Monday, February 14, 2011

இது என்ன ?




ஓரிடம் இல்லாமல்
மனம் அலைபாய்வதை
எண்ணிக் கலங்க வைக்கும்.

மனதுக்குள்
ஒத்திகை பார்த்தவை
நிகழ்வில் பிறழ்வதை
எண்ணி மயங்க வைக்கும்.

அடக்க முயற்சித்தும்
தனக்குள்ளேயே பீரிட்டுக்கிளம்பும்
நேரில் சொல்ல இயலாததை
மனதுக்குள் பேசிப்பார்த்துக்
கொள்ளத்தோன்றும்.

உறுதியாகத்தெரிந்த பின்னும்
தயக்கம் வந்து தடுக்கும்.
பேசப்போகும் முதல் வார்த்தை
என்னவாயிருக்க வேண்டுமென்று
தீர்மானித்தது வெறும்
உளறலாகவே முடியும்

கற்றறிந்த மொழியும்
உன்னைக்கைவிடும்
வார்த்தைகளே இல்லாமல்
வெறும் கண்களாலேயே
புரியவைத்தால் என்ன
என தனக்குள்ளேயே
கோபமும் கொள்ள வைக்கும்.

தூரத்தில் இருந்து
பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சி
அருகில் வந்தால்
உள்ளூர பயமாய்
உருவெடுக்கும்.

அருகாமைச்சூழலில்
கிளர்வுறும் மனது
அடுத்து இருந்தால்
அதிர்வுறும்

ஒத்திப்போடுவதிலும்
தள்ளிப்போடுவதிலும்
தற்காலிக மகிழ்ச்சி
கொள்ள வைக்கும்.
அவ்வாறு
தள்ளிப்போடுவதையும்
ஒத்திப்போடுவதையும்
எண்ணி மறுகணமே
வருந்தவும் வைக்கும்.

தன்னைக்கவனிப்பது
தெரிந்தால்
வழமைக்கு மாறாகத்
தன் இயல்பிலின்றி
சில செயல்களைச்
செய்ய வைக்கும்.

பிறர் கூடியிருக்கும்
வேளையில்
தன்னைத் தனித்துக்கண்டு
கொள்ளச்செய்வதற்கு
உரத்த சிரிப்பை
உறுதுணையாக்கிக்கொள்ளும்.

.

No comments:

Post a Comment