Thursday, December 25, 2014

வெளிநாட்டுக்கடவுள்




வாசித்த கவிதை மறந்துபோயிற்று
எப்போது வாசித்தேன் என்பதை
மட்டும் மறக்கவில்லை
_

தமிழில் எழுதப்பட்ட
பூ ஒன்றின் கவிதை
மொழிபெயர்ப்பிலும்
வாசம் பரப்புகிறது
_

எந்தவித உந்துதலுமின்றி
இந்தப்பொழுது
போய்க்கொண்டுதானிருக்கிறது
_

மரத்தூள்களை
பனிக்கட்டியின் மீது இட்டு
அந்த தான்யா கிழவி
துடைக்கிறாள்
பரவவியலாத பனிக்கட்டி
மரத்தூள்களிடம்
புழுங்கி அழுகிறது
_

விழுங்கிய மீன்
நாரையின் நடையில்
நீந்தும் தூரத்தைக்கடக்கிறது.
_

துளைகளிட்டும்
இசைக்கத்தெரியாத
மரங்கொத்தி நான்
_


காதலியைச்சந்தித்து
இனி எப்போதும் வேண்டாம்
எனச்சொல்லவந்துவிட்டு
பின் எல்லாமே நீதான்
எனச்சொல்லிவிட்டுப்போவதுபோல
வாய்த்திருக்கிறது
இந்த ஹைக்கூ
_

எனை ஈர்த்த
வெளிநாட்டுக்கடவுள்
நீ.
உயிர்க்கூற்றில்
சில கண்ணிகளே
குறைவான மனிதக்குரங்கைப்போல
எனக்கு இன்று
கவிதை எழுத வரவில்லை
_

புத்தனுடனான செல்ஃபியிலும்
நான்
மட்டுமே தெரிகிறேன்
_

கோழி மிதித்து
குஞ்சு இறக்கவில்லை
வலிக்கிறது
_

பூனைக்குழந்தைகள்
இரவில் அழுகின்றன
பால்நிலா
_

அழகான முகங்கள்
பார்க்கத்தொடங்கின
தேயத்தொடங்கியது நிலவு
_

தேவதைக்கதைகளில்
சின்றெல்லா அழகாயிருந்திருக்காவிட்டால்
காலணியும் பொருந்தியிருக்காது
_


என் நிழல் கூட
விளக்குகள் கொடுத்தவைதான்
_

ஒவ்வொரு
மீன்தொட்டிக்குள்ளும்
வசிக்கும் மீன்கள்
முட்டித்திரும்பும்
அதே பக்கச்சுவர்கள்
என் கவிதை
_

இரண்டிலொன்றைத்தொடு என்றாள்
இல்லாத
ஒன்றைத்தொட்டேன்
_


என் மிகைக்கும்
என் இயல்பிற்கும்
இடையில் நீ நிற்கிறாய்
_

என் ஆழ்ந்த மௌனத்தின்
இசை உனது பெயர்.
_

No comments:

Post a Comment