Sunday, January 26, 2014

அக்காக்'குருவி'

அப்போ எங்களுடைய ஜாகை ரயில்வே வீட்டில் ஸ்டேஷனுக்கு மேலே உள்ள மாடியில். அந்தக்கால மோஸ்த்தரில் ஜன்னல் அதற்கேற்ற கண்ணாடிக்கதவுகளும்,எத்தனை டிகிரி சூடேற்றினாலும் இளகாத இரும்புக்கொண்டிகளையும் கொண்டது. இழுத்து ஜன்னல் கதவைச்சார்த்துவது என்பது, அத்தனை சுளுவில் நடந்துவிடாது. ஐந்து நிமிடமாவது ஆகும் எனக்கு. பரம் பரம் என்று அடிக்கும் காற்று எத்தனை இழுத்தாலும் என் கையைப்பிடுங்கிக்கொண்டு அறைந்து பின் பக்கம் சார்த்திக்கொள்ளும். ’யக்கா இழுத்து இழுத்து கை வலிக்குதுக்கா’ என்பேன். ‘ரெண்டு கையையும் வெச்சு இழுத்து சார்த்துடா’ என்பாள் அக்கா. அந்தக்கண்ணாடிக்கதவுகளூடே ரயில் செல்வதைப் பார்க்கப்பிடிக்கும். சத்தம் ஏதும் கேட்காமல் அதிர்வோடு கூடிய ரயில் ஊர்ந்துசெல்வது தெளிவாகத்தெரியும்.

அந்த வீட்டில் அறைகளைப்பிரிக்க சுவர் என்ற ஒன்றே இருக்காது. முழுக்க மரத்தாலான ஆளுயரப் பலகைகள். கூரையும் சீமை ஒடுகள் வேய்ந்து காணப்படும். வெளியிலிருந்து வீட்டைப்பார்த்தால் அதன் உள்ளே வெளிச்சம் வருவதற்காக முகப்பில் வட்டவடிவக் கண்ணாடி வைத்து, பின்னர் சர்ச்சில் உள்ளது போல ஊச்சியாக கம்பி வைத்து அதில் வேலைப்பாடுகளுமாக அத்தனை அழகாக காட்சியளிக்கும். அந்தக்காலத்தில் இங்கிலிஷ்காரன் கட்டினது. ஜன்னல்களோ நம் கிராமத்து வீட்டில் இருக்கும் திண்ணைகள் போல பெரிதாக இரண்டு ஆட்கள் அமர்ந்து கொள்ள ஏதுவாக விசாலமாக இருக்கும். அதில் அமர்ந்து கொண்டே ஜன்னல் கதவுகளை அறைந்து சார்த்த முற்படுவேன். சாயங்காலம் ஆகிவிட்டால் ஐந்து மணிக்கெல்லாம் ‘சார்த்தும் போராட்டம்’ ஆரம்பித்துவிடும். ‘இன்னுங்கொஞ்ச நேரம் ஆயிருச்சுன்னா கொசு எங்கேன்னு பறந்து வந்துரும், சீக்கிரம் சார்த்துடா’ என்பாள். ‘சார்த்துவது தான் கஷ்ட்டம், திறப்பது ரொம்ப சுலபம், கொண்டிகளை எடுத்துவிட்டு ஒற்றைத்தள்ளு தள்ளினால் பக்கச்சுவரில் போய்ப்படாரென அடிக்கும். அடித்து திரும்ப வருமுன்னர் கொண்டியை மூணாவது துளையில் நுழைத்து விட்டால் அங்கேயே நின்றுவிடும், ஐந்து துளைகள் கொண்ட கொண்டி அது , முதல் துளையில் கதவு வெகு தூரம் போய்விடும், இரண்டு மூன்றாவது துளையில் கொஞ்சம் அருகில் வந்து நிற்கும். எப்போது மூன்றாவது துளையில் அந்தக்கொண்டியைச்செருகி வைத்து விடுவேன். கொஞ்சம் விலகி நின்று பார்த்தால் கண்ணாடி வழி முதுகளத்தூர் செல்லும் பேருந்துகள் ஊர்ந்து செல்வது தெரியும்.

வீட்டைச்சுற்றிலும் முழுக்க வெட்டவெளி என்பதால் வெய்யிலும், காற்றும், பெய்யும் மழையும் வீட்டுக்குள் சுலபமாக கரையேறி வந்துவிடும். வீட்டிற்கு விட்டம் என்பது மூன்று ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருக்கும், அந்த உயரத்திலிருந்து இரு பக்க சுவர்களை இணைக்க தண்டவாளங்களை வைத்து ‘கர்டர்’ போட்டிருப்பார்கள். அந்தக்’கர்டர்’களிலிருந்து பெரிய ஃபேன் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். சுவிட்சைப் போட்டால் சுனாமியே வந்தது போல சுழன்றியடிக்கும் காற்று. ரெகுலேட்டர் வகையறாவெல்லாம் பழுப்பேறிப்போய் அதன் குமிழித்திருக்குவதற்குள் காற்று நம்மை அடித்துக் கொண்டுபோய்விடும். அதனால் எப்போதாவது வெய்யில் அதிகம் இருக்கும் நாட்களில் , வீடு முழுக்க வெய்யிலின் தாக்கம் இருக்கும் போது மட்டும் அதைச்சுழலவிடுவது வழக்கம். எப்போதும் வெறும் சுவிட்சை மட்டும் ஒரு சின்ன ஸ்டூல் வைத்து ஏறிப்போட்டுவிடுவது வழக்கம். அன்று காற்று துளிக்கூட அடிக்கவில்லை, வெய்யில் தாங்கவியலாமல் அடித்துக் கொண்டிருந்தது. வெக்கை பரவி வீட்டுக்குள் இருக்கமுடியாமல் போனது. ‘அந்த ஃபேன் சுவிட்சைப்போட்டு விட்றா’ என்றாள். வேகமாக ஏறிப்போட்டுவிட்டேன். சுனாமி சுழன்றது.

முழுக்க வெட்டவெளி, அருகில் வீடுகள் ஏதுமில்லை. அத்தனை உயரத்துக்கு மரங்களும் இல்லை. அப்போது பார்த்து எங்கிருந்தோ ஒரு சிட்டுக்குருவி வீட்டிற்குள் பறந்து வந்தது. கைக்கெட்டாத தூரத்தில் அவைகள் பறந்து செல்ல ஏதுவான வீடு. ‘கீச் கீச்’ என்று கத்தியபடியே இங்குமங்கும் பறந்துகொண்டிருந்த குருவி சுழன்று கொண்டிருந்த ஃபேனின் இறக்கையில் அடிபட்டு பொத்தென விழுந்தது, ‘யக்கா யக்கா’ குருவி செத்துப்போச்சு’ என்று கத்தினேன். ஓடிவந்தவள், ‘ச்சீ சாகவெல்லாம் இல்லை, அதுக்குத்தான் இந்த ஃபேனைப்போடவே கூடாது என்றவள்,அப்போவெல்லாம் வெள்ளைப்பூண்டு போட்டு வைப்பதற்கு கம்பிக்கூடை ( நரிக்குறவர்கள் கம்பி வைத்து கட்டி விற்பனை செய்வர் ) வைத்திருப்போம். அந்தக் கூடையிலிருந்த பூண்டுகளை வேறு தட்டில் கொட்டிவிட்டு மெல்லக்குருவியை அதற்குள் வைத்து மேலே இருந்த கம்பிகளை கீழிறக்கி மூடினாள். பின்னர்,மஞ்சளை அரைத்துக்கொண்டுவந்து, கம்பிக் கூடையின் ஓட்டைகள் (விரல்கள் நுழையும் அளவு இடைவெளி இருக்கும்) வழியாக அந்தக் குருவியின் இறக்கையை சற்றே தூக்கிவிட்டு மஞ்சளைத் தடவிவிட்டாள்.‘குருவியோ அது பாட்டுக்கு கீச் கீச்’ என்று சப்தமிட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மயங்கிப்போய், கூண்டின் அடுத்த பக்கத்தில் சாய்ந்து கிடந்தது.கொஞ்ச நேரம் கழித்து கைப்பிடி அளவு சோறை ஒரு கொட்டாங்குச்சியில் வைத்து மேல் மூடியை குருவி அறியாது திறந்து உள்ளே வைத்து விட்டாள். அசையாது படுத்துக்கிடந்த அந்தக்குருவி அரவம் கேட்டதும் கால்களை உதைத்து முன்வந்து பார்த்தது. பின்னர் மெதுவாக ஒன்றிரண்டு பருக்கைகளை கொத்தித்தின்ன முயன்றது.

இரண்டு நாள் கழிந்தது. தரையில் வைத்திருந்த கூடையை மெதுவாக எடுத்து மரப்பலகையில் இருந்த ஆணியில் தொங்கவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக ஆறியது காயம். கூண்டுக்குள்ளேயே கீச் கீச் என்று சில சமயங்களில் கத்தும். ‘ஹ்ம். சத்தம் வர ஆரம்பிச்சுருச்சா’ என்று கேலி செய்து கொண்டு அவ்வப்போது தின்ன வைத்திருப்பதை விரல்களை நுழைத்து கொட்டாங்குச்சியில் போட்டுவிடுவாள். இருப்பினும் அதன் உடலிலும் இறக்கையிலும் அந்த மஞ்சள் கறை இன்னும் போகவில்லை. சில சமயங்களில் மூக்கை வைத்து நீவுகிறேன் பேர்வழி என்று காயத்தில் பட்டுவிட்டால் சிறிது நேரம் கத்தும். பின்னர் அமைதியாகிவிடும். ‘யக்கா இந்தக்குருவிய நாமளே வளப்பமா’ என்று கேட்டால் ‘ போடா அதெல்லாம் எப்பவும் பறந்துக்கிட்டே இருக்கிறது, இப்டி கூண்டுலல்லாம் அடைச்சி வெக்கக்கூடாது, எதோ அடிபட்டுருச்சேன்னு தான் வெச்சிருக்கேன்.’ அப்புறம் ? ‘சரியானவொடனே கதவைத்திறந்து விட்டுருவேன்’ என்பாள் அக்கா.

நான் அருகில் சென்றாலே படபடவென சிறகுகளை அடித்துக்கொண்டு தன்னைப்பிடிக்கத்தான் வருகிறான் என நினைத்து கூண்டின் அடுத்த பகுதியில் போய் ஒண்டிக்கொள்ளும். அக்கா திட்டுவாள், ‘டேய் அது பக்கத்துல போகாத, எவ்வளவு பயப்படுதுன்னு பாரு என்று’. பள்ளிக்கூடம் போவதற்கு முன்பும், வீடு வந்து சேர்ந்தபின்பும் அதைப்போய்ப்பார்க்காமல் எனக்கு உறக்கமே வருவதில்லை. ஒரு நாள் வீடு திரும்பி வந்த போது கூண்டுக்குள் அந்தக்குருவியைக் காணவில்லை. பயந்துபோய் அக்காவிடம் சென்றேன் ‘இதைத்தான் கேட்க வந்திருக்கிறான் என ஊகித்தபடி ‘என்ன குருவிதானே, மூடியைத்திறந்து பறக்கவிட்டுட்டேன்,காயம் தான் ஆறிருச்சில்ல’ என்றாள். எனக்கு அப்போது ஒன்றுமே சொல்லத்தோணவில்லை. ‘இல்லக்கா, அது வலில கத்துச்சு நேத்து, டேய் பொய்யில்லாம் சொல்லக்கூடாது, அதான் ஆறிருச்சு நான் பாத்துக்கிட்டு தானே இருக்கேன்..பெரிசா பேச வந்திட்டாரு, போ, போயி ஜன்னல் கதவெல்லாம் சார்த்து என்று தொடர்ந்து விரட்டினாள்.அன்றைக்கு ஜன்னல் கதவுகள் கீச் கீச் என்று சத்தமிட்டவாரே என் இழுப்புக்கு ஏற்றவாறு ஒலியெழுப்பிச் சார்த்திக்கொண்டது.

அவ்வப்போது பக்கத்திலிருக்கும் மரங்களில் அந்தக்குருவி தென்படுகிறதா என்று பார்த்துப்பார்த்து ஏமாந்து போவேன், அப்போதெல்லாம் தூரத்திலிருந்து என்னைப்பார்த்து சிரித்துக்கொள்வாள் என் அக்கா.


.

11 comments:

  1. வணக்கம்
    (குருவியை நீங்கள் பார்க்க உங்களை அக்கா பார்க்க... ஏமாந்து போனதுதான் மிச்சம் )
    கதையின் தொடக்கமும் முடிவும் சிறப்பாக உள்ளது...வாழ்த்துக்கள்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்றி சின்னப்பயல். I felt nostalgic.

    ReplyDelete
  3. ஹ்ம்.. சபரீசன்...நன்றி :)

    ReplyDelete
  4. நல்லதொரு அனுபவப் பகிர்வு.நீங்கள் இப்பதிவின் மூலம் நான் மறந்து போன பூண்டுக் கூடையை நிநினைவுபடுத்தியுள்ளீர்கள்.எங்கள் பகுதியில் அதனை வெங்காயக் கூடை என்று அழைப்போம்.அக்கா, குருவிக்கு மஞ்சள் பத்து போட்டதைப் போல நானும் கோழி குஞ்சுக்கு காலில் சப்பைக் கட்டு கட்டியிருக்கிறேன்.:)
    என்னுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தால் மகிழ்வு.

    தொடருங்கள் தோழரே..


    ReplyDelete
  5. உங்கள் கவிதைகளைத்தொடர்ந்து வாசிக்கிறேன் கீற்று தளத்தில்..'செல்பேசி'யிலிருந்து அழிக்க முடியாத இறந்து போன நண்பனின் எண்' குறித்தான கவிதை என்னால் என்றும் மறக்கவியலாத ஒன்று...

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அருண்.

    ReplyDelete
  6. நான் உங்கள் எழுத்துக்களை வெகு நாட்களாக ரகசியமாக ரசித்து வருகிறேன்.இப்போதெல்லாம் அந்த் ரகசியத்தை என்னால் காப்பாற்ற முடியவில்லை :)
    என் எழுத்துக்களையும் நீங்கள் கவனிப்பது மகிழ்ச்சி...

    ReplyDelete
  7. ஃபேஸ்புக்'ல இருக்கிறீங்க தானே.?!

    https://www.facebook.com/arun.gandi?fref=ts

    இது உங்க ஐடி போலத்தான் தெரியுது ! :) விவாதங்களில்,பின்னூட்டங்களில் அவ்வளவாக கலந்து கொள்வதில்லையா ?! :) நாங்கல்லாம் பரத்திக்கிட்டு கெடக்கம் :) அங்க..!!

    ReplyDelete
  8. நானே தான்.இனிமேல் கலந்துகொள்ள முயல்கிறேன்.

    ReplyDelete
  9. ஹ்ம்..வாங்க கதைக்கலாம் :) :)

    ReplyDelete