Monday, August 5, 2019

கோயில் யானை (உண்ட)



என்ன ஒரு அருமையான படம் உண்ட (புல்லட்). ஆஹா.. எத்தனை நாளைக்கி பிறகு மம்மூட்டிய இப்டிப்பார்க்கிறதுக்கு எவ்வளவு நல்லாருக்கு. என்ன வழக்கமா போலீஸு படந்தானேன்னு நினைத்தால் அப்படி இல்லை. அத்தனை இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் தன்னந்தனிக்காட்டில் ஒரு பட்டாலியனோடு போயிறங்கும் மம்மூட்டி. இவ்வளவு ஆசுவாசமாக, வயதான வேடத்தில் அந்த வயதுக்கேயுரிய களைப்பில் எதோ வேலைய முடிச்சுட்டு சீக்கிரம் கிளம்பி போனப்போதும்னு நினைக்கிற , எலெக்‌ஷ்ன் ட்யூட்டி பார்க்கச்செல்லும் போலீஸ் ஆஃபீஸர். யார் அட்டாக் பண்றான்னே தெரியாத இடத்தில மாட்டிக்கொண்டு அத்தனை பேரையும் சமாளித்து திரும்பக்கொண்டு வந்து சேர்க்கும் வேஷம். போலீஸ் படம்னாலே அடிச்சா அஞ்சரை டன் ஹைட்டெல்லாம் பார்த்து சலிச்சுப்போயி , ஃபாஸ்ட் கட்டிங்ல படத்த ஓடவிட்டு பாக்றவனையும் பறக்கவிட்டுன்னெல்லாம் பாத்து வெறுத்தவனுக்கு, ஒரு எதார்த்த சினிமா போலீஸ வெச்சு வருமான்னா அது அதான் (உண்ட) புல்லட்.

கொண்டுபோய் அத்துவானக்காட்டில இறக்கியாச்சு. மாவோயிஸ்ட் எப்பன்னாலும் அட்டாக் நடத்துவர். கையிருப்பில் குண்டுகள் இல்லை.  சாதாரண கோவில் திருவிழா, அமைச்சர் விசிட் இது மாதிரி பொதுமக்களோடு உட்கார்ந்துகொண்டு  பந்தோபஸ்து ட்யூட்டியில் இருக்கும் போலீஸுகாரனைக் கொண்டு போயி மாவோவாதிகளுடன் நேருக்கு நேர் சமர் செய்யச்சொன்னால் என்னவாகும் அதான் கதை. கோயில் யானையை வைத்து காட்டு யானையை சமாளித்த கதைதான்.


பல கேரக்டர்கள் மனதில் நிற்கிறது. மம்மூக்காக்கா எப்பவும் இருப்பார். இருந்தாலும் அந்த ஐடிபிபி போலீஸ்காரர் அப்புறம் ரொம்ப முக்கியமா அந்த மலைவாழ் ஆதிவாசி. அப்படியே இருக்கார் ஆதிவாசி மாதிரி. தமக்கு வைத்திருந்த தண்ணீரை உங்க சகாக்கள் அடிபம்ப்பில் அடித்து குளித்து வீணாக்கி விட்டனர் என்று பவ்யமாக பேசும்போதும், என் மகனைப்பற்றி விசாரிக்க நாளைக்கி எஸ்பி ஆஃபீஸுக்கு  போறேன் என்று அழுகுரலோடு பேசும் போதும் . நீங்கல்லாரும் என்னை மாவோவாதிங்கறீங்க, அவங்க என்ன போலீஸுக்கு சேய்தி கொடுக்கிறவன்னு சொல்றாங்க, இது என்னுடைய நிலம், நீர் , என்  மூதாதையர் வாழ்ந்த நிலம் , இத விட்டு என்னால் போக முடியாது. என்றெல்லாம் பேசும்போது அப்படியே அசைக்கிறது நம்மை.

ஆதிவாசி மட்டுமல்ல , உலகின் முதல் குரங்கும் இதே நிலைல தான் இருக்கு, ஊரெங்கும் நாடெங்கும் பரவிக்கிடக்கும் ஏதிலிகளாக நம்மினம். நானும் ஒரு ஆதிவாசி தான். என்னிலத்திலிருந்து விரட்டப்பட்டவன். அதற்காக திரைப்படம் மாவோயிஸத்தை க்ளோரிஃபை பண்ணவில்லை தான். இருப்பினும் எதிர் நிலைப்பாடு எதையும் காண்பிக்கவில்லை. உண்மையில் மாவோவாதிகள் படத்தில் எந்த வம்புதும்பும் செய்ததாக காண்பிக்க வில்லை. கட்சி ஆசாமிகள் பூத் கேப்சரிங் செய்ய முற்படுவது அங்கிருந்து போலீஸ் ஃபோர்ஸை விரட்டி அடிக்க நினைப்பது என்பது தான் கதை.


மம்மூக்காவின் அறிமுகமே புதிதாக இருக்கிறது. எப்போதும் எவ்வித வம்பு தும்புக்கும் போகாத தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாத கதா பாத்திரம், அதன் முதல் திரைத்தோற்றம் ஆஹா.. அருமை. கிட்டத்தட்ட முரண் திரைப்படத்தில் சேரனின் கதாபாத்திரத்தை எனக்கு நினைவூட்டியது மம்மூக்காவின் ரோல். உள்ளுக்குள் குமைந்து கொண்டு எப்படியாவது வெளி வந்துவிட மாட்டோமா என்ற மனநிலையில். கையறு நிலை என்பது இது தான். தம்மைக்கொண்டு எப்படியாவது இந்த நிகழ்வை சமாளித்து பின் வீடு திரும்ப அதிகாரவர்க்கத்தின் ப்ரஷர், கேட்டது கிடைக்காத கருவிகளற்ற நிலை. கிட்டத்தட்ட எல்லோரும் இது போல பல சமயங்களில் மாட்டிக்கொள்வது வழக்கம் தான். உயர் மேல் அதிகாரிகளின் அலட்சியம், என்னவோ இவனுக்கு மட்டுந்தான் இப்படி பிரச்னை வந்து விட்டது போல குதிக்கிறான். அடிப்படையில் பயிற்சியில் இது போன்ற விஷயங்கள் விரைவாக முடிக்கப்பட்டு களத்துக்கு அனுப்பி அங்கு சென்று சமாளி எனப்பணிக்கப்படுவது. எல்லாமாகச்சேர்ந்து குமைந்து போகிறார் மம்மூக்கா.

வெடி போட்றதுக்கும், துப்பாக்கி சுடும் சப்தத்திற்கும் வித்தியாசம் தெரியாதா என்ன போலீஸய்யா நீ’ என்று ஐடிபிப்பி ஆஃபீஸர் கேட்கும் போது அறியாப் பிள்ளை போல நிற்கிறார் மம்மூக்கா.உண்மையில் வாழ்க்கையில் ஹீரோக்கள்லாம் இப்படித்தான் எதார்த்தமாக இருக்க வேண்டியிருக்கிறது. புனைவுகளைவிடவும் எதார்த்தம் அசைக்கும் கொஞ்சம் அதிகமாகவே. வெகு காலத்திற்கு வலிக்கும் மாடு தன் வாலால் ஒரு அடி விட்டதைப்போல.


No comments:

Post a Comment