Friday, May 13, 2016

நடனக்காரிக்கு வயது 35
தமிழவனின் (ப்ரொபஸர் கார்லோஸ்) நூல் வெளீயிடு – நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் இங்கு பெங்களூரில் ரவீந்திர கலாக்ஷேத்ராவில் சென்ற ஞாயிறன்று 8-5-2016 நடந்தேறியது. விழாவிற்கு பொதிய வெற்பன் , மற்றும் ப்ரொ.ராமலிங்கப்பா பேகூரு அனைவரும் வந்திருந்தனர். ஆசிரியர் மனோன்மணி’யின் புது எழுத்து பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்திருந்தது.அரங்கு நிறைந்து விட்டது. எழுபது எழுபத்தைந்து பேர் அமரும் அரங்கு அது. முன்னரே எல்லா ஏற்பாடுகளையும் நானும் ஸ்ரீனியும் பின்னர் டிவி9 கோவிந்தராஜும் , செந்தில் திரு, மற்றும் கேகே அனைவருமாக ஒன்றிணைந்து செய்திருந்தோம். மனொன்மணி பெங்களூரில் நிகழ்ச்சியை நடத்த ஒத்துக்கொண்டார். திகதி குறிப்பதிலிருந்து பேச்சாளர்களை அழைத்து வருவதும், உள்ளூர் பிரமுகர்களுக்கு மற்றும் எழுத்தாளர்களுக்கு அழைப்பிதழ் வைப்பதுமாக அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு ஸ்ரீனி செய்தார் என்றால் மிகையில்லை. அத்தனை பணி நிமித்தங்களுக்கிடையே இதற்கென நேரம் ஒதுக்கி , எனக்கு மேலாண்மை தேர்வுகள் இன்னபிற வேலை நெருக்கடிகள் என சால்ஜாப்பு சொல்லி கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே அவருடன் பங்காற்ற முடிந்தது. இருப்பினும் நினைத்தபடி நிகழ்ச்சி  ஏற்பாடானது அனைவருக்கும் மகிழ்ச்சி..முன்னதாக சனிக்கிழமை நானும் ஸ்ரீனியும், டிவி9 சேனல் கோவிந்தராஜும் பைக் எடுத்துக்கொண்டு , ஒரு மோட்டார் சைக்கிள் டைரி சே கபாடா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ போல பெங்களூரின் தெருக்களில் சுற்றி அலைந்து அனைவர்க்கும் அழைப்பிதழ் கொண்டு சேர்த்தோம். இரண்டு ஹெல்மெட் அவசியம், பின்னில் அமர்ந்திருந்த நான் வியர்வை தாங்காமல் கையில் எடுத்து வைத்துக்கொண்டு சென்ற நேரம் பார்த்து சாலையோரக்காவலின் பார்வையில் பட்டு பின்னர் ஒரு நூறு அங்கு செலவழிந்தது :) என ஒரே கொண்டாட்டம்.   பின்னர் ஒருவழியாக கார்ப்பெண்டர் (இங்கு கன்னடத்தில் பல கதைகள் எழுதியுள்ளார்) இல்லம் சென்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வர எண்ணும்போது , திரைத்துறையில் இருக்கும் ரமேஷ் வந்து கலந்து கொண்டார். அவரின் பையன், என்னைப்பார்த்து விட்டு இந்த அங்கிளை எங்கியோ பார்த்துருக்கேனே என்று யோசித்துக்கோண்டே இருந்தான். கொஞ்சம் ஃபேரா இருக்கிற யாரைப்பார்த்தாலும் இப்டித்தான் சொல்லிட்டே இருப்பான் நீங்க விடுங்க என்றார் இயக்குனர் ரமேஷ். பின்னர் மோர் கிடைக்காததால் தயிர் வாங்கி அதில் அக்வாஃபீனாவைக்கலந்து என சாலையோரக்கடையில் அற்புதமான மஞ்ஞ்சிகே (கன்னடத்தில் மோர்) குடித்துவிட்டு பின்னர் ரமேஷ்பாபு வீட்டிற்கு சென்றோம். ( இவரும் இங்கு கன்னடத்தில் கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார் )  பின்னர் க்ரித்திகா தரனிடம் அழைப்பிதழ் கொடுக்க சென்றொம். செக்யூரிட்டி புத்தகப்பையை வாங்க மறுத்தார். இது மாதிரி ஆறுமாசமா நிறைய பேக்கிங் கிடக்கு யாரும் வந்து வாங்கிக்கிறதில்ல என்றார். இல்லை அவங்க இப்ப வந்து வாங்கிக்கொள்வார் எனக்கூறி கொடுத்துவிட்டு வந்தோம்.இப்படியாக அனைவரையும் அழைத்து முடிக்கவே சாயங்காலம் ஆகிவிட்டது.. கோவிந்தராஜ் ஃப்ளெக்ஸ் இல்லாமல் எப்படி புத்தக வெளியீடு என அங்கலாய்க்க, ஷேஷாத்ரிபுரம் வரை சென்று நல்ல மாலை இளவெய்யிலில் (இன்னமும் சூடு குறையவில்லை) ஒவ்வொரு ஃப்ளெக்ஸ் கடையாக ஏறி இறங்கினோம். “மேட்டர் ரெடியா இல்லன்னா பக்கத்துல டேட்டா எண்டிரி போடுவாங்க அங்க போய் டைப் பண்ணி எடுத்துட்டு வாங்க” என கறாராக ஒரு கடை. பின்னர் இன்னொரு கடையில் சென்றால் அங்கே இருக்கும் அடொபி போட்டோஷப்பில் தமிழ் ஃபாண்ட் இல்லை. பின்னர் இன்னொரு கடை “அரை மணிநேரம் ஆவும் வெயிட் மாடித்தீரா ?” , இதெல்லாம் சரிப்பட்டு வராது , பேசாம கன்னடத்துலயும் இங்கிலீஷ்லயும் அடித்து விடுவோம், (ஏன்னா இங்க்லீஷ் தான் தமிழனின் தாய்மொழி :) ) ஒரு ப்ரச்னையும் வராது என்று மீண்டும் பழைய கடைக்கே சென்றோம்.
எல்லொரும் தமிழ் பேசறாங்க, ஆனா டைப் அடிக்க வர்ல. நான் வேண்ணா டைப் பண்றேனேன்னேன் , தமிழ் ஃபாண்ட்ல அடிக்கவே வர்ல.. அது சங்ககால ஃபாண்ட் போலருக்கு. ‘ம’ அடிச்சா ‘ஷே’ வருது இதெல்லாம் வேலைக்காவாது என்று கன்னடா இங்க்லீஷ் என டைப் அரங்கேறியது நீட்டி சுருக்கி கலர் மாற்றி என ஒரு அரை மணி நேரம் கழிந்தது. இங்கிலீஷில் இருக்கும் பிழைகளைக்களைய என்னைப் பார்த்தார் கோவிந்தராஜூ. அமேரிக்காகாரன் கொடுத்த கொடையல்லவா. இரண்டு நிமிடத்தில்  எல்லாவற்றையும் சரி செய்து கொடுத்தேன். ஒரு வழியாக நடனக்காரி மேட்டர் ரெடி.மேட்டர் அச்சுக்குபோகப்போகுது , அப்பால எதையும் சரிபண்ண முடியாது என்று கண்டிப்பாக சொன்னார்.ஒருமுறை மீண்டும் சரிபார்த்துவிட்டு , ஓக்கே ஷாட் ரெடி என்றேன். பல இடங்களில் அந்த அல்மா மேட்டரை காப்பி செய்து வைத்துக்கொண்டு பிரிண்ட் பிரிவ்யூ காண்பித்தார். அத்தனை அழகு. ஹ்ம்.. என்ன ப்ரிண்ட் போட்றலாமா என்றவரிடம் சரி என்றேன். பின்னர் ஃப்ளெக்ஸ் ப்ரிண்டரில் கலர் குப்பிகளில் மை இருக்கிறதா என சரிபார்த்துவிட்டு , ஃப்ளெக்ஸை எடுத்து செருகினார். பிரின்டரின் ஹெட், வெட்டப்போகும் ஆட்டுத்தலை போல முன்னும் பின்னும் வேகவேகமாக சென்று பின் ஒரு நிலை பெற்றது.கலர் குப்பிகளை இன்னுமொருமுறை சரி பார்த்துவிட்டு , பிரிண்ட் ஃபயர்செய்தார்.
 
ஃப்ளெக்ஸை தாமாக உள்ளிழுத்து கலரை வாரி இறைத்தது ஹெட். கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துகளும், புத்தகத்தின் முன்னட்டை மற்றும் பின்னட்டைகளும் ஃப்ளெக்ஸில் பதிவாகி வெளித்தள்ளியது. பெரிய கத்திரி கொண்டு கீறி எடுத்து பின்னர் சுருட்டி மடக்கி டேப் போட்டு கொடுத்தார், பணம் கொடுத்துவிட்டு அதை வாங்கிக்கொண்டு வெளி வர இரவு 9 மணி ஆகிவிட்டிருந்தது, இப்போது இங்கிருந்து கிளம்பி ரவீந்தர கலாஷேத்ரா வரை சென்று ஃப்ளெக்ஸை வத்து விட்டு நாளைய நிகழ்ச்சிக்கென திரும்ப வரவேண்டும்.ஞாயிறு காலை ஏழரைக்கெல்லாம் தயாராகி கிளம்பிவிட்டிருந்தேன். போகும் வழியில் ஸ்ரீனியை அழைத்தேன். நான் இங்க வந்து அரைமணி நேரம் ஆச்சு என்றார். ஹ்ம்,,, நான் தான் லேட்டா எனக்கூறிக்கொண்டு கிடைத்த வண்டியில் அமர்ந்து போய்ச்சேர்ந்தேன் . நேரே கலாஷேத்ரா சென்று பார்த்தால் அரங்கில் யாரையும் காணவில்லை. ஸ்ரீனியை அழைத்தேன். இங்க கேண்டீனுக்கு வாங்க ராம், இப்பதான் கேகே, திரு ரெண்டு பேரும் பொதிய வெற்பனை ஆட்டோவில் அழைத்து வருவதாக தகவல் வந்தது என்றார். எனக்கு வழக்கம்போல ஒரு க்ரீன் டீ சொன்னேன்.செந்தில் வருவது தெரிந்தது, அளவளாவிக் கொண்டிருந்தபோது மனோன்மணி வந்து விட்டார். இருவருமாக கொஞ்ச நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். பின்னர் நிகழ்ச்சிக்கு நேரமாகி விட்டதென அனைவரும் ரவீந்தரா அரங்கத்திற்கு சென்றோம். அங்கு பொதிய வெற்பன், தமிழவன், ராமலிங்கபா பேகூரு ஆகியோர் குழுமியிருந்தனர்,  உள்ளூர் ஃபேஸ்புக் புகழ் க்ரித்திகா தரன், மற்றும் சுஜாதா ஆகியோரும் வந்து அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவராக வரத்தொடங்கினர்.ஹோசூரிலிருந்து பெரியசாமியும் முகிலனும் மட்டும் வந்திருந்தனர். நிகழ்ச்சியை ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். பின்னர் புத்தகவெளீயிடு நடந்தது, ஜோல்னாப்பையில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை கோவிந்தராஜு எடுத்துக்கொடுக்க ராமலிங்கப்பா, பொதிய வெற்பன் ஆகியோர் வெளியிட்டனர். ராமலிங்கப்பா கன்னடத்தில் உரையாற்றியதை நல்லதம்பி மொழிபெயர்த்து தமிழில் வழங்கினார். பின்னர் பொதிய வெற்பன் ஒரு வெண்பாவை பாடிவிட்டு தமக்கும் தமிழவனுக்கும் இடையே எங்கனம் இலக்கிய உறவுகள் நட்பு, என்பன பற்றி முழங்கினார். இந்த ராமலிங்கப்பா தமிழவனின் மாணவர். அழைக்கச்சென்ற ஸ்ரீனியிடம் இது பற்றி சிலாகித்துப்பேசியதாக கூட்டத்தில் கூறினார்.அது ஒரு ஆர்ட கேலரி. உச்சாணிக்கொம்பில் மூன்று மின் விசிறிகள் காற்று எங்கேவென வந்து கொண்டிருந்தது. அதில் இரண்டு விசிறிகள் ஓடவேயில்லை. அருகிலிருந்த அத்தனை ஜன்னல் கதவுகளையும் திறந்து வைத்தேன். பின்னர் பேச்சுக்குத்தடையாக வெளிப்புற சப்தங்கள் இருக்கின்றன எனக்கருதி ஒவ்வொன்றாக அடைத்துவிட்டனர். உள்ளில் எல்லொருக்கும் தாகம். 
பெரும்பாலும் கன்னடமே பொழிந்து கொண்டிருந்தது. மனொன்மணியும், ஸ்ரீனியும் தமிழில் பேசினர். விழா நாயகன் தமிழவன் கன்னடத்திலும் தமிழிலுமாக மணிப்பிரவாளமாக பேசினார். இப்படியான விழாக்கள் தொடர்ந்து நடக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். அதற்கு தம்மாலான உதவிகளை செய்யவும் தயாரனெக்கூறினார். (தமிழவனின் கட்டுரைகள் ‘தீராநதி’யில் வெளியாகி இருக்கின்றன)புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன். மோகன் (சிபிஐஎம்) என்னையும் எடுங்க எனப்பணித்தார். சிரித்துக்கொண்டே எடுத்தேன். செல்ஃபி மோடில் எப்போதும் செட்டாகிவிட்ட கேமராவைக்கொடுத்து கிரித்திகா தரன் தம்மையும் அருகிலிருந்த சுஜாதாவையும் எடுக்கச்சொன்னார்.  எடுத்த அடுத்த நொடி ஃபேஸ்புக்கில் போட்டொ அப்லொடாகிவிட்டது. தொடர்ந்து நானூறு லைக்குகள் கமெண்ட்கள்...ஹிஹி...பின்னர் கொஞ்சம் டிஸ்கஷ்னஸ் கதை குறித்தும், கதை மாந்தர் குறித்தும்,. பெரியசாமி எழுதி எடுத்து வந்திருந்த குறிப்பை எடுத்து மேடையில் நின்று வாசித்தார். தமிழ் கன்னடா மொழிகளில் ஆங்கிலக்கலப்பு பற்றிய கேள்வி எப்போதும் போல கொஞ்சநேரம் அரங்கை சுற்றி வந்தது. பின்னர் ஒருவாறாக டிஸ்கஷன் ரவுண்ட் முடிந்து நன்றியுரைக்கென என்னை அழைத்தார் ராஜ்குமார். மேடையேறி ‘ வந்திருந்த அனைவர்க்கும் நன்றி என தமிழிலும் கன்னடத்திலுமாக கூறி அமர்ந்தேன்.பின்னர் கூட்டம் கலைய , தமிழவன் ‘சிற்றேடு’ எல்லொரிடமும் பகிர்ந்துகொண்டிருந்தார். ஒரு சிற்றிதழ். மதிய உணவுக்கு ஏற்பாடாகி இருந்தது, சிறிது தூரம் நடந்து சென்று காமத் ஹோட்டலில் அனைவரும் அமர்ந்தோம். உத்தர கன்னடா ஊட்டா சிலர், தோசை சிலர் என கொஞ்சம் பொழுது போனது. கதை சொல்லி என்ற நிகழ்விற்கு குழந்தைகளை அனுப்பி வைக்குமாறு கிரித்திகா எல்லொருடனும் கேட்டுக்கொண்டார். அடுத்து எப்போது சந்திக்க என்ற வழமையான கேள்வி, மே 15 அல்லது மே 22ல் செந்தில் வீட்டில் சந்திக்கலாம் உரையாடலாம் என்ற முடிவுடன் கூட்டம் கலைந்தது.நிகழ்ச்சியை வீடியோவில் பதிவு செய்யவேண்டும் என்ற செந்திலின் கோரிக்கை .தொக்கி நின்றது. அடுத்த நிகழ்ச்சியில் செய்துவிடலாம் என்ற எதிர்பார்ப்புடன் ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.


No comments:

Post a Comment