Wednesday, March 27, 2013

பிடித்துத்தானிருக்கிறது



என் கருத்துகளுக்கு
மதிப்பளிப்பவர்களுடன் மட்டுமே
என்னால் தொடர்ந்தும்
தொடர்பிலிருக்க முடிகிறது

மாற்றுக்கருத்துகளுக்கு இடமளிக்க
வேண்டுமென்று நினைத்தாலும்
என் கருத்துகளுடன் உடன்படுபவர்களையே
அரவணைத்துச் செல்ல முடிகிறது

என் குறைகளை
முகத்தில் அடித்தாற்போல்
என்னிடம் சொல்லாதவர்களையே
அருகில் வைத்துக்கொள்ள முடிகிறது

வெளிப்படையாகச் சொல்லாமல்
அதை நாசூக்காகச் சொல்லுபவர்களை
இனங்கண்டுகொள்வதில்
என் ஆர்வம் அடங்கியிருக்கிறது

எனக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களின்
சூழல்களில் மட்டுமே என்னால்
தொடர்ந்தும் தயக்கமின்றி
இயங்க முடிகிறது.

என்னால் கண்டிப்பாக
செய்ய இயலாதவற்றைக்
கண்டுகொள்ளாமல் இருப்பவர்களையே
எனக்கு மிகவும் பிடித்துப்போகிறது

என் திறமையை இனங்கண்டு
புன்முறுவலைக் கண்களில் காண்பித்து
சிறிதே தலையை மட்டும் அசைத்து
அளவுக்கு மீறிப்பாராட்டாதவர்களின்
அருகாமையை என் மனம் விரும்புகிறது

இத்தனை இருப்பினும்
நான் எதிர்பார்க்கும் தகுதிக்குச்
சற்றுக் கீழிருப்பதே
என்னிடம் நிலைக்கிறது

இது போன்ற கவிதைகளை
முதல் வரியிலிருந்து
வாசிக்க ஆரம்பித்து
பத்திகள் செல்லச்செல்ல
கொஞ்சம் கொஞ்சமாக
உங்களை என்னிடம்
கண்டுகொண்டவர்களுக்கென
தொடர்ந்தும் எழுதுவது
எனக்குப் பிடித்துத்தானிருக்கிறது


.

3 comments:

  1. மிகமிக அருமை
    என்னையும் உங்களிடம் கண்டு கொண்டேன்
    காணச் செய்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ரமணி சார்...வெகு நாட்களுக்குப்பின்னதான உங்கள் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete