Wednesday, October 26, 2016

ஆக்டோபஸும் நீர்ப்பூவும்
இன்று எழுத்தாளர்/முனைவர் தமிழவனை அவர்தம் பெங்களூர் பன்ஷங்கரி இல்லத்தில் சந்திக்க வாய்த்தது.நிறைய மனம்
திறந்து பேசிக் கொண்டிருந்தார். ஸ்ரீனியும் , நல்லதம்பியும் கூட இருந்தனர், பழங்கால சிசுசெல்லப்பா,கநாசு, மற்றும் இன்னபிற நாஸ்டால்ஜியாக்களைப்பற்றிய அவர்தம் எண்ணங்கள் எங்களுக்கு அரிய செய்தியாய் இருந்தது. ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்ட நீச்சல் குளத்தைப்பற்றி (ஆம் நீச்சல் குளம் என்றுதான் கூறினார்..முகநூலில் அனைவரும் ‘கிணற்றில் அல்லவா’ குதித்தார் என கூச்சலிட்டனர்.) வருத்தத்துடன் கூறிக்கொண்டு இருந்தார். சிசுசெல்லப்பா 'சுவை' என்ற பெயரில் ஒரு தனிச்சுற்று இதழ் நடத்தி வந்ததைப்பற்றி கூறினார், எல்லோருக்கும் தெரிந்தது 'எழுத்து' மட்டுமே. பின்னர் தமது முயற்சியில் வெளிவந்த 'படிகள்' இதழ்களைத் தொகுத்து இக்கால சந்ததியினருக்கு கொடுக்க வேண்டிக்கொண்டார். என்னைப்பற்றி விசாரித்தவர் “சின்னப்பயல் ..ஹ்ம். தெரியுமே என்றவர் 'சிற்றேடு' இதழில் எழுதுமாறு பணித்தார். எழுத வேணும்.!

 
நிறையப்பேசுகிறார், இன்னதானென்றில்லை, நாம் எடுத்துக்கொடுக்க வேணும் என்ற உந்துதலின்றி அவர்தம் போக்கில் பேசிக்கொண்டே இருக்கிறார். முதுமை வருத்தினும் பேச்சு குறையவில்லை. கநாசு பாரதிதாசனை சட்டை போலும் செய்ததில்லை, எப்போதும் சிசுசெல்லப்பாவையே கொண்டாடினார். ஆத்மாநாம் பற்றி பேசுகையில் அவர் குரல் கம்மியது, பையன் போல வருவார் , நிறைய கவிதைகள் பற்றி பேசிக்கொண்டிருப்பார். வரும்/போகும் வழியில் இருந்த நீச்சல் குளத்தை பார்த்து வைத்துக்கொண்டு ஒரு நாள் முன்னிரவில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்றார். மறுநாள் டெக்கான் ஹெரால்டில் அவர் மரணச்செய்தி சின்ன பெட்டி செய்தி போல வெளியிடப்பட்டது.

சிசுசெல்லப்பா’வின் எழுத்துகளை வைத்து ஒரு பெண் சென்னையில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்ததையும் , அவரிடம் இருந்து கிடைத்த சில ‘சுவை’ இதழ்களை எங்களுக்கு பார்க்க கொடுத்தார். பட்டம் பெற்றதும் அந்தப்பெண் பின்னர் தொடர்பிலில்லை ,அதோடு அவரின் வருகையும் நின்றுபோனதை ஞாபகப்படுத்தி கூறினார்.

கர்நாடகத்தில் மொழி வளர்ப்பிற்கென நிதி ஒதுக்குவதாகவும் , அதை நிர்வகிக்க செயலர்கள் மாவட்டம் தோறும் தெரிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு. அதில் எந்த அரசியல் கட்சிகளும் இடர்ப்பாடு செய்வதில்லை, எக்கட்சி ஆட்சியிலிருப்பினும் இந்த நிதி ஒதுக்குதல்/குழு அமைத்து மொழி வளர்த்தல் தொடர்கிறது. இப்படி ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பே இல்லை. 60களுக்குப்பிறகு மொழி வளர்ப்பு என்பது வேறுபக்கம் இழுத்துப்போகப்பட்டது இன்னமும் அதை மீண்டும் பாதையில் கொணர இயலவில்லை என்பதை நினைத்து வருந்துகிறார்.
கேரளாவில் தாம் தமிழ் எம்.ஏ படித்துக்கொண்டிருந்தபோது, நம்பூதிரிபாடு ( அப்போதைய முதலமைச்சர் ) சைக்கிளில் செல்வதையும், அதை/அவரை யாரும் பெரிதுபடுத்துவதேயில்லை என்பதை அதே ஆச்சரியத்துடன் கூறினார். கம்ப்யூட்டர்கள் பணிகளில் பயன்படுத்துவதை எதிர்த்து எப்போதும் கூச்சல்/ ராலிகள் போராட்டங்கள் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

சுஜாதா’வைப்பற்றி பேசுகையில் நல்ல திறமைசாலி, இன்னமும் இலக்கியம் சார்ந்த படைப்புகள் அவரிடமிருந்து வந்திருக்கலாம். இந்த ‘குமுதம்’ தான் அவரை வேறு பாதைக்கு அழைத்துச்சென்றது. வணிக நோக்கில் அவரை எழுத வைத்து வருமானம் தேடிக்கொண்டது. அவர் முன்னர் இந்தப்பாதைக்கு வருமுன்னர் எழுதிய கதை ஒன்றை ( பெயர் மறந்து விட்டது ) ‘நைலான் கயிறு’ என்ற பெயரில் புதினமாக எழுதினார் அதில் அந்தப்பழைய கதையின் முக்கிய வரிகளை ஆங்காங்கே உறுத்தாமல் புகுத்தியிருந்தார். பலமுறை கமலஹாசன் வந்து செல்வதையும் குறிப்பிட்டார். அவரைச்சந்திக்க ஒரு முறை சென்ற போது ‘இப்போ தான் கமல்’ வந்து விட்டு சென்றார் என்று சுஜாதா கூறியதைப் புன்முறுவலுடன் பகிர்ந்துகொண்டார். ‘பெல்’ லில் வேலை செய்தபோது அவரின் பையன் ஒரு ஜப்பானியப் பெண்ணை மணம் புரிந்துகொண்டதை வெகுவாக வெறுத்ததாகவும், ஒத்துக்கொள்ளவேயில்லை என்பதை தமக்குள் சிரித்துக்கொண்டே பேசினார். மதம்/ஜாதி இவற்றை கடைசி வரை விட்டுக் கொடுத்ததேயில்லை அவர் என்பதைக்கூறினார்.

இடையில் இரண்டு மூன்று முறை தொலைபேசியில் அழைப்பு வந்து தொந்தரவு செய்தபோதிலும் எங்களுடன் பேசுவதிலேயே மும்முரமாயிருந்தார். கையில் எடுத்து அதை அணைத்துவிட்டு பின் பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஸ்ரீனி சிலபோது அவர் தானாகவே பேச்சை நிறுத்திவிடுவார். பின்னர் நாமாக கிளம்பி வந்துவிட வேண்டியது தான் என்றெல்லாம் பயமுறுத்தி இருந்தார் என்னை. நல்லவேளை அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் பேசியது மூன்றுபேருமாகச்சேர்ந்து பத்து வரிகள் தான் இருக்கும். அவரோ மடை திறந்ததுபோல் பொழிந்து கொண்டிருந்தார்.காவிரிப்பிரச்னை குறித்த எனது சந்தேகங்களுக்கு அவரிடம் எவ்வித நேரடி பதிலும் வரவில்லை. யூஆர் அனந்தமூர்த்தி, இன்னொருவரின் பெயரையும் குறிப்பிட்டார். அவர்களெல்லாம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டபோதும் தமிழ் கவிதைகள்/எழுத்துகள் மீது ஆர்வமாக இருந்தனர். என்ன புதியவை வந்திருக்கின்றன என்பதை ஆவலுடன் எதிர்நோக்கினர். தாக்குதல்கள் நடந்ததை பலமுறை (முன்பு , வெகு காலம் முன்பு ..இப்போதல்ல ) கண்டித்திருப்பதை குறிப்பிட்டார். எப்படி ஒட்டுமொத்த கர்னாடகாவும் இப்போது இப்படி வெறிச்செயலுக்கு போனதைப்பற்றி அவருக்கு ஏதும் புரிதல் இல்லை.

முதுமை, யாரேனும் தம்முடன் உரையாட மாட்டார்களா என்ற ஆதங்கம் அவர்தம் முகத்தில் தெரிகிறது.இன்னமும் சந்திப்போம். இரண்டாம் ஞாயிறு கூட்டங்கள் குறித்து ஆவலாய்க்கேட்டறிந்தார். அவர் பகிர்ந்துகொண்ட பழைய தனிச்சுற்றுக்கான இதழ்களில் சிலவற்றைப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.. அவை சில இங்கே. அந்த தமிழ்த்தாய் வணக்கம் 'சுஜாதாவால் சிலாகிக்கப்பட்டது என்ற கொசுறு செய்தியையும் அவர் கூறத்தவறவில்லை..!
.

No comments:

Post a Comment