Friday, November 11, 2016

அக்கம் பக்கம் பார்


ஜாஸ் இசை என்று எடுத்துக்கொண்டால் கொஞ்சம் பழைய,மெல்லிய ரொம்பவும் அதிரடியில்லாத, காதுக்கு இனிமையான இசை என்றே அறியப்படும். ரொம்பவே மெதுவாகச்செல்லும் என்பதால் எல்லோருக்கும் போரடிக்க ஆரம்பித்துவிடும். ஜாஸ் கேட்கவென வேறேங்கும் போகவேணாம். இப்பவும் வின்டோஸ்7 பயன்படுத்துபவராயிருந்தால் டீஃபால்ட் ம்யூஸிக் ஃபோல்டரில் பாப் அக்ரி'யின் Sleep Away' வைக்கேளுங்கள். அத்தனை சுகமான மெல்லிய மெலடி. கேட்டும் உறக்கம் வரவில்லையெனில் உங்களுக்கு வேறேதோ பிரச்னை இருகிறது என அர்த்தம். பியானொவில் வாசித்திருப்பார் முழுப்பாடலும். கேட்க ஆரம்பித்தால் இடைவிடாது சுழற்சியில் இட்டு தொடர்ந்தும் கேட்டுக்கொண்டே இருக்கத்தோணும்.

ஜாஸ் இசையில் வெகுவாக பெர்குஷன்ஸ் அதாவது சிறிதே அதிர வைக்கும் ட்ரம்ஸும், பியானொ, மற்றும் சாக்ஸஃபோன் போன்ற வாத்தியங்களே பயன்படுத்தப்படும். கேட்டால் காதுக்கு இனிமை, அதிரவைக்காது கூர்ந்து கவனிக்க வைக்கும் இசை. ஒண்ணு சொல்றேனே வயிறுமுழுதுக்குமாக பிரியாணி சாப்பிட்டு விட்டு, நல்ல வெக்கையில் வெண்டாவி அத்து வரும் வேளையில்  காகம் கரைய,வேப்ப மர நிழலில் இருந்து கேட்டுப்பாருங்க.ஆஹா. சொல்லவே அருமையாக இருக்கிறது. சொக்கிப் போடும் உங்களை , அதற்குத்தான் சொன்னேன்.

இந்த ஜாஸ்'ஐ ராசய்யா தமது முழு ஸ்டைலாகவே/ பாணியாகவே கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே ஆக்கிக்கொண்டார் என்றே சொல்லவேணும். நீஎபொவ அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இன்னபிற இசை வகைகள் (genre)அந்தப்பாடல்களில் தென்பட்டபோதிலும் அடிப்படையான இசை ஜாஸ் தான். கிழவர்களுக்கான இசை..ஹிஹி. அப்படி இல்லை. யாரையும் அதிரடியாக இசைத்து இம்சைப்படுத்துவதில்லை என முடிவெடுத்த ராசைய்யாவிற்கு இந்த ஜாஸ் பிடித்துப்போனதில் ஆச்சரியமில்லை. இன்னொரு பாடலை என்னால் மிகச்சரியாகச்சொல்ல முடியும்.  'கண்ணன் வந்து பாடுகின்றான்' என ஜானகி பாடிய பாடல் 'ரெட்டை வால் குருவி'யில். 


பின்னில் சாக்ஸஃபோன் இசைக்க மைக்கை பிடித்தபடியே ஆடுவார் ராதிகா. இன்னுமொரு பாடல் 'இது ஒரு கனாக்காலம்' டிக் டிக் டிக் படத்தில். பெரும்பாலும் தாளத்திற்கென ட்ரம்ஸின் அந்த சிம்பல்ஸ்'களில் இசைத்ததையே காணலாம். பெரும்பாலும் மேடைப்பாடல்களாகவே ராசைய்யாவிடம் ஜாஸ் ஒலிக்கும். 'மன்றம் வந்த தென்றலையும்' கூட ஜாஸில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்காக மென்மையான பாடல்களெல்லாம் ஜாஸ் இல்லை.

ரஹ்மான் என்றும் இன்ன இசை என அறியவிடாது தமது ஸ்டைலில் ரஹ்மானியாவாக கொடுப்பதில் வல்லவர். படையப்பாவில் விசிலடித்துக்கொண்டே மனோ பாடும் 'ஓஓஓ கிக்கு ஏறுதே' அந்தப்பாடல் ஜாஸை ஒட்டியது. நிறைய ஹிந்துஸ்தானி பாணியில் இசைத்தே பழகியவர். இப்போது கூட 'கடல்' திரைப்படத்தில் 'சித் ஸ்ரீராம்' பாடிய அந்த 'அடியே' பாடல் நல்ல ஜாஸ். இல்லையெனச் சொல்லுபவர்கள் என்னுடன் சண்டை பிடிக்க வரலாம். ஜாஸுக்குண்டான அத்தனை சாத்தியக்கூறுகளும் அதில் உண்டு. பியானொவின் சிணுங்கல்கள், சிம்பல்ஸின் சிதறல்கள் என எல்லாம் சிறப்பு. ஜாஸின் இலக்கணம் மாறாது இசைத்த பாடல். மணி ஒத்துக்கொண்டார் போலருக்கு, அந்தப்படமே ஒரு மாதிரி தான் இருக்கும்.ஹிஹி.

கென்னி ஜி கேட்காதவர் இருக்கவியலாது. எல்லாப் பாடல்களையும் ஜாஸின் ஸ்டைலில் கொண்டு வந்து விடுவார். அதான் டெம்ப்போவைக் குறைத்து இன்னும் பாடலாம் மெதுவாக என்று தோணும் போது ஜாஸாக மாறிவிட வாய்ப்புண்டு. எம்எஸ்'ஐயா இசைக்காததில்லை. 'என்னைத்தெரியுமா சிரித்துப்பழகி கருத்தைக்கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா'ன்னு ஜாஸில் பிடித்துக்காட்டுவார். பாடலின் கடையிசையைக் கேளுங்கள் புரியும்.ட்விஸ்ட் ஆடலுக்கான பாடல்களுக்கும் ஜாஸ் ஒத்துவரும். 'கண் போன போக்கிலே கால் போகலாமா' நல்ல எகா.

இப்ப எதுக்கு ஜாஸ் புராணம்னா...ஒண்ணும் இல்லை. இப்போ எல்லாருமா சேர்ந்து வாரிக் கொண்டிருக்கும் (நானுந்தான்) சந்தோஷ் நாராயண் கூட ஜாஸில் ஒரு பாடல் போட்டு இருக்கிறார். 'காதலும் கடந்து போகும்' படத்தில் 'அக்கம் பக்கம் பார்' பாடல் பக்கா ஜாஸ். ஹ்ம்.. இத்தனை மெதுவாக அத்தனை அழகாக இலக்கணம் மாறாது இசைத்தது. இங்கும் மனோதான் பாடியிருக்கிறார். போரடிக்க வைக்கும் தாளக்கட்டு. பாடல் முழுமைக்கும் கூடவே பாடும் பியானோ. சொற்களெல்லாம் தனித்தனியே தொங்கிக்கொண்டு இருக்கும். இணைத்துக்கொண்டு வருவது சங்கிலி போல அந்தப்பியானோதான். இந்தப்பாணி பலருக்கு சொய்வு அடிக்கச் செய்துவிடும். ( நெருப்புடான்னு ராக்/ஹிப் ஹாப்' ல பிளந்து கட்டியவர்தான் இப்படியும் பாடல் போட்டிருக்கிறார் ) இந்தப்பாடலை அத்தனை சிரத்தையாக நான் கவனிக்கவேயில்ல, அன்று ஒரு நாள் இசையருவியில் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் கூர்ந்து கவனிக்க நினைத்தபோது தான் புரிந்தது. அவரின் அத்தனை பாடல்களுமே அப்படி சிரத்தை எடுத்துக் கவனித்தால் தான் புரியும். ஹ்ம்.. என்ன பண்றது. 0:55 ல் ஆரம்பிக்கும் ரூரூஊரூஊ.'வுடன் கூடப்பாடும் அந்தப்பியானோ 01:13ல் உங்களுக்கு பாப் அக்ரி'யை ஞாபகப்படுத்தினால் நான் பொறுப்பில்லை. ஹிஹி.. இடையிடையே வசனம் வரும்போது அதை இடர்ப்படாமல் இசைக்கும் பியானோவைக் கண்ணுல ஒத்திக்கலாம் சநா.

போத்தல் நுரைக்கும் சோமபானச்சாலைகளில் இந்த மாதிரியான பாடல்களுக்கு தான் கிராக்கி.ஏற்கனவே மூழ்கிக்கிடக்கும் வாற்கோதுமைக்கள்ளர்களுக்கு உறக்கம் வரவழைக்க பொருத்தமான இசை. இவ்வளவு பேர் ஜாஸில் பிளந்துகட்டியிருக்கும்போது தம்பி அநிருத் இதுவரை அந்தப்பக்கமே போகவில்லை. ஹ்ம்.. எதுக்கு போகணும். அதுதான் கிழபோல்ட்டுகளின் இசையாச்சே.. ஹிஹி.. #அக்கம்பக்கம்பார்


https://youtu.be/iy3j9Hg-QAM - அக்கம் பக்கம் பார் (ககபோ)
https://youtu.be/I6PHgtdxFrY - bob acri (sleep away)
https://youtu.be/rwEt-PTrbmI - கண்ணன் வந்து பாடுகின்றான் (ரெவா குருவி)
https://youtu.be/X-Ilp8QNNfQ - அடியே ( கடல் )
https://youtu.be/ZlhaOQSgD_M - என்னைத்தெரியுமா (குடியிருந்தகோயில்)



No comments:

Post a Comment