Saturday, February 19, 2011

எந்திரன்
எனக்கும் என் பெர்ஸனல் அசிஸ்டென்ட் அசிமோவுக்கும் எப்பொழுதாவது விவாதங்கள் நடப்பதுண்டு.எப்பொழுதுமே முடிவுகளை எனக்கு இணக்கமாகவே கொண்டு வருவது தான் என் வழக்கம்.ஆனாலும் அசிமோவ் தான் தோற்றுப்போய்விட்டேன் என்று ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.அடுத்த முறை உங்களைப்பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அவனுக்கிடப்பட்ட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுவான்.அன்றும் இதே மாதிரிதான்.அதற்கு முன்னால் அசிமோவ் யாரென்று சொல்லிவிடுகிறேன்.

அசிமோவ் தனக்கிடப்பட்ட எந்தப்பணியானாலும், எத்தனை முறை திருப்பித்திருப்பிச் செய்யச்சொன்னாலும், சளைக்காது செய்து முடிக்கும் ஸ்டீல் காலர்.ரோபோட்டை விடக் கொஞ்சம் உயர்ந்த க்ளோன்.எனது சொந்தப்பணிகளை மற்றும் என்னைக் கவனித்துக்கொள்ள என்னால் படைக்கப்பட்டவன். நானோ கொஞ்சம் கொஞ்சமாக அவனில்லை என்றால் எந்தப்பணியையும் செய்ய இயலாது எனத்தள்ளப்பட்ட நிலையில் உள்ள , தேசிய அறிவியல் கழகத்திலிருந்து கட்டாய ஓய்வு தரப்பட்டுகழட்டி விடப்பட்டு- வீட்டில் தள்ளப்பட்ட சுடர் மிகும் அறிவு படைத்தவன்.வாரத்திற்கு ஒரு முறை என்று நிர்ணயிக்கப்பட்டு, விடாமல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மழை பெய்துகொண்டிருந்தது ,அன்று மத்தியானமும்.வேலைகளை முடித்த அசிமோவ் என்னருகில் வந்து பீடிகையுடன் அமர்ந்தான்.”மழையைப் பற்றி உங்கள் கருத்து ?” என்று கேட்டான்.நானும்ம்மழை பெய்கிறதல்லவா , வாராவாரம்  
அதற்கென்ன ?”என்றேன். “ அதற்கல்ல , பண்டைய காலங்களில் மழைக்கென தவமிருந்து, அதைப்பெற்றபின் பாடி,மகிழ்ந்து, பாராயணம் எழுதிய கதைகளை அறியமாட்டீரா?” என்றான். “ எல்லாம் தெரியும், அதனால் உண்டான பக்கவிளைவுகளை நீ அறிவாயா ? அளவுக்கதிகமாக பெய்ததால் ஊரும் காடும் அழிந்து ஏதோ சில இடங்களுக்கு மட்டும் பயனளித்துக் கொண்டிருந்ததை இன்று நாடு முழுதும் பயனளிக்கக்கூடியதாக மாற்றியது அரிய செயல் அல்லவா ?” என்றேன். “ அத்தனை பேருக்கும் சமமான இயற்கை வளங்கள் கிடைக்க வேண்டுமென்பதிற்காக பூமியை இருபத்துமூன்றரை டிகிரி சாயத்துவைத்தவனை அறிவீர்களா?” நான் வாயடைத்துப்போனேன், முடித்தவன் மீண்டும் நறுக்கெனப் புட்டு வைத்தான்படித்தவன் தவறு செய்தால் ஐயோ என்று போவான்

அவசியத்திற்கு அதிகமான நினைவகத்தை இவனுள் வைத்தது தவறு என மனதில் நினைத்துக்கொண்டேன். “ வாரத்திற்கு ஒரு மழை என என்று அமைத்து பருவகாலங்களைக் குலைத்து , பறவை இனங்கள் யாவையையும் தானாக அழிந்து போகச்செய்து, தாவர ஜீன்களின் சங்கதியை மாற்றி ,…..ம்….இன்னும் இது போல எத்தனையோ ..இதற்கெல்லாம் அனுமதி கொடுத்தது யார்? மனிதனைக்காட்டிலும் அறிவு படைத்த உயிர் இல்லாததாலா ?”என அடுக்கிக்கொண்டே போனான் அசிமோவ். “ இவையெல்லாம் அறிவியலின் வளர்ச்சிகள், எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதின் முடிவுகள்என்றேன். “அல்ல அதுவல்ல , இது அதிகப்பிரசிங்கித்தனம்.”என்றான் அவன். “உனக்கு இவ்வளவு கற்றுக்கொடுத்ததே என் தவறு.“கற்றுக்கொடுத்தது உங்கள் தவறல்ல,சரியான நேரத்தில் அதை உங்களுக்கெதிராக நான் பயன்படுத்துவதுதான் தவறாகத் தெரிகிறது.

இருபதாம் நூற்றாண்டின் எச்சங்கள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தொடர்கின்றன.கலைகளும், பண்பாடுகளும், மொழியும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. முகமிழந்து போவதில் ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் ?, பருவ மாற்றங்களே இல்லாத காலத்தில் யாரால் எழுத முடியும் ? ‘குளிர் காலம் வந்துவிட்டால் என்ன,வசந்தம் வெகு தொலைவில் இல்லைஎன்று ? சூடு பிடித்துக்கொண்டது. இவன் இன்று ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கிறான் என்று நினைத்துக்கொண்டேன். “ ஏழ்மை முதுமை இவை யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக என் தலைமையில் இவை அனைத்தும் ஒருங்கமைக்கப்பட்டன.” கான்க்றீட் முகத்தில் ஏளனச் சிரிப்போடுஒருவனுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும், இருக்க கூரையும் கொடுத்து விட்டால் போதுமா  ?அவசியத்தேவையான மனத்தையும் , அதனுள் உண்டாகும் உணர்ச்சிகளையும் அறவே வடிகட்டி விட்டு?!” நெஞ்சுப்பகுதியில் பேட்டரி வைத்திருப்பவன் மனதைப்பற்றி பேசுகிறான்.

திருப்பி அவங்க ஊழலும்,ஏமாற்றமும் நிறைந்த காட்டுமிராண்டி சனநாயகத்துக்கு தான் போவாங்க..மனசுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தா!” “ மனுஷன மனுஷனே ஆளறதுக்குப் பேரு காட்டுமிராண்டித்தனம்னா இப்ப மனசற்ற இயந்திரங்களுக்கு அடிமையாயிருக்கிறதுக்கு என்ன பேர் வெப்பீங்க..?”

குகைகளே வீடாக , செடிகொடிகளே உணவாக, மரவுரிகளே ஆடையாக இருந்தபோது கொஞ்சம் கொஞ்சமாகத் துளிர் விட்ட ஆசை இன்றுவரை தொடர்ந்து அனைத்திலும் ஒரு பிடி மண் அள்ளிப் போட்டுவிட்டுப் போய்விட்டது உங்கள் வாழ்வில், இனி உங்களுக்கு மகிழ்ச்சி,துக்கம் எதுவுமில்லை, உங்கள் அறிவியலால் மரணத்தை வெற்றி கொண்டு என்ன பயன்? மனத்தையும் , அதன் இயல்பான உணர்ச்சிகளையும் அடக்கிக் கட்டுப்படுத்தி வைத்துவிட்டு ? ஊர்ந்து ஊர்ந்து வந்து எங்களைப்போல் மாறி விட்டீர்கள்,” “ஆமாம் மனிதனாக இருப்பதில் ஏன் அவ்வளவு கசப்பு ?” என்று வியப்புற்று வினவினான்.

ஏதோ ஒரு ரசாயன மாற்றம் உண்டானது போல் தோன்றிற்று எனக்கு.அதோடு முதன் முறையாக விவாதத்தில் தோற்று விடுவேனோ என்ற பயமும். “ முடிவாக என்ன தான் சொல்ல வருகிறாய் ?” “ சுருதி குறைந்த தொனியில் நான் இவ்வளவு நேரம் வாதிட்டு என்ன பயன் ?முடிவெடுக்க மீண்டும் இயந்திரத்தின் உதவியை நாடுகிறீர்களே?..ம்முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான்என்றான்.ஆனால் அவன் கூறியதில் ஒன்றுமட்டும் மனதில் வெகுவாகக் காயத்தை ஏற்படுத்திவிட்டது.  
அது ““ படித்தவன் தவறு செய்தால் ஐயோ என்று போவான்என்பது.


.

No comments:

Post a Comment