Friday, May 11, 2018

உரிமையை மீட்போம்



உரிமையை மீட்போம் சந்தோஷுக்கு கேரியர் பெஸ்ட்! பாடல் என்னவோ கவ்வாலியில் தொடங்கிய போதும், தொடர்ந்தும் கொண்டு செல்லுதல் அத்தனையும் தமிழ்ப்பாடல் போலவே ஒலிக்கிறது. டெஸர்ட் ரோஸ் போல பின்னில் பதுங்கி இசைக்கும் ஹார்மனி. இசைக்கு முக்கியத்துவம் தராமல் அத்தனையும் வரிகளை முன்னுக்கு கொண்டு வந்து இசைத்திருக்கிறார் சநா.! ஏற்கனவே ’ஆடி போனா ஆவணி’யென இசைத்தார். அதே பாணியில் வெறும் தபலாவையும், பேஸ் கிட்டாரையும் வைத்துக் கொண்டு அவ்வப்போது ஹார்மோனியம் எட்டிப் பார்க்க இங்கு இசை சாம்ராஜ்யம் சநா. சம்மதிக்கணும்டே. இசைச்சூழல் பாம்பேயானதால் சூஃபி, மற்றும் கவ்வாலிக்கு ஒரு தடையும் இல்லை. முதலில் கேட்டவுடன் அட இது கவ்வாலி இசையல்லவா என அடுத்த பாடலுக்கு தாவி விட்டேன்.

ரஹ்மானின் கவ்வாலி,சூஃபி இசை என்பது அதன் ஒரிஜினல் பாங்கில் இசைப்பது. குன் ஃபாயா குன், இன்னமும் எத்தனையோ பாடல்களைச்சொல்லலாம். இத்தனை நிமிடங்களில் முடித்தாகவேண்டும் என்ற கட்டாயமின்றி பாடும் வரை பாடு என்ற பாங்கில் இசைப்பது. லயித்தலெல்லாம் உளப்பாங்கைப் பொருத்த விஷயம். இங்கும் பாடல் ஆறு நிமிடத்துக்கும் மேல் வரை நீடிக்கிறது..இங்கு சநா அதை கொஞ்சம் ராசைய்யா பாணியில் இசைத்திருக்கிறார். எனில் அதன் ஒரிஜினல் இசைப்பாணியை இரவல் எடுத்துக்கொண்டு அதை தமிழ் ரசிகர்களை மனதில் வைத்து ‘இது “சநா”வின் பாடல் என இசைப்பது. இது மொத்தமும் ராசைய்யாவின் பாணி. அப்படியே கொள்ளை கொண்டு போகிறது.

இதே போல யுவன் ஒரு பாடலை இசைக்க முற்பட்டார் ( அப்படித்தான் சொல்ல வேணும்) அஞ்சான் படத்தில் ”காதல் ஆசை யாரை விட்டதோ” வென. அது கொஞ்சம் காதலுடன் இசைத்தது. இறைவனுக்கென பாடும் கவ்வாலி/சூஃபி இசை எங்கனம் காதலுக்கு பொருந்தும் என எண்ணியதால் யாராலும் ரசிக்க இயலாமலே போய் விட்டது. எனக்கு அத்தனை பிடிக்கவில்லை அந்தப்பாடல். எல்லாம் ஒன்று தானே என விவாதிக்கலாம். காதல், கருணை, பக்தி எல்லாம் உருகி வழியும் உணர்வு தானே என அப்படி இல்லை. காதலில் காமம் கலந்து விடும். பிறகெங்கே அதில் பக்தி?

இங்கு நிலமே உரிமை’ என்பது ஆதங்கத்தில் ஒலிக்கிறது. வீறு கொண்டு எழுந்து போராடி பின் எழும்பவியலாது தோற்று, தம்மை ஆசுவாசப் படுத்திக்கொள்ளவும் மீண்டும் எழுந்து போராடவும் அறைகூவல் இது. உள்ளுக்குள் இருக்கும் வருத்தம் தொனிப்பதற்கு பக்திரசம் பொருந்தும்.

நிலமே உரிமை. அதுக்காகத்தானே ஈழத்தில் அத்தனை போராட்டம். இத்தனை காத்திரமான வரிகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே கேட்க இயல்வது சொய்வு. பாடலில் அடித்து உருட்டும் தபலா உள்ளுக்குள் இருக்கும் அத்தனை துயரத்தையும் துடைத்தெறியும்! அநாவசிய இசைக்கலப்பின்றி, முறையே தீர்மானித்து அற்புதமாக வழங்கப் பட்டிருக்கிறது இந்தப்பாடல். என்னையும் கவ்வாலி கேட்க வைத்துவிட்டார் சநா! அதுவரை குரல்களுடன் பயணித்த தபலா 02:06 லிருந்து தொடங்கி 02:13 வரை தனித்தே பயணிப்பது அத்தனை அருமை. கிஞ்சித்தும் வேகம் தாள கதி மாற்றாது தொடர்ந்து இசைக்கிறது

03:14 ல் தொடங்கும் அந்த ஹார்மனியும் அதைத் தொடரும் சரளி வரிசையும் சிலிர்கக வைக்கும். இந்தப்பாடலை ‘கடையநல்லூர் மஜீத்’ அல்லது ’நாகூர்’இ எம் ஹனீஃபா’ பாடியிருந்தால் இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும். பின்னில் இசைக்கும் அந்த அத்தனை ஆலாபனைகளுக்கும் இவ்விருவரின் குரல் சாலப்பொருத்தம். ராசைய்யா ’செம்பருத்தி’யில் ஒரு சோகப்பாடலை கவ்வாலி ஸ்டைலில் இசைத்திருப்பார் ’நட்டநடுக்கடலில் நான்பாடும் பாட்டு’ என்று. அதில் இந்த இடத்தில் ‘’ஆற்றிலே இக்கரையில் நின்று’வென கூவும் ஆலாபனையில் மயங்காதவர் குறைவு.

’போராடடா வாளேந்தடா’ என ’அலைஓசை’யில் விஜய்காந்துக்கென இசைத்தார் ராசைய்யா. நிலமே எங்க உரிமை என ரஜினிகாந்துக்கென இசைத்திருக்கிறார் சநா! அந்தக்காலத்தில் அது ஒரு செம ஹிட் பாடல்.கிளர்ந்தெழும் இசை கொண்டது. இன்றும் இசைத்தால் வீறு கொண்டு எழும் அத்தனை உணர்வுகளும். அந்தப்பாடலில் ராசைய்யா இடை இசைக்கென ‘ஒயிலாட்டத்தின் இசையைக் கொடுத்திருப்பார். இங்கு சநா, சூழலுக்கென உகந்தவாறு கவ்வாலியை கையிலெடுத்திருக்கிறார். கொஞ்சம் இரண்டு பாடல்களையும் கூடவே ஒலிக்கவிட்டுப்பாருங்களேன் உங்களுக்கே புரிபடும்.
சின்னப்பொறியே பெரும் அனலாகுமே சிங்க இனமே எழுமே’ என பாடிக்கொண்டே வரும்போது இடையில் நிறுத்துவார் இசையனைத்தையும், கொஞ்ச நேரத்தில் நாமே நம்மையறியாமல் பாட ஆரம்பித்து விடுவோம் ‘ போராட்டா ஒரு வாளேந்தடா வென அது தான் போராட்டத்தின் வெற்றி.

எனக்கென்னவோ ரஞ்சித் இந்த “போராடடா”வையே மனதில் வைத்துக்கொண்டே உரிமையை மீட்கச் சொல்லியிருப்பார் எனத்தோணுகிறது 

”வண்ணங்களத்தீட்டு
இது வானவில்லின் கூத்து
அட சொந்தம் எது கேட்டா
அந்த விண்மீன்களைக்காட்டு
கதவில்லாத கூட்டில்
கனவுகள் ஏராளம் உண்டு
உரிமைக்கு ஒன்றாகும் வீட்டில்
விடுதலை எப்போதும் உண்டு.”


#
உரிமையைமீட்போம்
!.

2 comments: