Sunday, May 13, 2018

கண்ணம்மா




கண்ணம்மா – பூவே செம்பூவே’ பாடலின் அடியொற்றி இசைத்தது. தொடர்ந்து கேட்கும் போது புரிபடும். அது அழிக்கவியலாத பாடல். படத்தில் அதற்கான காட்சியமைப்பையும் யாராலும் மறக்கவியலாது :)  இங்கு கடைசியில் மழை பெய்யுது,பாடகருக்கு தெளிவான குரலும், வார்த்தைகளும் வரவேண்டுமென்பதற்காக குழைவு இல்லாது போனது ஒரு பெரும் குறை. பூவே செம்பூவே’யில் ஏசுதாஸின் குரலில் இருந்த குழைவு, அனிச்சமலர் போல,இங்கோ கொஞ்சம் காட்டுப்பூப்போல இருக்கிறது. 

கண்ணம்மா கண்ணம்மா’ என்ற சொற்களில் மட்டுமே குழைவு காட்டுகிறார் பாடகர். கூட ஒரு பெண்மணியும் தீக்‌ஷிதா பாடியிருக்கிறார். அவர் குரல் இன்னமும் ப்ளண்ட்’ (Blunt) ஆக கொஞ்சமும் பாடலின் உணர்வுக்கு கிஞ்சித்தும் பொருத்தமின்றி ஒலிக்கிறது. தமிழறியாப் பெண்மணி போல (சந்தோஷின் மனைவியாமே இவர்?) .சொற்களின் முடிவும் தெளிவும் கருதி திறந்து பாடுகிறார். இதுபோன்ற பாடல்களுக்கு அது சரி வராது. உயிர் தொட நினைக்கும் பாடலை (Soul Touching Song) உளம் கூட தொட விடாது அந்நியமாக்குகிறது இருவரின் திறந்த முறையிலான பாடும் முறை, .(Open Singing) .இந்த தீக்‌ஷிதா ’பிஸ்ஸாவில் டிஸ்கோ வுமன்’ மற்றும் இறுதிச் சுற்றில் ’ஏ சண்டக்காரா’ பாடினார். இது போன்ற மதுபானக்கூடப் பாடல்களுக்கு வேணுமானால் இவர் குரல் பொருத்தமானதாக இருக்கும். 

வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணி ஜெபா தமது கிட்டாரின் தந்திகளை மெதுவாகவே அழுத்துகிறார். எனது குரு இப்படீல்லாம் அழுத்தினா முன்னால உக்காந்திருக்கவங்களுக்கு கூட கேட்காது என்பார். 

பாடலின் துவக்கத்தில் ஆரம்பிக்கும் கிட்டார் மற்றும் வரிகள் ஓடியபின் தொடரும் பியானோவின் விசைப்பலகை அழுத்தங்களும் அச்சசல் பூவே செம்பூவேதான். அடியிழை நாதம். எது மனதின் ஆழத்தில் கிடக்கிறதோ அது தான் மேலெழும்பி  வரும். ‘கண்கள் இரண்டால்’ பாடலின் அடி நாதம் ’சின்னக் கண்ணன் அழைக்கிறான்’. அது போலத்தான் இதுவும். பாடல் முழுக்க ப்ரோக்ராம் செய்யப்பட்ட விதம் ’பூவே செம்பூவே’ தான். முதலில் ஆரம்பிக்கும் கிட்டாரின் இசைக் குறிப்புகளை இங்குமங்கும் மாற்றி ஒன்றிரண்டு குறிப்புகளை மாற்றிப்போட்ட போதும் ‘பூவே செம்பூவே’ தான் வந்து விழுகிறது. 

சந்தோஷுக்கென ஒரு ஸ்டைல் இருக்கத்தான் செய்கிறது. மெட்ராஸில் ‘நான் நீ’ பாடலை ராசைய்யாவின் ’நானே நானா யாரோதானா’ பாடலின் இன்ஸ்பிரேஷனில் செய்திருந்தார். ( இந்த இன்ஸ்பிரேஷன் என்ற சொல்லை வைத்துக்கொண்டு என்ன மாயாஜாலம் வேணுமானாலும் செய்யலாம். எழுத்தாளனுக்கு ‘பொயட்டிக் லைஸன்ஸ்’ போல.) அதுபோல இங்கும். ஜாஸ் டச் கொடுத்தால் மென்மை வந்துவிடும் என எண்ணியிருக்கிறார் சநா!

இதே கண்ணம்மா’வை அக்கபெல்லா வெர்ஷனிலும் கொடுத்திருக்கிறார் சந்தோஷ். அக்கபெல்லா வெர்ஷன் என்பது இசைக் கருவிகள் எவற்றின் துணையுமின்றி வெறும் குரலை மட்டுமே வைத்து பதிவு செய்வது. காரோக்கி’க்கு எதிர்ப்பதம் :) இருப்பினும் சின்ன இழையில் கிட்டார் இழைக்கிறது இங்கும். இங்கிலீஷ் பாடல்களில் இந்த ‘அன் ப்ளக்டு’ (Unplugged) வெர்ஷன்ஸ் ரொம்ப பிரபலம். கொஞ்சமே இசைக்கருவிகள் வைத்துக் கொண்டு இசைப்பது பாடுவது. சேனல் விஎச்1’ல் அடிக்கடி இது போன்று மேலை நாட்டு தனிப்பாடற் திரட்டுப் பாடகர்களின் இசைக்கோவைகள் இவ்வாறாக இசைக்கப் படுவதுண்டு.

02:53 ல் துவங்கும் கிட்டார் 03:15 வரை தனி ஆவர்த்தனம். அருமை. இது காறும் பின்னில் இருந்துகொண்டு வரிகளை முந்தவிட்டு வாசித்ததற்கு இப்போது தமக்கென கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறர் ஜெபா.

பின்னில் ஹார்மனிக்கென ‘தநநந தந்நந தநநந தந்நந தந்நந’ என ஒலிக்கவிட்டது ’நாசரின் தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ’ பாடலின் பாணி. இந்தப்பாடலின் மீது ரஞ்சித்துக்கு அப்படி ஒரு காதல். சிலரைப்பின்னில் பாடவைத்து இல்லையெனில் தலைவன் தலைவி தனித்திருக்கும்போது ரேடியோவிலாது ஓடவிட்டு என ஆங்காங்கே பொருத்திவிடுவார் தமது படங்களில்.

”வான் பார்த்து ஏங்கும் சிறு புள்ளின் தாகம்” எனப்பாடுகிறார் அந்தப்பெண்மணி.அது ”சிறு புல்லின் தாகம்” என்றுதான் உமாதேவி எழுதியிருக்கவேணும். இருப்பினும் எனக்கொரு ஐயம் சாதகப்புள்’ளை பறவையை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருப்பாரோவென .ஏனெனில் அப்படி ஒரு பறவை வெறும் மழைநீரை மட்டுமே உண்டு வாழ்ந்ததாக இலக்கியங்களில் கூறப்படல் உண்டு. ‘மழையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்’ என வைரமுத்து எழுதினார்.  இந்த ஐயம் எனக்கேன் உதித்தது என்றால் பின்னில் வரும் வரிகளில் அவர் அஃறிணையை, மீனைப்பற்றி இங்கனம் எழுதியிருக்கிறார். ’நீரின்றி மீனும் சேறுண்டு வாழும் வாழ்விங்கு வாழ்வாகுமோ’ வென. பாடலைப்பாடும் இந்தத்தமிழறியா(?)ப் பெண் மணிகளும் சில வேளைகளில் அதிகம் யோசிக்க வைத்து விடுகின்றனர் எழுதிய தமிழச்சியையும் வாசிக்கும் கேட்கும் மறத்தமிழனையும் :) :) 

இத்தனை இருப்பினும் ஆற அமர உட்கார்ந்து கேட்கவைக்கும் பாடல் தான் இது.. இதை மாயநதி’யுடன் ஒப்பிட்டு சிலர் எழுதியிருந்தனர். மெலடி வரிசையில் வேணுமானால் இவைஇரண்டும் ஒரு தட்டில் வைக்கலாமே தவிர வேறேதும் ஒப்புமை இல்லை. #கண்ணம்மா

No comments:

Post a Comment