Thursday, March 14, 2013

‘கனவாரோ மீயோ’ (ஜோர்பா தி க்ரீக்)







அடித்துப்பெய்கிறது மழை. அந்தத்துறைமுகத்தில் பொருட்களை ஏற்றுவதும் ஆட்கள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டும் இருக்கிறார்கள்.குடையை ஒரு கையில் வைத்துக்கொண்டு மறுகையில் ஒரு கைப்பையுமாக கப்பலேறச்சென்றவன் தனது புத்தகக்கட்டு நனைவது கண்டு குடையைப் பிடித்துக்கொண்டு அதன் மேலேயே உட்கார்ந்து விடுகிறான்.அவன் தான் எழுத்தாளன்.( அலன் பேட்ஸ் )தனது புத்தகம் நனைவது கூடப்பொறுக்க இயலாதவன். மழை விமர்சனம் செய்கிறது அவனது புத்தகத்துக்கு :) , அந்த விமர்சனத்தைப் பொறுக்காமல் தடுக்க நினைத்துக்குடை பிடிக்கிறான். மாலுமி அறிவிக்கிறார் , காலநிலை இப்போது அவ்வளவு சரியில்லை இன்னும் மூன்று மணிக்கூறு கழிந்தே கப்பல் புறப்படும் என்று. அதற்கிடையே தூக்கிக்கொண்டுவந்த மூட்டைகளில் ஒன்று கீழே விழுந்துவிடுவதைப்பார்த்து உதவிக்குச்செல்பவன் மீண்டும் வந்து அந்த புத்தகக்கட்டு மேலேயே அமர்ந்து கொள்கிறான்.

வலுக்கட்டாயமாக பிரயாணிப்பவர் அனைவரும் ஒரு அருகிலுள்ள கட்டிடத்தில் இளைப்பாற வைக்கப்படுகின்றனர்.மிடுக்கான தோற்றம் கண்டு அனைவரும் அவனை ரசிக்கின்றனர்.அதில் பெண்களும் அடக்கம்.இருப்பினும் அவனுக்குரிய கூச்ச சுபாவம் கொண்டு அவர்களின் நேரடியான பார்வையைத் தவிர்த்து விடுகிறான். எழுத்தாளன் என்றால் தன்னைச்சுற்றி நடப்பவற்றை கூர்ந்து கவனிப்பவனாக , ஒரு பார்வையாளனாக மற்றும் அந்தச்செயல்களை மாற்ற நினைப்பவனாக இல்லாமல் இருக்கவேண்டும் என்ற கூற்றுக்கிணங்க அமைதியாக அமர்ந்திருக்கிறான். அடித்துப்பெய்து கொண்டே இருக்கிறது கிரேக்கத்திலும் பெய்யும் அந்த மழை.

தனக்குள்ளேயே தீவிர ஆலோசனையோடும், அத்தனை விரைவில் வெளிக்கொண்டு பேசிவிட முடியாதவனுமாக, எதையும் ஒரு முன்யோசனையுடனும் அணுகுபவனாக, அதே சமயம், தனது நிலையிலிருந்து எக்கணமும் தாழ்ந்து போய்விடுபவனாக இல்லாமல் , பிறர் தம்மை ஒரு சொல் கூட சொல்ல வாய்ப்பளிக்காதவனாக இருக்கிறான் அந்த எழுத்தாளன்.அருமையான பாத்திரப்படைப்பு.
பெய்துகொண்டிருக்கும் மழையில் கட்டிடத்தின் அத்தனை கண்ணாடிகளும் நனைந்துபோய் வெள்ளைப்பூச்சாக ஆவி பரவிக்கிடக்கிறது. முகத்தைக்கண்ணாடியில் வைத்து உள்ளே யார்யார் இருக்கிறார்கள் என்று உற்றுப்பார்த்து விட்டு , கதவைத்திறந்து கொண்டு நேரே நம்ம எழுத்தாளனிடம் வருகிறான் ஜோர்பா..! அந்தக்கண்ணாடியில் முகத்தை உரசும்போதே தெரிகிறது இவன் தான்தோன்றித் தனமானவன் என்று!



எப்போதும் யாருடனாவது பேச வேண்டும், தனியே இருந்தால் போரடித்துக்கொன்றுவிடும் , நிறைய நண்பர்கள் வேண்டும், எதையாவது செய்துகொண்டேயிருக்கவேண்டும் , அறிமுகமில்லாதவரிடமும் கூட வலியப்போய் தம்மை அறிமுகம் செய்துகொண்டு பேச்சை முதலில் தாமே ஆரம்பித்து வைப்பது என்ற நேர் எதிரான கதாபாத்திரம் ஜோர்பா ( ஆந்தனி க்வின் ) எதோ ஒன்று அந்த எழுத்தாளனிடம் வசீகரிக்க அவனுடனேயே அமர்ந்து விடுகிறான் ஜோர்பா. எப்படியும் மூன்று மணிநேரம் கழித்துத்தானாக வேண்டும்.எதற்கு மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு தனக்குள்ளேயே யோசிக்க ஒரு விஷயம் கூட இல்லாதிருப்பினும் , இருப்பதாக போலியாகக்காட்டிக்கொண்டு , பிறரிடமிருந்து விலகியிருந்தால் தம்மை மேலானவர் என்று அனைவரும் நினைப்பர் என்ற போலிச்சித்தாந்தங்கள் ஏதுமில்லாத ஜோர்பா..!

கபகபவெனச்சிரிக்கிறான் ஜோர்பா. விளையாட்டுப்பிள்ளை போல, எதையும் அந்த நிமிடத்தில் அனுபவிக்க நினைக்கிறான் எந்தவொரு நிமிடத்தையும் முன்னரே யோசித்து இப்படித்தான் வாழவேண்டும் என்று திட்டம் தீட்டிக்கொண்டு வாழ நினைக்காது , வாழ்க்கை அது போன போக்கில் , அந்த நிமிடங்களை சுவாரசியமாகக் கழித்துவிடவேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கொண்டவன் ஜோர்பா. எத்தனை பேருக்கு வாய்க்கும் இந்த வாழ்க்கை. ‘உங்களை நான் பார்த்தேனே, அந்தப் புத்தகத்தைக் காப்பாற்ற எத்தனை பாடு பட்டீர்களென” என்று கூறிச்சிரிக்கிறான் ஜோர்பா. சுற்றி அமர்ந்திருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிறு கூச்சமுமின்றி.

“தலையிருக்கிறது , காலும் கையும் இருக்கிறது,எதையாவது செய்து பிழைத்துக்கொள்ளலாம் ,இதற்காக மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்ள  வேண்டியதில்லை” என்று வாழ்க்கையை அதன் போக்கில் போக விடுகிறான்.கட்டற்ற வாழ்க்கை,மேலிருந்து யாரும் கட்டளை இடுவதை விரும்பாத ஜோர்பா. இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் என்னவெல்லாம் எழுதலாம் ?! ஹ்ம்... எனினும் திரையில் அந்த எழுத்தாளன் அவனைத்தவிர்க்கவே விரும்புகிறான். முகம் கொடுத்துப் பேச மறுக்கிறான்.



வலிய வந்து பேசுபவனை யாரும் விலக்கவே நினைப்பர், பின்னாலே இவன் எதாவது உதவி எதிர் பார்ப்பான் என்றோ இல்லை நம்மை ஏமாற்றி எதோ பறிக்க நினைப்பான் என்றோ நினைப்பது இயல்பு.அதே மனநிலையுடனே நமது எழுத்தாளன் அவனை சிறிது எட்ட நிற்கவைத்தே பதில் கூறுகிறான். பிறகு சமாதானமாகி , இவன் தமக்கு ஏதும் தீங்கு நினைப்பவனல்ல என்ற முடிவுக்குப்பின் , தமது சிகாரில் ஒன்றைக்கொடுத்து பற்றவைத்தும் விடுகிறான்.நட்பு தொடங்குகிறது இருவருக்குமிடையே.

இப்படியாக இந்த இருவரைச்சுற்றியே சுழல்கிறது கதை.முழுக்க எழுத்தாளனின் எந்த விஷயத்தையும் எழுதி விடவே வேண்டும் என்று எப்போதும் பேட்டி கொடுக்கும் மனநிலையிலிருந்துகொண்டு , தம்மைச் சுற்றி நடப்பனவற்றை பார்த்துக்கொண்டு ,அவதானித்துக்கொண்டே இருக்கிறான் அந்த எழுத்தாளன். தம்மால் இவனைப்போல இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எப்போதும் அவனுக்குள் உழன்றுகொண்டே இருக்கிறது படம் முழுக்க.’அன்டர் ஆக்டிங், அன்டர்ப்ளே’ என்பது வெகுவாக வாய்க்கிறது இவருக்கு. பொதுவாகவே ஆங்கிலப்படங்களில் தெறித்து விழக்கூடிய பேச்சுகளோ இல்லை சிரிப்புகளோ , நமது திரைப்படங்களைப்போல எப்போதும் இருப்பதேயில்லை. அதுவும் இந்தக்கேரக்டரே அவ்வாறு அமுக்குளியாகவே இருப்பதால் இன்னமும் தனக்குள் சுருங்கி வார்த்தைகள் எண்ணி விழுகின்றன.

ஜோர்பா எப்போதும் சிரித்துக்கொண்டும் , உரக்கப்பேசிக்கொண்டும் , எப்போதும் விசிலடித்துக்கொண்டும் தம்மை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்ற சிறுபிள்ளையின் மனதோடு அலைகிறான். இப்படி இருப்பவர்கள், வளர்ந்த பின்னும் இப்படியாகவே தொடர நினைப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு சோகம் மனதை அழுத்திக்கொண்டு இருப்பதை நான் நிறையப் பார்த்திருக்கிறேன். அணுக்கமாக அமர்ந்து சில அன்பான வார்த்தைகளைப்பேசி , விஷயத்தை வெளிக்கொணர்ந்துவிடலாம், ஆனால் அப்படியாக ஏதுமில்லை இந்த ஜோர்பாவுக்கு. “எழுத்தாளன் என்றால் என்ன எழுதுவாய் காதல் கதைகளா ?”   “இல்லை  நான் கவிதைகளும் ,  கட்டுரைகளும் எழுதுவேன்” “அதென்ன கட்டுரைகள் , அப்படி என்றால் என்ன ?” என்று கேட்கிறான். சீரியஸான விஷயங்கள் ஜோர்பாவுக்குத் தெரிவதேயில்லை என்பது அவனது இந்தக்கேள்வியிலிருந்தே தெளிவாகிறது. விடாத மழை துறைமுகமெங்கும் பெய்துகொண்டேயிருக்கிறது. கொஞ்சம் வெளியே போய்ப்பார்த்துவிட்டு வரும் ஜோர்பா “ இப்ப ஜோர்பாவைபற்றி என்ன நினைக்கிறாய் ? “ ஜோர்பா up or  ஜோர்பா down ?!  என்று அந்த எழுத்தாளனிடம் :) “ பிறகு ரம்’மிற்கு ஆணை கொடுத்து குடிக்கும்போது , எழுத்தாளன் கடவுளை வேண்டிக்கொள்கிறான் , ஜோர்பா “ ஏன் சாத்தானையும் வேண்டிக்கொள்ளலாம்” என்று எள்ளலோடு சொல்கிறான்.

இப்படி எப்போதும் எதிர்மறையாகப்பேசிக்கொண்டும், இது ஏன் இவ்வாறு மட்டுமே இருக்கவேண்டும், மாற்றினால் என்ன என்று நினைப்பவனை இந்தச்சமூகம் வாழவிடுகிறதா ? , அடித்துப்போட்டு அவனையும் அதனுள்ளே உழலவிட்டு , வேடிக்கை தான் பார்க்கும்.நல்லவேளை அப்படியாக ஏதும் நடக்கவில்லை நம் ஜோர்பாவிற்கு. சந்தூரி ( நம்ம ஜம்மு காஷ்மீரில் வாசிக்கும் “கம்பியிழை வாத்தியக்கருவி” சந்தூர் போலத்தான் அதுவும் ) வாசிக்கும் நம் ஜோர்பா. எப்போதும் அதைக் கையில் தூக்கிக்கொண்டே அலைகிறான் தாம் செல்லுமிடமெங்கும். 



ரே சீரான வாழ்க்கை வாழ்பவர்கள் என்ன சாதித்து விடப்போகின்றனர் வாழ்க்கையில். அப்படி ஆடும் மாடும் கூட வாழும். எதையும் அக்கணத்தில் ரசிக்க வேண்டும் , அந்த நேரங்களில் நடப்பவற்றை சட்டை செய்துகொள்ளாமல் , அது போன போக்கில்,அப்படி நடக்கும் நிகழ்வுகள் நமது ஓட்டத்தை பாதிக்காது விலகி நின்று பார்வையாளனாக , அதற்காக ஒரு ஞானி போல எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாது விலகி நின்று விட்டேற்றியான பார்வையிலின்றி , அதனுள் பயணித்துக்கொண்டு எள்ளலோடு கடந்து செல்லவேண்டும் என்று ஜோர்பா நினைக்கிறான் செய்முறையில் காண்பிக்கவும் செய்கிறான்.

கப்பல் புறப்படுகிறது. எப்போது எழும்பும் எப்போது தாழும் என எதிர்பாராது ஆடும் கடல் அலையில் தத்தளிக்கிறது, உள்ளே இருப்பவர் அனைவரும் தம் இடத்தை தக்கவைக்க இயலாமல் அலையோடு சேர்ந்து இங்குமங்குமாக அலைக்கழிக்கப்படுகின்றனர். வாழ்க்கை என்னும் ஓடம்.! அப்போதும் அங்கு அமர்ந்து தமது பழக்கூடையைப்  படாத பாடுபட்டுப் பிடிக்க நினைத்து இருப்பினும் இயலாமல் அது கீழே விழுந்து விட்டதைப் பார்த்து சிரிக்கும் பெண்ணை ‘உனக்குப்பிடித்திருக்கிறதா’ என்று கேட்கிறான் ஜோர்பா. ஹ்ம்...என்ன ஒரு கேரக்டர்டா நீ ஜோர்பா.!

பயணத்தில் எழுத்தாளனிடம் பெரிய புத்தகக்கட்டு, ஒரு கைப்பை , அதுக்கும்மேலே ஒரு குடை , அதை மட்டுமே எப்போதும் பிடித்துக்கொளும் அந்தக்கை, இத்தனை சுமைகளைக் கூடவே  வைத்துக்கொண்டால் எந்தப்பயணம் சுலபமாகும்?! ஜோர்பாவிடம் ஒரு ஒரு சந்தூரி வாத்தியம் , தோளிலே தானாகத்தொங்கிக் கொள்ளும் ஒரு பை, தவிர வேறேதுமில்லை. சுகமாக இருகைகளுக்கும் சுதந்திரமான பயணம்..!

இவர்கள் இருவரை மட்டுமே காண்பித்துக்கொண்டிருக்காமல் படத்தில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றன. ‘மிமித்தோஸ்’ ,ஏறக்குறைய ஜோர்பா’வைப்போலவே இருக்கும் இன்னொருவன் அந்த மலைக்கிராமத்தில், என்ன கொஞ்சம் மறை கழன்றவனைப்போல எங்கும் சுற்றிக்கொண்டிருப்பவன் இவன்,
அந்த ஹோட்டெல் வைத்து நடத்தும் ‘ஃப்ரெஞ்ச் பெண்மணி ஹார்ட்டென்ஸ்’ , ‘என் தலையில் எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ, அத்தனை பேருக்கு அவள் ஆசைநாயகி’ என்று கெக்கலிக்கிறார்கள் அவளைப் படத்தில். பிறகு அந்த அழகிய ஒரு கைம்பெண் , மழையில் நனைந்து வரும் அவளின் ஆட்டைப்பிடித்து மறைத்து வைத்துக்கொண்டு அவளைத் தேடவிட்டு , கண்களாலேயே அவளின் அழகைப்பருகும் கிராமத்து மனிதர்கள். இன்னபிற முதியவர்கள் பெண்மணிகள், எல்லோருக்கும் ஒரே போல கருப்பு உடை ( படமே கருப்புவெள்ளை தானே :) ) அணிந்து எதோ சூனியக்காரிகள் போலவே காட்சியளிக்கின்றனர்.



அந்த அழகிய கைம்பெண்ணிடம் அவளின் ஆட்டைத்திருப்பி ஒப்படைக்கும்போது , அந்த எழுத்தாளன் அவளுக்கு குடை கொடுக்கிறான். முதன்முதலாக தாமாகத்தமது கூட்டை விட்டு  வெளிவந்து தைரியமாக செய்யும் ஒரு காரியமாக இருக்கிறது. கண்களாலேயே நன்றி சொல்கிறாள் அவள். அவளையே நினைத்துப் பைத்தியமாக சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு உள்ளூர் விடலைப்பையன் , பின் அவனின் முரட்டுத்தந்தை எனப்பல கதாபாத்திரங்கள் நம்மைப் படத்தோடு ஒன்ற வைக்கின்றன.

ஜோர்பாவும் எழுத்தாளனும் இரவில் அந்த விடுதியில் தங்குகின்றனர். ஹார்ட்டென்ஸ் தமது கதையை மதுவோடும்,புகையோடும் விவரிக்கிறாள். மூன்று அட்மிரல்கள் மூன்று தாடிகள் , ஒவ்வொரு தாடியிலும் ஒவ்விரு விதமான நறுமணங்கள் , இருளிலும் அவர்கள் அவளைப் புணரும்போதும் அவளால் யாரென்று அடையாளம் தெரிந்துகொள்வதைச் சிலாகித்து விவரிக்கிறாள், எழுத்தாளனுக்குச் சிரித்து மாளவில்லை. ஜோர்பா அந்த இரவை அவளுடனேயே கழிக்கிறான். ”கனவாரோ மீயொ“ :) அத்தனை ஆண்களும் குரூரமானவர்கள் , காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு விடுவர் என்று கூறுகிறாள். அந்த நான்கு கனவான்களின் கைம்பெண்.

சுரங்கத்தில் வேலை பார்த்துவிட்டு அப்படியே திரும்பும் ஜோர்பாவின் தோற்றத்தைப் பார்த்து அந்த தேவாலயத்தில் இருப்பவர்கள் ‘,சாத்தான் சாத்தான்’ என்று கூவி பிறரையும் துணைக்கழைக்கச்சென்று விடும்போது தண்ணீரை ஊற்றி தம்மைக்கழுவி விட்டு அந்தக்குடுவையில் மதுவை நிரப்பி வைத்து விட்டு மரத்தின் மேலேறி நின்றுக்கொண்டு பார்க்கிறான் ஜோர்பா. அங்கு வரும் அந்த தேவாலய மதகுருக்கள் சந்தேகக்கண்ணோடு குடுவையைத்திறந்து பார்த்து , பின்னர் சுவைத்துப்பார்க்கும் போது மதுவெனத் தெரிந்து மகிழ்ந்து குடிக்கின்றனர். பின்னர் அவர்களோடு சேர்ந்து ஜோர்பாவும் குடித்து மகிழ்கிறான். கடவுளும் மயங்கும் மது சாத்தானிடமிருக்கிறது..! :)

மலையிலிருந்து மரங்களை வெட்டி கீழே கொண்டுவருவதற்கு கம்பிகள் , இன்ன பிற உபகரணங்கள் வாங்குவதற்காக குதிரை ஏறிப்பயணிக்கிறான் நகரை நோக்கி ஜோர்பா. எங்கிருந்தோ அந்த இடத்திற்குத் தவறாது வந்துவிடும் அந்த ஹார்ட்டென்ஸ், ‘ஜோர்பா நீ போக வேண்டாம்’ எனத்தடுக்கிறாள், திரும்பி வருவேன் என்று கூறிவிட்டு தொடர்ந்து பயணிக்கிறான். எல்லோரும் இப்படித்தான் சொல்வார்கள்,பின்னர் என்னிடம் யாருமே திரும்பி வருவதில்லை என்று புலம்புகிறாள் அவள். ஊர்விட்டு ஊர்போனவன் அங்கும்போய் குடித்துவிட்டுக்கும்மாளம் போடுகிறான். பரத்தையரோடு சுகிக்கிறான். ஹார்ட்டென்ஸ் கூறியது போலவே அவளை மறந்தே விடுகிறான். எழுதும் கடிதத்திலும் ஒரு சொல் கூட ஹார்ட்டென்ஸ் பற்றி குறிப்பிடாது இருக்கிறான். அதைக்கண்டு துணுக்குற்ற எழுத்தாளன், ஃபெரெஞ்ச் பெண்மணிக்கு கடிதத்தை வாசித்துக்காட்டும்போது அவளைப்பற்றிக்கேட்டதாக எழுதியிருப்பதாக பொய் சொல்லி அவளுக்கு நிம்மதி தருகிறான்.

இந்த இடைவெளியில் அந்த அழகிய கிரேக்கக் கைம்பெண்ணை சாலையில் பகலில் சந்திக்க வாய்ப்பி ருந்தும் எப்போதும் தனக்கேயுரித்தான கூச்சத்தில் எழுத்தாளன் அவளிடம் முகம் கொடுத்துப் பேசாது இருந்து விட்டு , பின்னர் இரவில் தனித்திருக்கும்போது அவளின் வீட்டுக்கதவைத்தட்டி உள்ளே செல்கிறான். நீயும் இரவில் தான் வருவாயா என்று அவளின் முகம் குழைந்த ஏக்கப்பார்வை மனதை என்னவோ செய்கிறது. சரி வந்து விட்டாயல்லவா , வா என்று கூறி உள்ளே அழைத்துச் செல்கிறாள் அவள். உள்ளே அவர்கள் சந்தோஷமாக இருப்பதை எப்போதும் அவள் வீட்டைச்சுற்றியே அலைந்து கொண்டிருப்பவர்கள் சென்று அந்த விடலைப்பையனிடம் கூறிவிட அவன் அதைப்பொறுக்காமல் கடலில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறான். பின்னர் நடக்கும் மாஸ் (Mass ) ல் கலந்து கொள்ள வருபவளை ஊரே கூடிநின்று ஏளனம் செய்கிறது, அவளை எங்கும் செல்லவிடாது துரத்தி துரத்தி அடிக்கின்றனர், அந்த எழுத்தாளன் ஏதும் செய்ய இயலாதவனாக பார்த்துக்கொண்டே நிற்கிறான் அப்போதும் எழுத்தாளனாகவே. காப்பாற்ற இயலாமல் அந்த மிமித்தோஸை அழைத்து , ஜோர்பா’வைக்கூட்டி வரச் சொல்லி  அவளைக் காப்பாற்றுகிறான் , இருந்தும் அவள் அந்த விடலைப் பையனின் முரட்டுத் தந்தையால் கழுத்தறுபட்டு இறக்கிறாள்.



அந்தப் ஃப்ரெஞ்சுப்பெண்ணின் மரணம் எவ்வளவு குரூரமாக அமைந்திருக்கிறது படத்தில், தாம் இறக்கப் போவது தெரிந்து ஜோர்பாவுடனேயே இருக்கிறாள். கிராமத்து சூனியக்காரிகள் அனைவரும் சுற்றி நின்று எதோ வழியனுப்ப வந்தவர்கள் போல, எப்போது சாவாள் , இருக்கும் அத்தனையையும் தூக்கிக்கொண்டு போவோம் என்று வல்லூறுகள் போல கூறுபோடக் காத்திருக்கின்றனர். அது தெரிந்து ஜோர்பா எல்லோரையும்  கோட்டை கழற்றி விசிறி அடித்து விரட்டுகிறான்.அப்படியும் வீட்டைச்சுற்றிச்சுற்றியே வலம் வருகின்றனர். இப்படி ஒரு சாவு கனவிலும் கூட யாருக்கும் வாய்க்கக்கூடாது. இறந்துவிட்டாள் என நினைத்து அனைவரும் திரைச்சீலைகளையும் , படுக்கையையும் , அலமாரிகளையும் இரைத்து ஒவ்வொன்றாகப் பிடுங்கிக்கொண்டு செல்வது , எரிந்த வீட்டில் கிடைத்து லாபம் என்று சுருட்டிக்கொண்டு செல்ல நினைக்கும்போது திடுக்கிட்டு எழுகிறாள் ஹார்ட்டென்ஸ்.சுற்றி நடப்பவற்றைப்பார்த்து விட்டு மீண்டும் மயங்கிச்சாய்கிறாள் ஜோர்பாவின் நெஞ்சில். கடைசியாக மரித்தே போகிறாள் அவள் ஜோர்பாவின் கைத்தாங்கலில். வீடு முழுதும் சூறையாடப்படுகிறது. இவர்களெல்லாம் மனிதர்கள் தானா என்று கேட்குமளவுக்கு கொடுமைகள் அரங்கேறுகிறது. கடைசிக்கு மிஞ்சுவது அவளின் இறந்த உடலும் , அவள் எப்போதும் பாசத்துடன் வளர்த்த அந்த “கனவாரோ மீயோ” கிளியும். எல்லாக்களேபரங்களும் ஓய்ந்த பின்னர் ஜோர்பா அவளின் ஞாபகமாக அந்தக்கிளிக்கூண்டை தமது கோட்டால் மூடி எடுத்துச்செல்கிறான்.

கூட வரும் எழுத்தாளன் , ‘அவளை அப்படியே விட்டுவிட்டாயே’, எனும்போது ‘என்ன செய்வது, உள்ளூர்க் கார்டினல்கள் அவள் வேற்றூர்க்காரி என்பதால் கல்லறையில் புதைக்கவிடமாட்டார்கள் , மேலும் அவள் இறந்து விட்டாள் என்ன செய்யலாம் சொல்’ என்கிறான் ஜோர்பா கண்ணீர் உகுக்கிறது நமக்கு.

பின்னரும் தாம் வாங்கி வந்த கருவிகளை வைத்து பாலம் கட்டி மலை மேலிருக்கும் மரங்களை வெட்டி கீழ் நோக்கி பயணிக்க ஏதுவாக கட்டமைக்கிறான். அது முழுதும் பாரந்தாங்காது அத்தனை கட்ட மைப்புகளும் உடைந்து பாழாகி ஆற்றோடு ஆறாக அடித்துச் செல்லப்படுகிறது , அத்தனை உழைப்பும் வீணாகிறது. விடாது , அதிலும் அசராது , Campfire  ல் போட்டு வேகவைத்த ஆட்டிறைச்சியை ஆளுக்கொரு காலாக எடுத்துக்கடித்து சுவைக்கின்றனர் ஜோர்பாவும் எழுத்தாளனும். “உன்னிடம் எல்லாம் இருக்கிறது ஆனால் கொஞ்சம் பித்து மனம் (madness) மட்டும் இல்லை, அது இருந்தால் எந்தக்கட்டுகளையும் எந்ததளைகளையும் உடைத்து வெளியே வரலாம் ,எதையும் சமாளிக்கலாம்’ என்று சொல்லிவிட்டு ஆட்டிறைச்சியை ஏதும் நடவாதது போல சுவைக்கிறான் ஜோர்பா. 



அப்போது தோன்றுகிறது ஞானம் எழுத்தாளனுக்கு. “வா இருவரும் இணைந்து ஆடலாம்” என்கிறான். எல்லாவற்றையும் உதறிவிட்டு , ‘அந்தக்கிரேக்கப்பெண்ணிடம் கை கூடாத காதல், அவளைக்காப்பாற்ற வைக்க முடியாத கோழைத்தனம், எதையும் அதன் போக்கில் சென்று ரசிக்காது தமக்கென எல்லை வகுத்துக்கொண்டு , அதிலேயே உழன்று கொண்டு வாழ்வை சுவைபட வாழத்தெரியாமை என்ற’ எல்லாவற்றையும் உதறிவிட்டு ஆடத்தொடங்குகிறான் ஜோர்பாவோடு. ( இந்த நடனம் சிர்டாக்கி Sirtaki என்று அழைக்கப்படுகிறது.)

மிகச்சிறந்த அந்தக்கிராமீய இசை பற்றிக்குறிப்பிட்டே ஆகவேண்டும்.எந்தக்கலப்புமின்றி வெளிநாட்டு இசையைக்கொண்டு வந்து கொடுக்காமல் , அந்தக் கிரேக்கக் கிராமங்களில் எந்த இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுமோ அவற்றை மட்டுமே வைத்து இசைத்து அந்த மண்ணின் இசையினை நம் காதுகளுக்கும் கொண்டுவந்து சேர்த்து படம் ஒரு பழமையான கிரேக்க கிராமத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது என்று நம் நினைவில் தங்கவைக்கிறது.பல இடங்களில் அந்த சந்தூரியின் இசை கேட்கக்கிடைக்கிறது.படத்தின் கடைசியில் அந்த மூன்று நிமிடத்திற்கும் மேலாக இசைக்கும் அந்தச் சந்தூரின் இசையை உணர்ந்து கேட்டுப்பாருங்கள் , உங்களுக்குள்ளாகவே இருக்கும் அந்தக் குழந்தைத்தன்மை உங்களையும் மீறி வெளிக்கிளம்பும்.

இது அறுபதுகளில் வந்த திரைப்படம் என்று நம்புவது கொஞ்சம் கடினம்.இன்னும் இதுபோல ஒரு படம் கூடத்தமிழில் அமையாது போனது நமது நற்பேறற்ற ஊழ் அன்றி வேறேதுமில்லை. அது கிடக்கட்டும். நம்மில் எத்தனை பேர் ஜோர்பாவைப்போன்றவர்கள் ?! யாருமே இல்லை , சமூகம் என்ன சொல்லும் என்ற சுயக்கட்டுப் பாடுகளிலேயே கவனத்தை வைத்துக்கொண்டு, நமக்கென வாழாது யாருக்காகவோ, யார் என்ன சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சி நம்மை நமக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு வாழ்பரே அத்தனை பேரும். அவனைப்போல் இயல்பில் வாழத்தெரியாவிட்டாலும் , வாழ்வில் எப்போதேனும் கிடைக்கும் சில கணங்களிலாவது அதை அவற்றின் போக்கில் போய் , அதனுடன் உழன்றுவிடாமல் விலகி நின்று அனுபவித்து வாழ்க்கையை ரசமாக்கவாவது நினைப்போம். Zorba the Great !


No comments:

Post a Comment