Tuesday, December 1, 2020

வேற்றுக்கிரகவாசிகள்

 


வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஒரு வலைத்தளத்தில் இவருடைய பெயரைப் பார்த்தேன். எதோ ஒரு புதிய புத்தகம் எழுதியிருக்கிறார் போல. போன ஆண்டு, அதில் வேற்றுக் கிரகவாசிகள் என்ற ஒரு உயிரினமே இல்லை, அப்படியாக நம்ப வைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்கிறார். அப்படி ஒன்றும் சாதாரண ஆள் இல்லை மைக்கேல் மாஸ்டர்ஸ். மொண்டானா யுனிவர்சிட்டியில் பயாலஜிக்கல் ஆந்த்ரப்போலஜி கற்பிப்பவர். ஆந்த்ரபோலஜியில் பிஹெச்டி பட்டம் பெற்றவர். தொடர்ந்தும் மனிதவியல் வளர்ச்சி போன்ற தலைப்புகளில் உரையாற்றக் கூடியவர். 
 
அவரின் வாதம் இப்படிப்போகிறது. வேற்றுக்கிரக வாசிகளை கண்டேன் எனக்கூறியவர்களில் பலரும் பாமரர்களே. உலகம் முழுக்க. விஞ்ஞானிகளோ இல்லை அதைப்பற்றிய ஆராய்ச்சி செய்யக்கூடிய எவருமோ இதுவரை ஏலியன்களுடன் கூட்டி முட்டியதில்லை. வாதங்களை நம்பும்படி வைக்கிறார். அறிவில் வளர்ந்த நம்மை விடவும் கூடுதல் தொழில் நுட்பங்களில் முன்னேறிய ஒரு இனம் அதுவும் பூமியிலேயே வேறொரு பரிமாணத்தில் (நான்காம் பரிமாணம்) வாழக்கூடிய ஒரு உயிரினத்தை தான் எல்லோரும் வேற்றுக்கிரக வாசிகள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம் என்கிறார்.
 
பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தில் உடலில் மனதில் சிந்தனையில் பல மாற்றங்கள் உண்டானது. அவற்றுள் எடுத்துக்காட்டுக்கென கைகளை ஊன்றி நடந்து கொண்டிருந்த குரங்குகள் (நாம்) எழுந்து நடக்க ஆரம்பித்தது, அதனால் கைகளை வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்த முடிந்தது. இல்லையெனில் முழு உடலையும் எடுத்து செல்ல கைகளும் கால்களுமே பயன்பட்டன. இன்னிக்கு இந்த கட்டுரையை தட்டச்சு செய்வதும் கை விரல்கள் தான். எழுந்து நடந்தவுடன் வாலின் தேவையின்றிப் போனது. நம் வயிற்றுக்குள் அப்பெண்டிக்ஸ் என்ற ஒன்று மட்டும் மிச்சமாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது விலங்கின் எச்சமாக. 
 
இதே போன்ற பரிணாமத்தின் வளர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னபிற உறுப்புகள் தேவையின்றிப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன. காது மடல், புருவங்கள் இல்லாது போதல் மற்றும், அதீத ஆராய்ச்சிகள் மற்றும் தீவிர கண்டுபிடிப்புகளுக்கு ஏதுவாக மூளை தன் அளவைக்காட்டிலும் கூடுதல் ஸைஸில் பெருப்பதால் தலை வீங்குதல் என்ற மாற்றங்கள் உருப்பெற்று ஏலியனாக பரிணமிக்கும் என்பது அவர் வாதம். 
 
மேலும் உலகெங்கிலும் ஏலியன்களைக் கண்டோம் என உறுதியுடன் கூறியவர்களும் இதே போன்ற தோற்றத்தை தான் சொன்னதாக பல இடங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எங்கோ பல்லாயிரம் ஒளியாண்டு தொலைவில் வசிக்கும் ஒரு உயிரினம் பூமியில் பரிணமித்து வரும் உயிரினத்தைப்போல அல்லது எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறோம், உடலில் என்னென்ன மாற்றங்கள் வரக் காத்திருக்கின்றன என்பதை உறுதி செய்யும் விதமாக இருந்துதான் ஆக வேணும் என்ற எந்தக் கட்டாயமுமில்லை. 
 
சரி அப்புறம் ஏன் நம்மை ‘விசிட்’’ செய்கிறார்கள் ஏலியன்கள் ? அவர்களிடம் இருக்கும் அதி நவீன கருவிகளைக்கொண்டு காலத்தின் பின்னோக்கிப் பயணித்து அவர்களின் மூதாதையர் எப்படி இருந்தனர் என்பதைக் காண வந்தவர்களாக இருக்கும்,. ஒரு க்யூரியாஸிட்டி தான் வேறொன்றும் இல்லை. இதே போன்று காலக்கருவி இருக்கும் பட்சத்தில் நம்மாலும் பின்னோக்கி 1.5 பில்லியன் ஆண்டுகள் வரை பயணித்து நமது மூதாதையர்கள் எங்கனம் இருந்தனர் என்று ஆப்ரிக்கா சென்று ஆராயலாம். மேலும் அவர்களும் இப்போது நம்மைப் போலவே அவர்களுக்குள்ளாக பேசிக்கொள்வார்கள் ஏலியன்கள் நம்மை வந்து பார்த்து சென்றனர் என்று.
 
புத்தகத்தின் முதல் அத்தியாயம் மட்டும் பகிரங்க வாசிப்புக்கு இலவசம். முழுமையாக வாசிக்க வேணுமெனில் கிண்டில் பதிப்பு கிடைக்கிறது அமேஸானில்.
 
UFO unidentified Flying Objects என்ற பதத்தையே மாற்றி புத்தகம் முழுக்க IFO Identified Flying Objects என்றே குறிப்பிடுகிறார் ஆசிரியர்.!
 
Identified Flying Objects: A Multidisciplinary Scientific Approach to the UFO Phenomenon
- Dr. Michael P. Masters
 

 

No comments:

Post a Comment