்கில்கள்
மேலும் வளர அனுமதியில்லை
-
மடக்கி வைத்த
குடையிடம் ஆயிரம்
மழைக்கதைகள்
-
இருபத்துமூன்றரை டிகிரி
சாயுமுன்னரான பூமி
எனக்கு வேண்டும்
-
உடல் நனைந்துவிடக்கூடாதென
குடை பிடிக்கிறது காளான்
தலை நனைந்துவிடக்கூடாதென நான்
-
பறந்து செல்லும்
செங்கால்நாரைகளின்
சேற்றுக்கால்களைக்
கழுவி விட்ட மாமழை
என் கால்களில் கொணர்ந்து
சேர்த்துவிடுகிறது
-
இப்போதெல்லாம்
இறக்கைகளற்ற பறவைகளே
என் கனவில் வருகின்றன.
 

 



இலைகளற்ற மரத்தை
                      காற்று போலும்                       
சீண்டுவதில்லை
-
ஒரு ஆமையின் ஓட்டை
திருப்பிப்போட்டால் எத்தனை
ஹைக்கூக்களை நிரப்பலாம்?
ஹ்ம்.. அதற்கு ஒரு ஆமையைக்
கொல்லவேண்டிவருமே ?!
-
தேநீர் வண்ணத்துப்பூச்சி
தவளை கோவில்மணி இலையுதிர்காலம்
இல்லாத ஒரு ஹைக்கூ இது
-
வருந்தி ஏறிய மலையின்
உச்சியில் பூத்திருந்தது ஒரு பூ
எந்த முயற்சியுமின்றி
-
மூன்றாம் வரிக்கென
காத்திருக்கும் ஹைக்கூ இது
-
மூன்லைட் சொனாட்டா
வாசிக்கிறேன்
பீத்தோவனுக்கு
கேட்கவில்லை
-
தாம் மேய்த்துக்கொண்டிருந்த
மந்தையிலிருந்து ஒரு ஆட்டை
எனக்கென உணவாகக்கொடுத்த
கர்த்தருக்கு நன்றி
-
நீ வழக்கமாக
அமரும் இடத்தில்
ஒரு மரத்தை
வரைந்துவைக்கிறேன்
-
சென்றுவிட்ட பறவையை
அழைத்துவர
வெய்யில் போயிருக்கிறது





.

2 comments: